Published:Updated:

TNPL: நெல்லைக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கானின் அசுர ஆட்டம்... பிளேஆஃப்க்கு முன்னேறிய கோவை!

TNPL | #LKKvNRK

வெல்பவர் உள்ளே, தோற்பவர் வெளியே என நடந்த டிஎன்பிஎல் நாக் அவுட் போட்டியில், ஷாருக்கான் ஷார்க் ஆகி ஷாக் கொடுக்க, நெல்லையை வீழ்த்திய கோவை, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

TNPL: நெல்லைக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கானின் அசுர ஆட்டம்... பிளேஆஃப்க்கு முன்னேறிய கோவை!

வெல்பவர் உள்ளே, தோற்பவர் வெளியே என நடந்த டிஎன்பிஎல் நாக் அவுட் போட்டியில், ஷாருக்கான் ஷார்க் ஆகி ஷாக் கொடுக்க, நெல்லையை வீழ்த்திய கோவை, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Published:Updated:
TNPL | #LKKvNRK
சென்னை, திருச்சி மற்றும் திண்டுக்கல் ஏற்கெனவே, பிளேஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்ட நிலையில், இருக்கும் ஓர் இடத்திற்காக, நெல்லை அணியும் கோவை கிங்ஸும் மோதிக் கொண்டன. கடைசி இரண்டு போட்டியிலும் வென்ற துணிவோடு நெல்லையும், இரண்டில் தோற்ற வெறியோடு கோவையும் வந்திருந்தன.

டாஸ் மட்டுமே ஒரு போட்டியின் முடிவை முடிவு செய்வதில்லை. நாணயத்தின் விழாத பக்கத்தில் கூட, நமது வாய்ப்புகள் ஒளிந்திருக்கலாம். டாஸைத் தோற்ற அபராஜித் கூட பௌலிங் செய்ய இறங்கிய போது இதைத்தான் நினைத்திருப்பார் போலும். ஏனெனில், அவர் நெல்லைக்கு அப்படிப்பட்ட தொடக்கத்தைத்தான் கொடுத்தார்.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

ஓப்பனிங் இறங்கிய கங்கா ராஜு மற்றும் சுரேஷ் குமாரை, அதிசயராஜ் மற்றும் ஹரீஸால் எதுவும் செய்ய முடியவில்லை. நான்கு ஓவர்கள் கடந்தும் 35 ரன்கள்தானே சேர்த்திருக்கிறார்கள் என நிம்மதியடைய முடியாதவாறு விக்கெட்டே விழாமல் இருந்தது. அவர்களது அட்டாக்கிங் ஆட்டக்காரர்களைப் பற்றித் தெரியும் என்பதால், தங்களது வெற்றிக்கான விட்டமின் விக்கெட்டுகளே என உணர்ந்து, வெகுண்டெழுந்து அபராஜித்தே வந்தார். அதன் விளைவாக, கங்கா ராஜு மற்றும் ஒன் டவுனில் இறங்கிய ஆபத்தான சாய் சுதர்சன் இருவரது விக்கெட்டுகளும் விழுந்துவிட்டன. குறிப்பாக, கங்கா ராஜுவா கங்குலியா எனும் அளவிற்கு, ஆஃப் சைடில் ஆட்சி நடத்தி 19 பந்துகளில் 30 ரன்களோடு பயங்காட்டிக் கொண்டிருந்தார் கங்கா.

பொறுப்பான ஆஃப் ஸ்பின்னராக, இரண்டு இடக்கை ஆட்டக்காரர்களை அனுப்பியது மட்டுமின்றி இன்னொரு இடக்கை பேட்ஸ்மேனான ரஹ்மானின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அபராஜித். பத்து ஓவர்களின் முடிவில், 67 ரன்களைச் சேர்த்திருந்தது கோவை. அவர்களை எழவே விடாமல் அடித்தாக வேண்டுமென உணர்ந்து, சஞ்சய் யாதவ்வுடன் சேர்த்து ஹரீஷையும் உள்ளே இறக்கி அபராஜித் தாக்க, அதற்கு உடனே பலன் இருந்தது. ஹரீஷ் வீசிய பந்து முகிலேஷின் ஆஃப் ஸ்டம்ப்பைச் சேதப்படுத்தியது.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

ஓப்பனராக இறங்கிய சுரேஷ் மட்டும் அசையாமல் நிற்க, டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரின் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது நெல்லை. எட்டு ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 76 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த கோவை இனி பெரிதாக என்ன செய்துவிட முடியும், 140 என்ற அளவில்தான் இலக்கு வரப் போகிறது, போட்டியின் போக்கு ஒரு பக்கமாகவே முடியும் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு எழுந்திருக்கும். எல்லோரும் மறந்தது, களத்தில் நின்ற பிக் ஃபினிஷர் ஷாருக்கானை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தச் சமயத்திலேயே, சந்தித்தது எட்டு பந்துகள், அடித்தது 16 ரன்கள் என மிரட்ட ஆரம்பித்திருந்தார் ஷாருக்கான். உண்மையில், அடுத்த பக்கம் வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். முதலில் சுரேஷ் குமார், நடுவில் தன்வர், இறுதியில் அஜித் ராம் என மறுமுனை வெவ்வேறு முகங்களைப் பார்த்தது. ஆனால், ஷாருக்கானை மட்டும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அதுவும், அவரது இந்த மூன்று பார்ட்னர்ஷிப்களிலும், அவரது ஸ்ட்ரைக்ரேட் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

அபராஜித்தும் வெவ்வேறு பௌலர்களை மாற்றி, அழுத்தம் தர முயன்றார். ஆனால், ஷாருக்கானோ அசைந்து கொடுக்கவில்லை. இந்த எல்லா பார்டனர்ஷிப்களிலும் பெரும்பாலான பந்துகளை இவரே சந்திக்க, ஏதோ பை ரன்னர் போலத்தான் அவரது பார்ட்னர்கள் ஓடிக் கொண்டிருந்தனர். 25 பந்துகளிலேயே ஷாருக்கான் அரைசதம் அடிக்க, இறுதியாக, ஸ்கோர் போர்டில் 169 ரன்களைக் கொண்டு வந்துவிட்டது கோவை. கடைசி எட்டு ஓவர்களில் மட்டும், 93 ரன்களை வெறித்தனமாக கோவை சேர்த்திருக்க, உபயம் - ஷாருக்கான் எனச் சொல்லாமல் சொல்ல வைத்திருந்தது அவரது இன்னிங்க்ஸ்.

170 என்பது கடினமான இலக்கு என்றாலும், அது நெல்லைக்கு இல்லை என்பதே களம் சொன்ன வரலாறாக இருந்தது. ஆனால், அடுத்த ஒன்றரை மணி நேரம், பல திருப்புமுனைகளோடு நகர்ந்தது. பௌலிங்கில் பரபரப்பை ஏற்படுத்திய அபராஜித், பேட்டிங்கிலும், அதையேதான் செய்தார். செல்வக் குமரனின் ஓவரில் எல்லாம் ஓவர் த லாங் ஆனில் ஒன்று, டீப் எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று என சிக்ஸர்களோடு, இலவசமாக ஃபிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியும் வந்திருந்தது. சரி, இந்த சேஸிங் அவர்களுக்கு மிகச் சுலபமானதாக இருக்கப் போகிறது எனத் தோன்ற ஆரம்பித்த தருணம், அஜித் ராமிடம் தவறான டைமிங்கிற்கு அபராதமாக அபராஜித் தனது விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார்.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

அபராஜித்தின் விக்கெட்டைத் தொடர்ந்து, ஒரு சின்ன சரிவைச் சந்தித்தது நெல்லை. வரிசையாக பிரதோஷ், அர்ஜுன் மூர்த்தி, நிரஞ்சன் என மூன்று விக்கெட்டுகளை எடுத்து, நெல்லைக்கு முடிவு கட்டி விட்டோமென ஆர்ப்பரித்தது கோவை. இந்தக் கட்டத்தில், 60 பந்துகளில் 100 ரன்கள் தேவை என எல்லாமே கடினமாகத் தொடங்க, சரி கோவைதான் வெல்லப் போகிறதென உத்தேசங்கள் எழத் தொடங்கின.

கிட்டத்தட்ட 25 பந்துகளாக பவுண்டரியே அடிக்கப்படாமல், விக்கெட்டுகளும் விழாமல், வறண்டு நகர்ந்தன ஓவர்கள். அப்போது, இந்திரஜித், ஓவர் த லாங் ஆனில் சிக்ஸரைத் தூக்கி, ஆட்டத்தை மாற்றத் தொடங்கினார். ஆனால், அந்தச் சமயம் மறுபடி விக்கெட்டுகள் விழுந்தன. 36 ரன்களோடு செட்டில் ஆகி இருந்த சூர்யப்பிரகாஷை கோவை அனுப்பியது. எனினும் சஞ்சய் யாதவ்வைப் பார்த்ததும், ரசிகர்கள் குஷியாகினர். ஏனெனில், அவரால் எல்லாமே இயலும் என்பதுதானே அவரது கடந்த போட்டிக் கதைகள். ஆனால், இன்றைய நாள் அவருடையதுமில்லை. வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து சஞ்சய் யாதவ் வெளியேறினார்.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

ஒரு கட்டத்தில் போட்டி, நெல்லையின் கையை விட்டு வெளியே சென்று விட, அதைத் திருப்பிக் கொண்டு வந்தார் இந்திரஜித். ஆனால், விக்கெட் வீழ்ச்சி மறுபடியும் அதனை ஐந்து ஓவர்களில், 61 என தள்ளிக் கொண்டு போனது. அந்தச் சமயம்தான், ஜிதேந்திரக் குமாரும் களமிறங்கினார். இந்தக் கூட்டணி, சின்னதாக ஒரு கேமியோ ஆடி, 15 பந்துகளில் 34 ரன்களைக் குவித்து, பழையபடி போட்டியை தங்கள் பக்கம் கொண்டு வர, நெல்லைக்குக் கரை தெரிய ஆரம்பித்தது. ஆனால், ஜிதேந்திரக் குமாரின் ரன் அவுட்தான் எல்லாவற்றையும் மாற்றியது. இதுதான், போட்டியை முழுமையாக கோவை வென்றுவிட்ட சமயம்.

கடைசி 2 ஓவர்களில், 24 ரன்கள் தேவை என்ற நிலைவர, மேலும் ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்து, 16 ரன்களைச் சேர்த்த நெல்லை, வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியில் இரண்டாவது பாதியில், பலமுறை போட்டியின் லகான், கோவையின் கையில் இருந்து நழுவிக் கொண்டுதான் இருந்தது. ஆனால், அதனை தங்களுடைய துல்லியப் பந்து வீச்சினாலும், அசத்தலான ஃபீல்டிங்கினாலும், தங்களது கைப்பிடிக்குள் கொண்டு வந்தது கோவை.

TNPL | #LKKvNRK
TNPL | #LKKvNRK

மொத்தம் 7 புள்ளிகளோடு, நான்காவது இடத்திற்கு முன்னேறிய கோவை கிங்ஸ், ப்ளே ஆஃபிற்கு முன்னேறியது. நெல்லையோ, கோவையைப் போலவே 7 புள்ளிகளைக் கொண்டிருந்தாலும், ரன்ரேட்டால் தொடரில் இருந்து வெளியேறியது.

பிளேஆஃபிற்கான நான்கு அணிகளும் தேர்வாகி முடிவடைந்துவிட்ட நிலையில், இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தவிர்த்து மற்ற மூன்று அணிகளுமே, இதுவரை சாம்பியன்ஷிப்பை வாங்காத அணிகள் என்பது சுவாரஸ்யத் தகவல். இதனால், இம்முறை புது அணி சாம்பியன்ஷிப்பை வெல்லுமா, இல்லை மற்றவர்களை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை சேப்பாக் சூப்பர் கில்லீஸே வெல்லுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.