Published:Updated:

TNPL: தன் ஆறுதல் வெற்றியால் மதுரையின் பிளேஆஃப் கனவைக் கலைத்த சேலம்... கடைசி நிமிட பரபரப்புகள்!

விஜய் சங்கர் மற்றும் முருகன் அஷ்வினின் ஆல் ரவுண்டிங் ஆட்டத்தால், மதுரையின் பிளேஆஃப் கனவைக் கலைத்துவிட்டது சேலம்.

தனது கடைசி லீக் போட்டியில், மதுரை பான்தர்ஸைத் தோற்கடித்ததன் வாயிலாக, அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், ஏழாம் இடத்திற்கும் முன்னேறி ஆறுதல் வெற்றியைச் சுவைத்துள்ளது சேலம் ஸ்பார்டன்ஸ். இது, நெல்லை, கோவைக்கு இடையேயான போட்டியின் சுவாரஸ்யத்தையும் கூட்டியுள்ளது.

டாஸை வெல்பவர்கள் மேட்சை வெல்வார்கள், இதுதானே, சேப்பாக்கத்தின் தற்போதைய கதை. அதேதான் நடந்தது இங்கேயும். ஆனால், கதையில் சின்ன திருப்பமாக, டாஸ் வென்ற ஃபெர்ராரியோ, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். சென்ற போட்டியில், காயம் காரணமாக விளையாடாத ஃபெர்ராரியோ, அணிக்குள் திரும்பியது, அவர்களுக்கு பலம் சேர்த்தது.

சேலத்தின் அக்ஷய் மற்றும் சுசில், ஓப்பனர்களாகக் களம் கண்டனர். இரண்டாவது ஓவரிலேயே, சிலம்பரசன், அக்ஷய்யின் விக்கெட்டைத் தூக்கினார். கௌசிக் பாய்ந்து பிடித்த அந்த அற்புத கேட்ச், மதுரையின் நம்பிக்கையை தொடக்கத்திலேயே அதிகரிக்கச் செய்தது. ஆனால், அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஒன்டவுனில் உள்ளே வந்த விஜய் சங்கர்தான், கதையையே மாற்றப் போகிறார் என்று.

TNPL | #SSvSMP
TNPL | #SSvSMP

அக்ஷய்யை சேலம் இழந்திருந்தாலும், இன்னொரு ஓப்பனர், சுசில் நன்றாகவே ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த சேலத்திற்கு, பவர் பிளே முடிவதற்குள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. வீச வந்த முதல் ஓவரிலேயே, நன்றாக செட்டில் ஆகி, அடித்து ஆடத் தொடங்கியிருந்த சுசிலை, கௌதம் அனுப்பி வைத்தார். பவர் பிளே ஓவர்கள், வெறும் 42 ரன்களை மட்டுமே சேர்த்திருக்க, அது எப்பொழுதும் போல, சேலத்தின் மோசமான தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. சேலத்தின் சோகக் கதை தொடரவும் செய்தது, அபிஷேக்கின் வடிவில். மதுரையின் காப்பாளரான கௌசிக், ஸ்டம்ப் லைனிலேயே பந்து வீசி, அபிஷேக்கைத் திணறடித்துக் கொண்டிருந்தார். அதன் பலனாக, அபிஷேக்கின் விக்கெட், எல்பிடபிள்யூவில், அவருக்குக் கிடைத்தது.

10 ஓவர்களின் முடிவில் கூட, சேலத்தின் ஸ்கோர் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, வெறும், 59 தான். ஆனால், விஜய் சங்கரை வீழ்த்துவதற்கான வழிகளைத் தேடத் தவறியதுதான் மதுரை செய்த பெருந்தவறு. மற்ற பேட்ஸ்மேன்கள் விருந்தினர் போல், வந்தாலும் போனாலும், அவர் களத்தில் நங்கூரமிட்டு, நன்றாக செட்டில் ஆகி விட்டார். குறிப்பாக, விஜய் சங்கர் - கேப்டன் ஃபெர்ராரியோ கூட்டணியை உடைக்க மதுரை நிரம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது. ரன்கள் மளமளவென உயரவில்லைதான், ஆனால், விக்கெட்டுகளின் சரிவிற்கும் அவர் அணை கட்டித் தடுத்திருந்தார்.

போட்டியின் 100-வது பந்து வரை நின்று ஆடிய விஜய் சங்கர், 40 பந்துகளில், 47 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்தக் கட்டத்தில் கூட, எல்லாமே மதுரையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது, ஆனால், அஷ்வின் முருகனின் நுழைவுதான், சகலத்தையும் மாற்றியது. வந்த மாத்திரத்தில், அடித்த முதல் பந்தையே, ஓவர் த டீப் கவரில், சிக்ஸராக மாற்றித்தான் தொடங்கினார், முருகன் அஷ்வின்.

TNPL | #SSvSMP
TNPL | #SSvSMP

ஒரு பெரிய ஓவருக்காகக் காத்திருந்தவர்களுக்கு, சிலம்பரசனின் கடைசி ஓவர் வசமாக சிக்கியது. அந்த ஓவரின் முதல் பந்தையே வொய்ட் லாங்க் ஆனிற்கு பார்சல் செய்தார் முருகன் அஷ்வின், அந்த கேட்ச் பவுண்டரி லைனில் தடுக்க முடியாததாகி, சிக்ஸராக மாற, அந்த ஓவர் முழுவதும் சிலம்பரசனை சூரையாடிய இக்கூட்டணி, 19 ரன்களைக் குவித்து விட்டது. கடைசி ஓவரில் 30 ரன்களோடு, ஃபெர்ராரியோ வெளியேறினாலும், முருகன் அஷ்வின், கடைசிப் பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பி முடித்து வைத்தார். இறுதியாக, 144 என வந்து நின்றது சேலத்தின் ஸ்கோர். அச்சமயம், மதுரை நினைத்திருக்காது, இதுதான் அவர்களது ப்ளே ஆஃப் நுழைவுக்கு, 144 போடப் போகும் ஸ்கோர் என்று.

விஜய் சங்கரின் இன்னிங்ஸும் முக்கியமானதுதான் என்றாலும், அழுத்தமான சூழ்நிலையில் இறங்கி வந்த முருகன் அஷ்வின், 12 பந்துகளில், 30 ரன்களைக் குவித்ததுதான், சேலத்துக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. மதுரையின் சார்பில், கௌதமும் சிலம்பரசனும், தலா இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியில் ரன்களைக் கசிய விட்டு விட்டாலும், 145 என்பது அடிக்கக் கூடிய ஸ்கோராகவே பார்க்கப்பட்டது. எனினும் மதுரையின் பலவீனம் நிலைத்தன்மையற்ற பேட்டிங் என்றால், சேலத்தின் பலம், அவர்களுடைய பௌலிங்தான். இந்தக் கூட்டல் கழித்தல்கள், ரசிகர்களின் மூளைக்குச் சொன்ன விஷயம், 145 என்பதுதான் இலக்கு என்றாலும், போட்டி, கடைசிப் பந்து வரை நகரும் என்பதைத்தான்.

சுகேந்திரனும், அருண் கார்த்திக்கும் ஓப்பனர்களாக இறங்கினர். மதுரை போட்டிகளை கோட்டை விட்டதற்கு, பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டே இருப்பதும் ஒரு காரணம்தான். நல்ல ஓப்பனரான அருண் கார்த்திக்கை, பின்வரிசையில் சில போட்டிகளில் இறக்கியவர்கள், இப்போட்டியில், பழையபடி, ஓப்பனராக இறக்கினர். ஃபெர்ராரியோவை, எப்போதும் கைவிடாத கணேஷ் மூர்த்தி, இப்போதும் கைவிடவில்லை. அவரது முதல் விக்கெட்டாக, சுகேந்திரன் நான்காவது பந்திலேயே வெளியேறினார்.

அதோடு ஓயாத சேலம், விஜய் சங்கரோடு திரும்பத் தாக்க, அதில் இம்முறை விழுந்தது, அருண் கார்த்திக். ஓப்பனர்கள் இருவரையுமே, 2 ஓவர்களில் இழந்து பரிதவித்தது மதுரை, எழ விடாமல் அடித்தது சேலம்.

TNPL | #SSvSMP
TNPL | #SSvSMP

இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராதது போல்தான் இருந்தது, மதுரையின் ஆட்டம். இலக்கு இவ்வளவுதான், இப்படி ஆடினாலே இலகுவாக வெற்றிக் கோட்டைத் தொடலாம் என்ற எவ்வித அடிப்படைத் திட்டமிடலும் இல்லாமலே, களம் கண்டிருந்தனர்.

இரண்டு விரைவான விக்கெட்டுகளுக்குப் பிறகு, கேப்டன் ஷதுர்வேத்தும், அனிருத் சீதா ராமும் கை கோர்த்தனர். போன போட்டியில் போராடி ரன்களைக் குவித்தும், அணி தோற்ற வலியிலிருந்து மீண்டு, அணியைக் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு, கேப்டனாக ஷதுர்வேத்திடம் இருந்தது. இந்தக் கூட்டணி அதனைச் சரியாகவே புரிந்து வைத்திருந்தது. அடுத்த எட்டு ஓவர்களுக்கு எல்லாமே சரியாகத்தான் நகர்ந்தது.லோகேஷ் ராஜின் ஓவரில், 15 ரன்களைக் குவித்து, பத்தாவது ஓவரின் முடிவில், 64 ரன்களைச் சேர்த்திருந்தனர்.

தேவைப்பட்டதில் பாதி ரன்கள் கூட வரவில்லை என்றாலும், மேலும் எந்த விக்கெட்டும் விழவில்லை என்பதும், இறுதிக் கட்டங்களில், ரன்களை ஏற்ற கௌசிக் இருக்கிறார் என்பதும், மதுரை சரியான பாதையில் பயணிக்கிறதெனத் தோண வைத்தது. ஆனால், இங்கிருந்து எல்லாமே மாறயது. பேட்டிங்கில் அசத்திய முருகன் அஷ்வின், இக்கட்டத்திலும் மீட்புக்கு வந்தார்.

தனது முதல் ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரின் தொடக்கத்திலேயே, ஷதுர்வேத்தை 23 ரன்களோடு, முருகன் அஷ்வின் அனுப்பி வைத்தார். போட்டியின் போக்கு, சேலத்தின் பக்கம் செல்லத் தொடங்கியதும் இந்தச் சமயத்தில்தான். எனினும், கௌசிக்கின் மீது தங்களது முழு நம்பிக்கையையும் வைத்தது மதுரை. அதையும் உடைத்து எறிந்தது, சாட்சாத் முருகன் அஷ்வினேதான்.

TNPL | #SSvSMP
TNPL | #SSvSMP

இந்த இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகள், மதுரையை டிஃபெண்டிங் மோடுக்கு நகர்த்தி விட்டன. இந்தப் போட்டியில் நாம் வென்றே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை எல்லாம் மறக்கடித்து விட்டது, முருகன் அஷ்வினின் ஸ்பெல். மந்திரம் போட்டதைப் போல், ரன்கள் எடுக்க வேண்டுமென்பதையே மறந்து விட்டனர், ஐந்து ஓவர்களில், 31 ரன்கள் மட்டுமே வந்திருந்தது.

இதன் பிறகு, விக்கெட் விழவில்லைதான். ஆனால், இலக்கு தள்ளிப் போக ஆரம்பித்து விட்டது, ஐந்து ஓவர் மட்டுமே கைவசமுள்ளது, 51 ரன்கள் தேவை என கடினமாகி விட்டது மதுரைக்கான பயணம். அனிருத் ஒருபக்கமாகப் போராடி, 46 பந்துகளில், அரைசதம் சேர்த்து விட்டார் என்றாலும், கௌசிக் போன்ற ஒரு நல்ல ஃபினிஷர் இல்லாமல் இருந்ததுதான், மதுரையின் தோல்விக்குக் காரணமாக இருந்தது.

TNPL: விளாசிய விவேக், விடைபெற்ற திருப்பூர்... பிளேஆஃப்பிற்குத் தகுதிபெற்ற திண்டுக்கல்!

18-வது ஓவரில் லோகேஷின் பந்தில், அனிருத்தின் விக்கெட் விழுந்த போதே, மதுரை ஃப்ளே ஆஃபை விட்டு வெளியேறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதை 19-வது ஓவரில், பெரியசாமி எடுத்த ரோஹித் மற்றும் கௌதமின் இரண்டு விக்கெட்டுகள், உறுதி செய்து விட்டது. இறுதி ஓவரில், 24 ரன்கள் வேண்டும் என எட்ட முடியாத நிலைக்கு இலக்கு சென்று விட, 13 ரன்களை மட்டுமே சேர்த்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது மதுரை. ஆட்டநாயகனாக, விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

TNPL | #SSvSMP
TNPL | #SSvSMP

முக்கியமான போட்டியில், எளிய இலக்கினைக் கூட எட்ட முடியாது தோல்வியைத் தழுவிய மதுரை, தொடரை விட்டு வெளியேறியது.

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணம் தந்த தைரியத்தில் ஆடிய சேலம், தங்களது தோல்விக் கதைக்கு வெற்றிப்புள்ளி வைத்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு