Published:Updated:

சேலத்தைச் சாய்த்த ஹரி நிஷாந்த், விவேக்; ஒற்றை ஆளாகப் போராடிய முருகன் அஷ்வின் - திண்டுக்கல் ஆன் டாப்!

ஹரி நிஷாந்த் | TNPL | #DDvSS ( twitter.com/TNPremierLeague )

விவேக்கின் அதிரடி, நிஷாந்த்தின் பொறுமையான ஆட்டம், மோகித்தின் கலக்கல் கேமியோ, பௌலர்களின் தனி ஆவர்த்தனம் என திண்டுக்கலுக்கு எல்லாமே சரியாகச் செல்ல, சேலம் இப்போட்டியில் டாஸைத் தவிர வேறு எதையும் வெல்லவில்லை.

சேலத்தைச் சாய்த்த ஹரி நிஷாந்த், விவேக்; ஒற்றை ஆளாகப் போராடிய முருகன் அஷ்வின் - திண்டுக்கல் ஆன் டாப்!

விவேக்கின் அதிரடி, நிஷாந்த்தின் பொறுமையான ஆட்டம், மோகித்தின் கலக்கல் கேமியோ, பௌலர்களின் தனி ஆவர்த்தனம் என திண்டுக்கலுக்கு எல்லாமே சரியாகச் செல்ல, சேலம் இப்போட்டியில் டாஸைத் தவிர வேறு எதையும் வெல்லவில்லை.

Published:Updated:
ஹரி நிஷாந்த் | TNPL | #DDvSS ( twitter.com/TNPremierLeague )
விளையாடிய ஒரு போட்டியில் மட்டுமே வென்ற வலியோடு சேலம் அணியும், ஒரு தோல்வியை மட்டுமே ருசித்த நம்பிக்கையோடு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், அனல் பறக்க, மோதிக் கொள்ளக் களமிறங்கின. தொடரின் லீக் போட்டிகள், ஏறக்குறைய பாதிக்குப் பாதி முடிந்து விட்டதால், ஒவ்வொரு போட்டியின் முடிவும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரண்டு அணிகளும் உணர்ந்திருந்தன.

கேப்டனாகப் பதவியேற்ற இரண்டு போட்டியிலும், அணியை ஜெயிக்க வைத்திருந்ததால், டாஸை இழந்து பேட்டிங் செய்யப் போகிறோம் என்று புரிந்தும், சேஸிங் சுலபம் என்பது சேலத்துக்குச் சாதகம் என்பது தெரிந்தும், தனது அணியின் மீதிருந்த நம்பிக்கையில் ஹரி நிஷாந்த்திடம் கலக்கம் காணப்படவில்லை.

இடக்கை ஆட்டக்காரரான நிஷாந்தைக் குறி வைத்து ஓப்பனிங்கையே, கணேஷ் மூர்த்தியின் சுழலை வைத்துத்தான் தொடங்கினார் ஃபெர்ராரியோ. அதற்குரிய பலன் அந்த ஓவரில் கிடைக்காமல் அது காஸ்ட்லி ஓவராக ஒன்பது ரன்களோடு மாறி இருப்பினும், தொடர்ந்து இன்னொரு ஓவரும் அவருக்குக் கொடுக்கப்பட, அது பலனளித்தது. ஆனால், நிஷாந்த்துக்கு வைக்கப்பட்ட, பொறியில், அருண் சிக்கினார். 8 பந்துகளில், ஒரு ரன்னை மட்டுமே எடுத்த பிரஷர் தலைக்கேற, அந்தப் பந்தை இறங்கிவந்து சந்திக்க அருண் முயன்றார். அவரை ஏமாற்றிய பந்து, கீப்பரின் உதவியோடு ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

TNPL | #DDvSS
TNPL | #DDvSS
twitter.com/TNPremierLeague

ஒன்டவுனில், விவேக் உள்ளே இறங்கினார். எப்பொழுதும் பின்வரிசையில் களமிறங்கும் விவேக், முதல் முறையாக இந்தப் பொசிஷனில் இறக்கப்பட, அது அவர்களுடைய ஸ்மார்ட் மூவாகப் பார்க்கப்பட்டது. சந்தித்த முதல் பந்து இரண்டு ரன்களாக, இரண்டாவது பந்தே பவுண்டரியாக, அசத்தலாகத் தொடங்கினார் விவேக். அடுத்த சில பந்துகளிலேயே கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தன் மீது கொண்டு வந்தார்.

ஓவருக்கு ஒரு முறைதான், பெரிய ஷாட் அடிப்பேன் என உறுதிமொழி எடுத்ததைப் போல் ஆடினாலும், அவர் அப்படி அடித்த ஒவ்வொரு ஷாட்டும், சேலத்தைத் சிதறச் செய்தது. லோகேஷின் பந்தில், கீப்பரின் தலைக்கு மேலாகப் பறக்கவிட்ட அந்த சிக்ஸராகட்டும், கணேஷ் மற்றும் முருகன் அஷ்வினின் ஸ்பின்னோடு, தனது வேகத்தைச் சேர்த்து, ஓவர் த லாங் ஆனில் பறக்கவிட்ட அந்த இரண்டு சிக்ஸர்களாகட்டும், அசத்தல் அதகளங்கள்.

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக, தனது முதல் ஸ்பெல்லின், முதல் ஓவரில், ஒரு ரன்னை மட்டுமே கொடுத்த விஜய் சங்கரைத்தான் வெறிகொண்டு தாக்கினார் விவேக். அந்த ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியவர், அதற்கடுத்த பந்தை, லாங் ஆஃபில் சிக்ஸராகத் தூக்கி, 36 பந்துகளில் அரைசதம் தொட்டு அசத்தினார்.

200-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து காட்டிய அணி, இம்முறை, 200-க்கும் அதிகமான ரன்களை நிர்ணயிக்குமா என்ற பயம் சேலத்தைச் சூழ, அதற்கு நேரெதிர் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தன. லோகேஷ் வீச வந்த 12-வது ஓவரில், பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறின. முதல் பந்தை, விவேக் அடிக்க அது தேர்ட் மேன் பொசிஷனில் இருந்து சற்றே தள்ளித் தரையை நோக்கிப் பாய, தாவிப் பிடிக்க முனைந்த பெரியசாமியையும் ஏமாற்றி, பவுண்டரி லைனைத் தொட்டது. இரண்டாவது பந்தையும் அதேபோல லோகேஷ் வீச, இம்முறை விவேக் அடித்த பந்து, பெரியசாமியிடமே தஞ்சம் புகுந்தது. இந்த விக்கெட்டுக்குப் பின், லோகேஷ் மிக ஆக்ரோஷமாக அதைக் கொண்டாடினார்.

விவேக் | TNPL | #DDvSS
விவேக் | TNPL | #DDvSS
twitter.com/TNPremierLeague

இந்தச் சமயத்தில், மணிபாரதி இறங்கி, ஸ்ட்ரைக்கிற்கு வர, டாப் கிளாஸ் பேட்ஸ்மேனான அவரையும், அதற்கடுத்த பந்தில், லோகேஷ் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டு பந்துகளில், இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது அவரது ஆக்ரோஷத்தை இன்னமும் அதிகரித்து, மணிபாரதியோடு வார்த்தைப் பரிமாற்றங்களில் ஈடுபட வைக்க, மற்றவர்கள் புகுந்து நிலைமையைச் சரி செய்தனர். தொடர் முக்கியமான கட்டத்தை எட்டுவதால், கடந்த சில போட்டிகளாக பௌலர்களிடம் இப்படி ஒரு ஆக்ரோஷத்தை, ஃபீல்டில் பார்க்க முடிகிறது.

இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்த சேலம், போட்டியின் லகானை, தாவிப் பிடித்தாகவே அப்போது தோன்றியிருக்கும். ஆனால், அங்கிருந்தும் போட்டி, பல திருப்பங்களைச் சந்தித்தது. ஹரி நிஷாந்த் ரன்களைக் குவிக்கவில்லையே ஓழிய, பொறுப்பான கேப்டனாக, சப்போர்டிங் ரோலைச் செய்து கொண்டிருந்தார். விவேக்குடனான பார்ட்னர்ஷிப் போல, இன்னொன்று அமைந்து வரக் காத்திருந்தார். அது வெகு விரைவில் நடந்தது. அணியின் முன்னாள் கேப்டன், சீனிவாசன் வந்து முருகன் அஷ்வினின் கூக்ளியில் சிக்ஸர் அடித்த சந்தோஷத்தோடு வெளியேறினார். அந்த நேரம்தான், மோகித் உள்ளே வந்தார்.

நிஷாந்த் - விவேக் கூட்டணி போல, இக்கூட்டணிதான் இறுதியில் ரன் ஏறக் காரணமாக இருந்தது. சேலம் தோற்றதும் இங்கேதான். அவர் வந்த சமயம், ஐந்து ஓவர்களே எஞ்சி இருந்தால், அடித்து ஆடத் தொடங்கினர், விஜய் சங்கரின் ஒரு ஓவரில் மட்டுமே, 20 ரன்கள் வந்துவிட்டன. 21 பந்துகள் மட்டுமே நீடித்த இக்கூட்டணி, 57 ரன்களைக் குவித்து, 'ஹை ஸ்கோரிங் கேம் லோடிங்', என உரக்கச் சொல்லியது. ஆறுதல் பரிசாக, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சேலம் பெற்றுக் கொண்டாலும், அதற்குள் நிஷாந்த்தின் அரைசதமும் வந்து சேர்ந்திருந்தது. மோகித்தின் 213 ஸ்ட்ரைக்ரேட், 32 ரன்கள் கேமியோவால், 185 ரன்களை வாரிக் குவித்தது, திண்டுக்கல்.

186 என்பது சவாலான இலக்கு என்றாலும், அவ்வளவு சீக்கிரத்தில், சேலம் பணியாது, திருப்பிக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சேலமோ, எழுச்சி கொள்ள அல்ல, எழக்கூட முயலவில்லை. நேற்றைய போட்டியில், பேட்டிங் பொசிஷன்களைக் களைத்துப் போட்டு, விளையாடி இருந்தது சேலம். கோபிநாத் இல்லாததால், அக்ஷய்யும், பொதுவாக பின்வரிசையில் ஆடும் அபிஷேக்கும் இறங்கி இருந்தனர்.

TNPL | #DDvSS
TNPL | #DDvSS
twitter.com/TNPremierLeague

இரண்டு பவுண்டரிகளோடு அதிரடியாக ஆரம்பித்த அபிஷேக்கை, ஒரு அற்புத இன் ஸ்விங்கால் சுதேஷ் காலி செய்ய, அதன்பின் வேட்டையாடத் தொடங்கியது திண்டுக்கல்லின் மொத்த பௌலிங் படையும். ஒரு விக்கெட்தானே என தெம்பாக இருந்த ரசிகர்களுக்கு இரட்டை இதயத் தாக்குதலை ஏற்படுத்தியது சுதேஷின் இன்னும் ஒரு ஓவர். பொறுப்பில்லாத வகையில் அக்ஷய் ரன் அவுட்டாக, அடுத்த பந்திலேயே விஜய் சங்கரின் விக்கெட்டும் வீழ்ந்து, இப்போட்டியில் சேலத்துக்கான வெற்றி வாய்ப்பு குறைவென்பதை உணர்த்தியது. ஆனால், அதை மாற்றுவேன் என்னும் ரீதியில், சுசில் ஆடிக் கொண்டிருந்தார். சந்தித்த ஆறே பந்துகளில், மூன்று முறை பந்தை பவண்டரி லைனைப் பார்த்து வர அனுப்பி, குர்ஜப்நீத்துக்கும் திண்டுக்கலுக்கும் சேர்த்தே வாய்ப்பூட்டுப் போட்டார்.

சுசிலின் ஆட்டம், வெகு நேரம் நீடிக்கவில்லை. திரும்பி வந்த வேகத்தில், தனது இரண்டாவது ஸ்பெல்லில், முதல் பந்திலேயே, அவரது விக்கெட்டை விக்னேஷ் வீழ்த்தினார். இதோடு முடியவில்லை சேலத்தின் சோகம். அதற்கடுத்த ஓவரிலேயே, ஃபெர்ராரியோ மற்றும் ரவி கார்த்திகேயனின் விக்கெட்டுகளும் விழ, 42/6 என தள்ளாடியது சேலம். அந்தக் கட்டத்தில் எல்லாம், அவர்கள் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கையை விட, விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கைதான், அதிகமாக இருந்தது.

ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியின் முடிவை முன்பே அறிவித்துவிட்ட திண்டுக்கல்லை, சுகனேஷ் மற்றும் முருகன் அஷ்வின் இணை சற்று சோதித்தது. 35 பந்துகள் களத்தில் நின்றிருந்த இந்த வீரர்களின் பொறுமை, முன்வரிசை வீரர்களுக்கும் இருந்திருந்தால், ஒருவேளை சுலபமாக வெற்றி சேலத்திடம் சேர்ந்திருக்கும். இக்கூட்டணியை, ஸ்வாமிநாதன் முறிக்க, போட்டி எத்தனை ஓவர்கள் வரை போகும் என்பது மட்டுமே, ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
முருகன் அஷ்வின் | TNPL | #DDvSS
முருகன் அஷ்வின் | TNPL | #DDvSS
twitter.com/TNPremierLeague

அடுத்ததாக வந்த கணேஷ் விரைவில் வெளியேறினாலும், போட்டி பல ஓவர்களுக்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது எனத் தெரிந்தாலும், முருகன் அஷ்வின் மட்டும் நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருந்தார். லோகேஷின் விக்கெட்டும் விழுந்த பிறகும் கூட, கடைசியாக இணைந்த பெரியசாமியோடு சேர்ந்து, 100 ரன்களையாவது கடக்க வேண்டும் எனப் போராடினார். இறுதியாக, அவரது விக்கெட்டும், விக்னேஷின் பந்தில் விழ, 109 ரன்களோடு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது சேலம்.

முதல் பாதியில் டெத் ஓவர்களில், மிரட்டி ரன் குவித்த திண்டுக்கல், இரண்டாவது பாதியில், அசத்தலான பௌலிங்காலும், ஃபீல்டிங்காலும், வெற்றியை தன் வசமாக்கியது. சேலம் சொதப்பிய இடமும் இங்கேதான். பவர்பிளே ஓவர்களில், அசத்தலாகப் பந்து வீசினர். எனினும் இறுதி ஓவர்களில், அதற்கு நேர் எதிராக மிகவும் மோசமாகப் பந்து வீசினர். தங்களது பேட்டிங்கிலும், அவர்களிடமும் நிதானமும் பொறுமையும் இல்லை. இரண்டு வீரர்கள் ரன் அவுட்டில் வெளியேற, மற்ற வீரர்கள் ஷாட் செலக்சனிலும் தவறவிட்டனர். இது தொடர்ந்து இரண்டாவதாக ஒரு தோல்வியை சேலத்திடம் தந்திருக்கிறது.

அனுதினமும் மாறும் இடம்தான் என்றாலும், இப்போதைக்கு முதலிடம் திண்டுக்கலிடம்!