Published:Updated:

சஞ்சய்யின் அதிரடியால் வீணான ஸ்ரீனிவாசன் இன்னிங்க்ஸ் - ப்ளேஆஃப் சான்ஸை உறுதிசெய்ய தவறிய திண்டுக்கல்!

TNPL | #NRKvDD

வல்லவர் வீழ்வதும், வீழ்ந்தவர் வீறு கொள்வதும் ப்ளேஆஃப் பந்தயத்தில் புதிதல்ல என திண்டுக்கல்லைத் தோற்கடித்து இரண்டாவது வெற்றியைப் பதிவேற்றியுள்ளது நெல்லை.

சஞ்சய்யின் அதிரடியால் வீணான ஸ்ரீனிவாசன் இன்னிங்க்ஸ் - ப்ளேஆஃப் சான்ஸை உறுதிசெய்ய தவறிய திண்டுக்கல்!

வல்லவர் வீழ்வதும், வீழ்ந்தவர் வீறு கொள்வதும் ப்ளேஆஃப் பந்தயத்தில் புதிதல்ல என திண்டுக்கல்லைத் தோற்கடித்து இரண்டாவது வெற்றியைப் பதிவேற்றியுள்ளது நெல்லை.

Published:Updated:
TNPL | #NRKvDD
இந்த சீசனின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான திண்டுக்கலுக்கு எதிரான போட்டி, நெல்லைக்குப் போராட்டமாகவே இருக்கப் போகிறதென்பதே அனைவரின் ஆரம்ப கட்டப் பார்வையாக இருந்தது. ஆனால், நெல்லையோ, நாளைத் தனதாக்கி விட்டது.

களம் சுழல் பந்துக்குச் சாதகமாக இருக்கும், சேஸிங்கும் சுலபமாக இருக்கும் என்பதால், டாஸை வென்ற நெல்லைக்கு அது கூடுதல் பலமாக அமைந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த், சஞ்சய்யோடு களமிறங்க, திண்டுக்கல்லின் வலிமையான பேட்டிங் லைன் அப்பும், நெல்லையின் சவால் விடும் பௌலிங் லைன் அப்பும், மோதிக் கொள்ளத் தொடங்கின.

தொடக்க ஓவரில், சரியான லைன் கிடைக்காமல், அதிசயராஜ் திணறினாலும், ரன்களைக் கட்டுப்படுத்தினார். அந்த அழுத்தத்தினால், அதற்கடுத்த ஓவரிலேயே ஹரீஷுடைய பந்தைச் சரியாகப் பிளேஸ் செய்யத் தவறி ஜிதேந்திரக் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹரி நிஷாந்த். மறுபுறம் சஞ்சய்யும், நிஷாந்தைத் தொடர்ந்தே தீருவேன் என அடம் பிடிப்பதைப் போல் ஆடிக் கொண்டிருந்தார். 'ரன்களைக் காணவில்லை' என புகார் கொடுக்க வேண்டிய அளவு, மோசமாகத் தொடர்ந்த அவரது ஆட்டம் அதிசயராஜினால் முடிந்தது அதிசயமில்லை. 12 பந்துகளில், 2 ரன்களை மட்டுமே சேர்த்து வெளியேறினார், சஞ்சய்.

TNPL | #NRKvDD
TNPL | #NRKvDD

ஸ்ரீனிவாசனும் மணி பாரதியும், "அதற்குள்ளாகவா எங்கள் முறை வந்துவிட்டது?!", என ஆச்சர்யத்தோடே கை கோத்தனர்‌. ட்ரிலாக்கின் வேகத்திலேயே பேட்டை வீசி, இரண்டு பவுண்டரிகளைச் சேர்த்துக் கொண்டனர். ஆறு ஓவர்கள் முடிவில், 33 ரன்களை மட்டுமே எடுத்து, படு சுமாராக, தனது இன்னிங்ஸைத் தொடங்கியது திண்டுக்கல். சஞ்சய் யாதவ், மெய்டன் ஓவர் எல்லாம் கொடுத்து நெருக்கடி தந்தாலும், மற்றவர்களின் ஓவர் வந்தபோது, இழந்ததை ஈடு செய்து கொண்டனர்.

நெல்லை பௌலர்களின் பொறுமையின் எல்லைகளை எல்லாம் ஆராய்ந்து அறிந்து கொண்டிருந்த இக்கூட்டணி, 10 ஓவர்களுக்கும் மேல் தாக்குப் பிடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக அதிரடிக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்க, அது தங்களுக்குரிய அபாயக் கட்டமென உணர்ந்த நெல்லை, சஞ்சய் யாதவ்வைக் கொண்டே தொடர்ந்து நெருக்கடி தர, மணிபாரதி தனது விக்கெட்டை, மோசமான டைமிங்கினால் கிஃப்ட் கவர் செய்யாதது ஒன்றுதான் குறையாக, பரிசாகக் கொடுத்துச் சென்றிருந்தார். 24 பந்துகளில், 30 ரன்களைச் சேர்த்திருந்த அவர், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் கோட்டை விட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுமுனையில் நின்றிருந்த ஸ்ரீனிவாசன், அணி தன்னிடம் தொடரின் முதலில் இருந்து எதிர்பார்த்த அந்தப் பெரிய இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தார். புல் ஷாட், அப்பர் கட், இன்ஷைட் அவுட் எனப் பேட்டுக்கு எல்லா திசைகளையும் கற்றுத் தந்து கொண்டிருந்தார். 39 பந்துகளில், அரைசதத்தைக் கடந்திருந்தவர், மணிபாரதி ஆட்டமிழந்த பின்பும் சற்று நேரம் தாக்குப் பிடித்தார். இதன்பிறகு அவரும் வீழ, அவருடைய ஆட்டமிழப்பு திண்டுக்கலுக்கு வினையாக முடிந்தது. 15 ஓவர்களில் 104 ரன்களை மட்டுமே திண்டுக்கல் சேர்த்திருந்தது.

இந்த இரண்டு விக்கெட்டுகள்தான், நெல்லையின் வெற்றிக்கான டிக்கெட்டுகள். இவை விழாமல் இருந்திருந்தால், நிலைமை தலைகீழாகக் கூட மாறிப் போய் இருக்கலாம். இறுதி ஐந்து ஓவர்களில் ரேஸ் குதிரையாக ஒட வேண்டிய ரன் மீட்டர், காலுடைந்ததைப் போல் சற்றே தடுமாறத் தொடங்கியது. எனினும், விவேக் விட்டு விலகுவதாக இல்லை. விடாது தொடர்ந்த அவரது போராட்டத்திற்கு அங்கீகாரமாகக் கணிசமாக ரன்கள் சேர்ந்திருந்தன. 139 ஸ்ட்ரைக்ரேட்டோடு, அவர் அடித்த 32 ரன்கள் மட்டுமே திண்டுக்கல்லின் ஸ்கோரை 148 வரை கொண்டு வந்து நிறுத்தியது.

TNPL | #NRKvDD
TNPL | #NRKvDD
தொடக்க வீரர்களின் சொதப்பல், அதற்குப்பின், மத்தியில், விரைவான இரண்டு விளையாட்டுகள் ஆகியவைதான், திண்டுக்கல்லின் சரிவுக்கான வரவேற்புக் கட்டுரையை வாசித்திருந்தன.

148 ரன்கள் இலகுவான இலக்கு என்றாலும், திண்டுக்கல் பௌலர்கள், அதை அடைவதற்கான பாதையை, யார்க்கர்களாலும், கட்டர்களாலும் நிரப்பி வைப்பார்கள் என்பது தெரிந்த கதைதான் என்றாலும், அது நெல்லைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அதனை உறுதி செய்வது போல், அபராஜித், இரண்டு அடுத்தடுத்த பவுண்டரிகளோடு, தனது நாளைத் தொடங்கினார். இந்தக் கூட்டணியை டாட் பால்களால், திண்டுக்கல் அமுக்க நினைத்தால், எம்பி எழுந்து ஒரு பெரிய ஷாட் மூலமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்து கணக்கை நேராக்கினர். எனினும், திண்டுக்கல்லின் பௌலிங்கும் மிகச் சிறப்பாகவே இருந்தது.

ரன்களை மளமளவென ஏற விடாமல் இவர்கள் வேகத்தடை இட்டதோடு ஷார்ட் பால்களாலும் நெருக்கடி தர, நெல்லையின் சூர்யப்பிரகாஷ் அதற்கு பலியாகி வெளியேறினார். அடுத்ததாக இணைந்த அபராஜித் - பிரதோஷ் இணைதான், அவர்களது வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தது என்று சொல்ல வேண்டும். 48 பந்துகளில், 62 ரன்களைக் குவித்த இவர்கள், அணியின் ஸ்கோரை 97 என 100-க்கு அருகில் கொண்டு சென்றுவிட்டனர். அபராஜித், ஆறே ரன்களில் அரை சதத்தைத் தவற விட்டிருந்தாலும், கிட்டத்தட்ட தனது அணிக்கு, வெற்றிக்கான விலாசத்தை வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் வெளியேறி இருந்தார். இந்த நிலையில், நெல்லைக்கு, 40 பந்துகளில் 50 ரன்கள் என்ற நிலைதான் நீடித்தது.

எமர்ஜென்சி பொத்தானை அழுத்தும் அளவுக்கு அவசரப்பட வேண்டிய அவசியம் எதுவும் நெல்லைக்கு இல்லை. எனவே சஞ்சய் யாதவ்வும் சுதேஷும், நிதானமாக ஆடுவார்கள் என்று நினைத்தால், சஞ்சய் அதற்குத் தயாராக இல்லை. பிரதோஷ் அவசரப்பட்டு ஆட்டமிழக்க, அதன் பின்னர் நெருப்பைக் கக்கத் தொடங்கியது, சஞ்சய்யின் பேட்.

TNPL | #NRKvDD
TNPL | #NRKvDD

இலக்கு கண்ணில் இருந்து சற்றே மறைவதைக் கணித்தவுடன், கையில் கிடைத்த விக்னேஷின் இரண்டு பந்துகளை, ஓவர் த டீப் மிட் விக்கெட்டுக்கு ஒன்று, லாங் ஆனுக்கு ஒன்று என அள்ளிக் கொடுத்து, பழையபடி இலக்கை நெல்லையின் பார்வையில்பட வைத்தார். 15 ரன்கள் வந்து சேர்ந்த இந்த ஒரு ஓவர்தான், நான்கு ஓவர்களில் 23 ரன்கள் என நெல்லைக்கு தொடர் நிகழ்வுகளை சுலபமாக்கியது.

இறுதியாக, சுதேஷின் பந்தில் 15 பந்துகளில், 31 ரன்களை தெறிக்க விட்டிருந்த சஞ்சய் யாதவ், ஆட்டமிழந்தார். எனினும் அந்தச் சமயத்திலேயே, போட்டி முடிவைக் கண்டுவிட்டது. இந்தத் தொடரின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராகத் தொடர்ந்து வலம் வருகிறார் சஞ்சய்.

அதே ஓவரில், அடுத்த விக்கெட்டாக அர்ஜுன் மூர்த்தியை திண்டுக்கல் வீழ்த்தினாலும், இந்திரஜித்தும், ஜிதேந்திரக் குமாரும் இணைந்து, 18.5 ஓவர்களிலேயே எல்லாவற்றையும் முடித்து வைத்தனர். வின்னிங் ஷாட்டாக, லாங் ஆனில் இந்திரஜித் அடித்த பவுண்டரி, நெல்லையை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்துள்ளது. பாபா அபராஜித் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரை ஏழாம் இடத்திற்கு அனுப்பி, ஆறாம் இடத்தில் அடைக்கலமாகி உள்ளது நெல்லை.

நெல்லையை வீழ்த்தி, ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என உற்சாகமாகக் களமிறங்கிய திண்டுக்கல்லை தள்ளாட வைத்துவிட்டது நெல்லை.
TNPL | #NRKvDD
TNPL | #NRKvDD

திருச்சி, 8 புள்ளிகளோடு முதல் இடத்திலும், திண்டுக்கல் 6 புள்ளிகளோடு, இரண்டாவது இடத்திலும் இருக்க, சேலம் மட்டும் பரிதாபமாக அடியில் இருக்கிறது. ஆனால், இவர்களைத் தவிர்த்து மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடம்வரை உள்ள அத்தனை அணிகளும் 5 புள்ளிகளைப் பெற்று சமபலத்துடன் இருக்கின்றன. ரன்ரேட் மட்டுமே, அவர்களை வெவ்வேறு படிநிலைகளில் தூக்கி உட்கார வைத்துள்ளது. இது இந்தத் தொடரின் தரத்தையும், வீரர்களின் திறனையும், போராடும் மனப்பாங்கையும் விளக்குகிறது.

ஒருசில போட்டிகள் வேண்டுமெனில் ஒருபக்கமாக நகர்ந்து முடியலாம். ஆனால், ஒட்டுமொத்த தொடரின் நிலை அப்படியின்றி, திருச்சியைத் தவிர அத்தனை அணிகளையும், 'இன்றைக்கோ நாளைக்கோ' என்ற பதற்றத்தோடே டாப் 4-ல் உட்கார வைத்து, தொடரை உயிர்ப்போடே வைத்துக் கொண்டு உள்ளது.