Published:Updated:

TNPL: நங்கூரமிட்ட சாய் சுதர்ஷன், பௌலர்களைக் கலங்கடித்த ஷாருக்கான்... சேஸிங்கில் சரண்டரான மதுரை!

TNPL | #SMPvLKK

புள்ளிப் பந்தயத்தில் தலைதெறிக்க ஓடி, அட்ரினல் சுரப்பிக்கு அதிகமாக வேலை வைக்கும் இன்னுமொரு டிஎன்பிஎல் போட்டியில் மதுரையை வீழ்த்தி, முதலிடத்தை அலங்கரித்தது கோவை.

TNPL: நங்கூரமிட்ட சாய் சுதர்ஷன், பௌலர்களைக் கலங்கடித்த ஷாருக்கான்... சேஸிங்கில் சரண்டரான மதுரை!

புள்ளிப் பந்தயத்தில் தலைதெறிக்க ஓடி, அட்ரினல் சுரப்பிக்கு அதிகமாக வேலை வைக்கும் இன்னுமொரு டிஎன்பிஎல் போட்டியில் மதுரையை வீழ்த்தி, முதலிடத்தை அலங்கரித்தது கோவை.

Published:Updated:
TNPL | #SMPvLKK
கடந்த போட்டியில் திருச்சியிடம் தோல்வியடைந்த மதுரையும், திண்டுக்கல் டிராகன்ஸிடம் தோல்வியுற்ற கோவை கிங்ஸும், இழந்த நம்பிக்கையை மீட்கும் உத்வேகத்தோடு களமிறங்கினர்.

டாஸை வென்ற அணி, பௌலிங்கைத் தேர்ந்தெடுக்கும் சேப்பாக்கத்தின் சமீபத்திய பாரம்பர்யம் மாறாமல், மதுரையும் அதையேதான் செய்தது. கோவை கேப்டன் ஷாருக்கான், ஸ்ரீனிவாசனுக்கு பதிலாக திவாகரை இறக்குகிறோம் என்று சொல்ல, மதுரை கேப்டன் ஷதுர்வேத், 'வீரர்களில் மாற்றமில்லை' என்று சொன்னார்.

தொடக்க ஓவர்களில், மதுரையின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. டெத் ஓவர்களின் ஜாம்பவானாக அறியப்படும் கிரண் ஆகாஷ், "நியூ பாலும், நான் சொன்னபடி கேட்கும்!", என மிரட்டி, வீச வந்த முதல் ஓவரின் முதல் பந்திலேயே கங்கா ராஜுவை வெளியேற்றினார். அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க வைத்து, அதிரடித் தொடக்கம் கண்டது மதுரை. இன்னொரு ஓப்பனரான, சுரேஷையும் ரோஹித், மிடில் ஸ்டம்பைச் சிதறச் செய்து, "சென்று வாருங்கள்", என வழியனுப்ப, அடித்து ரன் ஏற்ற வேண்டிய பவர்பிளே, விக்கெட்டின் வீழ்ச்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

TNPL | #SMPvLKK
TNPL | #SMPvLKK

ஆறு ஓவர்கள் முடிவில், 30/2 என்று ஸ்கோர் போர்டு சோக கீதம் இசைத்தது. எனினும், சாய் சுதர்சனும் வெங்கட்ராமனும், தங்களது விக்கெட்களை இழக்கக் கூடாதென்ற சர்வ ஜாக்கிரதையோடும், ரன்களை ஏற்றி வேண்டுமென்ற பொறுப்போடும் ஆடினர். முதலில் வெங்கட்ராமனுடன், பிறகு ஷாருக்கானுடன் என சாய் சுதர்சனின் இந்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் கோவையின் இன்னிங்சில் முக்கியமானதாக அமைந்தன.

வெங்கட்ராமனின் விக்கெட் விழுந்த தருணத்தில் கூட, 10.2 ஓவர்களில், 62 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது கோவை. எனவே, மிச்சமுள்ள ஓவர்களில் பந்தை நாலாபுறமும் பறக்க விட்டு, சேப்பாக்கத்தில் ரன்களைக் குவித்தால் மட்டுமே, வெற்றிக்கான இலக்கை நிர்ணயிக்க முடியும். இது 200+ எடுத்தும், போட்டியைப் பறிகொடுத்த கோவையைத் தவிர வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும்? கிடைத்த அந்த வலி நிறைந்த அனுபவப் பாடத்தை எப்படி கோவையால் மறக்க முடியும்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடரில் அதிக ரன்களைக் குவித்தவரான சாய் சுதர்சன் ஒருபுறம் எனில், மறுபுறம், தொடரில், அதிக ஸ்ட்ரைக் ரேட்டை உடையவராக வலம் வரும் ஷாருக்கான்! அப்படிப்பட்ட இருவருடைய பார்ட்னர்ஷிப்பில் இருந்து, பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் தவிர வேறு எதை எதிர்பார்த்து விட முடியும்?! அதேதான் நிகழ்ந்தது! தொடக்கத்தில், ஸ்லோ பிட்சாக, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்த அதே பிட்ச், ஷாருக்கானின் வரவோடே, பேட்டிங்கிற்கு ஆதரவளிப்பதாக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள, அதைப் பயன்படுத்தி, ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். சந்தித்த 49-வது பந்தில், பவுண்டரியோடு, அரைசதம் கடந்தார் சாய் சுதர்சன். இக்கூட்டணி, சந்தித்தது வெறும் 40 பந்துகளைத்தான், ஆனால், சேர்ந்திருந்ததோ 67 ரன்கள். இதுதான், கோவையை போட்டியில் முன்னோக்கி எடுத்துச் சென்றது.

இதற்குப் பிறகு, இன்னமும் உக்கிரமாகி பீஸ்ட் மோடுக்கு மாறத் தொடங்கினார் ஷாருக்கான். கிரண் ஆகாஷின் ஸ்பெல்லில், கடைசி ஓவரில், ஐந்தே பந்துகளில் 17 ரன்களோடு, அவரின் எக்கானமியை எகிற வைத்தார். கடுப்பான கிரண் ஆகாஷ், சாய் சுதர்சனிடம் நட்புப் பாராட்ட, ஒரு ஸ்லோ ஆஃப் கட்டரை தூது அனுப்ப, அது சாய் சுதர்சனின் விஷயத்தில் பக்குவமாகக் காரியம் முடித்தது. பேக்வேர்ட் பாயிண்டில் நின்ற ஃபீல்டரிடம் பந்தைப் பாசத்துடன் அனுப்பி வைத்து, 61 ரன்களோடு சாய் சுதர்சன் வெளியேறினார்.

TNPL | #SMPvLKK
TNPL | #SMPvLKK

பரிட்சைக்கு ஐந்து நிமிடத்திற்கு முன், புதுப்புதுக் கேள்விகளை மனனம் செய்யும் மாணவனின் பதற்றத்தோடும், பரபரப்போடும், ஷாருக்கானோடு இணைந்தார் தன்வர். அடிக்கப்படும் ஒவ்வொரு ரன்னும், இரண்டாவது பாதியில் தங்களை ஓட்டுநர் நாற்காலியில் உட்கார வைக்கும் என்பதால், சந்தித்த 14 பந்துகளிலேயே 31 ரன்களைக் குவித்தது இக்கூட்டணி.

"சிக்ஸர் மட்டுமே சாஸ்வதம், பவுண்டரி மட்டுமே பரம சந்தோஷம்" என்பதைப் போல், அதன்பின் வந்த எல்லா ஓவரையும் ரன்களால் நிரப்பி, மதுரையின் கண்களில் மிரட்சியைக் கொண்டு வந்தது கோவை. தன்வர் 10 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்த ஆத்ம திருப்தியோடு, கௌசிக் பந்தில் விடை பெற்றாலும், ஷாருக்கான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என இம்மியும் நகராமல் களத்திலேயே தொடர்ந்தார். 28 பந்துகளில், பேக்வேர்ட் ஸ்கொயர் லெக்கில் அவர் பறக்கவிட்ட பவுண்டரியோடு, அவரது அரை சதமும் வந்து சேர்ந்தது. கடைசியில், 173 என்னும் சிறந்த இலக்கு மதுரைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் சில ஓவர்கள், பிட்ச் ஸ்லோவாக இருக்க பணிந்து போவதைப் போல் காட்சிகளைக் காட்டிய கோவை, டெத் ஓவர்களில் மதுரைக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டது. விக்கெட்டுகளை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காது, சாய் சுதர்சனும், ஷாருக்கானும் ஆடிய விதம் அவர்களது பேட்டிங் லைன் அப்பின் வலிமையைக் காட்டுகிறது.

173 என்பது கண்டிப்பாக மதுரைக்கு சவாலான ஸ்கோர்தான் என்றாலும், 200-க்கும் அதிகமான ஸ்கோரையே டிஃபெண்ட் செய்ய முடியாத கோவை, இந்த ஸ்கோரை டிஃப்ண்ட் செய்து விட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், "வேறொரு நாளில், முற்றிலும் வேறு வகையான ஆட்டம்" என்பதுதானே, இந்த ஃபார்மட்டின் சுவாரஸ்யமே!

அருண் கார்த்திக் மற்றும் ராஜ்குமாரோடு தொடங்கிய மதுரை, முதல் ஓவரிலேயே, மூன்று பவுண்டரிகளை விளாசி, கோவை விளையாடியதற்கு நேர் எதிரான ஒரு தொடக்கத்தைக் கொடுத்தது. ஷாருக்கான் சுழல் மந்திரம் ஜெபிக்க, செல்வக் குமரனை இரண்டாவது ஓவரில் கொண்டு வந்தாலும், மதுரையின் வேகம் குறையவில்லை. பந்துகளை பஞ்சர் ஆக்கி, பவுண்டரி லைனைக் குறிவைத்துக் கொண்டே இருந்தது இக்கூட்டணி.

TNPL | #SMPvLKK
TNPL | #SMPvLKK

ஒரு கட்டத்தில், அருண் நான் ஸ்டரைக்கர் எண்டில் இருக்க, பந்து வீசிய அபிஷேக் தன்வர், ஆக்ரோஷத்தில் அவர் பந்து வீசுவதற்கு முன்னதாகவே ஓடத் தொடங்கி விட்டார் என நினைத்துக் கத்த, இருவருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் ஆனது. அம்பயர்கள் தலையிட்டு சரி செய்ய, அவர்களை மீறி அருண் கார்த்திக், அபிஷேக்கை நெருங்கினார். அடித்துக் கொள்வார்களோ என்று அம்பயர்களும் சக வீரர்களும், அவர்களைச் சூழ, அருண், அபிஷேக் தன்வரிடமே சென்று கட்டி அணைத்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது பக்குவம் நிறைந்ததாகவும், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பின் அடையாளமாகவும் இருந்தது.

ரன்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டாலும், பௌலரை மாற்றாமல், தன்வரையே தொடர வைத்த ஷாருக்கானின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

கிட்டத்தட்ட, 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு பயங்காட்டிக் கொண்டிருந்த ராஜ்குமாரை தன்வர் அனுப்பி வைக்க, கோவையின் நம்பிக்கை சற்றே துளிர்விட்டது. அதே வேகத்தில், அஜித் ராம், அருண் கார்த்திக்கை வெளியேற்ற, மதுரைக்கு அது இன்னொரு பேரிடியாக இறங்கியது. அனிருத்தும், ஷதுர்வேத்தும், தங்களது இன்னிங்ஸைக் கட்டமைக்கத் தொடங்க, அதனை முறித்தார் திவாகர். இதுதான் கோவை தொடக்கத்தில் இருந்து செய்த சரியான விஷயம், எந்த ஒரு பார்ட்னர்ஷிப்பையும் பில்டப் செய்ய விடாமல் உடைத்துக் கொண்டே இருந்தது.

கேப்டன் ஷதுர்வேத் கடந்த போட்டிகளில் போலின்றி, பொறுப்பாக ஆடினார். எனினும் மறுபுறம் இருந்து ஆதரவுக் கரம், அவருக்கு நீளவே இல்லை. ஒரு கட்டத்தில், இலக்கு தள்ளித் தள்ளிப் போவதை உணர்ந்து, தனது ஆட்டத்துக்கு இன்னமும் சாவி கொடுத்து கோவையைக் கொஞ்சம் கலங்கடித்தார்.
TNPL | #SMPvLKK
TNPL | #SMPvLKK

ஷதுர்வேத்தின் விக்கெட்டும் நிலைத்திருந்தால், கடைசி நேரத்தில் கௌசிக்கும் கியர் மாற்றி, இலக்கை எட்டிப் பிடிக்க வைத்திருப்பார்.

அது நடக்கவே கூடாது என்பதைப் போல்தான், ஷதுர்வேத்தின் விக்கெட்டும், இலவச இணைப்பாக ஷாஜகான் விக்கெட்டும், அஜித் ராமால் அடுத்தடுத்து விழுந்தன. 5 ஓவர்களில் 60 ரன்கள் தேவை என அப்பொழுதே ரன்ரேட் 12-க்கு எகிறி இருந்தாலும், முப்பரிமாண வீரரான, கௌசிக்கின் மேல்தான் மதுரை ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் இருந்தது. அவரும் வழமை மாறாது, தனி ஒருவனாகப் போராடிக் கொண்டுதான் இருந்தார். எனினும், இடையில் விழுந்த மிதுனின் விக்கெட் அவர் மீதான அழுத்தத்தை இன்னமும் அதிகரித்தது.

பளு தூக்கும் வீரரா அவர், எல்லாச் சுமையையும் தாங்கிக் கொள்ள?! ஒருகட்டத்தில், 15 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்திருந்த கௌசிக்கும் ஆட்டமிழக்க, எல்லாமே அப்போதே முடிந்து போனது. இறுதி ஓவரில், சிலம்பரசனின் விக்கெட்டும் விழுந்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது மதுரை.

TNPL | #SMPvLKK
TNPL | #SMPvLKK

மதுரை நன்றாகவே தொடங்கியது எனினும், ஓவர்கள் நகர நகர, ஷாருக்கானின் ஃபீல்டிங் செட்டப்பும், பௌலர்களைப் பயன்படுத்திய விதமும், புள்ளிப் பட்டியலில் அவர்கள் முதலிடத்திலேயே நீடிக்கத் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது. மதுரையோ, அவர்களது பேட்டிங் லைன் அப்பில் இருந்து இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கிறது.

டாஸும் சேஸும் மட்டுமே, வெற்றிப் புள்ளிகளை ஒளித்து வைத்துள்ள பெட்டகத்தின் சாவிகள் என்ற சேப்பாக்கத்தின் சமீபக் கதைகளை, மாற்றி எழுதியுள்ளது கோவை.