Published:Updated:

TNPL: விளாசிய விவேக், விடைபெற்ற திருப்பூர்... பிளேஆஃப்பிற்குத் தகுதிபெற்ற திண்டுக்கல்!

விவேக்கின் விஸ்வரூப விளாசலால் திண்டுக்கல் பிளேஆஃப்பிற்குள் நுழைய, விடைபெற்றது திருப்பூர்.

பொதுவாக, ப்ளே ஆஃப்பில்தான் எலிமினேட்டர், க்வாலிஃபயர் என நாற்காலிச் சண்டைகள் நடைபெறும். ஆனால், டிஎன்பிஎல்லில் லீக் சுற்றின் கடைசி கட்டப் போட்டிகளாக, வார இறுதியில் நடந்து வரும் நான்கு போட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. இதில் சனிக்கிழமை, முதலில் நடைபெற்ற போட்டியில் மோதிக் கொண்ட திண்டுக்கல் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இரண்டுக்குமே பிளே ஆஃப் வாய்ப்புகள் முதலில் இருந்தன.

சேப்பாக்கம் இந்தத் தொடரில் ஏற்படுத்தி வைத்த வழமை மாறாது நாணய சுழற்சியில் வென்ற ஹரி நிஷாந்த், பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். திண்டுக்கல்லின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. தினேஷ் மற்றும் ஆஷிக்கின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தனர். தினேஷின் லெக் ஸ்டம்பையே தகர்த்த விக்னேஷ் அதகளம் காட்டினார்.

ஆனாலும், இன்னொரு ஓப்பனர் சித்தார்த் அவ்வளவு சீக்கிரமாக அடங்கிவிடவில்லை. ஷார்ட் பால்கள் புல் ஷாட் ஆக்கப்பட, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளைக் கூட திறம்பட ஆடி, ஆஃப் சைடில் ரன்களைச் சேர்த்தார். 50 ரன்கள் சேர்த்த மான் பாஃப்னாவுடனான அவரது பார்ட்னர்ஷிப்பை விவேக் காலி செய்தார். 27 பந்துகளில், 36 ரன்களைச் சேர்த்திருந்த சித்தார்த் வெளியேறினார்.

TNPL | #iDTTvDD
TNPL | #iDTTvDD

பத்து ஓவர்களைக் கடந்த நிலையில், 68 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த திருப்பூருக்கு அடுத்து வந்த ஓவர்களில், ரன்கள் குவிப்பது முதல் தேவையாக இருந்தது. முதல் பத்து ஓவர்களை சித்தார்த் எடுத்துச் சென்றார் என்றால், அடுத்த பத்து ஓவர்களிலும் அணியைத் தாங்கிப் பிடித்தவர் பஃப்னாதான். இந்தத் தொடர் முழுமையிலும், இக்கட்டான நிலையில் அணிக்குத் தோள் தந்த அவர், இந்தச் சமயத்திலும் அதனைச் செய்யத் தவறவில்லை.

பஃப்னா - ஃப்ரான்சிஸ், மத்திய ஓவர்களில் பொறுமையாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். இவர்களால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து கொண்டே இருக்க முடிந்ததே ஒழிய, பெரிய ஷாட்டுகளை ஆட முடியவில்லை. அந்தளவுக்கு, கட்டுக்கோப்பாக பந்து வீசியது திண்டுக்கல். பொதுவாக, திண்டுக்கலின் பேட்டிங்தான் அதிகமான கவன ஈர்ப்பைப் பெறும். ஆனால், இப்போட்டியின் முதல் பாதியில், அவர்களது பந்துவீச்சும் மிகத் திறம்படவே இருந்தது. தான் உட்பட கைவசமிருந்து ஏழு பௌலர்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தி, நெருக்கடி தந்தார் ஹரி நிஷாந்த்.

15 ஓவர்களில், 106 ரன்களை ரன்களே வந்திருந்ததால் கொஞ்சம் ஸ்பீடு ஏற்றுவோம் என அடித்து ஆடத் தொடங்கியது திருப்பூர். இதன் விளைவாக விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. நான்கு விக்கெட்களைச் சரித்து விட்டது திண்டுக்கல். எனினும், மொகம்மத், பாஃப்னாவுடன் இணைந்து சின்னதாக ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து, 13 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தார். பின்னர், சுதேஷ் வீசிய பந்தை, விக்னேஷிடம் கேட்சாகக் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

48 பந்துகளில் பாஃபனா அரைசதத்தைக் கடக்க, கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, பதிலடி கொடுத்தது திண்டுக்கல். இறுதியாக, 145 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது திருப்பூர். திருப்பூரின் பவர்பிளேயில் ரன் எடுக்கத் தவறும் அந்த அணுகுமுறைதான், இதிலும் அவர்களுக்கு எதிராக முடிந்தது. தொடர் முழுவதும் இதனாலேயே அவர்கள் போட்டிகளை இழந்திருந்தாலும், கடைசி வரை அத்தவற்றைக் களைய, அவர்கள் முயலவே இல்லை.

TNPL | #iDTTvDD
TNPL | #iDTTvDD
146 ரன்கள், இரண்டு புள்ளிகள், ப்ளே ஆஃபில் நுழைய ஒரு வாய்ப்பு என்பது திண்டுக்கல்லை பழைய ஃபார்முக்குத் திருப்பிவிட்டது‌. தொடரின் தொடக்கத்தில், திண்டுக்கல் மற்ற அணிகளைத் திண்டாட வைத்துக் கொண்டிருந்தது. ஆனால், நடுவில் சில போட்டிகள், அவர்களுக்கு நினைத்ததைப் போல் அமையவில்லை. ஆனால், முக்கிய போட்டியில் முன்பு இழந்த அத்தனையையும் சேர்த்துப் பிடிக்கும் முனைப்போடு, களம் கண்டது திண்டுக்கல்.

ஓப்பனராகக் களமிறங்கிய லோகேஸ்வரின் விக்கெட்டை எளிதாகச் சாய்த்து விட்டது திருப்பூர். மோகன் பிரசாத் அடித்த பந்தை இறங்கி வந்து அடிக்க அவர் முயல, அது தப்பித்தோம் பிழைத்தோம் என ஆஷிக்கிடம் அடைக்கலமாகி, அவர் மூலமாக ஸ்டம்பை முட்டிச் சாய்த்தது. இந்த விக்கெட் களப் பலியாக மாறினாலும், அடுத்து இணைந்த ஹரி நிஷாந்த் - மணி பாரதி கூட்டணி அசராமல் ஆடியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பூர், ஓவர் முழுவதும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினாலும், சரியில்லாத ஒரு பந்து வந்தாலும், அதைக் கண்டறிந்து துவம்சம் செய்தனர். இதனால், பவர்பிளேயில் 49/1 என ஓரளவு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது திண்டுக்கல். ஆனால், அங்கிருந்து சில ஓவர்கள், போட்டி திருப்பூரின் பக்கம் பயணிக்கத் தொடங்கியது.

போட்டியின் ஏழாவது ஓவரை வீசிய கருப்பசாமி, மணிபாரதியினை போல்டாக்கி அனுப்பிவைத்தார், அங்கிருந்து ஒரு சிறிய சரிவைச் சந்தித்தது திண்டுக்கல். இதற்கடுத்த ஓவரை விக்கெட் மெய்டனாக மாற்றி அசத்தினார் கிறிஸ்ட்‌. அதற்கடுத்தாக கருப்பசாமி இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்த, மூன்று ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்திவிட்டது திருப்பூர். இந்த நிலையில், பத்து ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே வந்திருக்க, ரன்ரேட்டும் சமீப ஓவர்களில் சற்றே உதை வாங்கி இருந்தது.

இந்த அடுத்தடுத்த விக்கெட்டுகளை வைத்து போட்டியை, மொகம்மத் தலைமையிலான திருப்பூர், தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வளவு சீக்கிரம் விட்டுத் தர விவேக் தயாராக இல்லை. 10 ஓவர்களில் 77 ரன்கள் பெரிதில்லைதான் எனினும், அதனை அடிக்க அத்தனை ஓவர்களை எடுத்துக் கொண்டால் எனக்கென்ன மரியாதை என்பதைப் போல், ஏதோ 200+ இலக்கைத் துரத்துவதைப் போல் ஆடத் தொடங்கினார்.

TNPL | #iDTTvDD
TNPL | #iDTTvDD

இந்தத் தருணத்தில், கிறிஸ்ட் வீசிய பந்தை பாயிண்டில் அடித்து விட்டு விவேக் ஓட முயல, அச்சமயம் எறியப்பட்ட பந்து கீழே கழன்று விழுந்த கீப்பர் கிளவுஸில் பட்டது. இதற்கு பெனாலிட்டியாக ஐந்து ரன்கள் கள அம்பயரால் வழங்கப்பட்டது. இது அந்தச் சமயத்தில் சற்றே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு, விவேக் வேறு ரூபம் காட்டத் தொடங்கினார். 14-வது ஓவர்வரை கூட பொறுமையாகத்தான் ஆடினார் விவேக். 14 பந்துகளில், 17 ரன்கள் என மெதுவாகத்தான் ஆடிக் கொண்டிருந்தார். 15-வது ஓவரை மொகம்மத் வீச வந்தார். சந்தித்த முதல் மூன்று பந்துகளில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரையும் அவர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 17 ரன்களைப் பெற்றுவிட்டது திண்டுக்கல்.

ENG v IND: ஓங்கிய இங்கிலாந்தின் கை; கம்பேக் கொடுத்த இந்தியா... இன்று வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?

உண்மையில், அந்தத் தருணம் வரை கூட எப்படியேயினும் வென்றுவிடலாம் என்றுதான் ஆடிக் கொண்டிருந்தது திருப்பூர். ஆனால், இந்த ஒரே ஓவர் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. 5 ஓவர்கள் கைவசம், எடுக்க வேண்டியதோ 25 ரன்கள் மட்டுமே எனப் போட்டியை ஏற்கெனவே தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்ட விவேக், அவ்வளவு நேரம் காத்திருக்கப் பொறுமையில்லை எனப் போட்டியின் 17-வது ஓவரில் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். அதுவும் வெறும் 25 பந்துகளில், அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது. அதாவது அரைசதத்தை அவர் அடைந்த போது, அவர் சந்தித்த ஒன்பது பந்துகளில், 33 ரன்களை அவர் சேர்த்திருந்தார்.

TNPL | #iDTTvDD
TNPL | #iDTTvDD

அந்த ஓவரிலேயே இலக்கை எட்டிய திண்டுக்கல், மூன்று ஒவர்கள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி வாகை சூடியது. விவேக் 57 ரன்களோடும், மோகித் 21 ரன்களோடும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முதல் நான்கு விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய திருப்பூர் பௌலர்களால், விவேக்கின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுக்கவே முடியவில்லை. அதுதான், அவர்களுடைய பிளே ஆஃப் கனவை முடித்து வைத்தது.

ஆறு விக்கெட்டுகள் வெற்றியின் காரணமாக, எட்டு புள்ளிகளோடு மூன்றாவது இடத்திற்கு மட்டுமல்ல, பிளேஆஃபிற்கும் முன்னேறியது திண்டுக்கல். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் பிளேஆஃப்பிற்கு ஏற்கெனவே தேர்வாகிய நிலையில், மூன்றாவது அணியாக அவர்களோடு, திண்டுக்கல்லும் இணைந்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு