Published:Updated:

TNPL: ஹரி நிஷாந்த், விவேக் சிக்ஸர் மழை; 2வது குவாலிஃபயரில் திண்டுக்கல்... வாய்ப்பை இழந்த கோவை!

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

கேப்டன் இன்னிங்ஸும், விவேக்கின் கேமியோவும், கோவைக்குச் செக் வைக்க, இரண்டாவது குவாலிஃபயருக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும்' எனக் காட்சிகளை பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால், லீக் சுற்றில் விஸ்வரூபமெடுத்து விளையாடி 201 ரன்களை கோவை குவிக்க, மணி பாரதியின் மலைக்க வைக்கும் பிரமாண்ட கேமியோவில் அதையும் சேஸ் செய்திருந்தது திண்டுக்கல். லீக் சுற்றிலேயே அப்படி வெறிகொண்டு மோதிக் கொண்டவர்கள், தோற்றால் தொடரை விட்டே வெளியேற வேண்டிய கட்டத்தில் எப்படி ஆடுவார்கள் என்ற எதிர்நோக்கல், ஆட்டத்தின் மீதான ஆவலைத் தூண்டியது.

டாஸ் -> சேஸ் -> வெற்றி, நாணய சுழற்சியின் தொடர்ச்சியாக, தொடர்ந்து சுழற்சி முறையில் நடக்கும் நிகழ்வுகள் இவைதானே?! அப்படி இருக்க, டாஸ் வென்ற திண்டுக்கல்லின் ஹரி நிஷாந்த், பௌலிங்கைத் தவிர வேறு எதைத் தேர்ந்தெடுப்பார்?! ஃபீல்டிங் செய்யக் களமிறங்கயது திண்டுக்கல்.

ஓப்பனர்களாக கங்கா ராஜு மற்றும் சுரேஷ் குமார் களமிறங்கினர். பந்து வீச்சில் வழக்கம் போல் மிரட்டியது திண்டுக்கல். பவர்பிளே ஓவர்கள் 'ரன்களுக்குப் பஞ்சம்' என்பதைப் போல் மந்தமாக நகரந்தன. 'கங்கா ராஜுவா இவர்?!', என்ற சந்தேகமே எழும் அளவிற்கு ரன்னெடுக்கத் திணறிக் கொண்டிருந்தார் அவர். 'நிற்கட்டுமா, போகட்டுமா?!', என்பது போலவேதான் இருந்தது கங்கா ராஜுவின் ஆட்டம். செட்டில் ஆக விடாத டைட்டான லெந்த் மற்றும் லைனில் பந்துகள் வீசப்பட, அவரும் அதற்கேற்றாற் போல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

முதல் விக்கெட்டாக, அவரது விக்கெட்டை, சிலம்பரசன் வீழ்த்த, அதற்கடுத்த ஓவரிலேயே, ஓரளவு நம்பிக்கை சேர்த்துக் கொண்டிருந்த, இன்னொரு ஓப்பனர் சுரேஷையும், விக்னேஷ் வீழ்த்த, பவர்பிளே முடிவில், 27/2 என மிக மோசமான நிலையில், கோவை இருந்தது. அடுத்த சில ஓவர்களுக்கும் நிலைமை அப்படியேதான் நீடித்தது. வெங்கட்ராமனும் வந்த வழியே விரைவாகச் சென்று விட, முகிலேஷும் அரக்கப் பறக்க வெளியேற, 11 ஓவர்களின் முடிவில் கூட வெறும் 60 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது, கோவை.

அணிக்கு எப்போதும் அரணாக நிற்கும் சாய் சுதர்சன் ஒருபுறம், அதிரடியில் அர்னால்டாக அலறவிடும் ஷாருக்கான் ஒரு பக்கம் என இருவரும் முதல் பத்து ஓவர்களில் விட்டதைப் பிடிக்கப் போராடினர். இதில் 12-வது ஓவரில் ஷாருக்கானை ஆட்டமிழக்கச் செய்யக் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை ஸ்வாமிநாதன் ஸ்டம்புக்கு பல மைல் தூரம் தள்ளி எறிந்த ஒரு டைரக்ட் ஹிட்டால் தவறவிட்டார்.

அங்கிருந்துதான் ஆரம்பித்தது இக்கூட்டணியின் அதிரடி. பௌலர்களுக்கு பீதியைக் கிளப்பும் செயலை செவ்வனே செய்தனர் இருவரும். போட்டி தங்கள் கையை விட்டே மொத்தமாகச் சென்றுவிட்டதோ என்று திண்டுக்கல்லை கதிகலங்க வைத்தது இந்த பார்ட்னர்ஷிப்.

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

ஷாருக்கான் தனது அதிரடியின் சில அடுக்குகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் சின்னப் பட்டாசாக சீறிக் கிளம்பி திண்டுக்கல்லைச் சிதறடித்துக் கொண்டிருந்தார் சாய் சுதர்சன். இக்கூட்டணி, ஏழு ஓவர்கள் மட்டுமே நிலைத்தாலும் 62 ரன்களைச் சேர்த்துவிட்டது.

குர்ஜப்நீட் வீசிய பந்தை டீப் மிட் விக்கெட்டில் நின்றிருந்த மோகித்திடம் தூக்கிக் கொடுத்து ஷாருக்கான் ஆட்டமிழக்க, அது போட்டியின் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது‌. ஷாருக்கானின் விக்கெட் விழாது இருந்திருக்கும் பட்சத்தில், மீதமிருந்த பந்துகளில் அவரது பேட் ஆக்ஷனில் இறங்கி பௌலர்களைப் பந்தாடியிருக்கும். அது முடியாமல் போனதுதான், கோவையின் சரிவுக்குக் காரணமானது.

இந்தத் தொடரில், சாய் சுதர்சன் லீக் சுற்றில் மட்டும் ஏழு போட்டிகளில் நான்கு அரை சதங்களை அடித்துள்ளார். அவை எல்லாமே அணிக்கு அணிகலனாக அவர்களது வெற்றி மகுடத்தை அலங்கரித்தன. ஆனால், இந்த முக்கிய போட்டியில் நிராயுதபாணியாக அணி நிற்கும் தருணத்தில் எல்லோரும் கைகழுவிச் சென்ற பின்னும் கொஞ்சமும் தளராமல், அழுத்தம் நிறைந்த நிலையிலும் நிதானம் தப்பாது வெறும் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார் சாய் சுதர்சன்.

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

நடுவில் வந்து சென்ற அபிஷேக் தன்வரும், தன் பங்கிற்கு இரண்டு சிக்ஸர்களை சுதேஷின் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் ஒன்று, ஓவர் த லாங் ஆனில் இன்னொன்று என விளாச, இறுதிப் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாய் சுதர்சன் அணியின் ஸ்கோரை கௌரவமாக 143-க்குக் கொண்டு வந்து நிறுத்தினார். முதல் பத்து ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே பார்த்திருந்த நிலையில், இறுதி பத்து ஓவர்கள் சாய் சுதர்சனின் அதிரடியால் 94 ரன்களைக் கொண்டு வந்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

200+ ரன்களையே துரத்தியவர்களுக்கு 144 என்பதெல்லாம் ஒரு இலக்கா என இளக்காரமாக எல்லாம் எண்ண முடியாது, ஏனெனில், மறுபுறம் எச்சமயம் வெடித்து விக்கெட்டுகளை விழுங்குவார்கள் எனக் கணிக்க முடியாத கோவை பௌலர்கள் காத்திருந்தனர்.
TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

லோகேஷ்வரும், ஹரி நிஷாந்த்தும், ஓப்பனிங்கில் இறங்க, முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே தந்து அற்புதமாக ஆரம்பித்தார், அபிஷேக் தன்வர். 'அடக்கி வாசித்து பின் ஆரம்பிப்போம்' என நேரத்திற்காக திண்டுக்கல் காத்திருக்க, அந்த இடைவெளியில் பவர்பிளே ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டது கோவை. அதுவும் லோகேஷ்வர் மற்றும் ஒன்டவுனில் இறங்கிய மணி பாரதி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகள், கோவையை பந்தயத்தில் முன்னிலையில் ஓட வைத்தன. ஆனாலும் ஹரி நிஷாந்த் விடுவதாக இல்லை.

ஜாக்கியாக திண்டுக்கல் குதிரையை குதித்து முன்னோக்கி ஓட வைப்பவர் திண்டாட விட்டு விடுவாரா?! சீனிவாசனோடு அவருக்கு உருவான முக்கிய பார்ட்ன்ஷிப்தான் திக்கற்ற திண்டுக்கல்லை வெற்றி என்னும் திசையில் ஒட வைத்தது. இந்தப் பார்ட்னர்ஷிப் தாக்குப் பிடித்தது என்னவோ வெறும் 27 பந்துகள், அடித்தது என்னவோ 26 ரன்கள்... ஆனால், பொறுமையான, பொறுப்பான இந்த ஆட்டம்தான் அடுத்து வந்த ஒவர்களில் ரன் வேட்டை ஆட உதவியது.

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK

சீனிவாசனை, திவாகர் 18 ரன்களோடு அனுப்பி வைக்க, விவேக், ஹரி நிஷாந்த்தோடு இணைந்தார். முந்தைய கூட்டணி, வெற்றிக்கான அடிக்கல் நாட்டியதென்றால் அதனை உறுதி செய்தது ஹரி நிஷாந்த், விவேக்கிற்கு இடையேயான இந்தக் கூட்டணிதான். இந்தச் சமயத்தில் திண்டுக்கலின் கணக்கில் 10 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே சேர்ந்திருந்தது. மீதிமிருந்த 10 ஓவர்களில் 90 ரன்கள் தேவை என்ற கடின நிலையை எட்டியது போட்டி‌. உண்மையில் ரசிகர்கள், இப்போட்டி கோவைக்குச் சார்பாகவே முடியும் எனக் கூட எண்ணத் தொடங்கி விட்டனர்.

விடுவதாயில்லை விவேக். விடாப்பிடியாக ஆட ஆரம்பித்தார். அடுத்த ஐந்து ஓவர்களில் மட்டும் ஒன்பது சிக்ஸர்களை பறக்கவிட்டது இக்கூட்டணி. அதிலும், விவேக் ஆறு சிக்ஸர்களை அடித்து வானை முத்தமிட வைத்திருந்தார். ஸ்பின்னர் என்று கூடப் பார்க்காமல் அஜித் ராமின் ஓவரிலேயே பேக் டு பேக் சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார் விவேக்.

TNPL: பிளேஆஃப்பையே பார்த்திராத திருச்சி இந்த முறை பைனலில்... 2வது வாய்ப்பை எதிர்நோக்கும் சேப்பாக்!

விவேக் அரைசதத்தை நெருங்கி நிற்க, 16 ஓவர்களிலேயே 134 ரன்களைக் குவித்து விட்டது திண்டுக்கல். 10 ரன்கள் இருந்தால் வெற்றி என அப்போதே போட்டியின் முடிவும் தெரிந்துவிட்டது. எனினும் தொடர்ந்து போராடியது கோவை. அதை அங்கீகரிக்கும் விதமாக, ஹரி நிஷாந்த் மற்றும் மோகித்தின் விக்கெட்டுகள், யுதீஸ்வரன் வீசிய ஒரு ஓவரிலேயே அடுத்தடுத்து விழுந்து அவர்களுக்கு ஆறுதல் தந்தன. ஹரி நிஷாந்த் அற்புதமாக ஆடி, 44 பந்துகளில் 59 ரன்களைக் குவித்திருந்தார். 1000 ரன்களை டிஎன்பிஎல்லில் கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையையும் ஹரி நிஷாந்த் பெற்றார். கோவைக்கு அச்சமயத்திலேயே தெரிந்துவிட்டது... போட்டி தங்களிடம் இருந்து போய்விட்டது என்று!

TNPL | #DDvLKK | ஹரி நிஷாந்த்
TNPL | #DDvLKK | ஹரி நிஷாந்த்

இறுதியாக, வெறும் 25 பந்துகளில் விவேக்கின் அரைசதமும் வந்து சேர, அதே ஓவரில் இலக்கைத் தொட்டுவிட்டது திண்டுக்கல். இன்னமும் 15 பந்துகள் அவர்களிடத்தில் எஞ்சி இருந்தபோதே வெற்றி பெற்றது திண்டுக்கல். விவேக் 200 ஸ்ட்ரைக்ரேட்டோடும் 52 ரன்களோடும் கடைசி வரை, ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இருந்தார். ஆட்ட நாயகனாக ஹரி நிஷாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், அதைப் பங்கிட்டுக் கொள்ளும் சகல தகுதி வாய்ந்ததுதான் விவேக்கின் இன்னிங்ஸும்!

இந்த எலிமினேட்டரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற கையோடு கோவை வெளியேற, இறுதிப் போட்டியில் நுழையும் இறுதி வாய்ப்புக்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸோடு பலப்பரிட்சை நடத்த இருக்கிறது திண்டுக்கல். கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிக் கொண்ட இவ்விரு அணிகளும் இம்முறை, அதற்கு ஒரு படி முன்னதாகச் சந்தித்துக் கொள்ள உள்ளன.

TNPL | #DDvLKK
TNPL | #DDvLKK
கடந்த இரண்டு சீசன்களாக இறுதிப் போட்டிவரை சென்று கோட்டை விட்டிருந்த திண்டுக்கல்லுக்கு, மீண்டுமொரு வாய்ப்பு வாயிலில் நிற்கிறது. எனினும், அதற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி உள்ளே நுழைய வேண்டும். இரண்டு முறை சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸும் அவ்வளவு சீக்கிரமாக பணிந்து போய் விடாது. எனவே இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிஃபயர், இறுதிப் போட்டிக்கு இணையானதாக கண்டிப்பாக இருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு