Published:Updated:

TNPL: மோதி விளையாடிய மோகித், பொறுப்பான கேப்டன் ஹரி நிஷாந்த்... திருச்சி சறுக்கியது எங்கே?

TNPL | #DDvRTW
TNPL | #DDvRTW ( twitter.com/TNPremierLeague )

மோதி விளையாடிய மோகித்தாலும், ஹரி நிஷாந்த்தின் நெருக்கடி தரும் நகர்வுகளாலும் திருச்சியை வென்றுள்ளது திண்டுக்கல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டேபிள் டாப்பர்களான திருச்சி ஒருபக்கம், 201 ரன்களையே அநாயசமாக சேஸ் செய்து முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்த திண்டுக்கல் ஒருபக்கம் என டிஎன்பில்லின் இந்த சீசனில், திடீர் திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ள இரு அணிகளும், எந்த மாற்றமும் இன்றிக் களமிறங்கின.

ஓரு நொடிகூடத் தயக்கமின்றி, ஹரி நிஷாந்த், டாஸை வென்ற கையோடு, "பந்தோடு இறங்குகிறது என் படை!", என்றார். எதிர்தரப்பில், அமித்தோடு, சுமந்த் ஜெய்ன் பேட்டிங் செய்ய இறங்கினார். முதல் பந்தையே, இறங்கி வந்து மிட் ஆனில் ஓங்கி அடித்தார் அமித். முதலிரு போட்டிகளில் நடந்ததைப் போலவே, இன்னொரு அதிரடி ஆட்டத்தைக் காணப் போகிறோம் எனத் தோன்ற, "ஒவ்வொரு முறையும் 200 ரன்களை எல்லாம் சேஸ் செய்ய முடியாது" என டிஃபெண்டிங் மோடுக்கு மாறி, கட்டுக்கோப்பாக, பந்து வீசத் தொடங்கியது, திண்டுக்கல்.

ஹரி நிஷாந்த்தின் கேப்டன்ஷிப், தொடக்கத்தில் இருந்து, சிறப்பாக அமைந்தது. ஆஃப் சைடின் நாயகனான அமித்துக்கு, தொடர்ந்து பாடி லைனில் பந்து வீசி, திணறச் செய்ததுடன், கச்சிதமான லெங்க்த்திலும் பந்துகளை வீசி, ஹோம் வொர்க்கை நன்றாகவே செய்து வந்ததை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள் திண்டுக்கல் பௌலர்கள். ரன்குவிப்புக்குத் தடா போடப்பட, பவர் பிளேயில் மூன்று முறை மட்டுமே பவுண்டரி லைனைப் பார்த்திருந்தது பந்து.

TNPL | #DDvRTW
TNPL | #DDvRTW
twitter.com/TNPremierLeague

ரன்கள் ஏறா விட்டாலும், விக்கெட்டையாவது காப்பாற்றினோம் என திருச்சி ஆறுதல் கொள்ள, அந்த எண்ணத்தையும் குர்ஜப்னீட் பந்தில் விழுந்த அமித்தின் விக்கெட் ஆட்டம் காணச் செய்தது. அந்தக் கேட்சை முன்னோக்கி டைவ் அடித்து, அற்புதமாகப் பிடித்திருந்தார் மோகித்.

அதே நெருக்கடியை அப்படியே அடுத்தடுத்த ஓவர்களுக்குக் கடத்த நித்தீஷைக் குறிவைத்து ஆஃப் ஸ்பின்னர் ஸ்வாமிநாதனை, ஹரி நிஷாந்த் இறக்கினார். அவருக்கு விரித்த வலையில், சுமந்த் சிக்கினார். பந்தை முன்வந்து சந்திக்க வந்த சுமந்த்தை ஏமாற்றி, பந்து விக்கெட் கீப்பரை அடைய, மணித்துளியும் தாமதிக்காத மணிபாரதி, அப்பந்தால் ஸ்டம்பை சில்லுச் சில்லாக சிதறவைக்க, ஓப்பனர்கள் இருவரையும் அனுப்பி வைத்தது திண்டுக்கல்.

அடுத்து இணைந்த நித்தீஷும், முகமத் கானும், மோசமான பந்துக்கு மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் மரியாதை எல்லாம் கொடுத்து, 15-ஓவர்கள் வரை சுமூகமாக அடக்கி வாசித்து, அதன்பின் சுயரூபம் காட்டலாம் எனச் சற்றே அமைதி காத்தனர். எனினும், அடிக்க ஆரம்பிக்கலாம் என கண் வைத்திருந்த, 16-வது ஓவரின் முதல் பந்தே முகமத் கானின் விக்கெட்டைக் காவு வாங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாய், இவர்கள் அடித்த பெரிய ஷாட்கள், 100 ரன்களை அணியைத் தாண்ட வைத்திருந்தன.

கைவசம், 29 பந்துகளே மீதமிருந்ததால் அடித்து ஆட முற்பட்டார் செட்டில் ஆன நித்தீஷ். ஆனால், அதுவே அவருக்கு வினையானது. குர்ஜப்னீட் வீசிய பந்து, அவரது பேட்டில் சிக்காமல் மிடில் ஸ்டம்ப்பைப் பறக்க விட்டது. 33 பந்துகளில், 45 ரன்களைக் குவித்திருந்த, நித்தீஷின் ஆட்டம் அரை சதத்தைத் தொடாமலே முடிவுக்கு வந்தது.

ஒரு பக்கம், இப்படி சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருந்த, அதே திண்டுக்கல்தான், இன்னொரு பக்கம், உதிரி ரன்களால் வள்ளலாக வாரி வழங்கியது. திண்டுக்கலின் பந்துவீச்சில், மொத்தமாக 15 வொய்டுகள் வந்திருந்தது என்றால், சுதேஷ் வீசிய 15-வது ஓவரில் மட்டும் நான்கு வொய்டுகளை அவரே வீசியிருந்தார்.

TNPL | #DDvRTW
TNPL | #DDvRTW
twitter.com/TNPremierLeague
'தாயம், அதற்கு மறுதாயம்', என ஆட்டம் நீள்வதைப் போல், வொய்ட், வொய்டுக்காக வீசப்பட்ட பந்தில், மறுபடியும் ஒரு வொய்ட் என நீண்ட நெடியதாகச் சென்றது அந்த ஓவர். அதே போல், பல அசத்தலான கேட்ச்களைப் பிடித்திருந்தாலும், சில மோசமான கேட்ச் டிராப்களையும் பார்க்க முடிந்தது.

கடைசி இரண்டு ஓவர்களில், 19 ரன்களைக் கொடுத்ததோடு, இரண்டு விக்கெட்டுகளையும் திண்டுக்கல் பெற்றுக் கொள்ள, 145 ரன்களைச் சேர்த்திருந்தது, திருச்சி.

"புற்கள் நிறைந்த Red Soil" என்பதனால், இது பேட்டிங், பௌலிங் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என பிட்ச் ரிப்போர்டில், பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட, நித்தீஷின் இன்னிங்ஸைத் தவிர்த்துப் பார்த்தால், பௌலர்களே ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

146 ரன்கள் எல்லாம் மணி பாரதிக்கே பத்தாது எனத் தோன்றினாலும், எங்கள் பக்கம், மதிவண்ணன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடே திருச்சியும் தொடங்கியது. அதுவே, போட்டி கடைசி ஓவர் வரை கொண்டு செல்லும் என்பதற்கு அப்போதே கட்டியம் கூறியது.

அருணும், ஹரி நிஷாந்த்தும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவர் தவிர்த்து, மற்ற அத்தனை பவர்பிளே ஓவர்களிலும், பவுண்டரிகளை, தங்கள் பெயரில் எழுதிக் கொள்ள, எட்டு ஓவர்களிலேயே 66 ரன்களை எட்டி, "வெற்றி எங்கள் வசமே!", என்னும் ரீதியில் ஆடிக் கொண்டிருந்தது திண்டுக்கல். மதிவண்ணனின் முதல் இரு பந்துகளுமே, பேக் டு பேக் பவுண்டரிகளைப் பார்த்திருந்தன.

அணி ஏங்கித் தவித்த, அந்தத் திருப்புமுனை கேப்டன் ராகிலின் பந்தில் வந்து சேர்ந்தது. அருணின் விக்கெட்டை ராகில் வீழ்த்த, அடுத்த சில பந்துகளிலேயே, அடுத்த ஸ்பின்னரான மணிவண்ணன், இன்னொரு ஓப்பனரான ஹரி நிஷாந்த்தின் விக்கெட்டையும் வீழ்த்த, "போட்டி முடியவில்லை" என பலமாகச் சொன்னது திருச்சி.

TNPL | #DDvRTW
TNPL | #DDvRTW
twitter.com/TNPremierLeague

58 பந்துகளே மீதமிருந்ததால், திருச்சி தனக்கும் ஒரு வாய்ப்பு உள்ளதென சொல்லாமல் சொன்னது. ஆனால், அதற்குப் பின் களமறங்கிய மோகித், அட்டகாசமாக ஆடத் தொடங்கினார். திருச்சியின் பௌலர்கள், டைட்டான லைன் அண்ட் லெந்த்தில் பந்துகளை வீசினாலும், இவர் பதிலளித்துக் கொண்டே இருந்தார். கிடைத்த கேப்பில் எல்லாம் பந்தைப் பாயச் செய்தார். இதன்பிறகு, லோகேஸ்வர் வந்து போனார், போன போட்டியில், அடித்து நொறுக்கிய மணிபாரதியும், பொய்யா மொழியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இன்னொரு பக்கம் இருந்த மோகித் மட்டும் மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். "ரன்ரேட்டை சரிய விட மாட்டேன்" என சத்தியப் பிரமாணம் செய்ததைப் போல், சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும், வெற்றிக்கான விதையாக இட்டுக் கொண்டிருந்தார். சரவணக் குமாரின் ஓவரில் அவரடித்த மூன்று பவுண்டரிகள், திருச்சியின் சிம்மாசனத்தின் ஒவ்வொரு காலையும் ஆட்டம் காணச் செய்தன. 18-வது ஓவரில், விவேக்கின் விக்கெட் விழ, அதைக் கொண்டாடித் தீர்த்தது, திருச்சி. ஆனால், மோகித், போட்டியின் நுனியை நழுவ விடவேயில்லை.

அலெக்ஸ் ஹேல்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குள் நிலவும் அரசியல்... விடாமல் போராடும் அதிரடி வீரன்!

இறுதியாக, கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வந்து நின்றது திண்டுக்கல் இன்னிங்ஸ். முதல் பந்தில், மோகித்தின் கேட்ச் விடப்பட, ஸ்வாமிநாதன் இரண்டாவது பந்திலேயே வின்னிங் ஷாட்டாக பவுண்டரியை விளாசினார். ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது திண்டுக்கல்.

TNPL | #DDvRTW
TNPL | #DDvRTW
twitter.com/TNPremierLeague

ஒரு போட்டி தந்த அனுபவப் பாடமே கை கொடுக்க, கேப்டனாக ஹரி நிஷாந்த், தனது வீரர்களை, மிகச் சரியாகப் பயன்படுத்தி, வெற்றிக்கான முன்னோட்டம் காட்டினார் எனில், இரண்டாவது பாதியில், மோகித்தின் கேமியோ வெற்றியை உறுதி செய்தது. திருச்சியோ, கடின இலக்கை டார்கெட்டாக செட் செய்யத் தவறியதோடு, தொடக்கத்தில் விக்கெட் எடுக்கத் தவறி, தோல்விக்கு அச்சாரமிட்டது.

முதலிடத்தை திருச்சி நழுவ விடவில்லை என்றாலும், திண்டுக்கல், மளமளவென மேலேறி, இரண்டாமிடத்தில் முகாமிட்டுள்ளது. தொடரின் சரிபாதி போட்டிகள், இந்த வாரத்திற்குள் முடியுமென்பதால், ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு புள்ளியும், இவ்வளவு ஏன் நெட் ரன்ரேட்டும் கூட ரொம்பவே அவசியம்.

இனிவரும் போட்டிகள் எல்லாமே களத்தை யுத்த களமாக்கி, மோதலை முற்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு