Published:Updated:

TNPL: சொதப்பிய சேலம், சேஸிங்கில் ஜொலித்த ஜெகதீசன் - முதல் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கில்லீஸ்!

TNPL | #SSvCSG
TNPL | #SSvCSG

டாஸை வென்ற கையோடு பந்தை வாங்கியவர்களை, இரண்டு புள்ளிகளோடு அனுப்பி வைக்கும் சேப்பாக்கத்தின் சமீபத்திய டிரண்ட் தொடர, சேலத்தை சேதாரம் செய்துள்ளது சூப்பர் கில்லீஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரு முறை சாம்பியன்களாக, மிக வலிமையான அணியாக சீசனுக்கு முன்னதாகக் கருதப்பட்டு, இந்த சீசனில், ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸை வென்ற களிப்போடு, சேலம் ஸ்பார்டன்ஸும் தொடரில் தங்களது மூன்றாவது போட்டிக்காகக் களமிறங்கினர்.

பிட்ச், போட்டி போகப் போக, சுழலுக்குக் கை கொடுக்கும் என்பதே வல்லுநர்கள் கணிப்பாக இருந்தது. நாணயம் தனக்குச் சாதகமாக விழ, கௌசிக் காந்தி, பௌலிங்கையே தேர்ந்தெடுத்தார். சேலம் மாற்றமின்றி இறங்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ராகுலுக்குப் பதிலாக, ராதா கிருஷ்ணனை முயல முடிவு செய்திருந்தது.

தொடக்க ஓவர்களை ஒரு கை பார்க்க, அபிஷேக்கும் கோபிநாத்தும் களமிறங்க, சோனுவின் முதல் ஓவரில், பத்து ரன்கள் வந்துவிட, இரண்டாவது ஓவரிலேயே ஸ்பின்னரான அலெக்சாண்டரை அழைத்து வந்தார் கௌசிக் காந்தி‌. பேட்ஸ்மேன்களை, லைன் அண்ட் லெந்த் குறித்து ஒரு முடிவுக்கு வர விடக்கூடாது என, பௌலர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். பவர் பிளேவுக்குள்ளாகவே, நான்கு பௌலர்களை கௌசிக் முயன்று பார்க்க, அதன் பலனாக சோனுவின் ஷார்ட் பாலில் புல் ஷாட் ஆட முயன்ற அபிஷேக் வெளியேற, 45/1 என இருந்தது சேலத்தின் ஸ்கோர். பின்வரிசையில் இறங்கி வந்த, கார்த்திகேயன், இம்முறை ஒன்டவுனில் இறக்கப்பட்டார்.

TNPL | #SSvCSG
TNPL | #SSvCSG

விரைவான விக்கெட்டுகள் கண்டிப்பாக வேண்டும் என்று உணர்ந்த கௌசிக், ஒருபக்கம் மணிமாறன் சித்தார்த்தையும், இன்னொரு பக்கம் சதீஷையும் வைத்துத் தாக்குதல் நடத்தினார். செட்டில் ஆனதோடு, அதிரடியாகவும் ஆடிக் கொண்டிருந்த கோபிநாத்தின் விக்கெட்டை அவர் உடனடியாக வீழ்த்த, இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது சேலம். கார்த்திகேயன் மற்றும் விஜய் சங்கர் இணைய, பத்து ஓவர்கள் முழுமையாக முடிந்திருந்த சமயத்தில் 62 ரன்களை மட்டுமே சேர்த்து அல்லல்பட்டது சேலம்.

160-க்கும் அதிகமான ரன்கள்கூட சுலபமாக சேஸ் செய்யப்படுவதால், இந்தக் கட்டத்தில் இருந்தாவது தங்களது இன்னிங்க்ஸின் வேகத்தை, சேலம் முடுக்கி விடும் என்ற எண்ணம் எழ, அதை உணர்ந்திருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸும் தொடர்ந்து கட்டுப்கோப்பாகவே பந்து வீசிவந்தது.

அந்தச் சூழ்நிலையில் கார்த்திகேயன், மணிமாறன் வீசிய பந்தை ஷார்ட் மிட் விக்கெட்டில் பறக்க விட, அங்கே நின்றிருந்தது அசாதாரண கேட்சையே அசால்ட்டாகப் பிடிக்கும் சதீஷ். அவருக்கு இது அல்வா கேட்சாக மாற, வெளியேறினார் கார்த்திகேயன். கேப்டன் ஃபெர்ராரியோ, விஜய் சங்கரோடு இணைந்தார். திருப்பூருக்கு எதிரான போட்டியில் நடந்ததைப் போல இந்தக் கூட்டணிதான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

ரன்கள் ஏறுவது மட்டுமே அவசரத் தேவை என்பதால், சில பந்துகளுக்குப் பணிந்த விஜய் சங்கர், ஒருசில பந்துகளுக்கு பயம் காட்டினார். ஃபெர்ராரியோவும் பந்துகளை வீணடித்தால் சாமி குற்றம் என்பது போல் ஸ்ட்ரைக்ரேட் 100-க்குக் கீழ் இறங்காமல் பார்த்துக் கொள்ள, 16 ஓவர்களில் 119 ரன்கள் வந்து சேர்ந்தன.

ஏழு விக்கெட்டுகள் மீதமிருந்ததால், டெத் ஓவர்களில் செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் வட்டியும் முதலுமாய் விட்டதைப் பிடிப்பார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்க, நடந்ததோ வேறு! சோனு யாதவ்வின் இரட்டைத் தாக்குதலில், விஜய் சங்கர் மற்றும் அக்ஷய்யின் விக்கெட்டுகள் அடுத்தடுத்த பந்துகளில் வீழ, ஃபெர்ராரியோ மட்டும் மறுபக்கம் மூச்சைப் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்.

TNPL | #SSvCSG
TNPL | #SSvCSG

எனினும் ஹரிஷ் குமாரின் பந்தில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ஃபெர்ராரியோவை, அவரே அனுப்பி வைக்க, கடைசியில், அடித்துக் கொள்ளலாம் எனக் காத்திருந்த சேலம், கடைசியில் விக்கெட் வீழ்ச்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. இறுதி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட, அற்புதமாகப் பந்து வீசிய சூப்பர் கில்லீஸ், அதற்குரிய பலனாக மிகக் குறைந்த டார்கெட்டான 143-ஐ பெற்றுக் கொண்டது.

இந்த இலக்குக்கு, அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சேலம் தப்பிப் பிழைக்கும். அதற்கு, விக்கெட்டுகள் வித்தாகும் என்பதால் விக்கெட் பசியோடே தொடங்கினார் ஃபெர்ராரியோ. கணேஷ் அதைச் சற்றே தணிப்பதைப் போல், கௌசிக்கின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே எடுத்தார். அற்புதமான பேட்ஸ்மேனான கௌசிக், இந்தத் தொடரின் தொடக்கம் முதலே ஃபார்மை இழந்து தவித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போன போட்டியில் சதத்தைத் தவற விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருந்தார் ஜெகதீசன். சேலத்தின் அணுகுமுறையும் போன போட்டியில் இருந்ததைப் போலத்தான் இருந்தது. பேட்டிங்கில் தவறவிட்டால் என்ன, எங்களது பௌலர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்னும் தெம்போடே தொடக்க ஓவர்களைக் கையாண்டது. அவர்களும் ஏமாற்றவில்லை. 5 ஓவர்களில், 22 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

பவர்பிளேயின் கடைசி ஓவரில், தீப்பொறியைப் பறக்க விட்டார், பெரியசாமி. சுஜய்யை வெறும் 10 ரன்னில் அவர் அனுப்ப, ஜெகதீசன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, ஃபெர்ராரியோ நழுவவிட, போட்டியை மாற்றும் தருணமாக அதுதான் இருந்தது. 'இனி உங்களை நம்பினால் பயனில்லை' என ராதாகிருஷ்ணனை, அதே ஓவரில், தானே எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பினார் பெரியசாமி. வேகத்தால் நிகழ்ந்த மாயம், அடுத்த ஓவரிலேயே சுழலாலும் நிகழ்ந்தது. சதீஷை முருகன் அஷ்வின் அனுப்பி வைக்க, வெறும் 26 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளோடு தள்ளாடத் தொடங்கியது சேப்பாக் கில்லீஸ். அவர்களுக்கு இது இன்னொரு சரிவாகத்தான் இது இருக்கப் போகிறது எனத் தோன்றிய போதுதான் சசிதேவ் உள்ளே வந்தார்.

TNPL | #SSvCSG
TNPL | #SSvCSG

இந்த இருவருக்கும் இடையேயான இந்தக் கூட்டணிதான், போட்டியை சேப்பாக் கில்லீஸ் பக்கம் நகர்த்திச் சென்றது. செட்டில் ஆக ஒரு சில பந்துகளை எடுத்துக் கொண்டாலும், அதன்பின், சேலத்தின் பௌலிங் படையை பதம் பார்க்கத் தொடங்கியது இந்த பார்ட்னர்ஷிப். சேலத்தின் நம்பிக்கையை எல்லாம் வற்ற வைத்து, ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் எல்லாம் வென்று விடுவார்களோ என்ற சந்தேகத்தை எழச் செய்தனர். 39 பந்துகளில், ஓவர் த டீப் மிட் விக்கெட்டில் அடித்த சிக்ஸர் மூலமாக ஜெகதீசன் அரைசதம் கடந்தார். ஆனால், ஜெகதீசனின் ஜாலம், வெகுநேரம் நீடிக்கவில்லை. அடுத்த பந்திலேயே முருகன் அஷ்வின் ஜெகதீசனின் விக்கெட்டை வீழ்த்தினார். 49 பந்துகளில் 77 ரன்களைத் தெறிக்கவிட்ட இவர்களது கூட்டணி, முடிவுக்கு வந்தது.

TNPL: மோதி விளையாடிய மோகித், பொறுப்பான கேப்டன் ஹரி நிஷாந்த்... திருச்சி சறுக்கியது எங்கே?

5 ஓவர்களில் அடிக்க வேண்டியது வெறும் 38 ரன்கள் என்பதால் தோல்வி, சேலத்தின் கண்களை மங்கச் செய்யத் தொடங்கியது. அதிலும், ஹரீஸ் குமார் பெரும்பாலான ஷாட்களை காற்றிலேயே அனுப்பி, அழுத்தத்தை சேலத்தின் பக்கம் பைபாஸில் அனுப்பிவைத்தார். அச்சமூட்ட இறக்கப்பட்ட பெரியசாமியின் ஓவரே 13 ரன்களோடு அடி வாங்கியது. அதற்கடுத்த ஓவரில் விழுந்த சசிதேவ்வின் விக்கெட், விஜய் சங்கரின் கணக்கில் ஏறியதே ஓழிய, எந்த வகையிலும் சேப்பாக் கில்லீஸிடமிருந்து போட்டியைத் திருப்புவதாக அது இல்லை.

ஹரீஸின் பிக் ஹிட்கள் அதிக நேரமெல்லாம் களத்தில் இருக்கப் பொறுமை இல்லை எனச் சொல்லிக் கொண்டே இருக்க, 19-வது ஓவரிலேயே ஜெகநாத் அடித்த பவுண்டரியோடு வெற்றிக் கோட்டைத் தொட்டது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வந்து சேர்ந்த அவர்களது வெற்றி, எட்டாவது இடத்தில் இருந்த அவர்களை ஒரேயடியாக எஸ்கலேட்டரில் ஏற்றி, மூன்றாவது இடத்தில் இருக்கை இட்டு அமர வைத்துள்ளது.

TNPL | #SSvCSG
TNPL | #SSvCSG

இந்த அணிதான் வலிமையானது, இதுதான் வெல்லும் என ஊகிக்க முடியாத அளவு அணிகளின் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும், சேப்பாக்கம் மைதானம் மட்டும் கடந்த சில போட்டிகளாய், 'இத்தனை விக்கெட்டுகளில் வெற்றி' என்ற முடிவை மட்டுமே தந்து கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு போட்டியின் முடிவும் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போடுவதாக, அணிகளை வைத்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளது.

டிஃபெண்டிங் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், இந்தத் தொடரில் தங்களது முதல் வெற்றியை, மூன்றாவது போட்டியில் பதிவு செய்துள்ளது. இங்கிருந்து இன்னொரு கோப்பையை நோக்கிய வெற்றிப் பயணமாக இது இருக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு