Published:Updated:

TNPL: சாய் கிஷோரின் சுழல், ஜெகதீசனின் அதிரடி... சேப்பாக்கிடம் சரணடைந்த திண்டுக்கல்!

சாய் கிஷோரின் சுழலில் சிக்கிய திண்டுக்கல், மீள முடியாமல் சுருள, தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிஃபெண்டிங் சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கும், இந்த சீசனில், அபாரமாக ஆடி வரும், திண்டுக்கல் டிராகன்ஸுக்கும் இடையேயான போட்டி; வார இறுதி நாளுக்கு, வேறென்ன சுவை வேண்டுமெனத் தொடங்கியது, டிஎன்பிஎல்லின் 19-வது போட்டி.

விளையாடிய மூன்றில், ஒன்றை மட்டுமே வென்றிருந்த சேப்பாக்கின் கூடாரத்துக்கு, இலங்கையிலிருந்து திரும்பி, அவர்களுடன் இணைந்துள்ள சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியரின் அதிரடி எண்ட்ரியும், ஒரு பெரிய பலத்தைக் கொண்டு வந்தது. டாஸை வென்ற ஹரி நிஷாந்த், சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும், 0 மற்றும் 1 என பைனரி இலக்கங்களுடன் சோபிக்கத் தவறி இருந்த கௌசிக் காந்தி, இப்போட்டியில் அடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தோடு, அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஜெகதீசனுடன் களமிறங்கினார். சுதேஷ் வீசிய போட்டியின் முதல் ஓவர் மட்டுமே, சற்று அடக்கி வாசித்தது இக்கூட்டணி. அதற்கடுத்த ஐந்து பவர்பிளே ஓவர்களிலும், அனல் பறந்தது. பெரிய ஷாட் மட்டுமே ஆடத் தெரிந்தவர்கள் போல அடித்து நொறுக்கினர். குறிப்பாக கௌசிக் காந்தி, வெறிபிடித்தது போல் ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கட்டத்திலேயே 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை பறக்கவிட்டிருந்தார். ஷார்ட் பால், ஸ்லோ பால் என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தார். திண்டுக்கல்லும் முதல் ஆறு ஓவர்களில், நான்கு பௌலர்களை மாற்றிப் பார்த்தது. ஆனால், எதுவும் வேலைக்கே ஆகவில்லை. பவர்பிளே, ஓவர்களின் முடிவிலேயே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 61 ரன்களைச் சேர்த்து விட்டது.

TNPL | #CSGvDD
TNPL | #CSGvDD
twitter.com/TNPremierLeague

இப்படியே சென்றால், நிலைமை கையை மீறி விடும், எல்லாப் போட்டிகளிலும் மணிபாரதியின் மெகா சைஸ் கேமியோவை எதிர்பார்க்க முடியாதென உணர்ந்த ஹரி நிஷாந்த் விக்னேஷைக் கொண்டு வந்தார். அங்கிருந்து ஸ்ட்ராடஜியை மாற்றியது திண்டுக்கல் டிராகன்ஸ். ஹரி நிஷாந்த், விக்னேஷைக் கொண்டு ஸ்லோ பால்களை தொடர்ந்து வீச வைத்தார். கைமேல் பலன் உடனே கிடைத்தது. அதுவும், அவர்கள் பொறியில் விழுந்தது 31 பந்துகளில்,45 ரன்களோடு மிரட்டிக் கொண்டிருந்த கௌசிக் காந்தி. சேப்பாக் சூப்பர் கில்லீஸின் வீழ்ச்சியின் ஆரம்பப் புள்ளி அதுதான். அதற்குப்பின் திண்டுக்கல்லுக்கு, தொடர்ந்து ஏறுமுகம்தான். ஒன்டவுனில் சோனு யாதவ் உள்ளே வந்தார்.

அங்கே இருந்து வேகத்தையும், ஸ்பின்னையும் மாற்றி மாற்றி திண்டுக்கல் தாக்க, சேப்பாக் ரன் சேர்க்க சற்றே திணற ஆரம்பித்தது. இந்தக் கட்டத்திலேயே டாட் பாலாகத் தந்து மோகித் பிரஷர் ஏற்ற, அதற்குப் பலியாகும் விதமாக, தவறான ஷாட்டை ஆடி சோனு யாதவ்வும் வெளியேறினார்.

இதற்கடுத்ததாக இணைந்தது ஜெகதீசன் - சசிதேவ் கூட்டணி. ஸ்வாமிநாதனின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து விட்டதைப் பிடித்து, பிரஷரை திண்டுக்கல் பக்கமே அவர்கள் திருப்ப முயன்றனர். ஆனால், அதற்கு இடமே கொடுக்காது சிலம்பரசனை உள்ளே கொண்டு வந்தார் ஹரி நிஷாந்த். இந்தப் போட்டியில் அவரது கேப்டன்ஷிப் மிகவும் சிறப்பாக இருந்தது. பௌலர்களை ரொடேட் செய்வதிலிருந்து, ஃபீல்டிங் செட் அப் வரை எல்லாவற்றிலும் மிரட்டினார். அதற்குப் பரிசாக, சிலம்பரசன் தனது இரண்டாவது ஸ்பெல்லின் முதல் பந்திலேயே ஜெகதீசனை வீழ்த்தினார். 27 பந்துகளில் 40 ரன்களைச் சேர்த்திருந்த ஜெகதீசன் வெளியேற, மிக முக்கியமான விக்கெட்டை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இழந்திருந்தது.

இந்தக் கட்டம் வரை கூட 13 ஓவர்களில் 131 ரன்கள் என அச்சுறுத்திக் கொண்டுதான் இருந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸின் ஸ்கோர். சிலம்பரசன், ஜெகதீசன் விக்கெட்டை எடுத்த அந்த ஓவரை, விக்கெட் மெய்டனாக மாற்றி, அழுத்தத்தை அதிகரிக்க ஆரம்பிக்க, அதை பில்டப் ஆக விடாமல், 161ஐ தனது ஸ்ட்ரைக்ரேட்டாகக் கொண்டுள்ள சதீஷ் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தார்.

TNPL | #CSGvDD
TNPL | #CSGvDD
twitter.com/TNPremierLeague

இறுதி ஐந்து ஓவர்கள் முக்கியம் என்பதை உணர்ந்த ஹரி நிஷாந்த், சிலம்பரசனைக் கொண்டே தொடர்ந்தார். அவர் வீசிய ஒரு ஃபுல் டாஸ் பாலை டீப் மிட் விக்கெட்டிற்கு சதீஷ் தூக்க அது குர்ஜப்நீட் கைகளிலிருந்து தப்பவே இல்லை.

ஒரு கட்டத்தில், 200-ஐ தாண்டும் எனக் கணிக்கப்பட்ட ஸ்கோரை, தனது மேலான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை ஆட்டிப் படைத்ததன் மூலம் கட்டுக்குள் வைத்தது திண்டுக்கல். ஹரிஷ் குமார் மற்றும் சசிதேவ்வின் விக்கெட்டுகளும் மேலும் சேப்பாக்கை நெருக்கடிக்குத் தள்ள நினைத்த அளவு அவர்களால் ரன்குவிப்பில் ஈடுபட முடியவில்லை. எனினும் இறுதிப் பந்தில், சுஜய் அடித்த சிக்ஸர், திண்டுக்கல்லுக்கான இலக்கை 160 என நிர்ணயம் செய்தது. இறுதி ஏழு ஓவர்களில் 46 ரன்களை மட்டுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கணக்கில் சேர்ந்திருந்தது. அந்த அளவிற்குக் கட்டுக்கோப்பாக இருந்தது திண்டுக்கலின் பந்துவீச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

160 ரன்களை மனதில் நிறுத்தி இறங்கிய திண்டுக்கல்லின் கண்களுக்கு, அப்போது இது பெரிய இலக்காகத் தெரிந்திருக்காது. ஏனெனில் 200 ரன்களையே அநாயசமாகச் சேர்த்தவர்கள் ஆயிற்றே?! திண்டுக்கல் நினைத்த பாதையில்தான் தொடக்க ஓவர்கள் ஓரளவு பயணித்தன. சற்றே சரிந்த ரன்ரேட்டையும், ஹரி நிஷாந்த் - அருண் கூட்டணி சோனுவிடமிருந்து வாங்கிய மூன்று பவுண்டரிகளோடு ஈடுகட்டிக் கொள்ள, எல்லாமே நன்றாகவே சென்றது. ஆனால், சதீஷ் பந்து வீச வந்த ஐந்தாவது ஓவரில்தான் காட்சிகள் மாறத் தொடங்கின. அருண் தேவையின்றி ரன் அவுட்டாகி வெளியேற, முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்கள் இணைந்தனர்.

ஹரி நிஷாந்த் மற்றும் ஸ்ரீனிவாசனிடையேயான இக்கூட்டணி, கிட்டத்தட்ட ஏழு ஓவர்கள் நீடித்து, 50 ரன்களைக் குவித்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு சவாலாக இருந்தது. 11 ஓவர்களில் 81 ரன்கள் என 50% ரன்கள் ஏற்கெனவே வந்து விட்டன என்பதால், ஒன்பது விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில் திண்டுக்கல் பாதி வென்றுவிட்டதாகவே தோன்றியது. ஆனால், சாய் கிஷோர் சேப்பாக்கிற்குத் தேவையான திருப்பத்தைக் கொடுத்தார். அவரது பந்து வீச்சில் ஹரி நிஷாந்த் காட் அண்ட் பௌலில் வெளியேற, அதற்கடுத்த ஓவரிலேயே ஹரீஸ் குமார், ஸ்ரீனிவாசனையும் வெளியேற்ற, செட்டில் ஆன இரு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் பறிகொடுத்தது திண்டுக்கலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.

TNPL | #CSGvDD
TNPL | #CSGvDD
twitter.com/TNPremierLeague

அந்தக் கட்டத்தில் உருவான மொமண்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தவற விடவேயில்லை. பார்ட்னர்ஷிப்களை உருவாகவே விடாமல், வளர வளரக் கிள்ளி எறிந்தது. வந்த வேகத்தில் மோகித் திரும்ப, மணிபாரதியும் விவேக்கும் அசராமல் சற்றுநேரம் தாக்குப் பிடித்தனர். ஆனாலும் சற்றும் தளரவில்லை சேப்பாக் சூப்பர் கில்லீஸ். விவேக் மற்றும் ஸ்வாமிநாதன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்துவிட்டது.

திண்டுக்கல் விக்கெட்டையும் பாதுகாக்கவில்லை தேவைப்படும் ரன் ரேட் மேலும் ஒரு கண் வைக்கவில்லை. அதனாலேயே, ரன்ரேட்டும், தேவைப்படும் ரன்ரேட்டும், காததூரம் போய் விட்டன.

TNPL: மாஸ் காட்டிய திருச்சியின் பௌலிங் படை... பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டதா சேலம்?

மோகித்தின் விக்கெட் விழுந்த நேரத்திலேயே 41 பந்துகளில் 71 என முயன்று பார்க்க முடிவதாகவே இருந்த இலக்கு, இறுதி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவையென்ற நிலையை அடைந்து, அபாய கட்டத்தை நெருங்கி விட்டது. விக்னேஷும் மணிபாரதியும் களத்தில் நின்றாலும், முன்னொரு நாள் செய்த 200+ சேஸ் மேஜிக்கை மீண்டுமொரு முறை நிகழ்த்திக் காட்ட முடியாமல் போம்னது. வாரியரின் பந்தில் மணிபாரதியும் வெளியேற, இறுதியில், 135 ரன்களை மட்டுமே எட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக, சாய் கிஷோர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

எளிய இலக்குதான், எட்டி விடலாம் எனக் கனவு கண்ட திண்டுக்கல், சாய் கிஷோரைச் சமாளிக்க முடியாததாலும், சீரிய இடைவெளியில், விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததாலும், சேப்பாக்கிடம் தோல்வி அடைந்தது. 27 பந்துகளில் 40 ரன்களைக் குவித்த ஜெகதீசன், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

TNPL | #CSGvDD
TNPL | #CSGvDD
twitter.com/TNPremierLeague

இந்த வெற்றி, சேப்பாக் சூப்பர் கில்லீஸை, மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. டாப் 4-ல், திருச்சி, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மற்ற அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றுகள் முடிவடைய, சரியாக ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், இந்த ஒரு வாரத்தில் நடைபெற இருக்கும் அத்தனை போட்டிகளிலும் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை. அதன் விளைவாக, புள்ளிப் பட்டியலே புரட்டிப் போடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தாங்கள், கணிக்கவே முடியாத அணி என்பதனை மறுபடியும் ஒருமுறை நிரூபித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு