Published:Updated:

தமிழ்நாடு பிரிமியர் லீகில் ஃபிக்ஸிங்கா?! வி.பி.சந்திரசேகர் தற்கொலை ஏன்! புதிய தகவல்கள் #TNPL

``வாட்ஸ்அப் மூலம் சில வீரர்களை சிலர் தொடர்புகொண்டதாக புகார்கள் வந்திருக்கிறது. வீரர்களைத் தொடர்புகொண்டவர்கள் யார் என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என பிசிசிஐ-ன் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் அஜித் சிங் சொல்லியிருக்கிறார்.

TAMILNADU PREMIER LEAGUE
TAMILNADU PREMIER LEAGUE

சென்னையைத் தொடர்ந்து துரத்துகிறது மேட்ச் ஃபிக்ஸிங் புகார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில் வீரர்களிடம் ஃபிக்ஸிங் நடத்த பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இதற்கிடையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் கமிட்டியை நியமித்திருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் ஃபிக்ஸிங் நடத்தப்பட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன் இதில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இரண்டு ஆண்டுகாலம் தடைவிதிக்கப்பட்டது. தடை முடிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிவருகிறது. இந்நிலையில்தான் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில் இப்போது மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சை வெடித்துள்ளது.

``வாட்ஸ்அப் மூலம் சில வீரர்களை சில புக்கிகள் தொடர்புகொண்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. வீரர்களைத் தொடர்புகொண்டவர்கள் யார் என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். வீரர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துவைத்திருக்கிறோம். மெசேஜ் அனுப்பியவர்களை டிராக் செய்ய இருக்கிறோம்'' என பிசிசிஐ-ன் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் அஜித் சிங் சொல்லியிருக்கிறார்.

TNPL
TNPL

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

``தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடங்கியதில் இருந்தே அதில் என்ன பிரச்னை கிளப்பலாம் என்று திட்டமிட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்போது இப்படி ஒரு புகாரை சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் புகார்களை மிக கவனத்துடன் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறது. அதன் விசாரணை முடிவுகள் விரைவில் வெளிவரும்.

ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசனுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கிறது. அவர் என்ன செய்தாலும் அதில் என்ன பிரச்னையைக் கிளப்பலாம் எனக் காத்திருக்கிறார்கள்.

அதேநேரம் டிஎன்பிஎல் போட்டிகளைப் பற்றி பக்கத்து மாநில கிரிக்கெட் நிர்வாகி தொடர்ந்து அவதூறுகளைக் கிளப்பி வருகிறார். இப்போது ஃபிக்ஸிங் புகார்களோடு, வி.பி.சந்திரசேகரின் தற்கொலைக்கு சம்பந்தம் இருப்பதாக கொஞ்சமும் உண்மையில்லாத தகவலைப் பரப்புகிறார்கள்.

V.B.CHANDRASEKAR
V.B.CHANDRASEKAR

`டி.என்.பி.எல் போட்டிகளால் 3 கோடி நஷ்டம். அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்' என முதலில் பரப்பிவிட்டார்கள். இப்போது ஃபிக்ஸிங், பெட்டிங் என்கிறார்கள். இதனால் வி.பி.சந்திரசேகரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து நாங்கள் பேசவேண்டியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.பி.சந்திரசேகருக்கு கேன்சர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சைகளில் அவர் இருந்தார். ஆனால், தொடர்ந்து உடல் எடை குறைய ஆரம்பித்ததால் அவர் பயந்துவிட்டார். இந்த பயம்தான் அவரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம். ஆனால், நஷ்டம், ஃபிக்ஸிங் என பொய் புகார்களை பரப்புகிறார்கள்.

`தமிழ்நாடு பிரிமியர் லீக் போலவே சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா பிரிமியர் லீகிலும் வீரர்களை சிலர் தொடர்புகொள்ள முயன்றார்கள்’ என அஜித் சிங் சொல்லியிருக்கிறார். ஆனால் TNPL விவகாரத்தை மட்டும் பெரிதாக்குகிறார்கள். சில வீரர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அது குறித்து விசாரணை நடக்கிறது. அவ்வளவுதான். ஆனால், அதற்கு ஃபிக்ஸிங், பெட்டிங், தற்கொலை என நியாயம் இல்லாமல் பேச ஆரம்பிக்கிறார்கள். தமிழ்நாடு பிரிமியர் லீகில் முறைகேடுகள் நடந்திருந்தால் நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்கள்.

வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்குக் காரணம் என்ன?

பொய்ப்புகார் சொல்வதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் சொல்லும் எதிர்தரப்புடன் பேச முயன்றோம். பதில் கிடைக்கவில்லை. அவர்கள் பேசினால் அவர்களின் தரப்பும் வெளியிடப்படும்.