Published:Updated:

IND v SA: `ஆரம்பிக்கலாங்களா...' ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா!

Dinesh Karthik ( ICC )

'இன்னைக்கு ஒரு பிடி' என்கிற மனநிலையில்தான் தினேஷ் கார்த்திக் வந்திருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் முதல் அரைசதம் இது. 27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203.

IND v SA: `ஆரம்பிக்கலாங்களா...' ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா!

'இன்னைக்கு ஒரு பிடி' என்கிற மனநிலையில்தான் தினேஷ் கார்த்திக் வந்திருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் முதல் அரைசதம் இது. 27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203.

Published:Updated:
Dinesh Karthik ( ICC )

இரண்டு நாள்களுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். விமானத்திற்குள் எடுக்கப்பட்ட வீடியோ அது. இந்திய அணியின் மற்ற வீரர்களெல்லாம் தமது இருக்கையில் அமர்ந்திருக்க, தினேஷ் கார்த்திக் மட்டும் ஸ்மோக் எஃபெக்ட்டில் கூலிங் க்ளாஸோடு ஸ்லோ மோஷனில் நடந்து வந்திருப்பார். வேடிக்கையாக எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் பின்னணி இசை எதுவும் இணைக்காமல் வெளியிட்டிருந்தார். தினேஷ் கார்த்திக் அவசரப்பட்டுவிட்டார். கொஞ்சம் காத்திருந்து அந்த வீடியோவை இப்போது வெளியிட்டிருக்க வேண்டும். அதுவும் வெறுமையாக இல்லாமல்,

ராக்கி பாய் பார்லிமெண்ட்டிற்குள் நுழையும்போது ஒரு BGM வருமே அதை இணைத்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அவர் செய்திருக்கும் சம்பவமும் அந்த வீடியோவும் அப்படியே பொருந்தி போய் இன்னும் மாஸ் கூட்டியிருக்கும். தினேஷ் கார்த்திக் மட்டுமல்ல, அவரின் அதிரடியை மையமாக வைத்து ஒட்டுமொத்த இந்திய அணியுமே மாஸ் காட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியை வென்று இந்திய அணி 2-2 எனத் தொடரை சமன் செய்திருக்கிறது!
Rishabh Pant & Bavuma
Rishabh Pant & Bavuma
ICC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் என கேப்டன்கள் மாறினாலும் டாஸூக்கும் இந்திய அணிக்கும் உள்ள ஒவ்வாமை மட்டும் மாறவே இல்லை. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி டாஸைத் தோற்று முதல் பேட்டிங்தான் செய்திருந்தது. இந்தப் போட்டியிலும் டாஸ் முடிவில் எந்த மாற்றமுமில்லை. இங்கேயும் ரிஷப் பண்ட் டாஸை தோற்றார். முதல் பேட்டிங்கையும் வாங்கி வந்தார்.

இந்திய அணிக்கு முதல் 10 ஓவர்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் 56 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ருத்துராஜ் கெய்க்வாட் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகியிருந்தார். ரபாடா இல்லாவிட்டாலும் ரபாடா செய்ய வேண்டியதை எந்த குறையுமின்றி இங்கிடி செய்து கொடுத்தார். தனது முதல் ஓவரிலேயே ருத்துராஜின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியிலும் அரைகுறையாக Front Foot-க்கு வந்து எட்ஜ் ஆகி ருத்துராஜ் வெளியேறினார். நம்பர் 3-ல் வந்த ஸ்ரேயாஸ் ஐயரை மார்கோ யான்சன் வந்த வேகத்திலேயே lbw ஆக்கி வெளியேற்றினார். பவர்ப்ளேயில் இந்திய அணியை ஓரளவிற்கு காப்பாற்றியது இஷன் கிஷன் மட்டுமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Ishan Kishan
Ishan Kishan
ICC

தனது பலமான லெக் சைடில் மடக்கி மடக்கி சில பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்து 27 ரன்களை அடித்திருந்தார். பவர்ப்ளே முடிந்த உடனேயே இவரும் விக்கெட்டை விட்டு அதிர்ச்சியளித்தார். நார்க்கியா வீசிய ஒரு பந்தின் பவுன்சை கணிக்க முடியாமல் ஏனோதானோவென கட் ஆட முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு, கேப்டன் ரிஷப் பண்ட்டும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கூட்டணி சேர்ந்தனர். இவர்கள் ஒரு பயனுள்ள பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது போல தோன்றியது. ஆனால், அது முழுமையாக நிகழ்வதற்குள்ளேயே ரிஷப் பண்ட் கேசவ் மகாராஜின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கடந்த போட்டிகளில் செய்த தவறுகளிலிருந்து ரிஷப் பண்ட் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ரிஷப் பண்ட்டின் விக்கெட் வேண்டுமெனில் அவுட் சைடு ஆஃப் லைனில் கொஞ்சம் ஒயிடாக வீசுங்கள் அவரே விக்கெட்டை கொடுத்துவிடுவார்.
கவாஸ்கர்

இவ்வாறாக கவாஸ்கர் கமெண்ட்ரியில் ரிஷப் பண்ட்டைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. இதே கேசவ் மகராஜிடம் இதே லைனில் இதே போன்றே ஏற்கெனவே அவுட் ஆகியிருக்கிறார் பண்ட். அடிக்காமல் விட்டால் ஒயிடாக கூடிய அந்த லைனிலேயே மீண்டும் அரைகுறையாக ஷாட் ஆடி அவுட் ஆகியிருந்தார்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஷப் பண்ட் செய்யத் தவறியதை ஹர்திக் பாண்டியா செய்தார். ஷம்சியின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார். ரிஷப் பண்ட் அவுட் ஆன பிறகு தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். ஸ்பின்னர்கள் வீசிக்கொண்டிருக்கும் போது க்ரீஸூக்குள் வந்தால் பதற்றமாகிவிடுவார் டிகே. பெரும்பாலும் அசௌகரியமாக எதாவது ஷாட்டை ஆடி அவுட் ஆகி விடுவார். ஆனால், இன்றைக்கு அப்படி ஆகவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஸ்வீப் ஆடினார். கேசவ் மகாராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து அசத்தியிருந்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாகவே 'இன்னைக்கு ஒரு பிடி' என்கிற மனநிலையில்தான் தினேஷ் கார்த்திக் வந்திருந்தார்.

Dinesh Karthik
Dinesh Karthik
DK
டெத் ஓவர்களில் நார்க்கியா, ப்ரெட்டோரியஸ் மற்றும் இங்கிடியின் பந்துகளைச் சிதறவிட்டார். கட், புல், ஸ்வீப் என அத்தனை விதமாகவும் பவுண்டரிகளை அடித்தார். பிரிட்டோரியஸ் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து அரைசதத்தைக் கடந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் முதல் அரைசதம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். இடையில் ஹர்திக் பாண்டியாவும் கொஞ்சம் நின்று 31 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 113 ரன்களை அடித்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 169. இந்த ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவுமே.

டீகாக் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குத் திரும்பியிருப்பதால் கொஞ்சம் உற்சாகத்துடனேயே தென்னாப்பிரிக்கா பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால், அந்த உற்சாகம் பவர்ப்ளே முடியும் வரைக்குமே கூட நிலைக்கவில்லை. புவனேஷ்வர் குமாரும் ஆவேஷ் கானும் முதல் ஸ்பெல்லிலேயே ஷார்ட் பால்களாக வீசித் திணறடித்தனர். புவனேஷ்வர் குமாரின் ஓவரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய பவுமா அதே ஓவரில் ஒரு ரன்னுக்காக புழுதி பறக்க டைவ்வும் அடித்து விழுந்திருப்பார். இந்த அடிகளால் காயப்பட்ட பவுமா இனியும் முடியாதென ரிட்டையர்டு ஹர்டாகி வெளியே சென்றார். நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டீகாக், பிரிட்டோரியஸின் ஒருங்கிணைப்பற்றத் தன்மையால் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஆவேஷ் கானின் பந்தில் பிரிட்டோரியஸூம் எட்ஜ் ஆகி வெளியேறியிருப்பார். பவுமாவின் ரிட்டையர்டு ஹர்ட்டோடு சேர்த்தால் பவர்ப்ளேக்குள்ளாகவே 3 முக்கிய விக்கெட்டுகள் காலி. இந்தச் சரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. மிடில் ஓவர்களில் வீசிய ஸ்பின்னர்கள் சஹால், அக்சர் இருவருமே கட்டுக்கோப்பாக வீசினர். சஹால் ரிஸ்க் எடுத்து ஸ்லாட்டிலேயே தூக்கி வீசிக்கொண்டே இருந்தார். இதற்கு பலனாக க்ளாசெனின் விக்கெட் lbw மூலம் கிடைத்தது. கில்லர் மில்லரை Top of the off stump லைனில் ஹர்சல் படேல் போல்டாக்கி வெளியேற்றினார்.

Avesh Khan
Avesh Khan
ICC
இந்த சரிவை ஆவேஷ்கான் ஒட்டுமொத்தமாக முடித்து வைத்தார். அவர் வீசிய 14 வது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாண்டர் டஸன், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ என மூன்று பேரின் விக்கெட்டுகள் வந்தன.

தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. 16.5 ஓவர்களிலேயே 87 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

தொடரை உயிர்ப்போடு வைக்க வென்றே ஆக வேண்டிய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த வீடியோவில் பின்னணி இசை இல்லாமல் போன குறையை ரசிகர்கள் இப்போது தீர்த்து வருகின்றனர். விதவிதமான மாஸ் Bgm-களை இட்டு நிரப்பி தினேஷ் கார்த்திக்கைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Indian Team
Indian Team
ICC
ஐந்தாவது மற்றும் இறுதிப்போட்டியிலும் இதே கொண்டாட்டமான பெர்ஃபார்மென்ஸையே தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திய அணியிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism