உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தொடங்கி இருந்தது.
அதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் பங்கேற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் டிம் குக் தொடங்கி வைத்தார்.

இதனிடையே டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயானப் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் மைதானத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு பாலிவுட் நடிகை சோனம் கபூர், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட சிலருடன் போட்டியை நேரில் பார்வையிட்டு இருக்கிறார்.
இதற்கு முன் 2016-ல் கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டிம் குக் பங்கேற்றிருக்கிறார். ஐபிஎலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசிய டிம் குக், “ இந்த ஐபிஎல் தொடரை நேரில் பார்வையிட்டது பெரும் உற்சாகத்தை கொடுத்தது. இதற்கு முன்பு இதுபோன்ற ஓர் உணர்வை நான் அனுபவித்ததில்லை. இது நம்பமுடியாத ஒரு அனுபவம்! என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐபிஎல்லை நேரில் பார்க்க வந்த டிம் குக் 'இது ஒரு மறக்கவே முடியாத மாலை வேளையாக அமைந்தது' என்று கூறியிருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர்கள் அவருக்கு வீரர்கள் கையெழுத்திட்ட பேட் மற்றும் ஜெர்சியை பரிசாக அளித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.