Published:Updated:

தனக்கென சொந்தமாக பேட்டே வைத்துக்கொள்ளாத பேரரசன் - இந்திய அணியை ஒருங்கிணைத்த `டைகர்' பட்டோடி!

Tiger Pataudi | `டைகர்' பட்டோடி
News
Tiger Pataudi | `டைகர்' பட்டோடி

பார்வைத்திறன் சவாலோடு விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க நினைப்பது இமாலய சவால். ஆனால், பட்டோடி அதற்குத் தயாரானார்.

இந்திய கிரிக்கெட்டின் தொடக்கக் காலத்தில் இந்திய அணிக்காக பல குறுநில மன்னர்களும் ஆடியிருக்கின்றனர். ஆனால், இன்றைக்கும் அவர்களில் பெரும்பாலானோரின் அடையாளம் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதாக மட்டுமே இருக்கிறது. கிரிக்கெட்டர்களாக சாதித்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. 'டைகர்' பட்டோடி எனும் மன்சூர் அலிகான் பட்டோடி இதில் விதிவிலக்கானவர்.

"கிளாஸான பேட்ஸ்மேன். துறுதுறு ஃபீல்டர். இந்திய வீரர்களை ஒரு அணியாக ஒருங்கிணைத்தவர். தலைசிறந்த கேப்டன்" என இந்தியர்களால் மட்டுமில்லை, பல நாட்டு வீரர்களாலும் பிரமிப்போடு புகழப்பட்டவர்.
Tiger Pataudi
Tiger Pataudi

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மன்சூர் அலிகான் பட்டோடியின் தந்தையான இஃப்திகார் அலிகான் பட்டோடியும் கிரிக்கெட்டரே. இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இஃப்திகார் அலிகான் அந்நியமானவரில்லை. இங்கிலாந்தில் கிரிக்கெட் பயின்று இங்கிலாந்து அணிக்காக பிரபலமான 'பாடிலைன்' தொடரில் ஆடியவர். இந்திய அணிக்கும் கேப்டனாக இருந்திருக்கிறார். தந்தையின் விருப்பப்படியே டைகர் பட்டோடியும் கிரிக்கெட்டராகவே உருவெடுத்தார். தந்தையை போன்றே இங்கிலாந்தில் கல்வி பயின்று அங்கேயே பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளூர் அணிகளுக்கும் கிரிக்கெட் ஆடி, தன்னுடைய திறனை மெருகேற்றிக் கொண்டார். அப்போதே தனது வசீகரமான ஆட்டத்தாலும் Unorthodox பேட்டிங்காலும் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் 'டைகர்' பட்டோடி எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கவே அவரது வலது கண்ணில் பலத்த அடிபட்டு விழித்திறன் சவால் ஏற்படுகிறது.
மன்சூர் அலிகான் பட்டோடி
மன்சூர் அலிகான் பட்டோடி
Screengrab from YouTube

பார்வைத்திறன் சவாலோடு விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க நினைப்பது இமாலய சவால். ஆனால், பட்டோடி அதற்குத் தயாரானார். இந்தியாவிற்குத் திரும்பியவர் காயம்பட்ட சில மாதங்களிலேயே இந்திய அணிக்காக ஆடி ரன் மழை பொழிந்தார். தொப்பியை இழுத்து வலதுக்கண்ணை மூடிக்கொண்டு இடதுக்கண்ணை மட்டும் பயன்படுத்தி பௌலர்களின் தலைக்கு மேல் ஷாட் ஆடி ஆச்சர்யப்படுத்தினார்.

21 வயதிலேயே இந்திய கேப்டனாக அவதரித்த பட்டோடி ஒரு தலைவனாக தன்னுடைய தடங்களை இன்னும் அழுத்தமாக பதிக்கத் தொடங்கினார். வெறுமென ரெக்கார்டுகளையும் வெற்றி தோல்வி சதவிகிதங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு பார்த்தால் பட்டோடி ஒரு சுமாரான கேப்டன் என்கிற சித்திரமே கிடைக்கும். எண்களைத் தாண்டி அணிக்குள் பட்டோடி உருவாக்கிய அதிர்வலைகள் ரொம்பவே பெரிது. அதுவரை மும்பை, டெல்லி, பஞ்சாப் என பிராந்திய உணர்வோடு ஓர் அணியாக ஒன்றிணைவின்றி ஆடி வந்தனர் இந்திய வீரர்கள்.

"நாம் மும்பைக்காகவோ டெல்லிக்காகவோ ஆடவில்லை இந்தியாவிற்காக ஆடுகிறோம் அந்த உணர்வோடு ஆடுங்கள்" என்பதே கேப்டன் பட்டோடியின் முதல் கட்டளையாக இருந்தது. முதன் முதலாக இந்திய அணிக்குள் இப்படி ஒரு கட்டளையோடு நுழைந்த கேப்டன் இவர்தான் என பிஷன் சிங் பேடி குறிப்பிடுவதுண்டு. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை போன்றுதான் நாமும் கிரிக்கெட் ஆடுகிறோம். நம்மை நாமே தாழ்வாக நினைத்துக்கொள்வதில் பிரயோஜனமில்லை எனக் கூறி இந்திய வீரர்களை தலைநிமிர செய்ததும் பட்டோடியே. ராஜகுடும்பத்தில் பிறந்து ஆங்கிலேயே கலாசாரத்தில் வளர்ந்துவிட்டு வந்தவர், தன் அணி யாருக்கும் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என நினைத்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்கிற கர்வமும் பெருமையும் பட்டோடிக்கு உண்டு. ஆனால், அதெல்லாம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியேதான். மைதானத்திற்குள் வந்துவிட்டால் சக வீரர்களோடு வீரராகவே தன்னையும் இணைத்துக் கொண்டு அணியை திறம்பட வழிநடத்தினார். ஒரு பேட்ஸ்மேனாகவும் பார்வைத்திறன் சவாலோடே கூட மிகச்சிறப்பாகவே ஆடியிருக்கிறார். இவருக்கு மட்டும் பார்வை முழுமையாக இருந்திருந்தால் ப்ராட்மேனை போன்றதொரு வீரராக வரலாறு படைத்திருப்பார் என பல வெளிநாட்டு வீரர்களால் புகழப்பட்டிருக்கிறார்.

மன்சூர் அலிகான் பட்டோடி
மன்சூர் அலிகான் பட்டோடி

ஒரு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்யணத்தின் போது, மெல்பர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 25-5 என தடுமாறிக்கொண்டிருக்க அந்தச் சமயத்தில் க்ரீஸுக்குள் வந்த பட்டோடி, 75 ரன்களை எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டிருந்தார். இந்த இன்னிங்ஸை பட்டோடி ஆடியபோது அவரது இடதுகாலில் தசைப்பிடிப்போடும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு கண்ணில் பிரச்னை, ஒரு காலில் பிரச்னை... இத்தனையும் கடந்து ஒவ்வொரு முறை இடைவேளையின் போதும் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து விதவிதமான பேட்களை எடுத்து வந்து ஆடியிருந்தார். இது இயான் சேப்பலை ஆச்சர்யப்படுத்தியது. அன்றைய நாள் முடிந்தவுடன் பட்டோடியிடமே அதைப்பற்றி சேப்பல் கேட்டுவிட்டார்.

"என்னிடம் பேட்டெல்லாம் கிடையாது. மைதானத்திற்கு கிளம்பும்போது ஷூக்களையும் சர்ட்டையும் மட்டுமே எடுத்துக்கொள்வேன். ட்ரெஸ்ஸிங் ரூமின் வாசலில் கிடக்கும் எதாவது ஒரு பேட்டை எடுத்துக்கொண்டு க்ரீஸிற்கு வந்துவிடுவன்" என்று சொல்லியிருக்கிறார் பட்டோடி.

அதைக் கேட்ட இயான் சேப்பல் அரண்டுவிட்டார். ப்ராட்மேனுக்கு ஒப்பாகப் பேசப்பட்ட வீரர் இயல்பிலேயே ராஜவம்சத்தை சேர்ந்தவர், தனக்கென சொந்தமாக ஒரு பேட்டே இல்லாமல் ஆடியது மாபெரும் சுவாரஸ்யமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேட்டிங், கேப்டன்சி இதையெல்லாம் தாண்டி அந்தக் காலத்தில் வீரர்களால் அந்நியமாக பார்க்கப்பட்ட கலையான ஃபீல்டிங்கிலும் பட்டோடி மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். மற்ற வீரர்கள் பேட்டிங், பௌலிங் பயிற்சியோடு நிறுத்திக்கொள்ள பட்டோடி தினமும் அரைமணி நேரத்தை ஃபீல்டிங் பயிற்சிக்காக மட்டுமே செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மகன் சயிஃப் அலிகானுடன் `டைகர்' பட்டோடி
மகன் சயிஃப் அலிகானுடன் `டைகர்' பட்டோடி
AP
டி20 யுகத்தில் இளம் வீரர்கள் இப்போது செய்யும் ஸ்லைட்களையும் டைவ்களையும் பட்டோடி அன்றே செய்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர்களுள் முதன்மையானவர் அவர்.
சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் ஆடிய காலத்தில் மட்டுமில்லை. ஓய்வுபெற்ற பிறகும் கூட இந்திய வீரர்களுக்காக துணை நின்றார். கிரிக்கெட் வீரர்களுக்காக ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது அதற்கு ஆதரவாக முன் நின்று பி.சி.சி.ஐ-உடன் உரையாடியவர் பட்டோடியே. சங்கம் அமையாவிட்டாலும் வீரர்கள் இன்று பெற்றுக்கொண்டிருக்கும் அதிகபட்ச சம்பளத்தொகைக்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொடுக்க பெரிதும் உதவியிருந்தார். ஃபீல்டிங்கில் கவர்ஸில் புலியென பாய்ந்ததற்காக மட்டுமில்லை, அவரது குணாதிசயங்களுக்காகவுமே இன்றும் அவர் 'டைகர்' பட்டோடியாக நினைவில் நிற்கிறார். இன்று அவர் பிறந்த தினம்!