Published:Updated:

`தோனியின் நாட்டுப்பற்றைக் காட்டுகிறது; சல்யூட் அடித்த காட்ரல் - குவிந்த லைக்ஸ்

ராம் பிரசாத்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரல் ட்வீட் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தோனி
தோனி

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களது வித்தியாசமான அணுமுறையால் ரசிகர்களைக் கவர்ந்துவிடுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வெற்றிக்கொண்டாட்டங்கள் அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களின் மனதை வென்ற வீரர் ஷெல்டன் காட்ரல். தனது ட்ரெட் மார்க் சல்யூட் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தார். உலகக்கோப்பை தொடரில் இவரின் சல்யூட் அனைவரையும் கவர்ந்தது. உலகக்கோப்பை போட்டியில் தான் விக்கெட் எடுத்தவுடன் மைதானத்தில் சல்யூட் அடித்துக் கொண்டாடினார். ஜமைக்காவைச் சேர்ந்த காட்ரல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.

காட்ரல்
காட்ரல்

காட்ரல் ராணுவ பணியில் ஈடுபடும் தோனியைப் பாராட்டி ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்தான் தற்போது வைரலாகியுள்ளது. தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இரண்டு மாத ஓய்வில் இருக்கும் தோனி, காஷ்மீரில் பாராசூட் ரெஜிமென்டில் தனது பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் இருக்கும் படைப்பிரிவின் பணிகளைச் செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது. ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவப் பணிகளில் அவர் ஈடுபடவுள்ளார்.

தோனியை கடுமையாக விமர்சித்து வந்த கம்பீர், யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றுவதற்காக அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் காட்ரலும் தோனியை பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், `தோனி களத்தில் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்வார். அவர் ஒரு சிறந்த தேசப் பக்தர்' எனப் பதிவிட்டுள்ளார்.

ராணுவ உடையில் காட்ரல்
ராணுவ உடையில் காட்ரல்

தோனிக்கு கடந்தாண்டு பத்ம பூஷண் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ உடையில் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ அப்போதே வைரலானது. அதை தற்போது பதிவிட்டுள்ள காட்ரல், ``நான் இந்த வீடியோவை எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு ராணுவ வீரரான நான் எவ்வளவு பெருமிதம் கொள்வேன் என அவர்களுக்குத் தெரியும். அந்த தருணத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான காதலும். தோனி நாட்டின் மீது, தன் மனைவியின் மீது வைத்துள்ள காதலையும் அது காட்டுகிறது. நான் மகிழ்ச்சியடைந்ததைப் போல நீங்களும் மகிழுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மீண்டும் லைக்ஸை அள்ளியது. ரசிகர் ஒருவர், `காட்ரல் நீங்கள் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தான் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார்.