Published:Updated:

இது விராட் கோலி, கிரிக்கெட்டர் கோலிக்குத் தந்த இரண்டாவது இன்னிங்ஸ்! #HBDKOHLI

30 வயது வரை கண்டக்டராக இருந்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் ஆனதுபோல், இந்த இரண்டாவது இன்னிங்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் ஆச்சர்யங்களைக் கொடுக்கும். அப்படி இரண்டாவது இன்னிங்ஸில் கோலிக்குக் கிடைத்ததுதான் சச்சினுக்கு நிகரான இந்த உச்சம்.

virat kohli, விராட் கோலி
virat kohli, விராட் கோலி

டெஸ்ட், ஒருநாள், டி20 என கிரிக்கெட்டில் மூன்று ஃபார்மட்கள் இருந்தாலும் கிரிக்கெட் ரசிகனாக எனக்கு மிகவும் பிடித்த ஃபார்மட் டெஸ்ட் கிரிக்கெட். காரணம் இதில் இருக்கும் செகண்ட் இன்னிங்ஸ் கான்செப்ட். முதல் இன்னிங்ஸில் நீங்கள் டக் அவுட்டே ஆகியிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பிருக்கிறது. அந்த இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து முதல் இன்னிங்ஸ் தோல்வியை, அவமானத்தை, ஏமாற்றத்தை முழுவதுமாகத் துடைத்தெறிய முடியும். அதுபோலத்தான் காலம் நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் என்பார்கள். ஆமாம்.... உண்மையிலேயே காலம் எல்லோருக்கும் இந்த இரண்டாவது இன்னிங்ஸை ஆட வாய்ப்புத்தருகிறது. அந்த இரண்டாவது இன்னிங்ஸில் டபுள் சென்சுரி அடித்து ரேஸில் முன்னோக்கிப்பறந்தவர்கள்தான் வாழ்நாள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.

virat kohli
virat kohli

முதல் இன்னிங்ஸில் கண்டக்டராக இருந்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் ஆனதுபோல், இந்த இரண்டாவது இன்னிங்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் ஆச்சர்யங்களைக் கொடுக்கும். அப்படி இரண்டாவது இன்னிங்ஸில் கோலிக்குக் கிடைத்ததுதான் சச்சினுக்கு நிகரான உச்சம். இன்னொரு கிரிக்கெட் கடவுள் இந்தியாவிலிருந்தே பிறந்து வந்திருக்கிறார். ஆனால், இந்த உச்சத்தை இந்த ரன் மெஷின் தொட்டதில்தான் நமக்கெல்லோருக்குமான வாழ்க்கைப்பாடம் இருக்கிறது.

``நீ இந்தியாவுக்காக விளையாட வேண்டும்'' எனப் பெரும் கனவு கண்டு வளர்த்தெடுத்த அப்பாவை, ரஞ்சி கிரிக்கெட் ஆடும்போது இழந்தார் கோலி. டீன் ஏஜ் மகனுக்கு அப்பாவின் இழப்பு என்பது மனரீதியாகப் பல பின்னடைவுகளைத் தரும். வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும். லட்சியத்தை நோக்கிய ஃபோகஸை இழக்கவைக்கும். ஆனால், கோலி நம்பிக்கையை இழக்கவில்லை. கிரிக்கெட்டில் இன்னும் மூர்க்கமானார். அண்டர் 19 உலகக்கோப்பை கேப்டனாக இந்தியாவுக்குக் கோப்பையைப் பெற்றுத்தந்தார். இந்தியாவின் டிரீம் லெவனுக்குள் நுழையும் வாய்ப்பு தேடி வந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் போட்டிபோட்டுக்கொண்டு எடுத்தது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான 2008-ம் ஆண்டே புகழ் வெளிச்சத்துக்குள் வந்தார் கோலி.

virat kohli
virat kohli

ஆனால், எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்வதைப்போல கனவு கண்ட இடத்துக்கு வந்ததும் கோலியின் ஃபோகஸ் தடுமாறியது. கவனம் சிதறியது. பெரிய இன்னிங்ஸ்கள் ஆடமுடியாமல் தவித்தார். விருந்து, கேளிக்கைகளால் கிரிக்கெட் கேரியர் ஆட்டம் காண ஆரம்பித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்கள் அடித்திருந்தபோதும் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவமானம் கோலியைச் சூழ்ந்தது. 22 வயது இளைஞனுக்கே உரிய தடுமாற்றம். ஆனால், மீண்டும் நம்பிக்கையை இழக்கவில்லை கோலி. அப்பா கண்ட கனவு அவரை மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தூண்டியது. 2011-ல் கோலியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது. இதோ ரன்மெஷினாக, கிரிக்கெட் கடவுளாக, மாஸ்டர் பிளாஸ்டராக கிங் கோலியாக உயர்ந்து நிற்கிறார்.

சரியாகச் சொல்லவேண்டுமானால் 2011 உலகக்கோப்பைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது கோலியின் எழுச்சி. ``நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியபோது மிகவும் பேஷனோடு, ஆர்வத்தோடு ஆடத்தொடங்கினேன். ஆனால் சின்ன வயது என்பதாலோ என்னவோ என்னுடைய ஃபோகஸை பாதியில் இழந்துவிட்டேன். என் அப்பாவின் திடீர் மரணம் என்னுடைய கவனத்தை மீண்டும் கிரிக்கெட் பக்கம் கொண்டுவந்தது. ஆனால் ஐ.பி.எல் தொடங்கியபோது என்னுடைய ஆட்டத்தில் மீண்டும் சறுக்கல். என் கவனம் கிரிக்கெட்டிலிருந்து விலகி கேளிக்கைகளுக்குச் சென்றுவிட்டது. என்னுடைய ஆட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரன்கள் எடுக்கத் திணறினேன். இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டேன். என் வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டம் அது.

என்னை கிரிக்கெட் வீரனாக உருவாக்கியது என் அப்பாதான். அவருடைய கனவு நான் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது. அந்தக் கனவு தகர்ந்தபோது உடைந்துவிட்டேன். எல்லா பர்சனல் விஷயங்களையும் மறந்துவிட்டு கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஒன்றரை வருடம் எதன் மீதும் என் கவனம் திரும்பவில்லை. மீண்டும் இந்திய அணிக்குள் அதுவும், 2011 உலகக்கோப்பை அணியில் ஆட வாய்ப்புக் கிடைத்தது’’ எனத் தன்னுடைய முதல் இன்னிங்ஸ் தோல்வியையும் இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பத்தையும் சொல்லியிருக்கிறார் கோலி.

தன் மூளைக்குள் ஜிபிஎஸ் ஃபிட் செய்துவைத்திருக்கிறார் கோலி. ஃபீல்டர்களுக்கான இடைவெளிகளில் சரியாகப் பந்தைச் செலுத்துகிறார்
ஹர்ஷா போக்ளே

எக்ஸ்ட்ரா கோபம், எக்ஸ்ட்ரா உணர்ச்சிவசப்படுதல், எக்ஸ்ட்ரா ஆர்வம் என எல்லாமே எக்ஸ்ட்ராவாகக் கொண்ட கோலியின் கிரிக்கெட் திறமையும் எல்லோரைவிடவும் எக்ஸ்ட்ராதான். ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ரோஹித் ஷர்மா என உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு ஃபார்மட்தான் கைகொடுக்கிறது. ஆனால், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்டுமே கோலிக்கு அத்துப்படி. மூன்று ஃபார்மட்டிலுமே சிறந்த பேட்ஸ்மேன் கோலியைத்தவிர வேறு யாரும் இன்று இல்லை. 10 ஆண்டுக்கால கிரிக்கெட் கரியரில் 20,000 ரன்கள் அடித்திருக்கிறார் கோலி. இந்தச் சாதனையைச் செய்திருக்கும் ஒரே கிரிக்கெட்டர் கோலிதான்.

virat kohli
virat kohli

``ஒரு நல்ல ப்ளேயராக வேண்டும் என்றால் உங்களுக்குத் திறமை இருக்கவேண்டும். ஆனால், நீங்கள் உலகின் மிகச்சிறந்த பிளேயராக இருக்கவேண்டும் என்றால் உங்களிடம் கோலியைப் போன்ற ஆட்டிட்யூட் இருக்கவேண்டும்'' என்றார் சுனில் கவாஸ்கர். ஆமாம், வெற்றிபெற்றேயாகவேண்டும் என்கிற வெறி இருந்ததால்தான் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வரமுடியும். கோலியைப்போல!

விராட் கோலியின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதான்! #HBDKohli

தன்னோடு பேசுபவன், தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்ள தன்னைத்தானே ஒப்புக்கொடுப்பவனால்தான் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிபெற முடியும். ``2012 ஆஸ்திரேலிய டூர் முடிந்ததும் நான் பெரிய நம்பிக்கையோடு இருந்தேன். இந்த ஆண்டு ஐபிஎல்-ல் நாம்தான் பெஸ்ட் பர்ஃபார்மராக இருக்கப்போகிறோம் என்று பெருமையோடு காத்திருந்தேன். ஆனால் அந்த சீஸன் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்த என்னுடைய ஆவரேஜே 28 ரன்கள்தான். அந்த ஐபிஎல்-ல் என்னுடைய ஆட்டம் முடிந்த கடைசி நாளில் கண்ணாடியில் என்னை நான் பார்த்தேன். எனக்கே என்னைப் பார்க்க அவமானமாக இருந்தது. 'உன்னைப் பார்ப்பதற்கு ஒரு சர்வதேச கிரிக்கெட்டர் போல இல்லை. நீ ஏதோ ஒன்றை மிஸ் செய்கிறாய்' என்று அப்போது என்னுடைய மனதின் குரல் என்னிடம் பேசியது.

உன்னைப் பார்ப்பதற்கு ஒரு சர்வதேச கிரிக்கெட்டர் போல இல்லை. நீ ஏதோ ஒன்றை மிஸ் செய்கிறாய்
விராட் கோலி

`ஆமாம்... மற்ற அணிகள் எல்லாம் நம்மைவிடச் சிறப்பாக விளையாடுகிறார்கள். நம்மைவிட ஃபிட்டாக இருக்கிறார்கள். நம்மைவிட நன்றாகப் பயிற்சி எடுக்கிறார்கள். சரியான உணவை உட்கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களால் அதிக நேரம் களத்தில், ஆட்டத்தில் கவனம் செலுத்தமுடிகிறது' என என் கேள்விகளுக்கான விடையையும் என மனம் சொல்லிக்கொண்டே வந்தது. அன்றுதான் ஃபிட்னஸில் முழுக்க முழுக்க கவனம் செலுத்துவது என்கிற முடிவை எடுத்தேன்.

அந்த ஐபிஎல் முடிந்ததும் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்ய ஆரம்பித்தேன். சரியான சாப்பாடு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் என எல்லாவற்றையும் என்னுடைய கன்ட்ரோலுக்குக் கொண்டுவர ஆரம்பித்தேன். 8 மாதங்களில் 11 கிலோ எடை குறைந்தது. 84 கிலோ எடையில் இருந்த நான் 73 கிலோவாகக் குறைந்தேன். எனக்குள் ஏதோ பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஃபோகஸ் சரியாக இருந்தது. எடை குறைந்ததும் இன்னும் வேகமானவனாக என்னை நான் உணர்ந்தேன். களத்தில் அதிக நேரம் நிற்பதற்கான மன உறுதி கிடைத்தது. நீண்ட இன்னிங்ஸ்கள் ஆட ஆரம்பித்தேன்'' என கிரிக்கெட் வாழ்க்கையில் அவரை மாற்றிய தருணங்களைச் சொல்லியிருக்கிறார் கோலி.

பக்குவம் இல்லாதவர் என்று கோலியை விமர்சிக்கிறோம். அவர் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறார் என்பது அவரின் தற்போதைய ஆட்டமுறையில் தெரியும். சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்து ரசிகர்களை எப்படி எதிர்கொள்வது, நிர்வாகிகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி பயிற்சி எடுப்பது எனப் பல பாடங்களைக் கற்றிருக்கிறார் கோலி. ''மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் ஒருமுறை பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது சச்சின் டெண்டுல்கரிடம் பேசவேண்டும் எனத்தோன்றியது. கடினமான சூழல்களை எப்படி எதிர்கொள்வது, மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது எப்படி எனப் பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.

virat kohli
virat kohli

அவர் சொன்னது இதுதான். 'வெறுமனே பேருக்குச் செய்யவேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது. மற்றவர்கள் எல்லாம் நெட் பிராக்டீஸ் செய்கிறார்களே என்பதற்காக நாமும் அதைச் செய்யக்கூடாது. நம் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்தால்போதும். மனம் சொல்வதை நாம் செய்தால், நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்ய மனம் அனுமதிக்கும். அதைதான் நான் பின்பற்றினேன்' என்று சச்சின் சொன்னார்.

2003 உலகக்கோப்பை முழுக்கவே அவர் நெட்பிராக்டீஸ் செய்யவே இல்லையாம். ஆனால், அந்த உலகக்கோப்பைதான் அவருக்கு மிகச்சிறந்த உலகக்கோப்பை. இதை அவர் சொன்னபோது எனக்கு அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது. அன்றிலிருந்து மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நான் முடிவெடுக்கிறேன். பிட்சுக்குப் போகும் முன் ஒரு பஞ்சாபி பாடல் கேட்கத்தோன்றினால் சத்தமாகக் கேட்டுவிட்டு உற்சாகமாகக் களத்துக்குள் போகிறேன். மனதின் குரலைக் கேட்க ஆரம்பித்தால்போதும். அது நம்மை வழிநடத்தும்'' என்று சச்சினிடமிருந்து கற்ற வித்தையை எல்லோருக்குமான வாழ்க்கைப்பாடமாகச் சொல்கிறார் கோலி.

virat kohli
virat kohli

விராட் கோலியை ஆர்வக்கோளாறாகச் சிலர் நினைக்கலாம். ஆனால், மிகவும் பக்குவப்பட்ட மனிதராக, உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உச்சத்தில் நிற்க கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் கோலி. இந்த இரண்டாவது இன்னிங்ஸ் கோலிக்கு இன்னும் பல ஆச்சர்யங்களைக் கொடுக்கக் காத்திருக்கிறது!

பிறந்த நாள் வாழ்த்துகள் கிங் கோலி!