உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. நம்பர் ஒன் அணி ஆஸ்திரேலியாவின் வேகத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிக்கலான இடத்தில் இருக்கிறது. காரணம் கடந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளதால், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க கடுமையாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி மீதம் இருக்கும் இரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுஇண்டர் ஸ்டோக்ஸ் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். அவருக்குச் சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய ஸ்டோக்ஸ், இது எங்களின் உலகக் கோப்பை அதை எப்படி வெல்ல வேண்டும் என எங்களுக்குத் தெரியும் எனப் பேசியுள்ளார். ஸ்டோக்ஸ், ``கடந்த இரு போட்டிகளின் முடிவுகள் நிச்சயம் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துவிட்டது. ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும், இது எங்கள் உலகக் கோப்பை. இதனை வெல்லும் வழிகளை நாங்கள் அறிவோம்.
கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடையும்போது வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் நாங்கள் எங்களில் கேம் ப்ளானை மாற்றப் போவதில்லை.

நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் போட்டியின் சூழலுக்கு ஏற்ற சில மாற்றங்கள் தான். நாங்கள் பலமான அணி என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில் எளிதில் எங்களின் விக்கெட்டுகளை கொடுத்துவிட்டோம். வலிமையான பேட்டிங் கொண்ட ஒரு அணி அப்படி இழக்கக் கூடாது தான். ஆனாலும் எந்த விதத்திலும் எங்களின் நம்பிக்கையை இது குறைக்காது"என்றார்.
இந்திய அணிக்கு எதிரான போட்டி தொடர்பாகப் பேசிய ஸ்டொக்ஸ், ``இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் சிறந்த அணி என்பதையும் அவர்களின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கு எதிராக எங்களின் பெஸ்டை கொடுப்போம்” என்றார்.