Published:Updated:

டெஸ்ட் கரியரின் டெட் எண்ட்டை சந்திக்கப்போகும் இந்திய வீரர்கள்... கோலி என்ன செய்வார்?

விராட் கோலி ( Rui Vieira )

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் முடிவில்லாமல் முடிந்து போனாலும் இந்த டெஸ்ட்டில் இந்திய வீரர்களின் ஃபார்ம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

டெஸ்ட் கரியரின் டெட் எண்ட்டை சந்திக்கப்போகும் இந்திய வீரர்கள்... கோலி என்ன செய்வார்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் முடிவில்லாமல் முடிந்து போனாலும் இந்த டெஸ்ட்டில் இந்திய வீரர்களின் ஃபார்ம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

Published:Updated:
விராட் கோலி ( Rui Vieira )

அதிகம் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் தொடங்கி முதல் டெஸ்ட் முடிந்திருக்கிறது. இன்னும் 4 டெஸ்ட்கள் மீதம் இருக்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும், பல வீரர்களுக்கு இந்த டெஸ்ட் தொடரே இறுதியாக இருக்கும் என்கிற கணிப்புகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

சரியான ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்காதது, சில வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்காமல் விட்டதே கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால் அணியை சீர்படுத்துவதற்காக தவறுகளை கண்டறிந்து சில கடுமையான நடிவடிக்கைகளை எடுக்க போகிறோம் என கோலியே ப்ரஸ்மீட்டில் பேசியிருந்தார். ஆனால், தவறுகளை சரி செய்கிறோம் என ரவிச்சந்திரன் அஷ்வினையே முதல் டெஸ்ட்டுக்கான ப்ளேயிங் லெவனில் இருந்து தூக்கிவிட்டார் கோலி. அஷ்வின் முதல் டெஸ்ட் மட்டுமல்ல இந்தத்தொடரிலேயே மற்ற வீரர்கள் காயமடைந்தால் மட்டுமே மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வரும் வாய்ப்பிருக்கிறது. அஷ்வினுக்கே இந்த நிலை என்றால் ஃபார்மில் இல்லாத வீரர்கள் என்ன ஆவார்கள்?

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
Rui Vieira

ரோஹித் ஷர்மா:

ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. ஒயிட்பாலில் நிகழ்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஆனால், டெஸ்ட்டில் அவர் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. ஒரு முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாகவே அவர் தன்னை இன்னும் உணரவில்லை. ஒயிட்பால் ஹேங் ஓவருடனே ஆடிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஃப்ளாட் ட்ராக்குகளில் இந்த அணுகுமுறை பெரிதாக அடி வாங்கவில்லை. நெட் ப்ராக்டீஸில் ஆடுவதை போல சுலபமாக ஆடி 80க்கு மேல் ஆவரேஜ் வைத்துள்ளார். ஆனால், வெளிநாடுகளில் பந்து ஸ்விங் ஆகும் சூழல்களில் திணறுகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் அடித்திருந்தாலும் ஒயிட் பால் கிரிக்கெட்டருக்கான நம்பிக்கை தரும் பேட்டிங் அவரிடம் இல்லை.

வெளிநாடுகளில் இவரது ஆவரேஜ் 30-க்கும் கீழ்தான் இருக்கிறது. அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று லிமிடெட் ஓவர் உலகக்கோப்பைகளை இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது. டெஸ்ட் போட்டியை விட லிமிடெட் ஓவர் போட்டிகளுக்குதான் ரோஹித் கட்டாயமாக தேவைப்படுகிறார்.

அங்கே அவருக்கு பதில் என யோசிக்கும் வகையில் கூட வீரர்கள் இல்லை. ஆனால், டெஸ்ட்டில் பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதை பிசிசிஐயுமே யோசிக்கும். அதனால் இந்த இங்கிலாந்து தொடரில் அவர் அடுத்து ஆடப்போகும் 8 இன்னிங்ஸ்களுமே அவரது டெஸ்ட் கரியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதாகவே இருக்கும். இங்கிலாந்தில் முதன்முதலாக இப்போதுதான் ஓப்பனிங் இறங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அஜிங்கியா ரஹானே

வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன். நேர்த்தியாக வேகப்பந்து வீச்சின் ஸ்விங்கை எதிர்கொள்ளக்கூடியவர் என பெயரெடுத்தவர். அவரது வெளிநாட்டு புள்ளிவிவரக் கணக்குகளும் அவருக்கு சாதகமாக இருக்கின்றது.

ஆனால், அதெல்லாம் புள்ளிவிவரங்கள். நடந்துமுடிந்தவை. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதுதான் மிகப்பெரிய கேள்வி. சீரற்ற முறையில் ஆடி இன்கன்ஸிஸ்டன்சிக்கு மறுபெயராகியிருக்கிறார் ரஹானே.
ரஹானே | #AUSvIND
ரஹானே | #AUSvIND
Asanka Brendon Ratnayake

கடைசியாக, ஆஸ்திரேலிய சீரிஸில் மெல்பர்ன் டெஸ்ட்டில் ஒரு சதமடித்திருந்தார். அதன்பிறகு, அந்த தொடரிலேயே இரண்டு போட்டிகள். இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸ். நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி என எதிலுமே அணிக்கு தேவையானதை செய்து கொடுக்கவில்லை. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் 5 ரன்களில் அவுட்.

ஒரு சீனியர் ப்ளேயராக பல நேரங்களில் பொறுப்பான இன்னிங்ஸை ஆட தவறுகிறார். அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியாயிற்று. ரஹானேவின் இடத்திற்கும் சூரியகுமார் யாதவை கொண்டு வரவும் கோலி யோசிக்கலாம். கூடிய விரைவில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படும் ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானேவுக்கு மாற்றாக பார்க்கப்படலாம். இந்த இங்கிலாந்து தொடர் ரஹானேவுக்கு அணிக்குள் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு என்று கூட சொல்லலாம்.

புஜாரா:

இந்தியாவின் தடுப்புச்சுவர். இவரின் டிஃபன்ஸால் இந்தியா அடைந்தது அதிகம். ஆனால், இப்போது அவரின் ஓவர் டிஃபன்ஸிவ் அணுகுமுறையே அவருக்கு ஆபத்தாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புஜாராவின் ஆவரேஜ் 30 க்கும் கீழ்தான் இருக்கிறது. 9 அரைசதங்களை அடித்திருக்கிறார். ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

புஜாரா
புஜாரா
Tertius Pickard

ஒரு நாள் முழுக்க க்ரீஸுக்குள் இருந்து 200 பந்துகளை சந்தித்து அணிக்கு பெரியளவில் பயனில்லாமல் செல்வது ஏமாற்றத்தை அளிக்கிறது. புஜாரா பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் அவருடைய டிஃபன்ஸுக்கு நியாயம் கற்பிக்க முடியும். அப்படியில்லையெனில், சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு புஜாரா 50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வேண்டும் என்பதே அணியின் எதிர்பார்ப்பு. ஆனால், புஜாரா அப்படி ஆடியதே இல்லை. கோலியே இரண்டு மூன்று முறை வெளிப்படையாக இந்த அணுகுமுறையை விமர்சித்துவிட்டார். கே.எல்.ராகுல் புஜாராவின் இடத்தில் களமிறக்கப்படலாம் போன்ற செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டது.

''புஜாரா உயர்தரமான வீரர். அவரை பற்றி விமர்சிக்க வேண்டாம். அவரது தவறுகளை அவரே சரிசெய்து கொள்வார்'' என இங்கிலாந்து தொடர் தொடங்கும்முன் புஜாரா குறித்து பாசிட்டிவாக பேசினார் கோலி. ஆனால், முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் அவுட் ஆனார் புஜாரா. இதனால் தொடர் முடிந்த பிறகும் கோலி புஜாரா பற்றி பாசிட்டிவ்வாக பேசுவாரா அவரது பேட்டிங்கில்தான் இருக்கிறது.

'கேப்டன்' கோலி, 'பயிற்சியாளர்' ரவிசாஸ்திரி:

அணிக்குள் பலருக்கும் கோலி செக் வைக்க நினைத்தாலும், 'கேப்டன்' கோலியே தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். நம்பர் 1 அணியாக இருந்து கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோற்றதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

டெஸ்ட் கரியரின் டெட் எண்ட்டை சந்திக்கப்போகும் இந்திய வீரர்கள்... கோலி என்ன செய்வார்?
Rui Vieira
சரியான நேரத்தில் கோலி எடுத்த தவறான முடிவுகளே இதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது. அப்போதே கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்தது.
ரவிசாஸ்திரி
ரவிசாஸ்திரி

ஆனால், அதை ஒரு வழியாக கடந்துவிட்டார். இப்போது இங்கிலாந்து தொடரில் இந்தியா ஒருவேளை மோசமாக தோற்கும்பட்சத்தில் மீண்டும் கோலியின் கேப்டன்சி மீது கேள்வி எழுப்பப்படும். அதை வழக்கம்போல எளிதில் கடந்துவிட முடியாது. 'இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் சிறந்த டெஸ்ட் அணி' என மார் தட்டியிருந்தார் ரவிசாஸ்திரி. ஆனால், அந்த சிறந்த அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ரவிசாஸ்திரியின் பயிற்யாளர் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவுக்கு வருகிறது. ரவிசாஸ்திரியின் பதவிக்காலத்தை நீட்டிக்க சொல்லி கோலி கொடி பிடிக்கலாம். ஆனால், அதற்கு இருவரும் இந்த இங்கிலாந்து தொடரை அசாத்தியமாக வென்றாக வேண்டும். பேட்ஸ்மேனாகவும் கோலி தன்னை நிரூபிக்கவேண்டும். முதல் டெஸ்ட்டில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதுபோல கோலி பேட்டிங்கிலும் சொதப்பினால் கஷ்டம்தான்.

மேலோட்டமாக பார்க்கும்போது இந்த இங்கிலாந்து தொடர் ஒரு சாதாரண வழக்கமான வெளிநாட்டு தொடராக தெரிந்தாலும், சில முக்கிய வீரர்களின் டெஸ்ட் கரியர் டெட் எண்ட்டை சந்திக்க நேரிடும் அளவுக்கு இந்த தொடர் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிரச்னைகளிலிருந்து மீண்டு, சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார்களா... காத்திருப்போம்!