நாளைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யவே வாய்ப்புகள் அதிகம். மழை குறுக்கீடு செய்யலாம் என்பதால், ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்யவே விரும்பும். ஆனால், ஹர்மன்ப்ரீத் அதைப்பற்றிக் கவலைப்பட வாய்ப்பில்லை. மழையைவிட, தன் பௌலிங் படையையே அவர் அதிகம் நம்புவார். டிஃபண்ட் செய்யவே விரும்புவார். ஆக, இந்தியா முதலில் பேட்டிங் செய்யவே 80 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. மீண்டும் மழையைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஆஸ்திரேலியா சேஸ் செய்யும்போது ஓவர்கள் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டால், அது அவர்களுக்குச் சாதகமாக அமையலாம். அதனால், இந்தியா நல்ல ஸ்கோர் எடுப்பது அவசியம். முந்தைய போட்டிகளைப்போல் 130-140 என்ற இலக்கு இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் போதாது. அதனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கப்போவது நம் பேட்டிங் செயல்பாடுதான். தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கேயக்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ், ஷிகா பாண்டே ஆகிய ஐந்து பேரும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாளையும் செயல்படுவார்கள். ஆனால், இந்தியாவின் வெற்றியை நிர்ணயிக்கப்போவது மற்ற 6 வீராங்கனைகளின் பங்களிப்புதான். அவர்கள் இந்திய அணிக்கு என்ன செய்ய வேண்டும்?
ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா… இந்த 16 வயது வீராங்கனைதான் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் 30-40 சதவிகித ரன்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். பவர்ப்ளே ஓவர்களில் இவர் வெடிக்கும் சரவெடிகள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. எந்தப் பாரபட்சமும் பார்க்காமல், ஃபைனல் என்ற எண்ணம் இல்லாமல் நாளை அவர் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும். இறுதிப்போட்டிதான். பரவாயில்லை, அதே உக்கிரம் தொடர்வதுதான் நல்லது. 2011 ஆண்கள் உலகக் கோப்பையில் ஷேவாக் ஒவ்வொரு முதல் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பியபோது எப்படி சிலாகித்தோம். அந்தத் தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் முதல் பால் பவுண்டரி அடிக்கவில்லை. இறுதிப்போட்டி… ஃபைனல் என்று மரியாதை கொடுத்தார். அடுத்த பந்திலேயே டக் அவுட். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு மரியாதை கொடுத்தார் - தடுமாறி, ஃப்ரீ ஹிட்டில் கூட ரன் அடிக்கத் திணறி 15 ரன்களில் வெளியேறினார். நாளை இறுதிப்போட்டிதான், ஆஸ்திரேலியாதான். இருக்கட்டுமே! உலகின் நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேன் எதற்காக அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டும்?

அவர் கவனம் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்களும் இருக்கிறது. அதிரடி காட்டுவது அவசியம்தான். ஆனால், அதேசமயம் ப்ளேஸ்மென்ட்டில் கவனமாக இருக்க வேண்டும். மெல்போர்ன் ஆடுகளம் மிகவும் பெரிது என்பதால், `ஏரியல்’ ஷாட்கள் அவ்வளவு எளிதில் பவுண்டரியை அடைந்துவிடாது. அதனால், அதில் கவனமாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் - ரன்னிங். ஷஃபாலி களத்திலிருக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் மனநிலையில்தான் இருக்கிறார். அடிச்சா பவுண்டரி மோட்தான். ஓடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளை, தோனி அல்லது கோலியின் மனநிலையில் அவர் ஆடுவது அவசியம். மிகப்பெரிய ஆடுகளத்தைப் பயன்படுத்தி, சிங்கிள்களை டபுள்களாக்க முயற்சிசெய்ய வேண்டும். சிங்கிள் இல்லாத இடங்களில் அதை எடுக்க வேண்டும். நடப்பு சாம்பியனுக்கு எதிராக ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியம். இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகவும் அசால்ட்டாக ஓடி அவுட்டாகி அரைசதத்தையும் இழந்தார். இந்தியாவின் நம்பிக்கையாக இருக்கும் ஷஃபாலி அந்த மனநிலையை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம்.
ஸ்மிரிதி மந்தனா
ஷஃபாலி ஒருபுறம் வெளுத்துக்கட்ட, ஸ்ம்ருதி இன்னும் தன் ஆட்டத்தை இந்த உலகக் கோப்பையில் காட்டவில்லை. ஆடிய 3 இன்னிங்ஸ்களில் ஒன்றில்கூட 12 பந்துகளுக்கு மேல் ஆடவில்லை. நாளை அவர் தன் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். முதல் 6 ஓவர்களில் ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்திய ஓப்பனர்கள் ஆடுவார்கள். ஆனால், அதேசமயம் மேகன் ஷூட்டின் ஓவர்களை சமாளிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஷஃபாலியைத் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடவிட்டுவிட்டு ஸ்மிருதி களத்தில் இருப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. பவர்ப்ளேவுக்குப் பிறகான ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் மிகவும் குறைவாகவே இருப்பதால், இவர் களத்தில் அதிக நேரம் இருப்பது முக்கியம். மிடில் ஆர்டரில் நல்ல பார்ட்னர்ஷிப்களும் அமைவதில்லை. அதனால், எந்த இடத்திலும் அவர் அவசரம் காட்டக் கூடாது. கண்ணை மூடிக்கொண்டு அடித்து ஆடுவதை, ஷஃபாலியிடம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியத் துணைக் கேப்டனிடம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த உலகக் கோப்பையின் அரையிறுதியில், பவர்ப்ளேவின் கடைசிப் பந்தில் தேவையில்லாத ஷாட் ஆடி அவுட் ஆவார் ஸ்மிருதி. 6 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, அடுத்த 14 ஓவர்களில் வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகும். அவரது அந்த விக்கெட்தான் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றியது. ஸ்மிருதி தன் விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடுவது அவசியம். தவான் அதிரடி காட்டும்போது அமைதி காக்கும் ரோஹித் ஷர்மாபோல், நாளை ஸ்மிருதி ஆட வேண்டும். இவரும் துணைக்கேப்டன் ஆயிற்றே!
தானியா பாட்டியா
தானியா பாட்டியாவின் பங்களிப்பு ரன்களில் தெரிவது கிடையாது. நம் டெஸ்ட் அணிக்கு சாஹா எவ்வளவு முக்கியமோ, அதைவிட மகளிர் அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியம். ஸ்டம்புகளுக்குப் பின்னால் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் தானியா. இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த கீப்பர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். 4 போட்டிகளில் 9 டிஸ்மிஸல்கள் செய்து அசத்தியிருக்கிறார். மிகவும் கடினமான கேட்ச்களை மிகவும் அசாத்தியமாகப் பிடித்திருக்கிறார். ஆனால், பேட்டிங்கில் அவர் இதுவரை கொடுத்த பங்களிப்பு நிச்சயம் போதாது. அவர் 100 சதவிகிதம் பர்ஃபக்டாக இருக்கவேண்டியது அவசியம். முந்தைய போட்டிகளில் சில கடினமான கேட்ச்களை அவர் தவறவிட்டிருக்கிறார். நாளை அவை ஒவ்வொன்றுமே மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் விக்கெட்டுகள் மலிவானது கிடையாது.

அதேபோல், பாட்டியா மிகவும் கவனமாக இருக்கவேண்டிய இடம் - ரிவ்யூ. இந்தியாவின் ரிவ்யூ முடிவுகள் சொல்லிக்கொள்ளும்படியில்லை. அதிக அனுபவம் இல்லைதான். ஆனால், நாளை அதைக் காரணமாகச் சொல்வது நன்றாக இருக்காது. இந்த உலகக் கோப்பையிலேயே அதற்கு நல்ல உதாரணமும் இருக்கிறது. இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில், சேஸிங்கின் தொடக்கத்தில் ஆஸி அணி தடுமாறியது. 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில், சிரிவர்தனேவின் பந்துவீச்சில் மெக் லேனிங்குக்கு எதிராக caught behind அப்பீல் கோரப்பட்டது. அம்பயர் நிராகரித்தார். ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் உடனடியாக ரிவ்யூ கேட்டது இலங்கை. நாட் அவுட்.
எட்டாவது ஓவர் - 30/3. தில்ஹாரா ஓவரில் மீண்டும் லேனிங்குக்கு எதிராக caught behind அப்பீல். மீண்டும் நிராகரிக்கப்படுகிறது. ரிவ்யூ இல்லை. அடுத்த ஓவரில், அதை அவுட் என்கிறது ரீப்ளே. அவசர கதியில் எடுக்கப்பட்ட ஒரு ரிவ்யூ இலங்கையின் வெற்றியைப் பறித்தது. ஏனெனில், அதே லேனிங்தான், வெறும் 3 பந்துகள் மீதமிருக்கையில் ஆஸியைப் பத்திரமாகக் கரைசேர்த்தார். இப்படியான தவறுகள் நாளை நடந்துவிடக் கூடாது.

வேதா கிருஷ்ணமூர்த்தி
இன்னும் தன் திறமையை சர்வதேச அரங்கில் முழுமையாகக் காட்டாத ஒருவர். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடியதைப் போன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடினாலே போதும். ஆனால், வேதா பெரிய போட்டிகளில், பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறார். நாளை அதற்கு அவர் முடிவுகட்ட வேண்டும். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். ஹர்மன்ப்ரீத் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவரது பாரத்தைக் குறைக்கவேண்டிய பங்களிப்பு வேதாவுக்கு இருக்கிறது. ஹர்மனுக்கு முன்னால் களமிறக்கப்படுவதற்கான நம்பிக்கையைக் கூட இவர் இதுவரை ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம். மற்றபடி ஃபீல்டிங்கில் சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். நாளை இவரது பேட்டிங், இந்தியாவின் கோப்பை கனவுக்கு மட்டுமல்லாமல், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் மிக முக்கியம்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
இந்தியாவின் இன்னிங்ஸ் எப்படி அமையும் என்பதைப் பெரும்பாலும் இந்த 19 வயது வீராங்கனைதான் தீர்மானிப்பார். இந்திய மிடில் ஆர்டரில் இப்போது ஓரளவுக்காவது ஃபார்மில் இருப்பது இவர்தான். ஓப்பனர்கள் இருவரும் விரைவிலேயே வெளியேறிவிடும் பட்சத்தில், மொத்த அணியையும் இவர்தான் சுமக்கவேண்டியிருக்கும். 6 முழு நேர பௌலர்களோடு (ஜெஸ் ஜோனேசன் உட்பட) களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் பௌலிங் யூனிட்டுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்கள் ஆடுவது மிகவும் முக்கியம். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் விழாமல், அதேசமயம் ரன்களும் வரவேண்டுமெனில், ஜெமிமா நாளை தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடவேண்டியிருக்கும். மெல்போர்ன் மைதானத்தின் பெரிய பவுண்டரிகளை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பவுண்டரிகளை எதிர்பாராமல், தன் வழக்கமான ஆட்டத்தை ஆடி ஸ்கோர் போர்டை டிக் செய்துகொண்டிருந்தாலே போதும். யாரேனும் ஒருவர்… ஒருவர் இவரோடு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 15 ஓவர்வரை தாண்டிவிட்டால், நல்ல ஸ்கோர் எடுத்துவிடலாம். அவர் 15 ஓவர் வரை களத்தில் நிற்பது மிக மிக மிக அவசியம்.

களத்தில் இருப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு ரன் ஓடுவதில் ஜெமிமா கவனம் செலுத்த வேண்டும். அதாவது, தேவையில்லாமல் ஓடுவதைத் தவிர்ப்பதில். இந்திய வீராங்கனைகள் ரன் அவுட் ஆகும்போது அதிகம் களத்தில் இருப்பது யாரென்றால் அது இவராகத்தான் இருக்கும். அவரைக் குறை சொல்லிவிட முடியாது. தன்னுடைய பார்ட்னர் அழைத்தால், உடனே கிரீஸிலிருந்து கிளம்பிவிடுவார் ஜெமிமா. அது ரன் எடுக்க உகந்த இடமா, ரன் அவுட் வாய்ப்பு இருக்கிறதா என்பதைப்பற்றியெல்லாம் பெரும்பாலும் அவர் யோசிப்பதில்லை. குறிப்பாக ஹர்மன், ஸ்மிருதி போன்ற சீனியர்கள் அழைத்தால் உடனே பறந்துவிடுகிறார். நோ சொல்லிப் பழக வேண்டும் ஜெமிமா. நாளை உங்கள் விக்கெட் விலை மதிப்பற்றது.
ஹர்மன்ப்ரீத் கௌர்
இந்திய கிரிக்கெட்டுக்கு வேண்டாதவர்கள் யாரோ முட்டை மந்திரித்து டாஸ்மன் கடலில் வீசிவிட்டார்கள் போல. நியூசிலாந்தில் கோலி சொதப்பல் ஆட்டம் ஆட, ஆஸ்திரேலியாவில் நம் மகளிர் அணியின் கேப்டன் தடுமாறிக்கொண்டிருக்கிறார். Foot movement, Hand - Eye co-ordination என எல்லாமே சொதப்பல். கடந்த உலகக் கோப்பையை சதத்தோடு தொடங்கியவர், இந்த முறை இரட்டை இலக்கத்தைத் தொடவே பெரும்பாடு படுகிறார். இப்போதைக்கு இந்திய அணியின் மோசமான பர்ஃபாமர் இவர்தான். நாளை, அவர் அதைச் சரிசெய்தே ஆக வேண்டும். அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பினாலும், இறுதிப் போட்டியில் நன்றாக ஆடினால், மொத்த அணியையும் மறந்து ஹீரோவாகக் கொண்டாடிவிடுவோம் என்பதால், ஹர்மன் தன்னை மீட்டெடுத்த ஹீரோ ஆக இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இலங்கைக்கு எதிராக மூன்றாவதாகக் களமிறங்கியதைப் போல் நாளை இறங்க திட்டம் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. எந்த இடத்தில் ஆடினாலும், முழு நம்பிக்கையுடன் அவர் களமிறங்குவது முக்கியம். அதுவே அவருக்குப் போதும். 10 பந்துகள் நம்பிக்கையாக சரியாக எதிர்கொண்டுவிட்டால், அவரால் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிட முடியும். கடைசி சில ஓவர்களிலும் ஆட்டத்தை மாற்றிவிட முடியும். அந்தப் பழைய ஹர்மன் நாளை மெல்போர்னில் களமிறங்க வேண்டும்.

ஆனால், நாளை பேட்ஸ்மேன் ஹர்மன்ப்ரீத்தைவிட கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் செயல்பாடுதான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும். அவரது சில முடிவுகள் அவ்வளவு முக்கியமானதாக இருக்கும். ஏற்கெனவே சொன்னதுபோல், மெல்போர்ன் மைதானம் பெரிது என்பதால், சிங்கிள், டபுள்கள் அதிகம் எடுக்கப்பட வாய்ப்புண்டு. இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக அவை எளிதில் கிடைக்கப்பெற்றால், விக்கெட் விழுவது சிரமமாகிவிடும். குறிப்பாக, ஹீலி, மூனி, லேனிங் மூவருமே ஓடி ரன் சேர்ப்பதில் ஜகஜால கில்லாடிகள். அதனால், ஹர்மனின் ஃபீல்ட் செட் அப் எப்படி இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். சிங்கிள்களை முடிந்த அளவுக்குத் தடுக்க வேண்டும். கடந்த டி-20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா தோற்றதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
இங்கிலாந்துக்கு எதிராக டேமி பௌமன்ட், டேனி வயாட் விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்திவிட்டபோதும், ஏமி ஜோன்ஸ் - நடாலி ஷிவர் கூட்டணியை எளிதாக ரன் எடுக்க விட்டது இந்திய அணி. விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆஃப் சைடில் ஃபீல்டர்களை ஹர்மன் நிரப்பிவைக்க, ஆன் சைடில் எளிதாக ஒன்றும் இரண்டுமாக எடுத்துக்கொண்டிருந்தது அந்தக் கூட்டணி. அந்தப் போட்டியில், இந்தியா ஓடி ஓடி சேர்த்த ரன்கள் 59. அதேசமயம் இங்கிலாந்து ஓடி சேர்த்த ரன்கள் 76! அவர்கள் சிரமப்படவேயில்லை. ரன்கள் எளிதாக வந்துகொண்டிருந்தது. அவற்றை எளிதாகக் கொடுத்துக்கொண்டிருந்தார் ஹர்மன். நாளை அது நடக்கக் கூடாது.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய அரையிறுதியின்போது வர்ணனையில் இருந்த மைக்கேல் கிளார்க் ஒரு விஷயம் சொன்னார் : ``நல்ல ஃபீல்ட் செட் அப் என்பது, கேட்சிங் பொசிஷனில் ஃபீல்டர்களை நிறுத்தவைப்பது மட்டும் கிடையாது. ஒரு பேட்ஸ்மேனை சிங்கில் எடுக்கக்கூட அனுமதிக்காத ஃபீல்ட் செட் அப்பாக அது இருக்க வேண்டும்” என்பார்.
நாளை இந்தியாவின் ஃபீல்ட் செட் அப் அப்படி இருக்க வேண்டும். ஏனெனில், இந்திய ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் மனநிலையில் ஆடும்போதுதான் எதிரணிகள் விக்கெட்டுகளை இழக்கும். எளிதாக ரன் வந்துகொண்டிருந்தால், அதற்கான தேவை ஏற்படாது. விக்கெட்டுகள் விழாது!

ஃபீல்டிங்கோடு சேர்த்து, பௌலிங் கொடுப்பதிலும் ஹர்மன் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரும்பாலான போட்டிகளில் தீப்தி அல்லது ஷிகா இருவரில் ஒருவருக்கு பவர்ப்ளேவின்போதே 3 ஓவர்கள் கொடுத்துவிடுகிறார் ஹர்மன். ஆஸ்திரேலிய அணி வலது - இடது காம்பினேஷனை இன்னிங்ஸ் முழுக்க தொடர்ந்துகொண்டிருக்கும். அது பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், கட்டாயம் ஒரு உளவியல் பலத்தைக் கொடுக்கும். அதேசமயம் இந்திய அணியில் இருப்பது மொத்தமே 5 பௌலர்கள்தான். அதில் ஒரு லெக் ஸ்பின்னர், இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் என எல்லாமே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு உகந்தவர்கள். அதனால் ஆஃப் ஸ்பின்னர் தீப்தியை முன்பே பயன்படுத்திவிடாமல், ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்துவது, இந்தியாவுக்கும் உளவியில் ரீதியாக கொஞ்சம் சாதகமாக அமையும். அனைவரும் ஸ்பின்னர் என்பதால், ஒரே வேகப்பந்துவீச்சாளரான ஷிகாவையும் முன்பே பயன்படுத்தி முடிக்காமல் இருப்பது நல்லது.
இப்படி எல்லோருமே பர்ஃபெக்டாக ஆடவேண்டுமா எனக் கேட்டால், நிச்சயமாக `ஆம்’ என்பதுதான் பதில். ஏனெனில், வெறுமனே நாம் இறுதிப்போட்டியில் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவில்லை. ஒரு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனை… 5 முறை சாம்பியனை, அவர்களது சொந்த மண்ணிலேயே சந்திக்கிறோம். நிச்சயம் 11 பேரும் தங்களின் அதிகபட்ச உழைப்பைக் கொட்ட வேண்டும். அப்போதுதான் வுமன் இன் புளூ முதல் உலகக் கோப்பையை முத்தமிடும்.