Published:Updated:

`கிரிக்கெட் பொறுமையாக ஆடலாம்; வாழ்க்கையைவிட எதுவும் பெரியதல்ல!’ - கபில் தேவ்

கபில் தேவ்
கபில் தேவ்

கிரிக்கெட்டைவிட வீரர்களின் உயிர்தான் முக்கியம். இன்னும் 6 மாத காலத்துக்கு கிரிக்கெட் பற்றி யோசிக்க வேண்டும் எனக் கபில் தேவ் கூறியுள்ளார்.

கொரோனா தொடர்பான அச்சம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்க மாதங்கள் கொரோனாவுடன் கழிந்துகொண்டிருக்கின்றன. கொரோனா நோய்த் தொற்று ஒருபுறம் என்றால் ஊரடங்கு உத்தரவு மக்களை வீட்டுக்குள் முடக்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் கடந்த சில தினங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மூடிய அரங்கத்தில் பார்வையாளர்கள் இன்றி இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நடத்த வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் நிதியை இருநாடுகளும் சமமாகப் பிரித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.

அக்தர்
அக்தர்

கிரிக்கெட்டைவிட வீரர்களின் உயிர்தான் முக்கியம். வீரர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது. நம்மிடம் போதுமான நிதி இருக்கிறது. போட்டியை நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை எனக் கபில் தேவ் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கபில்தேவ், ``கருத்து சொல்வதற்கு அவருக்கு உரிமையுள்ளது. நிதி திரட்ட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. நம்மிடம் போதுமான நிதி இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அரசுடன் இணைந்து செயல்படுவதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் குறைசொல்லும் போட்டியைத்தான் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிசிசிஐ 51 கோடி நிதியளித்துள்ளது. தேவைப்பட்டால் இன்னும்கூட நிதியை வழங்கும்.

மூன்று போட்டிகளை நடத்துவதினால் உங்களால் எவ்வளவு நிதியைத் திரட்ட முடியும். உடனடியாக இந்த நிலை சீராகும் எனச் சொல்ல முடியாது. இதுபோன்ற நேரத்தில் வீரர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது. என்னைக் கேட்டால் இன்னும் 5 அல்லது 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது நல்லது.

பிசிசிஐ
பிசிசிஐ

எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு கிரிக்கெட் ஆடலாம். நாட்டைவிட இங்கு விளையாட்டு ஒன்றும் பெரியதல்ல. இந்தப் போரில் முன்னின்று பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஏழை மக்களை கவனிப்பதே முக்கியப் பிரச்னையாகும்.

நாம் மனிதாபிமானத்தோடு மற்ற நாடுகளுக்கு உதவுவதையும் பெருமையாக நினைக்கிறேன். மற்றவர்களுக்கு உதவுவது என்பது நம் கலாசாரத்திலே இருக்கிறது. அதுகுறித்து நாம் பெருமைக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவிய பிறகும் நாம் கடன்பெறக்கூடாது. மற்றவர்களிடம் இருந்து பெறுவதைவிட மேலும் மேலும் கொடுக்கும் தேசமாக நாம் மாற வேண்டும்” என்றார்.

கபில் தேவ்
கபில் தேவ்

ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ் `நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனுடன் ஒப்பிடும்போது நாம் இன்று நிறைய சலுகைகளை அனுபவித்து வருகிறோம். நாம் சிறிது நேரம் நம்முடைய வீட்டில்தான் செல்வழிக்கிறோம். இந்த நேரத்தில் வாழ்க்கையை விட எதுவும் பெரியது எதுவுமில்லை. நாம் அதைத்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு