சச்சின் மகன் vs ஆட்டோ ஓட்டுநரின் மகன்... ஒப்பீடும், உண்மையும்!

நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறதா?
கடந்த இரண்டு வாரங்களாக சச்சின்தான் தலைப்பு செய்தி. ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு எதிர்வினை எத்தனையோ பேர் ஆற்றியிருந்தாலும், அடி பலம் என்னவோ சச்சினுக்குத்தான். ரன் அடிக்கும் பேட்ஸ்மேன்தான் பவுன்சரையும் சமாளிக்க வேண்டும் என்பதுபோல், அதை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஓர் அபத்தமான ஒப்பீட்டையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து சச்சினை அசிங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதுதான் யோசிக்கவைக்கிறது. சச்சின் மகன் அர்ஜுன் வெர்சஸ் ஆட்டோ ஓட்டுநர் மகன் என பரந்து விரிந்து விஸ்வரூபம் எடுத்த அந்த மீம் மீண்டும் வைரலாகியிருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று சற்று விரிவாகவே பார்ப்போம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்...
15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப் பட்டியலில் பிரனவின் பெயர் இல்லை. அப்போது வைரலான மீம்தான் தற்போது மீண்டும் வைரலாகியிருக்கிறது.

"மேற்கு மண்டல அணியில் விளையாட, மும்பை அணிக்கு விளையாடி இருத்தல் அவசியம். பிரனவின் 1000 ரன்கள் சாதனையின் முன்பே, மும்பை அணிக்கான விளையாட்டு வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். சில போட்டிகளையும் மும்பை ஆடிவிட்டது. அதனால் தான் பிரனவால், மேற்கு மண்டல அணிக்கு ஆட முடியவில்லை. வீண் வதந்திகளைக் கிளப்ப வேண்டாம்." இது அப்போது பிரனவின் தந்தை கொடுத்த விளக்கம். அதையும் தாண்டி, பிரனவ் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். மீம் வடிவமைப்பாளர்கள் இதையேனும் கவனத்தில் கொண்டு இது போன்று ஒப்பீடுகளைக் கிளப்பலாம்.
எமோஷனல் வீக்னெஸ்
நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறது. தமிழக தடகள வீரர் கோமதி சிறப்பாக பங்காற்றினார் என்பதையெல்லாம் மீறி, அவரின் வறுமை நமக்கு ஒரு எமோஷனல் கதையை நம் முன் வைக்கிறது. இரண்டு கால்களிலும் வெவ்வேறு நிறங்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து அவர் விளையாடியதற்கும், காலணி வாங்க வழியில்லை என இன்னொரு கதை சொல்லப்பட்டது. உண்மையில் பல பிரபலங்கள் இப்படி வெவ்வேறு நிறங்களில் அணிந்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். சிறுவர்களுடனான போட்டியில் பிரனவ் 1000 ரன்கள் எடுத்தார் என்னும்போது அது வெறுமனே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே அவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னும் செய்தியும் உள் சேர்ந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகன் என தலைப்புச் செய்தியாகும் போதுதான், அது இன்னும் பெரிதாக பேசப்படுகிறது.
உண்மையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கான வாய்ப்புகளும் வசதிகளும், பிரனவுக்கு வாய்த்திருக்குமா என்னும் கேள்வி அவசியம்தான். ஆனால், அர்ஜுனுக்கு இதுவரையில் அப்படி என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். 21 வயதான அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த ஆண்டுதான் சயத் முஷ்டக் அலி போட்டிகளில் மும்பை சார்பாக விளையாட வாய்ப்பு வந்தது. அதில் விளையாடிய ஒரேயொரு போட்டியிலும், அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். சச்சினுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், சீனியர் வீரர்களிடம் ஆலோசனை பெறத்தான் முடிந்ததே தவிர, அர்ஜுனை அணியில் சேர்க்க முடியவில்லை. சச்சின் போன்ற தந்தைகளைவிட செல்வாக்கிலும், பண பலத்திலும் குறைவாக இருக்கும் தந்தையினரின் மகன்கள்தான் அடுத்தடுத்த தொடர்களில் தேர்வாகிவருகிறார்கள். ஆம், அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கும் விஜய் ஹசாரே போட்டிகளுக்கான மும்பை அணியில் அர்ஜுன் இல்லை.

பிரபலம், பண பலம் போன்றவற்றை வைத்து இங்கு வாய்ப்புக்கான முதல் கதவைத்தான் தட்ட முடியுமே தவிர, தொடர் வெற்றிகளுக்கு திறமை மிக மிக அவசியம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சினுக்கு இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளோ, அஜித் அகர்கருக்கு கிடைத்த வாய்ப்புகளோ, தற்போது ஒரு மும்பை வீரராக ரோஹித் ஷர்மாவுக்கு அவரின் ஆரம்ப காலங்களில் கிடைத்த வாய்ப்புகளோக்கூட அர்ஜுனுக்கு இன்னும் அமையவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும், சச்சினின் மகன் என்கிற நோய் அவரை துரத்திக்கொண்டே இருக்கிறது. 90 ரன்களைக் கடந்தால் சச்சினுக்கு வரும் மன அழுத்தத்தைவிட, சச்சின் மகன் என்கிற மன அழுத்தம் அதிகமானது.
அடுத்து நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் பெயர் இருக்கிறது என்பதால், மீண்டும் சச்சின் விமர்சிக்கப்படுகிறார். அர்ஜுன் அவர் பெயரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வம் தெரிவித்து ரெஜிஸ்டர் செய்திருக்கிறார். அதுவும் அவரின் ஆரம்ப விலையாக அவர் நிர்ணயம் செய்திருப்பது 20 லட்சம் ரூபாய். அப்படியே அவரின் அப்பாவுக்காக வரும் கூட்டம், அர்ஜுனைப் பார்க்க வரும் என ஒரு அணி செலவு செய்து அர்ஜுனை எடுத்தாலும், அர்ஜுன் அந்தக் குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பிரனவின் கதை

பிரனவ் 1009 ரன்கள் அடித்தார் என்பதற்குப் பின்னர், அவர் மீதான அழுத்தம் இன்னும் அதிகரித்தது. மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்தது. பிரனவின் அந்தச் சாதனை பாடப்புத்தகத்தில் வந்தது. அந்தப் போட்டி தந்த கூடுதல் அழுத்தம் காரணமாக, அதன்பின்னர் அவர் பெரிதாக எதுவும் அடிக்கவில்லை. மும்பை சங்கம் கொடுத்த ஊக்கத்தொகையையும், பிரனவின் தந்தை திருப்பிக்கொடுத்துவிட்டார். இதெல்லாம் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கல்லூரி போட்டி ஒன்றில், 200 ரன்கள் அடித்தார் பிரனவ். ஆனாலும், அவரால் மும்பைக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இடம்பிடிக்க முடியவில்லை. இன்னமும், பிரனவ் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். அதற்குள், பிரனவ் கிரிக்கெட்டை விட்டு விலகிவிட்டார் என்கிறார்கள்.
கிரிக்கெட் என்பது காலம் காலமாக பெரு நகரத்தில் வாழும் மக்களின் விளையாட்டாகத்தான் இருந்திருக்கிறது. வாய்ப்புகளும், வசதிகளும் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. ஆரம்ப கால பயிற்சிகளுக்கு செல்லும் போது ஆசிஷ் நெஹ்ராவிடம் ஒரு வாகனம் கூட கிடையாது. முனாஃப் வீட்டிலும் ஏழ்மைதான். உமேஷ் யாதவ் உட்பட! ஆனால், அவர்களின் தொடர் திறமையால் தான் பிசிசிஐயின் இந்திய அணியில் அவர்களால் இடம் பெற முடிந்தது. இவர்கள் அனைவரின் வாழ்க்கை முறையும் கிரிக்கெட்டுக்குப் பின்னர்தான் மாறியது. அவ்வளவு ஏன், தமிழக வீரர் நடராஜன் அவரது திறமையால்தான் பஞ்சாப் அணிக்காக கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டார்.

தந்தை ஒரு விளையாட்டில் ஜாம்பவான் என்பதாலேயே மகனும் அதே விளையாட்டில் அதைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் அவசியமில்லை. இல்லை அர்ஜுன் எல்லா பயிற்சிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க வகையில் சாதனைகள் செய்தால், இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கிடைக்கலாம். அர்ஜுன் டெண்டுல்கர்களும், 1000 ரன்கள் கடந்த பிரனவ்களுமே, இந்த சமூகத்தின் விக்டிம்கள்தான். சிறுவயதில் அவர்கள் மேல் வைக்கப்படும் பெரிய அளவிலான அழுத்தமே, அவர்களை மூழ்கடித்துவிடுகிறது.
சச்சின் தற்போது விவசாயிகளின் பிரச்னையில் ட்விட் செய்தததற்கு அவர் மீது விமர்சனம் வைப்பதற்கு அனைவருக்குமே உரிமை உண்டு. ஆனால், அதற்காக ஏற்கெனவே சாதிக்கப் போராடிக்கொண்டிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்களிடம் நாம் நம் வீரத்தைக் காட்டுவதில் அறம் இல்லை!