Election bannerElection banner
Published:Updated:

வாவ் வாஷிங்டன்... பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்தும் சென்னை இளைஞனின் பின்னணி என்ன?!

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

''வாஷிங்டனால் அவனுடைய முதல் ஓவர்சீஸ் போட்டிக்கு செல்லமுடியவில்லை. சென்னை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டோம். அந்த நேரத்திலும் களத்தில் இறங்கி, அந்தப் பகுதியிலிருந்த மக்களுக்கு தன்னிடமிருந்த காசைக் கொண்டு உணவு வாங்கிக்கொடுத்து உதவிகள் செய்தவன் என் மகன்''

2015, நவம்பர் மாதம்... சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இந்திய அண்டர் 19 அணியில் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி நடைபெற இருக்கும் ஜூனியர் உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஒரு முன்னோட்டமாக இலங்கையில் நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டி தொடர் அது. சிறுவன் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் வெளிநாட்டுத்தொடர். குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடுகிறது. சந்தோஷத்தில் திளைக்கிறான் சிறுவன் வாஷிங்டன்.

டிசம்பரில் தொடங்க இருக்கும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகிறான். ஆனால், டிசம்பர் 1-ம் தேதியன்று ஆரம்பித்த சென்னை வெள்ளம், ஒட்டுமொத்த சென்னையையும் முடக்க, சிறுவனின் முதல் ஓவர்சீஸ் டூர் கனவு கலைகிறது. சென்னை விமானநிலையம் மூடப்பட்டதில் வாஷிங்டனால் இந்திய அணியினருடன் இலங்கைக்குச் செல்லமுடியவில்லை. கிட்டத்தட்ட பாதித்தொடர் முடிந்தப்பிறகுதான் இலங்கைப்போய்ச் சேர்ந்தார் வாஷிங்டன்.

''என் மகன் நல்ல விளையாட்டு வீரன் என்பதைவிட நல்ல மனிதன். அவனுடைய முதல் ஓவர்சீஸ் போட்டிக்கு அவனால் செல்லமுடியவில்லை. சென்னை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டோம். அந்த நேரத்திலும் களத்தில் இறங்கி, அந்தப் பகுதியிலிருந்து மக்களுக்கு தன்னிடமிருந்த காசைக் கொண்டு உணவு வாங்கிக்கொடுத்து உதவிகள் செய்தவன் என் மகன்'' என விகடன் வாஷிங்டனுக்கு வழங்கிய நம்பிக்கை விருதுவிழாவில் சொல்லி பெருமைப்பட்டார் அவரது தந்தை சுந்தர். தான் படிக்க, விளையாட பண உதவிகள் செய்த ராணுவ வீரர் வாஷிங்டனின் பெயரையே மகனுக்கு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறார் சுந்தர்.

தந்தையின் நிறைவேறாத கிரிக்கெட் கனவை எட்டிப்பிடித்த மகன் வாஷிங்டன். சிறுவயதில் இருந்தே இந்திய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்றே வளர்க்கப்பட்டு அதனை 18 வயதிலேயே செய்துகாட்டிய சாதனை சிறுவன்.

தந்தை சுந்தருடன் வாஷிங்டன்
தந்தை சுந்தருடன் வாஷிங்டன்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் எந்தப்பதற்றமும் இன்றி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் அடித்தார். இந்தியாவின் வெற்றிக்கு முதல் அடித்தளம் போட்ட அரைசதம் இதுதான். அதேப்போல் நேற்று நடந்துமுடிந்த சென்னை டெஸ்ட்டிலும் கோலி, ரோஹித் என சீனியர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தடுமாறி, முதல் இன்னிங்ஸில் கடைசிவரை களத்தில் நின்று 85 ரன்கள் சேர்த்தார் வாஷிங்டன்.

இந்தியாவின் எதிர்காலம் என இப்போது எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இந்த 21 வயது ஆல்ரவுண்டரைக் கொண்டாடுகிறார்கள்.

முன்பே சொன்னதுபோல் இது தந்தை கண்ட கனவு. தன்னால் ரஞ்சி அணியில்கூட இடம்பிடிக்கமுடியாமல் போன நிலைமை தன் மகன் வாஷிங்டனுக்கும் வந்துவிடக்கூடாது என 6 வயதுமுதல் தன்னுடைய பயிற்சிப் பள்ளியிலேயே கிரிக்கெட் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் சுந்தர். கவாஸ்கரும், டிராவிட்டும்தான் டெக்னிக்கலி ஸ்டிராங்கான பேட்ஸ்மேன்கள் என்பது சுந்தரின் எண்ணம். அதனால் சிறுவயதில் இருந்தே அவர்களின் வீடியோக்களை மகன் வாஷிங்டனுக்குப் போட்டுக்காட்டி பயிற்சி அளித்திருக்கிறார்.

பேட்டிங் திறமையை மட்டுமே வைத்திருந்தால் இந்திய அணிக்குள் இடம்கிடைப்பதில் சிரமம் வரலாம் என்பதால் மகனை பெளலராகவும் மாற்ற ஆரம்பித்தார் சுந்தர். '' எல்லா நேரமும் உன் மேல வெளிச்சம் இருக்கனும்" என ஒருகட்டத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் அளித்துள்ளார். கிரிக்கெட்டின் எல்லா ஏரியாவிலும் வாஷிங்டன் கில்லியாக இருக்கவேண்டும் என்பதுதான் தந்தையின் பெரிய ஆசை.

வாஷிங்டன்
வாஷிங்டன்

ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு, ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின் என எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு இறுதியில் ஆஃப் ஸ்பின்னில் செட்டில் ஆனார் வாஷிங்டன். 2014-ல் ஃபர்ஸ்ட் டிவிஷன் ஆடிய வாஷிங்டனின் பேட்டிங், பெளலிங் திறமைகள் எல்லோரையும் வியக்கவைக்க, 15 வயதிலேயே இந்திய அண்டர் 19 அணிக்குள் இடம் கிடைத்தது.

2016 அண்டர் 19 உலகக்கோப்பையிலும் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க 2017-ம் ஆண்டு ஐபிஎல் கதவுகள் திறந்தது. புனே அணிக்காக மிகச்சிறப்பான எக்கனாமிக்கல் பெளலராக பட்டைத்தீட்டப்பட்டார் வாஷிங்டன். தோனி- ஸ்மித் கேப்டனாக இருந்த அந்த சீசனின் குவாலிஃபையர் போட்டியில் மும்பைக்கு எதிராக 3 விக்கெட்கள் எடுத்து, மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்று புனே இறுதிப்போட்டியில் நுழையக்காரணமாக இருந்தவர் வாஷிங்டன்.

விக்கெட்களை வீழ்த்துவதைவிடவும் எக்கனாமிக்கலாகப் பந்துவீசுவதுதான் வாஷிங்டனின் பலம். அதனால்தான் கோலி இவரைப்பெரும்பாலும் பவர்ப்ளே ஓவர்களிலேயே பயன்படுத்துகிறார்.

இந்தியக் கனவு!

18 வயதிலேயே இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்பு வாஷிங்டனுக்கு கிடைத்துவிட்டது. அண்டர் 19 ஆடிய அதே இலங்கையில் முதல் சர்வதேசப்போட்டி. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார் வாஷிங்டன்.

வாஷிங்டன், அஷ்வின்
வாஷிங்டன், அஷ்வின்

பிரிஸ்பேன் டெஸ்ட் வாஷிங்டனுக்கு முதல் சர்வதேச டெஸ்ட். வார்னர், ஸ்மித், கிரீன் என முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தியவர், உலகின் மிகச்சிறந்த பெளலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், லயானின் பந்துகளை எதிர்கொண்டு மிகவும் இக்கட்டான நேரத்தில் 62 ரன்கள் குவித்தார்.

முதல் சென்னை டெஸ்ட்டிலும் வாஷிங்டனுக்கு விக்கெட்கள் கிடைத்திருக்கவேண்டியது. பன்ட், ரோஹித் என மாறிமாறி கேட்ச்களை டிராப் செய்தததில் விக்கெட்டே கிடைக்காமல் போனது. ஆனால், பேட்டிங்கில் 85 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் வாஷிங்டன். அதுவும் ஆண்டர்சன் பந்தில் நடந்து வந்து அடித்த சிக்ஸ் எல்லாம் வாவ்... வேற லெவல்!

இன்னும் பல வாவ்களை ஒளித்துவைத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்... வாவ் மொமன்ட்டுகள் தொடர வாழ்த்துகள் வாஷிங்டன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு