2018-ம் ஆண்டு ஆசியக்கோப்பை துபாயில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசிக் கொண்டிருந்த பாண்டியா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் முதுகில் ஏற்பட்ட காயத்தின் தன்மை அதிகமானதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு நடக்க முடியாமல் சில காலம் இருந்தார்.

5 மாதங்களுக்கு பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் 2020-ல் DY PATIL டி20 கோப்பையில் Reliance அணிக்காகக் களமிறங்கினார். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பௌலிங் செய்யாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே மும்பை அணிக்கு ஆடினார் பாண்டியா.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த பாண்டியா அங்கும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடினார். தன் சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணிக்கு வெற்றிகளையும் பெற்றுத்தந்தார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20ஐ தொடர்களில் பந்துவீசியதன் மூலம் 'அவரால் மீண்டும் பந்துவீச முடியுமா' என்ற கேள்விக்குப் பதில் தந்தார்.

ஆனால், அது நீண்டநாள் நீடிக்கவில்லை. 2021-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் பௌலிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே செய்தார் அவர். டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெற்றாலும் பந்துவீசுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரை ஃபினிஷர் பேட்ஸ்மேனாகவே ஆட வைப்போம் என்றது இந்திய அணி நிர்வாகம். ஆப்கன் அணியுடனான ஆட்டத்தில் மட்டும் இரண்டு ஓவர்களை வீசினார்.
அதன்பின் நடந்த தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் பாண்டியா இடம்பெறவில்லை. இந்நிலையில் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைந்த குஜராத் அணியின் கேப்டனாக பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

ஏலத்தில் குஜராத் அணியின் செயல்பாட்டை பார்த்த பலரும் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா பலரும் சந்தேகித்தனர். ஆனால், கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தியது குஜராத் அணி. 2022 ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேனாக நம்பர் 4-ல் பாண்டியா களமிறங்கியது யாரும் எதிர்பாராத ஒன்று. 15 போட்டிகளில் சேர்த்து அத்தொடரில் 480 ரன்களை அடித்தார் பாண்டியா.
பல நாள்களாக விவாதிக்கப்பட்ட அவரின் பௌலிங் குறித்த கேள்விக்கும் தன் பௌலிங் மூலமே பதில் சொன்ன பாண்டியா, ஓவருக்கு 7 ரன்கள் என்ற எக்கனாமியில் 30 ஓவர்கள் வீசியிருந்தார். அந்த ஐ.பி.எல் தொடர் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்தார். இடையே அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டனாகவும் செயல்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் அரைசதம் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் பண்ட் உடன் இணைந்து இந்திய அணி தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற போதும் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், கார்த்திக்கிடம் சிங்கிளை மறுத்துவிட்டு "பாத்துக்கலாம்" என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பாண்டியா.

ஒரு கட்டத்தில் பாண்டியாவின் கரியர் அவ்வளவுதான். இனி வெங்கடேஷ் ஐயர், தாக்கூர் போன்றோர்தான் அவரின் இடத்தை நிரப்ப உள்ளனர் என்று பேசப்பட்டது. ஆனால், கே.ஜி.எஃப் ஸ்டைலில் ‘One and Only Piece’ என்பது போல திரும்பிவந்து முன்பு இருந்ததைவிட தன் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்திவிட்டார்.
கேப்டன்சியின் மூலம் களத்தில் அமைதியாகவும், பதற்றமில்லாமலும் இருக்கும் குணத்தை பாண்டியா வளர்த்துக்கொண்டுள்ளார். அது மட்டுமன்றி நேற்றைய போட்டியில் பௌலர்களிடம் கலந்து பேசுவது என தன் தலைமை பண்பையும் களத்தில் அவ்வப்போது காட்டினார்.
முன்பு பாண்டியா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரின் துடிதுடிப்பும் ஆக்ரோஷமும்தான். அந்த ஆக்ரோஷம் இனி வெளிப்படையாக தெரியப்போவதில்லை. காரணம் இது பாண்டியா 2.0!