Published:Updated:

`பேட் வாங்க ஆளில்லை; ஐபிஎல்லும் இங்கே இல்லை!'- சச்சின், கோலிக்கு `பேட்' தயார் செய்தவரின் பரிதாப நிலை

'பேட்'டுடன் அஷ்ரப் சவுத்ரி
'பேட்'டுடன் அஷ்ரப் சவுத்ரி ( Twitter )

70களிலிருந்து பேட் தயாரித்து வரும் அஷ்ரப், சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை, ஸ்டீவ் ஸ்மித் முதல் டு ப்ளிசிஸ் வரை பல முன்னணி வீரர்களுக்குப் பேட் தயார் செய்துள்ளார்.

கிரிக்கெட்டில் பல முன்னணி வீரர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அவர்களின் 'பேட்' (கிரிக்கெட் மட்டை) இருக்கும். சச்சினின் ஆரம்பக்கால புகழிலிருந்து அவர் 'பேட்'டை வழங்கிய 'எம்ஆர்எஃப்' என்ற பெயரைப் பிரிக்க முடியாது. அத்தகைய பேட்களின் சிறப்புகளில் அதனைப் பராமரிக்கும் நபர்களின் கைவண்ணமும் இருக்கும். பேட் உற்பத்தியில் பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், அதனைக் கச்சிதமாகப் பராமரிப்பதிலும் மாற்றங்கள் செய்வதிலும் இன்னமும் பழங்காலத் தொழில் வல்லுநர்கள் செயல்படுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அஷ்ரப் சவுத்ரி.

சச்சின் -விராட் கோலி
சச்சின் -விராட் கோலி
Cricket.com.au

மும்பை வான்கடே மைதானம் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய சிறப்புகளைப் பெற்றது. 2011ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை வென்றபோது, இறுதியாட்டம் இங்குதான் நடந்தது. அப்படிப்பட்ட வான்கடே மைதானத்தின் மற்றொரு அடையாளம் அஷ்ரப் சவுத்ரி. மும்பை மெட்ரோ சினிமாவிற்கு அருகில் சொந்தமாகக் கடை வைத்திருக்கும் அஷ்ரப், பேட்களைச் சீரமைப்பதில் கைதேர்ந்தவர். சேதமான பேட்களைக் கச்சிதமாக வடிவமைப்பது, வீரர்களின் விருப்பத்திற்கேற்ப பேட்டின் எடையைக் குறைப்பது, கைப்பிடியை லாகவப்படுத்துவது என்று சகல பணிகளையும் மேற்கொண்டார். 70களிலிருந்து இதனைச் செய்து வரும் அஷ்ரப், சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை, ஸ்டீவ் ஸ்மித் முதல் டு ப்ளிசிஸ் வரை பல முன்னணி வீரர்களுக்கு பேட் தயார் செய்துள்ளார்.

பல வீரர்களுக்கு உதவும் வகையில் இலவசமாகவும் பணி செய்திருக்கிறார் அஷ்ரப். 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் கடும் நெருக்கடியில் தவித்தது. இதனை அறிந்த அஷ்ரப், மேற்கிந்தியத் தீவு அணிக்கு 16 பேட்களை இலவசமாக வழங்கினார். எல்லோரையும் போல் அஷ்ரப்பின் வாழ்க்கையையும் கொரோனா காலம் புரட்டி போட்டது. 1920லிருந்து செயல்பட்டு வந்த அவரது கடை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தன் சகோதரரையும் பறிகொடுத்தார். கிட்னியில் கல் மற்றும் வயது முதிர்வின் தளர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

IPL
IPL
ரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா?! அண்டர் ஆர்ம்ஸ் - 14

ஊரடங்கில் கிரிக்கெட் முடங்கிப்போயுள்ளதால் அஷ்ரப்பிடம் பணம் இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு கஷ்டப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அஷ்ரப்பின் நெருங்கிய நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி கூறும்போது, "அவரது நிலைமை சரியில்லை. இரண்டு லட்சம் வரை எங்களால் தயார் செய்ய முடிந்தது. உணவு, மருந்து என்று அடிப்படைத் தேவைகளுக்கு எங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. யாரும் இந்த நாள்களில் பேட் வாங்குவதில்லை. ஐபிஎல்லும் வெளிநாட்டில் நடக்கவுள்ளதால் அஷ்ரப்பிற்கு சுத்தமாக வேலையில்லை. இதில் சோகம் என்னவென்றால், பல வீரர்கள் இன்னும் அவருக்குப் பணம் தர வேண்டியுள்ளது. இந்தத் தேதி வரை அதனை அஷ்ரப் கேட்டதில்லை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு