Published:Updated:

Virat Kohli: வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான பஞ்சமல்ல; ஆக்ரோஷத்திற்கான பஞ்சம்!

Virat Kohli

இவை எல்லாவற்றிக்கும் மைய புள்ளியாக இத்தனை ஆண்டுகள் திகழ்ந்த தன் கட்டுக்கடங்கா உணர்வுகளை எதிர்க்கும் பணிந்திடாமல் வெளிப்படுத்தும் ஒரு ஆக்ரோஷம் மிகுந்த தலைவக்கான வெற்றிடம் என்பது நிச்சயம் இருக்கும்

Published:Updated:

Virat Kohli: வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான பஞ்சமல்ல; ஆக்ரோஷத்திற்கான பஞ்சம்!

இவை எல்லாவற்றிக்கும் மைய புள்ளியாக இத்தனை ஆண்டுகள் திகழ்ந்த தன் கட்டுக்கடங்கா உணர்வுகளை எதிர்க்கும் பணிந்திடாமல் வெளிப்படுத்தும் ஒரு ஆக்ரோஷம் மிகுந்த தலைவக்கான வெற்றிடம் என்பது நிச்சயம் இருக்கும்

Virat Kohli

விராட் கோலி. இந்த ஒற்றை வீரனைத் தவிர்த்து விட்டு இந்திய கிரிக்கெட்டின் கடந்த தசாப்த வரலாற்றின் ஒற்றை பக்கத்தைக்கூட கடந்துவிட முடியாது. ஒரு வீரனாக அணிக்கான அவரின் பங்களிப்பு இனியும் இருக்கும் என்றாலும் அணியின் தலைவனாக அவரின் இடத்தில் ஒரு பெரிய வெற்றிடமே ஏற்பட்டுள்ளது. ஆம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் இனி முன்பு போல இருக்குமா என்பது சந்தேகமே. வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான பஞ்சம் அல்ல. அவை இந்திய அணிக்கு இனி என்றென்றும் வந்துக்கொண்டே தான் இருக்கப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் எதிரணியின் ஒவ்வொரு அசைவிற்கும் உடனடி பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் இனி தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது. ஆனால் இவை எல்லாவற்றிக்கும் மைய புள்ளியாக இத்தனை ஆண்டுகள் திகழ்ந்த தன் கட்டுக்கடங்கா உணர்வுகளை யாருக்கும் பணிந்திடாமல் வெளிப்படுத்தும் ஒரு ஆக்ரோஷம் மிகுந்த தலைவனுக்கான வெற்றிடம் என்பது நிச்சயம் இருக்கும்.

Virat Kohli
Virat Kohli

கோப்பைகள் மட்டுமே இக்காலத்தில் தலைமைப் பண்பினை மதிப்பிடும் அளவுகோல். அதே அளவுகோலினை கோலியின் இடத்திலும் வைத்து பார்த்தால் அவரது இத்தனை ஆண்டு பங்களிப்பு அத்தனை பெரிதாகத் தெரிந்துவிடாது. அதிலும் லிமிட்டட் ஓவர் ஃபார்மட்களை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிகள் அனைத்தும் மகத்தானவையே. இவை அனைத்தும் வெறும் வெற்று வார்த்தைகளாக மட்டுமல்லாமல் அவரின் எண்களே அதற்கான சாட்சியாய் நின்று எக்காலத்திற்கும் பேசும்.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனியின் திடீர் ஓய்வினால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனானார் கோலி. அன்றிலிருந்து நேற்று முன்தினம் கேப்டன் பதவியிலிருந்து மீண்டும் இறங்கியது வரை சுமார் 68 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார் கோலி. இந்திய அணியை 60-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிளில் தலைமை தாங்கிய கேப்டன்கள் இருவர் மட்டுமே- தோனி மற்றும் கோலி. அதில் 40 வெற்றிகள், 17 தோல்விகள், 11 டிராக்கள் அடங்கும். இந்திய டெஸ்ட் அணியை இதுவரை தலைமை தாங்கியவர்களுள் அதிகபட்ச வெற்றி சதவிகிதத்தை வைத்துள்ளார் கோலி 58.82% ( குறைந்தபட்சம் 10 போட்டிகள்).

Virat Kohli
Virat Kohli

தென்னாப்பிரிக்க தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. ஆனால் தென்னப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கெதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட வெற்றிகளை பெற்ற ஒரே இந்திய கேப்டன் கோலி. ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவில் நடந்த போட்டிகளையும் சேர்த்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒட்டு மொத்தமாக எட்டு வெற்றிகளை பெற்றுள்ளார் கோலி. இப்பட்டியலில் ரிக்கி பாண்டிங்குடன் முதல் இடத்தை பகிர்ந்துகொள்கிறார். சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டன்களின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார் கோலி (40 வெற்றிகள்). கிரேம் ஸ்மித் (53), பாண்டிங் (48), ஸ்டீவ் வாக் (41) ஆகியோர் கோலிக்கு முன் இருப்பவர்கள்.

தான் கேப்டனாக இருந்த காலத்தில் தன் தனிப்பட்ட பேட்டிங் எண்களையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார் கோலி. டெஸ்ட் கேப்டனாக மட்டும் அவர் அடுத்துள்ள ரன்கள் 5,864 ( சராசரி 54.80). இப்பட்டியலில் இவருக்கு முன்னிருப்பவர்கள் கிரேம் ஸ்மித்(8,659), ஆலன் பார்டர் ( 6,623), ரிக்கி பாண்டிங் (6,542). இதில் SENA நாடுகளில் மட்டும் 2,162 ரன்கள். மேலும் SENA நாடுகளில் 2000 ரன்களை கடந்த ஒரே இந்திய கேப்டன் கோலி. இந்திய அணியை தலைமை தாங்கி அதிக ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் விளாசியதும் இவரே ( 254*).

Virat Kohli
Virat Kohli

கேப்டனாக மட்டும் சுமார் 20 சதங்களை விளாசியுள்ளார். இதிலும் இவருக்கு முன்னிருப்பவர் கிரேம் ஸ்மித் தான் (25). ஆனால் இரட்டை சதங்களை அதிகம் அடித்தவர்களில் கோலிக்கே முதலிடம் ( 7 இரட்டை சதங்கள் ). இரண்டாம் இடத்தில இருப்பவர் பிரையன் லாரா (5). ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாக 21 சதங்களுடன் 5,449 ரன்களும் ( 70 போட்டிகள், சராசரி- 72.65), டி20 கேப்டனாக 1,570 ரன்களும் குவித்துள்ளார் கோலி. ஒருநாள் ஆட்டங்களில் இலக்குகளை சேஸ் செய்யும் போது மட்டும் அவரின் சராசரி 115.90 ரன்கள்.

அனைத்து ஃபார்மர்ட்களிலும் சேர்த்து கோலி கேப்டன் செய்துள்ள போட்டிகளின் எண்ணிக்கை 213. அதில் அவரை அடுத்துள்ள ரன்கள் 12,883 (சராசரி 59.92). இந்த பட்டியலிலும் இவருக்கு முன்னே இருப்பவர்கள் பாண்டிங் (15,440) மற்றும் ஸ்மித் (14,878). கோலி கடைசியாக சதம் அடுத்து சுமார் 2 வருட காலம் ஆனாலும் அதற்கு முன்னர் தான் கேப்டனாக மட்டும் அவர் அடித்த சதங்கள் 41.

இனி கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்படப்போவதில்லை. அதனால் இத்தனை வருடம் அவர் அனுபவித்து வந்த வேலைப்பளு அவருக்கு இனி நிச்சயம் இல்லை. எனவே தன் பேட்டிங்கிற்கான நேரம் இனி அவருக்கு நிச்சயம் கிடைக்கும். கோலியின் 71-வது சதத்திற்காக 2019-ம் ஆண்டிலிருந்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அந்நிகழ்வு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் கூட நிகழலாம்.