Published:Updated:

ஆறு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய சைனி... ஒரு டபுளில் பாடமெடுத்த கோலி..! #NZvIND

Kohli ( AP )

6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, நியூஸிலாந்து அணியின் வீரர்கள் எல்லோரும் ஸ்லாக் ஷாட் ஆடி, அணிக்கு வெற்றியைத் தேடித் தர நினைத்தார்களே தவிர, சிங்கிள்கள் மூலமாகவே வெற்றியை வசப்படுத்தலாம் என்கிற கோலியின் சிந்தனை நியூஸிலாந்து வீரர்கள் ஒருவருக்கும் வரவில்லை.

Published:Updated:

ஆறு பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய சைனி... ஒரு டபுளில் பாடமெடுத்த கோலி..! #NZvIND

6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, நியூஸிலாந்து அணியின் வீரர்கள் எல்லோரும் ஸ்லாக் ஷாட் ஆடி, அணிக்கு வெற்றியைத் தேடித் தர நினைத்தார்களே தவிர, சிங்கிள்கள் மூலமாகவே வெற்றியை வசப்படுத்தலாம் என்கிற கோலியின் சிந்தனை நியூஸிலாந்து வீரர்கள் ஒருவருக்கும் வரவில்லை.

Kohli ( AP )

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர், மீண்டும் இந்தியா வெற்றி, மீண்டும் நியூஸிலாந்து அணி சொதப்பல். இப்படி நிறைய `மீண்டும்'களை அடுக்கிக்கொண்டே போகலாம். ``அதே டெய்லர்... அதே வாடகை” என்பது போல், கடந்த போட்டியைப் போலவே நேற்றைய போட்டியும் அமைந்தது. மனீஷ் பாண்டேவின் அற்புதமான ஆட்டம், விராட் கோலியின் மாசான ரன் அவுட், ஷர்துல் தாக்கூரின் கடைசி ஓவர் எனப் பல ஹைலைட்ஸோடும், சூப்பர் ஓவர் த்ரில்லோடும் அமைந்தது நேற்றைய ஆட்டம். முந்தைய மேட்சைப் போலவே எளிதாக வெல்லக்கூடிய போட்டியை மிகவும் சொதப்பித் தோல்வியடைந்தது, ப்ளாக் கேப்ஸ்.

மனிஷ் பாண்டே அசத்தல்

தொடரை ஏற்கெனவே வென்றுவிட்ட நிலையில், எதிர்பார்த்தது போலவே இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ரோஹித், ஜடேஜா, ஷமி ஆகிய மூவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சாம்சனுக்கு ஓப்பனராகக் களமிறங்கும் மிகப் பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இலங்கை அணியுடன் பூனேயில் நடந்த போட்டியைப் போலவே, ஒரு சிக்ஸர் அடித்ததும் மீண்டும் அடித்து ஆட முற்பட்டு கேட்ச் ஆனார் சாம்சன். கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட்டாக, ஒரு கட்டத்தில் 140 ரன்கள் வருவதே சந்தேகமாக இருந்தது. இருந்தும் மனீஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டத்தால் (50 ரன்கள் 36 பந்துகள்) இந்திய அணி, 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. 166 என்கிற கொஞ்சம் எளிதான ஸ்கோரை சேஸ் செய்யத் தொடங்கிய நியூஸிலாந்துக்கு மன்றோ சிறப்பான தொடக்கம் தந்தார். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, 19-வது ஓவர் வரை ஆட்டம் நியூஸிலாந்து வசமே இருந்தது.

Manish Pandey
Manish Pandey
AP

சைனியின் 19-வது ஓவர்

இதற்கு முந்தைய போட்டியில், முகமது ஷமி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்ததைப் போல், இம்முறை கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஷர்துல் தாக்கூர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும், நியூஸிலாந்து அணிக்கு கைவசம் 7 விக்கெட்டுகளும் இருக்கிறது என்ற நிலையில், எந்த ஒரு பெளலருக்கும் ரன்களை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்தான். அதை ஷர்துல் தாக்கூர் மிகச் சாதுர்யமாகச் செய்துகாட்டினார். ஆனால், கடைசி ஓவரிலும் ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பலாம் என இந்திய அணி வீரர்களுக்கும், முக்கியமாக ஷர்துல் தாக்கூருக்கும் நம்பிக்கை வர வைத்தது, நவ்தீப் சைனி போட்ட 19-வது ஓவர்தான்.

``கடைசி ஓவரில் சிறிய ரன்களைத் தக்கவைக்க வேண்டுமானால், முதல் பந்தில் விக்கெட் எடுப்பது மிகவும் அவசியம். அதுதான் எதிரணிக்கு நெருக்கடியை உண்டாக்கும்” இது, ஷர்துள் தாக்கூர் மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியபோது சொன்ன வார்த்தைகள். அவர் கூறியதுபோலவே முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், அந்த விக்கெட்டிற்கு முக்கிய சொந்தக்காரர் சைனி. 0 2 0 0 1 1. இது சைனி போட்ட 19-வது ஓவர். 12 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில், மிக அற்புதமாகப் பந்துவீசி வெறும் நான்கே ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் இன்னும் இரண்டு ரன்கள் அதிகமாகக் கொடுத்திருந்தாலும் ஆட்டம் மாறியிருக்கலாம்.

Navdeep Saini
Navdeep Saini
AP

6 பந்துகளில் 7 ரன்கள் அடிப்பதற்கும், 6 பந்துகளில் 5 ரன்கள் அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லாததுபோல் தெரிந்தாலும், பேட்ஸ்மேனின் சிந்தனையில் 6 பந்துகளில் 7 ரன்கள் என்பது பந்தைவிட ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். 19-வது ஓவரில், ஒரு இரண்டு ரன்கள் அதிகமாக எடுத்திருந்தாலும், ராஸ் டெய்லர் தாக்கூரின் முதல் பந்தைத் தூக்கி அடிக்க முற்பட்டிருக்க மாட்டார். முந்தைய மேட்சை கருத்தில்கொண்டு, அவர் சிங்கிளோ அல்லது டபுளோ எடுக்க முயற்சி செய்திருக்கலாம். தாக்கூரின் முதல் பந்தில், அவர் எதிர்ப்பார்த்தது போலவே விக்கெட் கிடைத்தது. தாக்கூருக்கும் ஓவரைத் தக்கவைக்க முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்திருந்தார், சைனி. ஆதலால், தாக்கூரின் 20-வது ஓவர் எப்படி சிறந்ததோ அதே அளவு, அதைவிட முக்கியமாகக் கருதப்பட வேண்டியது சைனியின் 19-வது ஓவர்.

சிங்கிள்களை மறந்த நியூஸிலாந்து

இந்தப் போட்டியின்மூலம் நியூஸிலாந்து வீரர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமானதை ஒரே ஒரு டபுளில் கோலி சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிபெற 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலை. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டிம் சவுத்தீ போட்ட பந்தை ஸ்லாக் செய்ய முற்படாமல், நாசுக்காக லாங் ஆன் திசையில் (அந்த திசைதான் மைதானத்தின் மிகவும் பெரிய திசை) அடித்தார். சாஃப்ட் ஹேண்டிலில் ஆடி இரண்டு ரன்கள் அசால்ட்டாக எடுக்கிறார். பவுண்டரி லைனுக்கு மிக அருகில் இருக்கும் லாங் ஆண் ஃபீல்டரும் ஓடி வருவதற்குள் இரண்டு ரன்கள் ஓடிவிடலாம் என்ற எண்ணத்தில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் அந்த ஷாட்டை ஆடினார். தான் ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் என்பதை அப்போது நிரூபித்து, பெளலரின் மீது நெருக்கடியைச் செலுத்தினார். இதே நிலைமையில் நியூஸிலாந்து வீரர்கள் என்ன செய்தார்கள்..?

NZvIND
NZvIND
AP

6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, நியூஸிலாந்து அணியின் வீரர்கள் எல்லோரும் ஸ்லாக் ஷாட் ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தர நினைத்தார்களே தவிர, சிங்கிள்கள் மூலமாகவே வெற்றியை வசப்படுத்தலாம் என்கிற கோலியின் சிந்தனை நியூஸிலாந்து வீரர்கள் ஒருவருக்கும் வரவில்லை என்பதே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். முதல் பந்தை ராஸ் டெய்லர் தூக்கி அடிக்க, கேட்ச்! 2 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்றிருந்தபோது, 30 யார்ட் சர்க்கிலில் உள்ளே நான்கு ஃபீல்டர்கள் மட்டுமே வைத்திருந்தார் விராட் கோலி. இருந்தபோதிலும் ஸ்லாக் ஷாட் ஆடவே முற்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார், மிட்செல். இப்படி சிக்ஸர் அடிக்க முற்பட்டே தோல்வியின் பிடியில் சிக்கியது நியூஸிலாந்து. விளைவு, இந்தப் போட்டியிலும் தோல்வி!

இந்நேரம் 2-2 டை ஆகி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியே சீரீஸ் வின்னரை முடிவுசெய்யும் போட்டியாக அமைந்திருக்க வேண்டிய தொடர், 4-0 என சப்பென முடிந்த கதையாகி இருக்கிறது. சோக்கர்ஸ் என்கிற பட்டத்தை தென்னாப்பிரிக்காவிடமிருந்து நியூஸிலாந்து வாங்கிக்கொள்ளலாம் போல!