இது என்னுடைய வழக்கமான ஆட்டம் கிடையாது!ரோஹித் ஷர்மா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தபின் இப்படிச் சொன்னார் ரோஹித். உண்மைதான். உண்மையிலேயே இந்த 12 ஆண்டுகளில் அவரிடம் பார்த்திடாத ஆட்டம் அது. அதுவரை அவ்வளவு நிதானமான ஆட்டத்தை அவரிடம் கண்டதில்லை. பந்து ஷார்ட்டாக பிட்சானாலே புல் செய்ய உயரும் அவருடைய பேட், அன்று அடக்கியே வாசித்தது.
தவான், கோலி சீக்கிரம் வெளியேறிவிட, அதுவரை ஆடிராத `ஆங்க்கர்' ரோலில் ஆடினார் ரோஹித். கடைசிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். மூன்று இரட்டைச் சதங்கள் அடித்திருந்தாலும், எத்தனையோ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தாலும் அதுதான் அவருடைய சிறந்த ஆட்டம் என்று தோன்றியது.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை சதம், 113 பந்துகளில் 140 ரன்கள் என்பதையெல்லாம்தாண்டி, அவரது அணுகுமுறை `இது முற்றிலும் வேறு ரோஹித்' என்பதை உணர்த்தியது. 2013-ம் ஆண்டு ரெகுலர் ஓப்பனராக ஆடத் தொடங்கிய பிறகு, இந்த ஆறு ஆண்டுக்காலம் பட்டையைக் கிளப்பிய அந்த ஹிட்மேன் இல்லை அது. இது முற்றிலும் மாறுபட்ட ரோஹித் ஷர்மா. போட்டியின் சூழல், அணியின் சூழல் என அனைத்தோடும் ஒப்பிட்டு, தன்னுடைய ஆட்ட அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்கிறார். அணியின் பொறுப்புகளை தன் பேட்டிங்கிலும் சுமக்கத் தொடங்கியிருக்கிறார். ரோஹித், மீண்டும் அப்கிரேட் ஆகியிருக்கிறார்.

தனக்கென எந்தப் பாணியும் இல்லாத ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த ரோஹித், ஓப்பனிங் இறங்கியதும் செய்த ஒரு விஷயம் தனக்கென சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டதுதான்.
ஆடுகளம் தனக்கு செட் ஆகும்வரை டெஸ்ட் போட்டி மோடில் ஆடுவது, அதன்பின் சதமடிக்கும்வரை ஒருநாள் ஃபார்மட்டில் ஆடுவது, அதைத் தாண்டியபிறகு டி-20 பேட்ஸ்மேனாக மாறுவது என்று புதிய ஃபார்மேட்டை உருவாக்கிவைத்திருந்தார். இந்த ஃபார்மேட்டில் பெரிதாக எதையும் அவர் மாற்றுவதில்லை. எப்போதும் மாற்றிக்கொண்டதும் இல்லை. அதிலும் குறிப்பாக, முதல் 10 - 15 ஓவர்கள் இப்படித்தான் ஆடவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
இவர் நிரந்தர ஓப்பனராக்கப்பட்ட தருணம், தவான் மறுமுனையில் இருந்தது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. தவானின் அதிரடி ஆட்டம், இவரது இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க மிகப்பெரிய உதவியாய் இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் நன்றாக `complement' செய்துகொண்டதனால்தான் சச்சின் - கங்குலி பார்ட்னர்ஷிப் போல் ஒரு வெற்றிகரமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. ஒருவேளை தவான் சீக்கிரம் வெளியேறினாலும், கோலி 80+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடிவிடுவார் என்பதால், ரோஹித்தால் அவருடைய ஆட்டத்தை சிக்கல் இல்லாமல் தொடர முடிந்தது.

தவான் அல்லது கோலியின் அணுகுமுறையை மையப்படுத்தியிருந்த அந்த ஆட்டம், சில சமயங்களில் அந்த வீரர்களுக்கே சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும். ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட், அதனால் குறையும் அணியின் ரன்ரேட் ஆகியவை சில போட்டிகளில் தவான் அல்லது கோலி மீது நெருக்கடியை ஏற்படுத்தும். பந்து நன்றாக ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் தவான் செட்டில் ஆகத் தடுமாறுவார். ஆனால், ரோஹித் ஷர்மாவின் ஆட்ட அணுகுமுறையால் அந்த இடத்தில் தவானாலும் செட்டில் ஆக நேரம் எடுத்துக்கொள்ள முடியாது. ரன்ரேட் அப்படியே படுத்துவிடும். ஒருவேளை ஒரு மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்யவேண்டுமெனில், தவான் அடித்து ஆடியே தீரவேண்டும். ஆக, ரோஹித்தின் ஆட்டத்தை ரோஹித் மட்டுமே ஆடவேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.
உதாரணமாக, 2016 நியூசிலாந்து ஒருநாள் தொடர். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு தவான் இல்லாமல், ரோஹித் ஓப்பனராக ஆடிய முதல் தொடர் இது. தவான் இடத்தில் ரஹானே. ஆனால், தவானைப் போல் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடக்கூடியவர் அல்ல ரஹானே. அவரும் ரோஹித்தைப்போல் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்க விரும்புபவர். ஒரே மாதிரியான அணுகுமுறை கொண்ட அந்த இருவராலும் ஒருவரையொருவர் complement செய்து ஆடமுடியவில்லை. இருவரும் தங்கள் அணுகுமுறையை பெரிதாக மாற்றிக்கொள்ளவும் இல்லை.

விளைவு, அந்தத் தொடரின் 5 போட்டிகளில் ஒருமுறைகூட இந்தத் தொடக்க ஜோடி 50 ரன்களைக் கடக்கவில்லை. ரோஹித் ஷர்மாவாலும் பெரிய ஸ்கோர் ஏதும் அடிக்கமுடியவில்லை. 5 போட்டிகளிலும் சேர்த்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி: 24.6! தவானிடம் கிடைத்த சுதந்திரம் ரஹானே ஆடும்போது ரோஹித்துக்குக் கிடைக்கவில்லை. காரணம், ரஹானே ஆடியது ரோஹித்தின் ஆட்டம். ஆம், ரோஹித் ஆடியதும் அதே ஆட்டம்தான்.
2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடர். அதிலும் ரஹானே - ரோஹித் ஜோடிதான். முதல் இரண்டு போட்டிகளிலும் பழையநிலையே தொடர்ந்தது. 20 ரன்களையே தாண்டவில்லை அந்த ஜோடி. மூன்றாவது போட்டி... 294 என்ற இலக்கை துரத்திய நிலையில், தன் பழைய ஆட்டத்தைக் கைவிட்டு தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினார் ரோஹித். கம்மின்ஸ் வீசிய ஐந்தாவது ஓவரில் சிக்ஸர் அடிக்கத் தொடங்கியவர், அந்த அணுகுமுறையை அப்படியே தொடர்ந்தார்.
14 பந்துகள் இடைவெளியில் 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் விளாசினார். 42 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். ரோஹித்துக்கு அதுவே அதிவேக அரைசதம்தானே!

ரோஹித்தின் அந்த ஆட்டம், ரஹானேவுக்கும் உதவியாக இருந்தது. தனக்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு அடிக்கத் தொடங்கினார் ரஹானே. அவரும் அரைசதம், 100 பார்ட்னர்ஷிப் என எல்லாம் மாறுகிறது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் அது தொடர்கிறது. ஓப்பனிங்கில் ஒன்றாக இறங்கிய முந்தைய 7 இன்னிங்ஸிலும் சேர்த்து அவர்கள் அடித்தது 172 ரன்கள். அடுத்த 3 போட்டிகளில் அடித்ததோ 369 ரன்கள்! இந்த மாற்றத்துக்கான காரணம் - ரோஹித்தின் மாற்றம்!
அதன்பிறகு ரோஹித் அப்படி ஆடவில்லை. மீண்டும் தவான் வந்துவிட்டார். அவர்களின் பழைய ஆட்டம் தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டிவரை அதே ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தினார் ரோஹித். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தன் முதல்கட்ட அணுகுமுறையைத்தான் கடைசிவரை தொடர்ந்தார். கியர்கள் மாற்றி அதிரடி காட்டவில்லை. ஆனால், அந்த பாகிஸ்தான் ஆட்டம் பேட்ஸ்மேன் ரோஹித்தின் அணுகுமுறையில் இருக்கும் வித்தியாசத்தை மட்டுமல்ல, ஒரு கிரிக்கெட்டராக, துணைக் கேப்டனாக, போட்டியை அணுகுவதிலேயே ரோஹித் எவ்வளவு மாற்றம் கண்டிருக்கிறார் என்பதை உணர்த்தியது.

தவான் காயமடைந்ததால் மாற்று ஓப்பனராகக் களமிறங்குகிறார் கே.எல்.ராகுல். அதுவரை ஒருநாள் போட்டிகளில் இவர்கள் ஒன்றாக ஆட்டத்தைத் தொடங்கியதில்லை. போக, ராகுல் இன்னும் அணியில் முழுதாக செட் ஆகவில்லை. உலகக் கோப்பை என்னும் நெருக்கடியை உணர்ந்தபடியேதான் இருக்கிறார். பிளேயிங் லெவனில் இன்னும் நிரந்தர இடம் பிடிக்கவும் இல்லை. அப்படியிருக்கையில் பாகிஸ்தானுடனான போட்டியில் ரோஹித்துடன் களமிறங்குகிறார் அவர்.
அந்த இடத்தில்தான் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. ராகுலால் தவானின் ஆட்டத்தை ஆடமுடியுமா? ரோஹித்துக்கு சரியாக complement செய்ய முடியுமா? சீராக ஆடத் தொடங்காத அவரால் செட்டில் ஆக முடியுமா? இப்படியான கேள்விகள் இருந்த நிலையில்தான், ரோஹித் தன் ஆட்டத்தால் அதற்குப் பதில் சொன்னார். அங்கு செட்டில் ஆக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியது ராகுல்தான். மேலே சொன்னதுபோல், அவர்தான் நெருக்கடியை உணர்ந்துகொண்டிருக்கிறார். அவர்தான் சீரான ஆட்டம் ஆட தடுமாறுகிறார். அதனால், அவர்தான் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ரோஹித் அதை உணர்கிறார். தான் வழக்கமாக ஆடும் ஆட்டத்தை ராகுலை ஆடவிடுகிறார். அவர், தவானின் ரோலை கையில் எடுக்கிறார்.

பவுண்டரியோடு ரன் கணக்கைத் தொடங்கியவர், தான் சந்தித்த முதல் ஓவரிலேயே 9 ரன்கள் அடித்தார்! ரோஹித் தொடர்ந்து அதிரடி காட்ட, எந்த நெருக்கடியுமின்றி தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டார் ராகுல். 7 ஓவர்கள் முடிவில் இருவரும் தலா 21 பந்துகளைச் சந்தித்திருந்தனர். அதில் ராகுல் 8 ரன்கள் அடித்திருக்க, 26 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித். அடுத்த 13 பந்துகளில் 24 ரன்கள். 34 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்! சதமடித்த பிறகு எப்போதும் ஆடும் ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து ஆடத் தொடங்கினார் ஹிட்மேன்! அவரது ஆட்டத்தின் உதவியால், பொறுமையாக, நிதானமாக தன் இன்னிங்ஸை ராகுலால் கட்டமைக்க முடிந்தது. அரைசதமும் அடிக்க முடிந்தது.
ஓப்பனிங்கில் ஒன்றாகக் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 136 ரன்கள் அடித்தது அந்த ஜோடி!
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் ராகுல் ஓரளவு விளையாட, இங்கிலாந்துக்கு எதிராக வழக்கமான ஆட்டத்தை ஆடினார் ரோஹித். மிகப்பெரிய டார்கெட் என்றாலும் தன் பாணியில் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், அந்தப் போட்டியில் ராகுல் டக் அவுட் ஆகி தன் மீதான நெருக்கடியை அதிகரித்துக்கொண்டார். அதுபோக, மயாங்க் அகர்வாலின் வருகை நிச்சயம் அந்த நெருக்கடியை பலமடங்கு அதிகரித்திருக்கும். அந்த நிலையில்தான் வங்கதேசப் போட்டி. மீண்டும் முதல் கட்டத்திலேயே போய் நிற்கிறார் ராகுல். பாகிஸ்தான் ஆட்டத்தைப் போல் மீண்டும் பொறுப்பைத் தன் கையில் எடுக்கிறார் ரோஹித்.

முதல் ஓவர்... தான் சந்தித்த இரண்டாவது பந்து... ரோஹித் சிக்ஸர் அடிப்பார் என்பதெல்லாம் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், ரோஹித் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. ராகுலுக்கு complement செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். 45 பந்துகளில் அரைசதம். அப்படியே ராகுலும் செட்டில் ஆகிவிட்டார். இந்த முறை 180 ரன்கள் குவித்தது இந்த தொடக்க ஜோடி!
ரோஹித் இதை முன்பே ஒருமுறை செய்திருக்கிறார். ரஹானேவுடன் ஆடும்போது, ஒரு மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது, தன் பாணியை விட்டு அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், அதுவும் இதுவும் ஒன்று கிடையாது. இது உலகக் கோப்பை. எந்த வீரரும் இப்படியான தொடரில் தன் பாணியை மாற்றிக்கொள்ள விரும்பமாட்டார்கள். மற்ற போட்டிகளைவிட நெருக்கடி பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், ரோஹித் அப்படி யோசிக்கவில்லை. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாதான் முதலில் பேட்டிங். 300+ சேஸிங், தொடக்கத்திலிருந்து ரன் எடுத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடியும் இல்லை. ஆனாலும், தன் பாணியை மாற்றிக்கொண்டார். காரணம், ராகுலுக்கு அவகாசம் கொடுப்பது அவசியம். அணியின் நலனுக்கு அது தேவை.

ஒரு முக்கிய ஓப்பனர் இல்லாத நிலையில், மாற்று வீரருக்கு நம்பிக்கை கொடுத்த அவரது அந்த அணுகுமுறை, அந்த சதங்களைவிட பல மடங்கு பெரிது!
அணியின் தேவைக்காக, உலகக் கோப்பை எனும் மிகப்பெரிய அரங்கில் அதுவரை பெரிதாக ஆடிடாத ஓர் ஆட்டத்தைத் துணிந்து கையில் எடுத்தார் ரோஹித். என்ன சேஸிங்காக இருந்தாலும் தன் பாணியில் இருந்து மாறாத ரோஹித் ஷர்மா, உலகக் கோப்பைக்காக அதைச் செய்யத் துணிந்தார். அவர் அந்தப் போட்டிகளில் சதமே அடிக்காமல் இருந்திருந்தாலும் அதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஒரு முக்கிய ஓப்பனர் இல்லாத நிலையில், மாற்று வீரருக்கு நம்பிக்கை கொடுத்த அவரது அந்த அணுகுமுறை, அந்த சதங்களைவிட பல மடங்கு பெரிது! நாளை, மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் இந்திய அணிக்குள் நுழையும்போது, நிச்சயம் அவர்கள் ரோஹித்தைச் சுற்றி தங்களின் ஆட்டத்தைக் கட்டமைக்க முடியும். நெருக்கடிகளை சமாளித்து, ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோஹித் அங்கு துணையாக நிற்பார்!
ஒருவகையில் பார்த்தால், ரஹானேவுடன் ஆடிய அந்த இன்னிங்ஸ், ரோஹித் துணைக் கேப்டன் ஆக்கப்பட்ட சில மாதங்களில் நடந்தது. அன்றிலிருந்து கோலிக்கு ஆலோசனைகள் வழங்குவதாகட்டும், கோலி பவுண்டரி எல்லையில் நிற்கும்போது பௌலர்களிடம் பேசுவதாகட்டும், பிரஸ்மீட்களில் கேட்கப்படும் கேள்விகளைச் சமாளிப்பதாகட்டும், ரோஹித் ஒரு படி மேலே சென்று பொறுப்புகளை சிறப்பாகக் கையாள்கிறார். உலகக் கோப்பையில் தன் பாணியை மாற்றிக்கொள்ளும் அந்த மிகப்பெரிய ரிஸ்க் கூட அந்தப் பொறுப்புணர்ச்சியால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

ஹிட்மேன் எனும் ரோஹித்தின் இரண்டாவது வெர்ஷனைவிட, இப்போதிருக்கும் ரோஹித் பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்.
உண்மையில், பேட்ஸ்மேன் ரோஹித் சில சதங்களையும், சில இரட்டைச் சதங்களையும் மட்டுமே இந்திய அணிக்கான பங்களிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த ஹிட்மேன் எனும் ரோஹித்தின் இரண்டாவது வெர்ஷனைவிட, இப்போதிருக்கும் ரோஹித் பலமடங்கு முக்கியத்துவம் வாய்ந்தவர். அப்கிரேட் செய்யப்பட்ட இந்த துணைக்கேப்டன், சக வீரரின் வளர்ச்சியில், இந்திய அணியின் எழுச்சியில் மிகப்பெரிய பங்காற்றுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான வீரர்கள் பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறார்!