Published:Updated:

பிரையன் லாராவே பாராட்டும் பாகிஸ்தான் கேப்டன்... அசார் அலியின் பவர் கூடியது எப்படி?!

டெக்னிக்கில் வலுவான ப்ளேயரான அசார் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களை அடித்திருக்கிறார். இருந்தும் பெரிய அளவில் அவரது பெயர் ரசிகர்களுக்குப் பரிட்சயமாகவில்லை.

கிரிக்கெட்டில் 'கேப்டன்ஸ் நாக்' (Captain's Knock) என்கிற சொல்லாடலை அதிகம் கேட்டிருப்போம். ஒரு அணியின் கேப்டன் சதம் அடிக்கும் எல்லா இன்னிங்ஸ்களையும் கேப்டன்ஸ் நாக் என்று சொல்லிவிடமுடியாது. அசுர பலத்தோடு எதிரணி ஆதிக்கம் செலுத்தி தனது அணி தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் போது ஒரு தலைவனாக முன்னே நின்று, போராடி ஆட்டத்தை மாற்ற முயல்வதே உண்மையான 'கேப்டன்ஸ் நாக்'. பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி இங்கிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் ஆடியிருப்பது அப்படியொரு உண்மையான கேப்டன்ஸ் நாக்தான். ஒரு கேப்டனாக தனது அணியின் பலம் இதுதான் என பௌலிங் லைன் அப்பை நம்பி களமிறங்கினால் அது மொத்தமாக சொதப்பல்.

சரி, அடுத்து பேட்டிங்கில் டாப் ஆர்டரை வைத்து கொஞ்சம் சமாளித்துவிடலாம் என நினைத்தால் அங்கேயும் நெகட்டிவ் ரிசல்ட். குறைந்தபட்சம், நியுபாலை கொஞ்சம் பழசாக்கி கொடுக்கக்கூட டாப் ஆர்டர் பயன்படவில்லை. ஒரு கேப்டனாகத்தான் பெரிதும் நம்பியிருந்த அனைத்தும் கையை மீறி சென்று ஏறக்குறைய தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் கடைசி வரை களத்தில் நின்று 141 ரன்கள் அடித்துப் போட்டியை டிரா நோக்கி செல்லவைத்தார் அசார் அலி. இரண்டாவது இன்னிங்ஸிலும் மிகப்பொறுமையாக 114 பந்துகள் சந்தித்து 31 ரன்கள் என தடுப்பாட்டம் ஆடினார்.

''சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்ஸ் 'நாக்'களில் அசார் அலியின் இந்த இன்னிங்ஸும் ஒன்று'' என பிரையன் லாராவே அசார் அலியின் இந்த இன்னிங்ஸை நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

தோனி புதிதாக வாங்கியிருக்கும் பழைய காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?! #PontiacFirebirdTransAm #Dhoni

டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துகொண்டிருப்பதால் ஆட்டம் டிராவானால் பரவாயில்லை என விட்டுவிட முடியாது. ஒவ்வொரு போட்டியின் முடிவும் புள்ளிப்பட்டியலில் எதிரொளிக்கும். டெஸ்ட் போட்டி என்பது இங்கிலாந்து அணிக்கு ஒரு கௌரவம். இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதற்கே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். ஒவ்வொரு டெஸ்ட்டையும் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து ஆடி வருகிறது இங்கிலாந்து. இந்த சம்மரில்தான் பிராட் 5 விக்கெட் ஹால் ஒன்றை எடுத்து 500 விக்கெட் என்ற மைல் கல்லையும் அடைந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆண்டர்சன் இந்தப்போட்டியில் ஒரு 5 விக்கெட் ஹால் எடுத்துவிட்டு 600-வது விக்கெட்டுக்காக ஒவ்வொரு பந்திலும் வலைவீசினார். 600-வது விக்கெட்டையும் எடுத்துவிட்டார். 4 ஸ்லிப், கல்லி எல்லாம் வைத்து பேட்ஸ்மேன்களைப் பரிதவிக்க விட்டுக்கொண்டிருந்தனர் இங்கிலாந்து பெளலர்கள். இதைத்தாண்டி அசார் அலி அவ்வளவு நேரம் களத்தில் நின்று கடைசிவரை தனது விக்கெட்டை விடாமல் இருந்ததுதான் ஹைலைட்.

அசார் அலி
அசார் அலி

ஆர்ச்சர், வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் என அத்தனை பேரும் 130-140 கிமீ வேகத்தில் வீசினாலும் பொறுமையாக லேட்டாக பேட்டை விட்டு தேர்ட் மேனில் பவுண்டரியாக்கிக் கொண்டிருந்தார் அசார். டெக்னிக்கில் வலுவான ப்ளேயரான அசார் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களை அடித்திருக்கிறார். இருந்தும் பெரிய அளவில் அவரது பெயர் ரசிகர்களுக்கு பரிட்சயமாகவில்லை. நல்ல டெக்னிக்கலான ப்ளேயராக இருந்தாலும் டிபிக்கல் டெஸ்ட் ப்ளேயராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே அசார் அலி விரும்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2015 உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு மிஸ்பா உல் ஹக்கிடமிருந்து கேப்டன் பொறுப்பு யாருக்குச் செல்லும் எனப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பெரும்பாலும் சர்ஃப்ராஸ் அஹமதுதான் அடுத்த கேப்டனாக இருப்பார் என யூகிக்கப்பட யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு வருடங்கள் ஒருநாள்/டி20 போட்டிகளிலேயே விளையாடாத அசார் அலியை கேப்டனாக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. புஜாராவிடம் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பைக் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது அசார் அலியின் கேப்டன்ஸி நியமனம்.

39 வயதில் ஓய்வை அறிவித்த தோனி! - எப்படித் திட்டமிட்டார்?

வங்கதேசத்துக்கூடவே ஒயிட்வாஷ் ஆகும் நிலைக்குச் சென்றது பாகிஸ்தான். தொடர் தோல்விகளுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பு அசார் அலியிடமிருந்து பறிக்கப்பட்டு சர்ஃப்ராஸ் அஹமதுவிடம் கொடுக்கப்பட்டது. ஒரு மாற்றமும் இல்லை, ரிசல்ட் ஒன்றுதான். அது தோல்வி மட்டுமே. 2019 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியுற கேப்டன் சர்ஃப்ராஸின் பர்ஃபார்மென்ஸும் மோசமாகத்தான் இருந்தது. 2018-19 என இரண்டு வருடத்திலும் இவரின் டெஸ்ட் ஆவரேஜ் 30-ஐ தாண்டவில்லை. இதனால் மீண்டும் கேப்டனை மாற்ற முயல்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. இந்த முறை டி20-ஓடிஐ க்கு பாபர் அசாமை கேப்டனாக்கி விட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டான அசார் அலியை கேப்டனாக நியமித்தது கிரிக்கெட் போர்ட்.

சமகாலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்துவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமில்லை. எப்போது வேண்டுமானாலும் அந்நாட்டுப் பிரதமரே பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை ட்வீட்டுகளைப் பறக்கவிடுவார். மேலும் ஸ்டார் ப்ளேயர்கள், லெஜண்ட்டுகள் என எல்லோரும் மொத்தமாக விடைபெற்று புது அணியாக உருவாகிக்கொண்டிருக்கும் காலம். உலகளவில் எந்த டெஸ்ட் அணியிலும் 20 வயதுக்குக் குறைவான மெயின் ஃபாஸ்ட் பௌலர்களைப் பார்க்க முடியாது. இப்போதைய பாகிஸ்தான் அணியில் இது சாத்தியம். அணியே இளம் வீரர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களை ஒழுங்காக வழிநடத்தி வலுவான அணியைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இப்போதைய கேப்டன் அசார் அலியின் கையில்தான் இருக்கிறது.

அசார் அலி
அசார் அலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அந்த அணியின் ஆதிக்கத்தை வெகுவாக ஒடுக்கியிருப்பார் அசார் அலி. கடைசி செஷனில் கையில் இருந்த மேட்ச்சை தவறான பௌலிங் சேன்ஜினால் கோட்டை விட்டிருப்பார். ஓர் ஆட்டம்தான் அதற்குள் அசார் அலியின் கரியரே முடிந்துவிட்டதுபோல பேசத் தொடங்கிவிட்டனர் விமர்சகர்கள். இப்படி விமர்சித்துதான் 2016 கேப்டன் பொறுப்பில் செட்டில் ஆவதற்கு முன்பே அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் அசார் அலி. இந்த முறையும் அப்படி ஒரு தவற்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்யாது என்பதை நம்பலாம். செய்ய நினைத்தாலும் அசார் அலி ஆடியுள்ள இந்த 141* இன்னிங்ஸும், ஃபாலோ ஆனில் அவர் போராடிய தீரமும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை இன்னொரு முறை யோசிக்க செய்யும். கேப்டன் அசார் அலி சதம் அடித்தவுடன் நாசர் ஹுசைன் கமென்ட்ரியில் ''You can't keep down a good man for long time'' என்றார். உண்மைதான்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு