Published:Updated:

இரண்டு சீனியர்களின் மிரட்டல் கம்பேக்... களைகட்டும் உலகக் கோப்பை! #CWC19

Lasith Malinga

கெயில், மலிங்கா என ஜாம்பவான்கள் கம்பேக் கொடுத்துள்ளனர். இனி யார் யார் விஸ்வரூபம் எடுக்கப்போகிறார்களோ? உலகக் கோப்பை இப்போதுதான் சூடுபிடித்திருக்கிறது.

Published:Updated:

இரண்டு சீனியர்களின் மிரட்டல் கம்பேக்... களைகட்டும் உலகக் கோப்பை! #CWC19

கெயில், மலிங்கா என ஜாம்பவான்கள் கம்பேக் கொடுத்துள்ளனர். இனி யார் யார் விஸ்வரூபம் எடுக்கப்போகிறார்களோ? உலகக் கோப்பை இப்போதுதான் சூடுபிடித்திருக்கிறது.

Lasith Malinga

உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த வாரம் மழையேதும் இல்லாமல் கடந்திருப்பதில் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதி. போதாக்குறைக்கு வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான வங்கதேசத்தின் பர்ஃபாமன்ஸ், இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸின் போராட்டம் என ஏகப்பட்ட டிராமாக்களை அளித்திருக்கின்றன கடந்த வாரப் போட்டிகள். இதில் நாம் கவனிக்கவேண்டிய விஷயம், சீனியர்கள் கெயில் மற்றும் மலிங்கா ஃபார்முக்குத் திரும்பியிருப்பது...

Chris Gayle
Chris Gayle

தி யுனிவர்சல் பாஸ்

2017, 2018–ம் ஆண்டுகளில் கெயில் ஃபார்ம் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இல்லை. 35–க்கும் குறைவான சராசரி. 2019–ம் ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மெர்சல் காட்டினார். அதே வேகத்தில் உலகக் கோப்பைக்குள் நுழைந்த அவர் அரைசதத்தோடு கணக்கைத் தொடங்கினார். ஆனால், அதைத் தாண்டி அடுத்தடுத்த போட்டிகளில் எதுவும் செய்யவில்லை.

ஓப்பனிங்கில் இவர் சொதப்ப சொதப்ப, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் வாய்ப்புகளை வீணடித்தார். மீண்டும் பழைய ஃபார்முக்கே செல்வார் என்று நினைத்தபோது, இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக 292 ரன்களை சேஸ் செய்த போது அதிரடியைக் கையிலெடுத்தார்.

ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, ரன் சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் கெயிலிடம் வந்து சேர்ந்தது. பொறுப்பை உணர்ந்து ஆரம்பத்தில் நிதானித்து கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்தார். அதன் பின்னர் ஹென்ரி ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள், நீஷம் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் எனப் பறக்கவிட்டார். ஒரு பக்கம் 20 ஓவரில் 130 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். ஹிட்மேயர், ஹோல்டர் விக்கெட்டுகள் விழுந்தாலும் தன் அதிரடியிலிருந்து கொஞ்சமும் மாறாமல் ஆடினார் கெயில். 84 பந்துகளில் 87 ரன்கள் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் எனக் களத்தில் இருந்த நேரத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தினார்.

Chris Gayle
Chris Gayle

ஆனால், கெயிலின் பேட்டிங் திறமையுடன் ஒப்பிடும்போது அவர் வெளிப்படுத்தியது வெறும் 50% தான். அவர் நினைத்திருந்தால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போல், ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்க முடியும். அதைச் செய்யத் தவறிவிட்டார். இருந்தாலும், யுனிவர்சல் பாஸ் கம்பேக் கொடுத்ததில் விண்டீஸ் ஹேப்பி அண்ணாச்சி. ஆனால், இதுவே போதும் என்று அவர் நின்று விடக் கூடாது. இனிவரும் போட்டிகளில் மெச்சத்தக்க இன்னிங்ஸை ஆட வேண்டும். அப்படி ஆடினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸுக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும்.

யார்க்கர் மலிங்கா

`தொப்பையும் தொந்தியுமாக ஓர் உருவம். முன்பு போல் வேகமும் இல்லை; விக்கெட்டுகளும் இல்லை; இவரை பெஞ்சில் உட்காரவைத்து விட்டு புது வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.’ – இது ஒரு காலத்தில் மலிங்காவை யார்க்கர் மன்னன் என்று புகழ்ந்தவர்களின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்களின் செயல்பாடு முற்றிலும் மோசமாக இருந்தது. தோற்றுவிடுவோம் என்று தெரிந்து, பேருக்கு ஆடியது போல் இருந்தது அவர்கள் பர்ஃபாமன்ஸ். அப்போதே ரசிகர்கள் எல்லோரும் "இது பழைய ஸ்ரீலங்கா இல்ல" என விமர்சித்தனர்.

Lasith Malinga
Lasith Malinga

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அதே சோர்வு இருக்கும் பட்சத்தில் நடையைக் கட்டிவிடுவார்கள் எனப் பலரும் நினைத்திருந்த சமயத்தில்தான், அந்த மான்ஸ்டர் மீண்டும் உருவெடுத்தார். முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை எடுத்தது 232 ரன்கள். ஆனால், மலிங்காவின் மேஜிக் ஸ்பெல்லால் இங்கிலாந்து சுருண்டது‌. முந்தைய போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 397 ரன்கள் குவித்தது. இந்த சேஸிங் எல்லாம் எம்மாத்திரம் என்ற இங்கிலாந்தின் நினைப்புக்கு முட்டுக்கட்டை போட்டார் லசித்.

எத்தனையோ பௌலர்களை அநாயசமாக அடக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் மலிங்காவின் பந்துகளை கணிக்கக் கூட இயலவில்லை. போட்டியின் முதல் பந்தில் இருந்தே அவரின் அஸ்திரங்களை ஒவ்வொன்றாக வீசினார். பேர்ஸ்டோவை கோல்டன் டக்கில் பெவிலியனுக்கு அனுப்பியதில் தொடங்கியது அவரின் ஆட்டம். ஃபுல் ஸ்விங்கர் டெலிவெரி சக இங்கிலாந்து ஓப்பனர் வின்ஸையும் தடுமாற வைத்தது.

Lasith Malinga
Lasith Malinga

இரண்டு ஓவர்கள் கழித்து வின்ஸை அவுட்டாக்க மலிங்கா அட்டகாசமாக ஃபீல்டிங் செட் செய்தார். அவுட்டாவதற்கு இரண்டு பந்துகள் முன்புதான் கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் வின்ஸ். அடுத்த பந்தில் மிட் ஆஃப் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தினார். ஆனால், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபீல்டர் இல்லை‌. அந்தப் பந்தை அதே எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்குத் திருப்ப எத்தனித்தபோது எட்ஜ்ஜாகி இரண்டாவது ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்தார் வின்ஸ். இப்போது நல்ல ஃபார்மில் இருக்கும் பவுலர்களால் கூட இத்தகைய ஃபீல்ட் செட் அப்பையோ, பவுலிங் யுக்திகளையோ இந்த அளவுக்கு கையாள முடியாது. ஆனால், அதைச் செயல்படுத்திக் காட்டினார் மலிங்கா.

பத்து வருடத்திற்கும் மேலாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம்தான் அன்றைய போட்டியில் மலிங்காவிற்குக் கை கொடுத்தது. பவர்ப்ளே ஓவர்களிலும், டெத் ஓவர்களில் மட்டுமே விக்கெட் எடுக்கும் பெளலர்களுக்கு மத்தியில் ரன்ரேட் எப்போதெல்லாம் வேகமெடுக்கிறதோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகள் வீழ்த்தினார். முக்கியமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் செய்த தவறெல்லாவற்றையும் மலிங்கா இங்கிலாந்திற்கு எதிராக திருத்திக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உடல் மொழியில் தோற்றுப்போன இலங்கை, இங்கிலாந்துக்கு எதிராக வென்று காட்டியது‌. இன்னும் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கிறது இலங்கை.
மலிங்காவின் மரண மாஸ் கம்பேக்!

போட்டி முழுவதும் யார்க்கர் பந்துகளை அதிகம் வீசினார். யார்க்கர் பந்துகள் ஃபுல் டாஸாக மாறி பேட்ஸ்மேன்கள் வெளுத்துக் கட்ட வாய்ப்புகள் ஏராளம் என்று தெரிந்தும், ரிஸ்க் எடுத்தார். மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அனுபவமும் அவருக்குக் கைகொடுத்தது. அந்தத் தன்னம்பிக்கை சக இலங்கை வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது.

அன்று மலிங்கா ஆட்ட நாயகன் விருதை வென்றதும், அவர் தொப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவுசெய்து வாழ்த்து தெரிவித்தார், இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே. தான் யார் என்பதை பல நாள்களுக்குப் பின் நிரூபித்துள்ளார் இந்த மான்ஸ்டர் மலிங்கா.

கடந்த வாரம் கெயில், மலிங்கா என ஜாம்பவான்கள் கம்பேக் கொடுத்துள்ளனர். இனி யார் யார் விஸ்வரூபம் எடுக்கப்போகிறார்களோ? உலகக் கோப்பை இப்போதுதான் சூடுபிடித்திருக்கிறது.