சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரை இலங்கை அணி வென்றிருந்தது. இலங்கை அணி வெல்லும் ஆறாவது ஆசியக்கோப்பை தொடர் இது. இந்த ஆறு ஆசியக்கோப்பை வெற்றிகளிலுமே மிகச் சிறந்ததாக பார்க்கப்படுவது சமீபத்திய வெற்றியே. இலங்கை அணியின் எழுச்சியை உரக்க அறிவிக்கும் வெற்றியாகவே இது பாவிக்கப்படுகிறது. இலங்கை அணி இதை எப்படிச் சாத்தியப்படுத்தியது?
ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன், முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி உதிர்த்த வார்த்தைகள் இவை, "இந்த ஆசியக் கோப்பை தொடர்தான் இதுவரை நடந்த தொடர்களைக் காட்டிலும் வலுவான மற்றும் சவாலான தொடர்".
இத்தகைய தொடரில் இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதுவும் முதல் போட்டியில் ஆப்கன் உடன் 105 ரன்களுக்கு சுருண்ட பின் கட்டாயம் தகுதி பெற மாட்டார்கள் என்பதே பலரின் ஒருமித்த கருத்து. ஆனால், உலகத்தரம் வாய்ந்த பௌலர் இல்லை என்ற வாதத்திற்கும் சேர்த்தே வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை.

சூப்பர் 4 சுற்றில் முதலில் ஆப்கனுடன் மோதிய போட்டியில் ஷார்ஜாவில் அதிகபட்ச டி20ஐ இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது இலங்கை. துபாயிலும் அதிகபட்ச டி20ஐ இலக்கை சேஸ் செய்து இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியை உறுதிசெய்தது.
இலங்கை இதற்கு முன்னர்!
இலங்கையின் நட்சத்திர வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் அடுத்தக்கட்ட அணி செட் ஆகாமல் இலங்கை சிக்கலில் சிக்கித்தவித்தது. இலங்கை கிரிக்கெட் போர்டும் பல சர்ச்சைக்குள் சிக்கியது. அரசியல் தலையீடுகள், சரியான வாய்ப்புகள் வழங்கப்படாதது, உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தாதது என ஒட்டுமொத்த கிரிக்கெட் சிஸ்டமும் ஸ்தம்பித்து கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தொடர் தோல்விகளால் தவித்த வீரர்களை #unfollowcricketers என்று சமூக வலைதளங்களில் இறங்கிய ரசிகர்களின் செயல் மேலும் கவலை கொள்ளச் செய்தது. இதன் தொடர்ச்சியில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது LPL தொடர்.
ஏன் 2012க்கு பிறகு பிரிமியர் லீக் தொடர் நடத்தப்படவில்லை என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர். அதன் விளைவுதான் 2021ல் லங்கா பிரிமியர் லீக் என்ற புதுப் பெயரில் டி20 தொடரை ஆரம்பித்தனர். கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் LPL தொடரின் மூலம் புதுப்புது வீரர்களை இலங்கை அணி கண்டுப்பிடித்தது. அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளையும் வழங்கி அணிக்குள் கொண்டு சேர்த்தது.

கேப்டன்சி!
இலங்கை அணியில் கேப்டன்சி என்பது 'மியூசிக்கல் சேர்' போலத்தான் இருந்தது. ஒவ்வொரு சீரிஸுக்கும் ஒரு புது கேப்டன் என்பது போலத்தான் மலிங்கா, பெரேரா, மேத்யூஸ், தரங்கா, கருணாரத்னே என கேப்டன் தொப்பி மாறிக்கொண்டே வந்தது. இறுதியாக அந்த சேரில் வந்து அமர்ந்தவர் தசுன் சனகா!
சனகா கேப்டன் ஆவதற்கு முன் பல போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஆனால், ஓர் அணியின் கேப்டன் தன் அணிக்காக ஆட விரும்பும் ஒரு கேப்டன் இன்னிங்ஸை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20ஐ போட்டியில் சனகா ஆடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே இன்னிங்ஸை ஒரு சாதாரண வீரர் ஆடியிருந்தால் கூட அது அத்தகைய தாக்கத்தை உண்டாக்கியிருக்க முடியாது. அணித்தலைவனின் அந்த வேட்கை அணிக்கும் பரவாதா என்ன? இலங்கை எதிர்பார்த்து காத்திருந்த அத்தனை உத்வேகத்தையும் அந்த ஒரு இன்னிங்ஸ் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பலரும் இந்தியாவில் பும்ரா, ஹர்ஷல் இல்லை; பாகிஸ்தானில் ஷாகின் அப்ரிடி இல்லை என்ற கருத்துகளை முன்வைத்தனர். ஆனால், இலங்கையின் சமீபத்திய சிறந்த பேசரான சமீரா காயத்தால் விலகியதை மறந்தனர். ஆனால், அதனை ஓரங்கட்டிவிட்டு தன்னிடம் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களைச் சிறப்பாக கையாண்டிருந்தார் சனகா. அதுவும் வங்கதேச பயிற்சியாளர் இலங்கையிடம் சிறந்த பௌலர்கள் இல்லை என்று விமர்சித்ததற்குப் பதிலாக, அதன்பிறகு ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்று காட்டியுள்ளது இலங்கை.
இந்தத் தொடரிலேயே சனகா கேப்டனாகச் சறுக்கியது வங்கதேசத்துடனான போட்டியில் பீல்டு செட் செய்த போது மட்டும்தான். இறுதிப்போட்டியில் தனஞ்சய டி சில்வாவுக்கு ஓவர் கொடுத்து நவாஸ் மீது பிரெஷர் ஏற்படுத்தி அடுத்த ஓவரில் விக்கெட் எடுத்தது எல்லாம் வேற லெவல் கேப்டன்சி!
மற்ற வீரர்கள்?!
கேப்டன்தான் ராஜா என்றால் மற்ற வீரர்கள் அனைவரும் தளபதிகள். அப்படி சனகாவிற்கு ஹசரங்கா, ராஜபக்சா, நிசங்கா, மெண்டிஸ், தீக்ஷனா என திறமை வாய்ந்த தளபதிகள் உடனிருந்தனர். ஹசரங்கா, ராஜபக்சா போன்றோர் ஐபிஎல் தொடரில் பெற்ற அனுபவத்தின் மூலம் அணிக்குப் பெரிதும் உதவினர்.
ராஜபக்சா ஓய்வு முடிவை அறிவித்து பின்னர் அதனைத் திரும்ப பெற்று மீண்டும் அணியில் இடம் பிடித்தார். கடைசிவரை தன் அதிரடி பாணியை மாற்றாததுதான் ராஜபக்சாவின் பேட்டிங்கின் சிறப்பு... அதுதான் அணிக்கும் தற்போது உதவியது.
ஹசரங்கா பௌலிங்கில் ஜொலித்தாலும் பேட்டிங்கில் பெரிதாக எதுவும் இந்தத் தொடரில் செய்யவில்லை என்ற குறையை இறுதிப்போட்டியில் போக்கினார்.

டாஸ் தோற்றாலே ஆட்டம் அவ்வளவுதான் என்று சொல்லப்பட்ட துபாயில் டாஸ் தோற்றாலும் ஆட்டத்தை ஜெயிக்கலாம் என்று நிரூபித்தது இலங்கை.
இதற்கும் இரண்டாம் இன்னிங்ஸில் முதல் பந்தை வீசாமலேயே 10 ரன்களை விட்டுக் கொடுத்தது இலங்கை. அப்படியிருந்தும் கடைசி வரை போராடி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இலங்கை. ஒரு பைனலில் பீல்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை இறுதிப்போட்டியில் இலங்கை அணி எடுத்துக்காட்டியது.
போட்டியின் முடிவில் தோனி மற்றும் சிஎஸ்கே பற்றிக் குறிப்பிட்ட சனகா அணிந்திருப்பதும் அதே 7ஆம் நம்பர் ஜெர்ஸிதான்! No 7 is something special!
இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஆஸ்திரேலியா உடனான வெற்றியே ஆசுவாசப்படுத்திய நிலையில் ஆசியக் கோப்பையின் வெற்றி கொடுக்கும் மகிழ்ச்சியை விவரித்து எழுத வேண்டியதில்லை.
"எங்கள் நாட்டு மக்களின் முகங்களில் புன்னகை மலர எங்களால் முடிந்த வரை முயற்சி செய்வோம்!" என்று சொல்லியிருந்த இலங்கை அணியினர் அதனை நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் இலங்கையுடனான போட்டிகள் என்றால் சிறந்த வீரர்களுக்கு ஓய்வளித்து விட்டு சற்று அனுபவம் குறைந்த வீரர்கள், புதுமுகங்கள் என இறக்கிவிட்ட அணிகள் இனி அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நன்கு யோசிக்க வேண்டும் என்பதையும் இந்த ஆசியக் கோப்பை வெற்றி மூலம் உரக்கச் சொல்லியுள்ளனர் இலங்கை அணியினர்!