Published:Updated:

6 நாள்கள், 5 போட்டிகள், 4 சதங்கள்... தொடர்ந்து சாதிக்கும் ருத்துராஜ் இந்திய அணியின் ஓப்பனர் ஆகலாமா?!

Ruturaj Gaikwad

வெறும் ஆறே நாள்களுக்குள் ஐந்து போட்டிகளில், நான்கு சதங்களுக்கான கொண்டாட்டங்களில் அவரது பேட் பங்கேற்றுவிட்டது.

6 நாள்கள், 5 போட்டிகள், 4 சதங்கள்... தொடர்ந்து சாதிக்கும் ருத்துராஜ் இந்திய அணியின் ஓப்பனர் ஆகலாமா?!

வெறும் ஆறே நாள்களுக்குள் ஐந்து போட்டிகளில், நான்கு சதங்களுக்கான கொண்டாட்டங்களில் அவரது பேட் பங்கேற்றுவிட்டது.

Published:Updated:
Ruturaj Gaikwad
புதிய இந்திய ஓப்பனர்களுக்கான ஒட்டப் பந்தயத்தில், உச்சகட்ட வேகத்தில் முன்னிலை எடுத்திருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

"உங்களது வாய்ப்புகளுக்கான கதவினை நோக்கி நடைபோடும் போது, கதவினைத் தட்டாதீர்கள், எட்டி உதைத்து, புன்னகையோடு, உங்களை நீங்களே அறிமுகம் செய்து கொள்ளுங்கள்", என்பார் மல்யுத்த வீரரும் நடிகருமான ராக். அதைத்தான், சமீப காலமாக, அதிர வைக்கும் அதிக சத்தத்தோடு செய்து வருகிறார், ருத்துராஜ் கெய்க்வாட்.

வரவிருக்கும், 2023-ம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பையில், இந்தியாவின் ஓப்பனர்களில் ஒருவர், சந்தேகமேயின்றி ரோஹித் ஷர்மாதான். வயதைக் கணக்கில் கொண்டு தவானுக்குப் பதிலாக, மிடில் ஆர்டருக்குச் சென்றுவிட்ட ராகுலுக்குப் பதிலாக, இன்னொரு பேக்கப் ஓப்பனரைத் தேடவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. அத்தேடலுக்கான விடையாய், தனது விலாசத்தை தான் ஆடும் ஒவ்வொரு தொடரிலும் பதிவேற்றி வருகிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

Ruturaj Gaikwad in Vijay Hazare 2022
Ruturaj Gaikwad in Vijay Hazare 2022

ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களின் பேட்டிங் திறனுக்கே சவால் விட்ட அரபு மண்ணிலேயே ஆதிக்கம் செலுத்தி ஆரஞ்சுக் கேப்பைக் கைப்பற்றி அதிர்வலைகளுக்கான ஆரம்பப் புள்ளியை வைத்தார். 136 ஸ்ட்ரைக் ரேட்டோடு குவிக்கப்பட்ட 600-க்கும் அதிகமான ரன்கள் ஒவ்வொன்றும், களம் கண்ட இளம் இந்திய பேட்ஸ்மேன்களில் இவரை தனித்தன்மை மிக்கவராக அடையாளப்படுத்தியது.

அங்கிருந்து பார்வையை சயத் அலி முஸ்டாக் டி20 தொடரின் பக்கம் திருப்பினால், விளையாடியது சொற்ப போட்டிகளில்தான் என்றாலும், 256 ரன்களோடும், 64 என்னும் சராசரியோடும், பேக் டு பேக் அரை சதங்களோடும் மிரள வைத்திருந்தார் ருத்துராஜ். ஆனால், இவை எல்லாவற்றையும் டிரெய்லர், டீஸர் என்ற கணக்கில் சேர்த்துவிட்டது, நடப்பு விஜய் ஹசாரே 50 ஓவர் தொடர்.

Ruturaj Gaikwad and Shahrukh Khan
Ruturaj Gaikwad and Shahrukh Khan

வெறும் ஆறே நாள்களுக்குள் ஐந்து போட்டிகளில், நான்கு சதங்களுக்கான கொண்டாட்டங்களில் அவரது பேட் பங்கேற்று விட்டது. இதில், ஹாட்ரிக் சதங்களும் அடக்கம். அது மட்டுமா?! ஒரே விஜய் ஹசாரே சீசனில், அதிக சதங்களை அடித்த வீரர்களுக்கான பேட்ஜையும், இந்த நான்கு சதங்களோடு விராட் கோலி, ப்ரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார் ருத்துராஜ். ஆனால், இந்தச் சதங்களின் பின்னணிதான் புருவங்களை உயரச் செய்கிறது. இதற்கு முன்னதாக மற்றவர்களுக்கு இச்சாதனைக்கு ஒரு சீசனில் ஏழு அல்லது எட்டு இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டிருந்தன. ஆனால், ருத்துராஜுக்கு இதற்காகத் தேவைப்பட்டதோ வெறும் ஐந்து போட்டிகள் மட்டுமே. மகாராஷ்டிராவுக்குக் கேப்டனான கையோடு தக்க தலைவனாகவும், பேட்ஸ்மேனாகவும், உத்தரகாண்டுக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து, மற்ற அத்தனை போட்டியிலும் கேப்டன் இன்னிங்ஸுகளை ஆடி சதமடித்துள்ளார் ருத்துராஜ்.

136 ( 112) - மத்தியப் பிரதேசம் (எதிர்)

154* (143) - சட்டீஸ்கர்

124 (129) - கேரளா

168 (132) - சண்டிகர்

என அடித்துள்ள நான்கு சதங்களும், 110-களில் வட்டமிடாது, அடுத்த இலக்காக, 150-ஐ நோக்கித்தான், எட்டிப் பாய்ந்துள்ளன. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக, ஓப்பனிங்கில் இறங்கி அதிரடியாக ரன் சேர்ப்பதில் சேவாக், அஃப்ரிடி தொடங்கி ப்ரித்வி ஷா வரை, இமைக்கும் பொழுதுக்குள் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரி லைனுக்கு அப்பால் மறையச் செய்யும் மாயக்காரர்கள்தான். ஆனால், ருத்துராஜ் அந்த விஷயத்தில்தான் மாறுபடுகிறார். ஐபிஎல்லில் தொடங்கி இந்த விஜய் ஹசாரே தொடர் வரை கட்டை வண்டி வேகத்தில் இல்லாவிடினும், 'ரன் எ பால்' கணக்கில்தான், அவரது ஆட்டம் மிதமான வேகத்தோடு பொதுவாகத் தொடங்கும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அது முடுக்கப்பட்டு, முடிவில் பௌலர்களை மூர்ச்சையாக்கும் அதிவேக ரயிலாகும்.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

கடைசியாக நடைபெற்ற சண்டிகருக்கு எதிரான போட்டியில் ருத்துராஜின் ஆட்டக்காட்சிகளே இதற்கான காட்சிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள். அந்தப் போட்டியில், 310 என்ற இலக்கைத் துரத்தியது மகாராஷ்ட்ரா. அதில், சதத்தை அடிக்க 96 பந்துகளை எடுத்துக் கொண்ட ருத்துராஜ், அங்கிருந்து 36 பந்துகளில்,68 ரன்களை வாரிக் குவித்திருந்தார். களத்தில் சற்று நேரம் தாக்குப் பிடிப்பதும், பின் திருப்பித் தாக்குவதும்தான் அவரது பாணி. அந்தக் கால இடைவெளிக்குள், அவரது விக்கெட் வீழ்த்தப்படாவிட்டால் அவரது தற்காப்புக் கேடயத்தைத் தகர்த்து அவரை வெளியே அனுப்புவது இயலாத காரியம். இங்கேதான் அவசரகதியில் ஆடி, நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறும் ப்ரித்வியை, ருத்துராஜ் பின்னுக்குத் தள்ளி முன்னேறுகிறார்.

ஓப்பனர்தான் என்றாலும், "ஒரு ஃபினிஷர் மைண்ட் செட்டோடே நான் போட்டியை அணுகுகிறேன்" என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார் ருத்துராஜ். அது மிகைப்படுத்தப்படாத வார்த்தைகள். ரோஹித் ஷர்மாவிடமுள்ள அழகு தோய்த்த நேர்த்தியான பேட்டிங்கை, ருத்துராஜிடமும் பார்க்க முடிவதைப் போன்றே, பந்துகளை வீணடிக்காத பொறுப்புணர்வையும் அவரிடம், நிரம்பவே பார்க்க முடியும். விக்கெட் நின்றுவிட்டால் போதும், பின்வரிசை வீரர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற அஜாக்கிரதையினை பூதக் கண்ணாடி அணிந்து பார்த்தாலும் ருத்துராஜின் எந்த ஒரு இன்னிங்ஸிலும் காண முடியாது. கண் இலக்கின் மேல் இருக்கும், கவனம் ரன்ரேட்டின் மேல் இருக்கும், கால்கள் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து கொண்டே இருக்கும்.

இறுதிவரை நின்று விடுவார் என்றாலும், ஆட்டமிழந்தாலும் கூட பின்வரிசை வீரர்களுக்கான பளு, பன்மடங்கு குறைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக அணி அடித்திருந்த 1462 ரன்களில் 43 சதவிகிதம் ரன்களை ஒற்றை ஆளாக ருத்துராஜ் மட்டுமே அடித்துள்ளார். அதோடுகூட, சராசரியாக உத்தரகாண்டுக்கு எதிரான போட்டி தவிர்த்து, மற்ற போட்டிகளில் 38 ஓவர்கள் வரை களத்தில் நின்றுள்ளார். ஓப்பனராக இறங்கும் வீரரிடம், இதைத் தவிர்த்து ஓர் அணியின் எதிர்பார்ப்பு, வேறு என்னவாக இருந்து விடப் போகிறது?!

ஐபிஎல்லில், சுழல்பந்துகளை எளிதாக எதிர்கொள்ளும் ருத்துராஜ், வேகப்பந்து வீச்சை எதிர் கொள்ள, சற்றே திணறுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 'வேகம் உனக்கு, ஸ்பின் எனக்கு', என்ற அவருக்கும், டு ப்ளஸ்ஸிஸுக்கும் இடையிலான புரிந்துணர்வு கூட, சில சமயம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு விஜய் ஹசாரே தொடரில், வேகப்பந்து வீச்சுக்கும் சுழலுக்கும் சமமான பதில் மரியாதை ருத்துராஜால் தரப்பட்டு சிறப்பாகக் கவனிக்கப்பட்டது.

வேகமும் அவரை மிரளச் செய்யவில்லை, ஸ்லோ கட்டர்களும் ஸ்தம்பிக்க வைக்கவில்லை. ஷார்ட் பால்களில் அவர் அடித்த இலகுவான புல் ஷாட்டுகள், அதன் நேர்த்தி, டைமிங், எல்லாமே கனகச்சிதமாக அமைந்தன. பேக் ஃபுட்டில் ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் தனி ரகம். சில ஷாட்டுகளை சற்றே துணிந்து, கிராஸ் பேட்டில் ஆடி ரன்களாக மாற்றி இருந்தார். இன்சைட் அவுட் ஷாட்டுகள், இம்மிகூட தப்பவில்லை எனில், டிரைவ்களும், கட் ஷாட்டுகளும் கண்களுக்கு விருந்தாகின. குறிப்பாக, கவர் டிரைவ்கள் ஒவ்வொன்றும் அத்தனை ரசிக்கும்படியாக இருந்தது.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

பெரும்பாலும், இத்தொடர் முழுவதும் லெக் சைடிலும் ஆஃப் சைடிலும் சமமாகவே ரன்களைச் சேர்த்து களம் முழுவதையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கிரவுண்டட் ஷாட்டுகள் மூலமாக ஃபீல்டர்களுக்கு நடுவில் பந்தை அம்பாய்ப் பறக்கவும் வைத்தார். அதே நேரத்தில், வாய்ப்புக் கிடைத்தால், அதனை ஏரியல் ஷாட்டாக ஸ்ட்ரைட்டிலோ, லாங் ஆன், லாங் ஆஃபிலோ சிக்ஸராகவும் மாற்றினார். மொத்தத்தில் பௌலர்களின் இதயத்துடிப்பை, தனது இஷ்டத்திற்கு எகிற வைத்திருந்தார் ருத்துராஜ்.

இப்படி எதிரணியின் சப்த நாடியையும் ஒடுங்கச் செய்தாரே ஒழிய துளியளவு பதற்றம் கூட அவரிடம் இருக்கவில்லை. பக்குவம் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதற்கான சான்று, அவருடைய சதங்கள் நான்கில், மூன்று, சேஸிங்கில் வந்ததுதான். அதிலும் இரண்டு, 300-க்கும் அதிகமான இலக்கைத் துரத்திய போது வந்து சேர்ந்திருந்தது.

'Runs for Fun, Hitting Hundreds is hobby" என்ற கணக்கிலேயே, ரன்களை ருத்துராஜ் குவித்திருந்தார். இந்த சீசனில், அதிக ரன்களுக்கான சாதனை அவர் வசமே உள்ளது. ருத்துராஜ் 603 ரன்களோடு முதலிடத்தில் இருக்க, இரண்டாவது இடத்தில் உள்ள வோஹ்ரா வெறும் 379 ரன்களை மட்டுமே இதுவரை எடுத்துள்ளார். அதிக பவுண்டரிகளை (41) அடித்துள்ள ருத்துராஜ், அந்தப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். அதிகபட்ச ஸ்கோர், அதிக சிக்ஸர்கள், அதிக சதங்கள் என எல்லாப் பட்டியலிலும் டாப் 3 வீரர்களில் ஒருவராக இந்த சீசனை ருத்துராஜ் முடித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளுக்கு முன்னேறினால், கோலி உள்ளிட்டோரின் அதிக சதத்திற்கான சாதனையை கண்டிப்பாக ருத்துராஜ் முறியடித்திருப்பார். ஆனால், ஒரே ஒரு போட்டியில் கிட்டிய தோல்வி, அவர்களை தொடரைவிட்டு வெளியேற்றிவிட்டது.

ருத்துராஜ் கெயிக்வாட்
ருத்துராஜ் கெயிக்வாட்

இருப்பினும், இந்தத் தொடரின் வெற்றிதான், அவருக்காக சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்த குரல்களை சத்தமாக ஒலிக்க வைத்துள்ளது. ஐபிஎல்லில் அவர் காட்டிய ரன் வேட்கை, இலங்கை டி20 தொடரில், வெறும் 35 ரன்களை மட்டுமே சேர்த்ததும், அவரின் மீதான வெளிச்சத்தை மங்கச் செய்தது. அதனை மறுபடி, சுடர்விட்டு எரியச் செய்துள்ளது இந்தத் தங்கத் தீப்பொறி.

"இன்னமும் எவ்வளவு ரன்களைத்தான் அவர் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?! அவருக்கு, ஏற்கனவே, 24 வயது ஆகிறது. 28 வயதில்தான் அவரைத் தேர்ந்தெடுப்பீர்களா?!" என்று பிசிசிஐயை நோக்கி கேள்விக் கணையை முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் தொடுத்துள்ளார். உண்மையில், வயதின் காரணமாக தவான், ரோஹித் ஆகியோரின் கிரிக்கெட் கரியர் முடிவை எட்டுவதால், அவர்களுக்கான மாற்று வீரர்களை இறக்கி வெள்ளோட்டம் பார்க்க வேண்டிய நிலையில்தான் பிசிசிஐ உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் போட்டிகளில் ருத்துராஜ் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர் தவானுக்கான கடைசி வாய்ப்பாக அமையும் என்ற கருத்தும் உலவுகிறது.

தவான் வரும் தொடரில் பெரிதாக ரன் சேர்க்காத பட்சத்தில் ருத்துராஜையே எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பையை கருத்தில் கொண்டு இப்போது இருந்தே தயார் செய்ய வேண்டும் என்ற குரல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ருத்துராஜ் கெயிக்வாட்
ருத்துராஜ் கெயிக்வாட்

ஓப்பனராக ருத்துராஜுக்கு, படிக்கல், ப்ரித்வி என பலமுனைப் போட்டி இருந்தாலும் தற்போது அவருடன் நேரடி மோதலில் ஈடுபடுவது தவான்தான். எடுத்த எடுப்பில், வெளிநாட்டில் அறிமுக வீரரை ஆட வைக்க வேண்டுமா என ஒரு சாரார் போர்க் கொடி தூக்க, விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் வெறும் 56 ரன்களை மட்டுமே எடுத்துள்ள தவானை பிசிசிஐ ஆட வைக்கக் கூடாது என்ற வாதமும் அனல் பறக்கிறது.

ருத்துராஜை அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறை வீரர்களை பிசிசிஐ உருவாக்கத் தொடங்குமா அல்லது இதே தவான், ரோஹித் உள்ளிட்டோர், தேசிய அணியின் ஓப்பனர் ஸ்லாட் காலியாக வருடக்கணக்காகக் காத்திருந்ததைப் போல், ருத்துராஜும் காத்திருக்க வேண்டுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எனினும், அவரது உச்சகட்ட ஃபார்மை இந்தியா பயன்படுத்திக் கொண்டு, அவரை எதிர்காலத்திற்காக பட்டை தீட்ட வேண்டும் என்பதே பலரது விருப்பமும்!