Published:Updated:

Ireland Cricket நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதா? அயர்லாந்தின் வரலாறும் எதிர்காலமும்!

Ireland Cricket team

அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு மிகப்பெரிய நல்வரவாக அமைந்தது உலகக்கோப்பை சூப்பர் லீக் முறை. இந்த அனுபவங்களால் அவர்களின் தவறுகள் மேலும் குறைந்து பெரிய போட்டிகளை நல்லமுறையில் ஆடமுடியும்.

Ireland Cricket நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதா? அயர்லாந்தின் வரலாறும் எதிர்காலமும்!

அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு மிகப்பெரிய நல்வரவாக அமைந்தது உலகக்கோப்பை சூப்பர் லீக் முறை. இந்த அனுபவங்களால் அவர்களின் தவறுகள் மேலும் குறைந்து பெரிய போட்டிகளை நல்லமுறையில் ஆடமுடியும்.

Published:Updated:
Ireland Cricket team
Bazball அணுகுமுறை குறித்த விவாதம் ஒருபுறம் இருக்க கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் மற்றொரு விஷயம் அயர்லாந்து அணியின் சமீபத்திய பெர்மார்மன்ஸ். ‘செத்தாலும் சண்ட போட்டு சாவணும் சார்!’ என்பது போல அயர்லாந்து அணி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் தீராத போராட்டக்குணத்தை வெளிக்காட்டி வருகிறது. அயர்லாந்து அணியின் இந்த எழுச்சி சாத்தியமானது எப்படி? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள அயர்லாந்து கிரிக்கெட்டின் தொடக்கக் காலத்தைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
Ireland Cricket team
Ireland Cricket team
Mike Hewitt

அயர்லாந்தில் கிரிக்கெட்!

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அயர்லாந்து நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு ஆடப்பட்டது. உள்ளூர் அளவில் மட்டுமே விளையாடப்பட்ட கிரிக்கெட் 1850-களில் நாடு முழுவதும் பரவ தொடங்கியது. ஒரு கட்டத்தில் பணம் படைத்த நிலபிரபுகளால் நிரம்ப ஆரம்பித்து, பின்னர் அவர்களின் கைகளுக்குள் சென்றது. GAA எனப்படும் Gaelic Athletic அச்சொசியாடின் 1902-ல் கடுமையான சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி GAA வீரர்கள் இங்கிலாந்து சார்ந்த விளையாட்டுகளான கிரிக்கெட், ரக்பி, கால்பந்து ஆகியவற்றில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. 1923-ம் ஆண்டில் Irish Cricket Union ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி ஒரு அணியை அமைத்து இங்கிலாந்தின் கவுன்ட்டி, MCC மற்றும் ஸ்காட்லாந்து போன்ற அணிகளுடன் விளையாடுவது என முடிவு செய்யப்பட்டது. 1980-களில் தொழில்முறை சார்ந்த ஆட்டங்களில் ஆட ஆரம்பித்த அயர்லாந்து அணி ஐசிசியின் இணை நாடாக (Associate nation) 1993-ம் ஆண்டில் சேர்ந்தது. ஆனால் 1996-2003 வரையிலான உலகக்கோப்பைக்கான தகுதி ஆட்டங்களில் தோல்வியே சந்தித்து வந்தது. அப்போதெல்லாம் கென்யா, கனடா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் அதிகம் தகுதி பெற்றன.

2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பைக்குத்தான் முதல் முறையாகத் தகுதி பெற்றது அயர்லாந்து. ஜிம்பாப்வே உடனான முதல் போட்டி டை. ஆனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கும் முன்னேறி ஆச்சரியப்படுத்தியது அயர்லாந்து. அடுத்ததாக 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்தை எதிர்கொண்டது அயர்லாந்து. அப்போட்டியில் வெறும் 50 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து அணி நிர்ணயித்த இமாலய ஸ்கோரை எட்டிப்பிடிக்கச் செய்த கெவின் ஓ பிரெய்னின் இன்னிங்ஸ் இன்னமும் நம் நினைவுகளில் அப்படியே இருக்கிறது. இன்றுவரை உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக சதமும், அதிகபட்ச சேஸும் அதுதான். அதேபோல 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

பின்னர் நெதர்லாந்து, ஆப்கன், ஸ்காட்லாந்து போன்ற இணை நாடுகளுடன் மட்டுமே அதிக அளவிலான போட்டிகளை விளையாடியது அயர்லாந்து. நடுவே டெஸ்ட் அந்தஸ்து அணிகளுடன் சம்பிரதாயத்திற்கு சில போட்டிகள். அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் இப்படியாகச் சென்று கொண்டிருக்க 2017-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது அந்த அணி. பின்னர் 2018-ம் ஆண்டில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியைப் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. ஃபாலோ ஆன் பெற்று ஆடிய அந்த அணியின் முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் கெவின் ஓ பிரெய்ன்.

போட்டியைப் பாகிஸ்தான் வெல்ல ஆட்டநாயகன் விருது கெவினுக்குத் தரப்பட்டது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அந்த அணியை 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி ஆச்சரியப்படுத்தியது. இங்கும் அயர்லாந்துக்குத் தோல்விதான் என்றாலும் அந்த அணியின் ஆட்டத் திறனை விளக்குவதாக அமைந்தது இப்போட்டி. 2020-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் ஆடிய அந்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெறவும் செய்தது. பின்னர் இங்கிலாந்து சென்று ஒருநாள் தொடரில் விளையாடிய அயர்லாந்து தொடரை இழந்துவிட்ட நிலையில் மூன்றாவது போட்டியில் 329 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்றது.

சவாலளிக்கும் அயர்லாந்து!

அயர்லாந்து அணி தற்போது இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகளுக்குக் கடுமையான சவாலை அளிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் அனுபவம். அந்த அணியின் தூண்களாக இருந்த, இருக்கும் வீரர்களான ஸ்டெர்லிங், பால்பிர்னி, போர்ட்டர்பீல்ட், பிரையன் சகோதரர்கள், டிரன்ட் ஜான்சன், டாக்கெரல், முர்டாக், ரான்கின் போன்றோர் கவுன்ட்டி போட்டிகள் மற்றும் உலக அளவில் டி20 தொடர்களில் பங்கேற்று அதன் அனுபவத்தையும் இங்குக் கொண்டு வந்து சேர்கின்றனர். இவர்களுள் சிலர் இந்த அணியுடன் ஒரு தசாப்தத்தைப் பகிர்ந்துள்ளனர்.

Kevin O'Brien
Kevin O'Brien

நிலையற்ற தன்மை!

இது போன்ற நிலையான ஆட்டத்தை அயர்லாந்து அணி வெளிப்படுத்துவது இதுவே முதன்முறை. உலகக்கோப்பை தொடர்களுக்குத் தொடர்ந்து தேர்வாகி வந்தாலும் 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றில் வெறும் 14 ஓவர்களில் நெதர்லாந்து அணியை 190 ரன்கள் அடிக்க விட்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் போன்ற மற்ற அணிகளோடும் வெற்றி, தோல்வி என மாறி மாறிதான் முடிவுகள் கிடைத்தன.

ஆப்கானிஸ்தானிடம் ஒரு காலத்தில் வெற்றி மட்டும் பெற்று வந்த அயர்லாந்து, பின்னர் தொடர்ந்து தொடர்களை இழக்கத் தொடங்கியது. முஜீப் மற்றும் ரஷித் கானின் வருகையே இதற்குக் காரணம். 2015-ம் ஆண்டிலிருந்து ஒரேயொரு நேரடி தொடரில் மட்டுமே ஆப்கானிஸ்தானை வென்றிருக்கிறது அயர்லாந்து. அதேபோல இந்தியாவின் அனுபவம் வாய்ந்த குல்தீப் - சஹாலிடம் 2018-ல் திணறிய அயர்லாந்து 2022-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பிரமாதப்படுத்திய பிஷ்னாயின் கூக்ளிகளை அட்டாக் செய்ததற்கு இந்த அனுபவமே முக்கிய காரணம்.

ஐ.பி.எல் தொடரில் இல்லவே இல்லை!

அயர்லாந்து செய்யும் சேஸிங்களில் ஸ்டெர்லிங் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அவர் மீது இதுவரை எந்தவொரு ஐ.பி.எல் அணிகளின் கவனமும் விழவில்லை. இதற்கான காரணம் ஒரு புரியாத புதிராக உள்ளது. அதேபோல பால் ஸ்டெர்லிங் பல ஆண்டுகளாகத் தேசிய அணிக்கு மட்டுமில்லாமல் தான் பங்கேற்கும் டி20 தொடர்களிலும் சிறப்பாகவே ஆடி வருகிறார். ஆனால் அவருக்கு ஐ.பி.எல் தொடரில் இடமில்லை. நெதர்லாந்து மற்றும் நேபாள நாட்டு வீரர்கள் கூட இத்தொடரில் பங்கேற்கின்றனர். அடுத்த முறையாவது அயர்லாந்து வீரர்களுக்கு ஐ.பி.எல் வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம்.

Ireland Cricket
Ireland Cricket

கவனம் செலுத்த வேண்டிய இடங்கள்:

அயர்லாந்து அணியிடம் இன்றுவரை ஒரு தரமான லெக் ஸ்பின்னர் இல்லை. டாக்ரெல் மற்றும் சிமி சிங் எனச் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களால் முஜீப், ரஷித் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒரு டெஸ்ட் அணியாக மாறிய பின் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாட வேண்டி இருக்கும். எனவே ஒரு நல்ல லெக் ஸ்பின்னர் அயர்லாந்து அணிக்காக முதன்மை தேவை. அதேபோல, நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய போட்டியில் இறுதி ஓவரில் 20 ரன்கள் தேவை என்றபோது அயர்லாந்து அணியே வெற்றிபெறும் என்று அனைவரும் நினைத்திருப்பர். ஆனால், யங் வீசிய சில பந்துகள் ஸ்லாட் ஏரியாவில் விழ, ஆட்டத்தை நியூசிலாந்துக்குச் சாதகமாக முடித்தார் பிரேஸ்வெல். அதேபோல மூன்றாவது போட்டியில் சரியாக ஃபினிஷ் செய்ய முடியாமல் ஒரு ரன்னில் ஆட்டத்தை இழந்தனர்.

அயர்லாந்து அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு மிகப்பெரிய நல்வரவாக அமைந்தது உலகக்கோப்பை சூப்பர் லீக் முறை. 8 அணிகளுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பது அதன் விதிமுறை. இந்த அனுபவங்களால் அவர்களின் தவறுகள் மேலும் குறைந்து பெரிய போட்டிகளை நல்லமுறையில் ஆடமுடியும்.

வாழ்க்கையில் பொறுப்பு என்பது கூடுமே தவிரக் குறையாது என்பார்கள். அதுபோல தற்போதுள்ள ஸ்டெர்லிங், பால்ப்ரினி போன்ற வீரர்களின் தோள்களிலிருந்த பொறுப்பு என்பது டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின் மேலும் அதிகரிக்கச் செய்தது. பிரையன் சகோதர்கள், போர்ட்டர்பீல்ட் போன்ற சீனியர் வீரர்கள் சென்ற பிறகும் அது மேலும் அதிகரித்தது. சமீபத்தில் கவனம் ஈர்த்த டெக்கர், சிமி சிங், யங், மார்க் அடெயர் போன்ற தளபதிகளை வைத்துக் கொண்டு அந்த அணியைப் பலப்படுத்த வேண்டும். நிலையற்ற தன்மை, லெக் ஸ்பின்னர் இல்லாமை போன்ற குறைகள் களையப்பட வேண்டும். அப்படிச் செய்தால் சொந்த மண்ணில் மற்ற அணிகளுக்குச் சவாலளிக்கும் இவர்கள் விரைவில் வெளிநாடுகளிலும் தொடர்களை வெல்ல ஆரம்பித்து, ஐசிசி தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதுபோன்ற வளர்ந்து வரும் அணிகள் பெறும் வெற்றிகள் அவர்களுக்கானது மட்டுமல்ல, அவை மொத்த விளையாட்டிற்குமான தேவையும் கூட!