Published:Updated:

வஞ்சிக்கப்பட்டாரா முகமது அமீர்... ஸ்விங் மன்னனின் எழுச்சியும் வீழ்ச்சியும்! #Amir

#Amir

தனது அபாரமான ஸ்விங் திறமையினாலும், யார்க்கர்களினாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த அமீரின் எழுச்சி எழுந்துவேகத்திலேயே வீழ்ந்துவிட்டதுதான் சோகம்.

வஞ்சிக்கப்பட்டாரா முகமது அமீர்... ஸ்விங் மன்னனின் எழுச்சியும் வீழ்ச்சியும்! #Amir

தனது அபாரமான ஸ்விங் திறமையினாலும், யார்க்கர்களினாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த அமீரின் எழுச்சி எழுந்துவேகத்திலேயே வீழ்ந்துவிட்டதுதான் சோகம்.

Published:Updated:
#Amir
அடுத்த வாசிம் அக்ரம் என கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் முகமது அமீர் ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார்.

"பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தாலும் சக வீரர்களாலும் ஏற்பட்ட மன உளைச்சலால் வெளியேறுகிறேன்" என மனம் திறந்திருக்கும் அமீருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ஆதரவு குவிந்துவருகிறது. அமீரின் ஓய்வு அறிவிப்பு முன்னாள் மற்றும் இந்நாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான கருத்து மோதலாகவும் மாறியிருக்கிறது. முகமது அமீருக்கு இப்போது வெறும் 28 வயதுதான் என்பதோடு 18 வயதில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் சிக்கி 5 வருட தடை பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது அபாரமான ஸ்விங் திறமையினாலும், யார்க்கர்களினாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த அமீரின் எழுச்சி எழுந்துவேகத்திலேயே வீழ்ந்துவிட்டதுதான் சோகம். 2009-ம் ஆண்டு தன்னுடைய 17 ஆவது வயதில் பாகிஸ்தானுக்காக விளையாடத் தொடங்கிய அமீர், அறிமுக ஆண்டிலேயே 55 விக்கெட்டுகளை வீழ்த்தி, எல்லோரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார்.

#Amir
#Amir

2009-ம் ஆண்டு பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையை வென்றதில் இவரது பங்கு முக்கியமானது. குறிப்பாக இறுதிப் போட்டியில், தனது முதல் ஓவரிலேயே, அந்தத் தொடரின் நாயகன் தில்ஷனின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் அமீர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு வெற்றி சுலபமானது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுமட்டுமல்லாமல் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தானை வெற்றிபெறவைத்தார் அமீர். 15 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலியாவை, பாகிஸ்தான் வீழ்த்திய டெஸ்ட் போட்டி இது.

சென்ற இடத்தில் எல்லாம் விக்கெட் வேட்டை நடத்தி, அற்புதமாக ஜொலித்து, பாகிஸ்தானின் வெற்றிப் பக்கங்களில் தன் பெயரை எழுதிக் கொண்டிருந்த அமீருக்கு, கெட்ட நேரம் ஸ்பாட் ஃபிக்சிங் வடிவத்தில் வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் இது நிரூபிக்கப்பட, ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். அப்போது அமீருக்கு வயது 18. இது மட்டுமல்லாமல் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் அமீருக்கு வழங்கப்பட்டது.

பல அவமானங்களைச் சந்தித்த அவருக்கு தடைக்காலம் முடிய சில மாதங்கள் இருந்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொண்டது. 2015-ல் கம்பேக் கொடுத்தார் அமீர்.

#Amir
#Amir
Charles McQuillan

2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், ரோஹித் ஷர்மா, தவான், கோலி ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை சாம்பியனாக்கினார் அமீர். பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறத் தவறிய 2019 உலகக் கோப்பையிலும், பாகிஸ்தானின் லீடிங் விக்கெட் டேக்கர் அமீர்தான்.

இப்படி தொடர்ந்து மேட்ச் வின்னராக மகுடம் சூடிக் கொண்டிருந்த அமீர் கடந்தாண்டு ஜுலையில், ஒயிட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லங்கா கிரிக்கெட் லீக் வரை பல்வேறு தொடர்களிலும் விளையாடிக் கொண்டிருந்த அவர், நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில், அனைத்து ஃபார்மேட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

அமீரின் ஓய்வறிவிப்பில் அவர் கூறியிருக்கும் காரணங்கள் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அமீர், தான் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் உதாசீனப்படுத்தப்பட்டதாகவும், பெளலிங் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ், பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் சக வீரர்கள் என எல்லாத் தரப்பாலும் தான் அவமானப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஏற்படுத்திய மன உளைச்சல்தான், ஓய்வு அறிவிப்புக்குக் காரணம் எனச் சொல்லியிருக்கிறார். ஷாகித் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் நாஜம் சேதி மட்டும்தான் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் அமீர் சேர்க்கப்படவில்லை. அதேபோல் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடரிலும் அமீர் நிராகரிக்கப்பட்டார். தொடர் புறக்கணிப்புதான் அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்புக் காரணம் எனத் தெரிகிறது.
#Amir
#Amir

ஷோயப் அக்தர், ரமீஸ் ராஜா, இன்சமாம், அஃப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அமீர் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும், அவருக்குச் சரியான ஆலோசனைகளை வழங்கி பாகிஸ்தான் அணிக்குத் திரும்ப ஆட வைக்க வேண்டும், இளம் வயதில் ஒரு வீரரை ஒய்வு பெற வைப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்லதில்லை எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதுவரை 259 விக்கெட்டுகளை பாகிஸ்தானுக்காக அனைத்து ஃபார்மேட்டிலும் எடுத்திருக்கும் அமீரின் பயணம் பல சர்ச்சைகளுடன் முடிந்திருக்கிறது. ஆனால், அமீரின் மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருப்பதால், தொடர்ந்து கவுன்ட்டி போட்டிகளில் விளையாடுவேன் எனச் சொல்லியிருக்கிறார் அமீர்.