கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
News
விராட் கோலி

பேட்டிங் ஸ்ட்ராங், பெளலிங் வீக் என்கிற காம்போவோடுதான் உலகக்கோப்பைகளில் களமிறங்குவது இந்தியாவின் வழக்கம்.

ஆனால் இந்தமுறை டாப் ஆர்டர் பிரமாதம், மிடில் ஆர்டர் கொஞ்சம் வீக், பெளலிங் சூப்பர் என இதுவரை இல்லாத காம்போவோடு, உலகின் நம்பர் ஒன் அணியாக உலகக்கோப்பைக்குள் அடியெடுத்துவைத்தது இந்தியா. இந்தியாதான் உலகக்கோப்பையின் ஃபேவரிட்ஸ், இந்தியாவும் - இங்கிலாந்தும்தான் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் என்கிற கணிப்புகளோடுதான் உலகக்கோப்பை தொடங்கியது. ஆனால் தவானின் திடீர் காயம், கடைசிவரை மிடில் ஆர்டரை கவனிக்காமல் விட்டது, வழக்கம்போல முக்கியமான கட்டங்களில் கேப்டன்- கோச்சின் தவறான முடிவுகள் என மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தோற்று வெளியேவந்திருக்கிறது இந்தியா.

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

அசத்திய பெளலிங் யூனிட்!

எந்த உலகக்கோப்பைகளிலும் இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பான பந்துவீச்சைக் கொண்டிருந்தது இந்திய அணி. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல்போட்டியிலேயே இந்தியாவின் பெளலிங் யூனிட் இந்த உலகக்கோப்பையில் எப்படியிருக்கப்போகிறது என்பதை உலகம் உணர்ந்துவிட்டது. 100 ரன்களைத் தொடுவதற்குள்ளாகவே தென் ஆப்ரிக்காவின் ஐந்து விக்கெட்டுகளை சரித்தது பும்ரா-சஹால்-குல்தீப் கூட்டணி. இறுதியில் 50 ஓவர்களில் வெறும் 227 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை சுருட்டியது பும்ரா, புவனேஷ், குல்தீப், சஹால் அடங்கிய பெளலிங் யூனிட். சஹால் நான்கு விக்கெட்டுகளை சரித்தார்.

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என முதல் இரண்டு போட்டிகள் வரை பும்ரா, புவனேஷ் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர், ஹர்திக் பாண்டியா எனும் மிதவேகப்பந்து வீச்சாளர், சஹால்- குல்தீப் என இரண்டு ஸ்பின்னர்கள், தேவைப்பட்டால் ஆறாவது பெளலராக கேதர் ஜாதவ் என்பதுதான் இந்தியாவின் பெளலிங் யூனிட்டாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தவான் காயத்தால் ப்ளேயிங் லெவன் மாறியது. தவானுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர் அணிக்குள் வந்தார்.

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

இது கோலி- சாஸ்திரி இருவருமே எதிர்பார்க்காத பலனைத் தந்தது. தன்னுடைய மூன்றாவது ஓவரின் நான்கு பந்துகளை வீசியநிலையில் காயமடைந்து புவனேஷ்வர் குமார் வெளியேற, மீதி இரண்டு பந்துகளை வீசினார் அணிக்குள் புதுவரவான விஜய் ஷங்கர். இரண்டு பந்துகள் வீசவந்த விஜய் ஷங்கரின் ஓவரில்தான் பாகிஸ்தானின் முதல் விக்கெட் விழுந்தது. இந்தப்போட்டியில் புவனேஷ்-பும்ரா என இருவேகப்பந்து வீச்சாளர்கள், ஷங்கர்- பாண்டியா என இரு மிதவேகப்பந்து வீச்சாளர்கள், சஹால்-குல்தீப் என இரண்டு ஸ்பின்னர்கள் என 6 பெளலர்களைப் பயன்படுத்தினார் கோலி. கேதர் ஜாதவ் அணிக்குள் இருந்தாலும் அவரைப் பந்துவீசவைக்கும் அவசியம் கோலிக்கு அன்று ஏற்படவில்லை.

நான்காவது போட்டிதான் இந்தியாவின் பெளலிங் யூனிட்டின் தரத்தை பரிசோதித்தப்போட்டி. முதலில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த டார்கெட் வெறும் 225 ரன்கள்தான். இதனால் பெளலிங் மட்டுமே காப்பாற்றவேண்டும் என்கிற சூழலில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மொகமது ஷமி அணிக்குள் வந்தார். ஷமி-பும்ரா, சஹால்- குல்தீப், ஹர்திக் என ஐந்து பெளலர்களை மட்டுமே இந்தப்போட்டியில் பயன்படுத்தினார் கோலி. விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ் இருவரையுமே பந்துவீச கோலி பயன்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் 213 ரன்களில் ஆல் அவுட் ஆக தப்பித்தது இந்தியா. இந்தப்போட்டியில் ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவதுப் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றங்களும் இல்லை. ஷமி,பும்ரா, பாண்டியா, சஹால், குல்தீப் என ஐந்து பெளலர்களைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினார் கோலி. ஜாதவுக்கு 1 ஓவர் கொடுக்கப்பட்டது. விஜய் ஷங்கருக்கு அதுவும் இல்லை. இந்தப்போட்டியிலும் 4 விக்கெட்டுகளை எடுத்து ஷமி தனது இருப்புக்கு நியாயம் செய்தார். இந்திய பெளலர்களுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணிதான். 337 ரன்கள் அடித்தார்கள். இந்தப் போட்டியில் விஜய் ஷங்கருக்கு பதிலாக பன்ட் அணிக்குள் கொண்டுவரப்பட கோலிக்கு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் என்கிற காம்போவோடே களமிறங்கினார் கோலி. இந்தப்போட்டியிலும் கேதர் ஜாதவை பந்துவீசவைக்கவில்லை. ஷமி இந்தப்போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். சஹால், குல்தீப் என இரண்டு ஸ்பின்னர்களையுமே துவைத்தெடுத்தார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். சஹால் 10 ஓவர்களில் 88 ரன்கள் கொடுக்க, குல்தீப் 72 ரன்கள் கொடுத்தார்.

இங்கிலாந்து பெளலர்கள் ஸ்பின்னர்களை சரமாரியாக அடித்து நொறுக்கியதால் வங்கதேசத்துக்கு எதிரான அடுத்தப்போட்டியில் குல்தீப் அணியில் இருந்து தூக்கப்பட்டார். இரண்டு போட்டிகளாக பந்துவீசாமலும், பேட்டிங்கில் பெரிதும் எடுபடாமல் இருந்த கேதர் ஜாதவ் வெளியேற்றப்பட்டு தினேஷ் கார்த்திக் அணிக்குள் வந்தார். புவனேஷ்வர் காயம் குணமாகி உள்ளே வர பும்ரா-புவனேஷ்-ஷமி என மூன்று வேகப்பந்து வீச்சாளர், பாண்டியா, சஹால் என ஐந்து பெளலர்களுடன் மட்டுமே களமிறங்கியது இந்தியா. வங்கதேசம் இந்தியாவின் டார்கெட்டை சற்று நெருங்கிவந்தாலும் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார் பும்ரா. பாண்டியா இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இலங்கைக்கு எதிரான கடைசிப்போட்டியில் மீண்டும் ஒரு மாற்றம். சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட ஜடேஜா அணிக்குள் வந்தார். சஹாலுக்கு ஓய்வளிக்கப்பட்டு குல்தீப் அணிக்குள் வந்தார். புவனேஷ்-பும்ரா, பாண்டியா, ஜடேஜா- குல்தீப் என மீண்டும் ஐந்து பெளலர்களுடன் மட்டுமே களத்துக்கு வந்தது இந்தியா. பும்ரா 3 விக்கெட்டுகள் எடுக்க, மற்ற பெளலர்கள் தலா 1 விக்கெட் எடுக்க இலங்கையை 264 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். மொத்தமுள்ள 9 லீக் போட்டிகளில் நியூஸிலாந்துக்கு எதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 8 போட்டிகளில் விளையாடியது இந்தியா. 8 போட்டிகளிலுமே பெளலர்களை மாற்றிப்பார்த்து சோதித்தது கோலி- சாஸ்திரி கூட்டணி. ஆனால், இந்த 8 லீக் போட்டிகளின் முடிவில் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து வித்தியாசமான முடிவை எடுத்தது இக்கூட்டணி. முக்கியமான அரையிறுதிப்போட்டியில் ஷமி அணிக்குள் சேர்க்கப்படவில்லை. பும்ரா-புவி, பாண்டியா, சஹால்- குல்தீப் என ஐந்து பெளலர்களுடனேயே களமிறங்கியது. இந்தப்போட்டியில் நியூஸிலாந்து பெரிதாக ரன்கள் அடிக்கவில்லையென்றாலும் டெய்லர்-கேன் வில்லிம்சனின் கூட்டணியைப் பிரிக்க இன்னொரு எக்ஸ்ட்ரா பெளலர் கோலிக்குத்தேவைப்பட்டார். அந்த இடத்தை ஷமி சரியாக நிரப்பியிருக்கக்கூடும். ஆனால் தவறான முடிவால் இந்த வாய்ப்பு மிஸ் ஆனது. இந்தியாவிடம் சரியான பெளலர்கள் இருந்தும் அதை முழுமையாக, சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டது கோலி- சாஸ்திரி கூட்டணி.

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

பேட்ஸ்மேன்களுக்கு பேக் அப் இல்லை!

ரோஹித் -தவான் ஓப்பனிங், கோலி- ராகுல், தோனி-பாண்டியா- கேதர் ஜாதவ் என்பதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டராக இருந்தது. நீண்டநாட்களாக நான்காவது பேட்ஸ்மேன் யார் என்கிற கேள்விக்கு ராகுல்தான் அந்த நம்பர் 4 என்றார்கள். ஆனால் உலகக்கோப்பை தொடங்கிய இரண்டாவது போட்டியிலேயே தவான் காயமடைந்துவிட, ரோஹித்துடன் ஓப்பனிங் ஆடப்போவது யார் என்கிற கேள்விவந்தது. கே.எல் ராகுல் ஓப்பனிங் ஆடுவார் என்று சொல்லிவிட்டு அவர் இடத்துக்கு விஜய் ஷங்கர் வரவழைக்கப்பட்டார். விஜய் ஷங்கரால் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்று நன்மைகள் என்று சொன்னது தேர்வு வாரியம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டார். இந்தியா கிட்டத்தட்ட 300 ரன்களை நெருங்கிவிட்ட நிலையில்தான் அவர் களத்துக்கு வந்தார். 15 பந்துகளை சந்தித்தவர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 15 ரன்கள் எடுத்தார். 5 ஓவர்கள் வீசியவர் 2 விக்கெட்டும் எடுத்தார். முதல் போட்டியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். இன்னிங்ஸை பில்ட் செய்திருக்கவேண்டியவர் டாட் பால்கள் ஆடி கோலிக்குப் பிரஷர் கொடுத்தார். முக்கியமான கட்டத்தில் 41 பந்துகளில் 29 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இந்தப்போட்டியில் விஜய் ஷங்கரைப் பந்துவீச்சுக்கும் கோலி பயன்படுத்தவில்லை.

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் 4-வது வீரராகக் களமிறக்கப்பட்டார் விஜய் ஷங்கர். மீண்டும் ஏமாற்றமே 19 பந்துகளில் 14 ரன்கள் அடித்தார். இந்தப்போட்டி முடிந்த சிலநாட்களிலேயே விஜய் ஷங்கருக்கு காயம் என அறிவிக்கப்பட்ட ரிஷப் பன்ட் அணிக்குள் வந்தார். கோலி இவர்தான் அடுத்த 4-வது வீரர் என அடையாளம் காட்டினார். இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் 32 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 41 பந்துகளில் 48 ரன்கள், இலங்கைக்கு எதிராக 4 ரன்களில் அவுட், அரையிறுதிப்போட்டியில் 56 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார் பன்ட்.

இந்தியா விளையாடிய 9 போட்டிகளில் மூன்று முறை நம்பர் 4 இடங்கள் மாறிவிட்டன. தவான் காயமடையாமல் இருந்திருந்தால் கே.எல்.ராகுல் தொடர்ந்து 4-வது இடத்தில் ஆடியிருக்கக்கூடும். ஆனால் 2015 உலகக்கோப்பைக்குப்பிறகில் இருந்தே நம்பர் 4-க்கான இடத்தை பல வீரர்களைக் கொண்டு சோதித்த தேர்வுக்குழு, கோலி- சாஸ்திரி கூட்டணி அந்த சோதனை முயற்சிகளை உலகக்கோப்பையிலும் செய்ததுதான் சறுக்கல்.

பேட்டங் ஆர்டர் குழப்பம்!

எவ்வளவு பெரிய போட்டியாக இருந்தாலும் சரி, சூழல்கள் மாறினாலும் சரி இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் பேட்டிங் ஆர்டரில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஒரேயொருப் போட்டியில் மோர்கனுக்கு முன்பாக ஜோஸ் பட்லர் இறக்கப்பட்டார். அதுவும் ஸ்லாக் ஓவர்கள் என்பதால் அவர் இறக்கிவிடப்பட்டார். நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரைப் பெரும்பாலும் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவேயில்லை. 3-ம் இடம் என்றால் கேன் வில்லியம்சன், நான்காவது இடம் ராஸ் டெய்லர், அடுத்து லாத்தம், நீஷம் என இந்த இடத்துக்கு இவர்தான் என செட் செய்துவிட்டார்கள். அதில் அவர்கள் மாற்றத்தையே செய்யவில்லை. ஆனால் இந்திய அணியில் அப்படியில்லை. பேட்டிங் ஆர்டர் மாறிக்கொண்டேயிருந்தது. தோனி எந்த இடத்தில் ஆடவேண்டும் என்பதை கோலி- சாஸ்திரி காம்போ முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு இடத்தில் இறக்கப்பட்டார்.

2019 உலகக்கோப்பை... கோலி & கோ சறுக்கலுக்கு காரணம் யார்?!

முதல் நான்கு போட்டிகளில் 5-வது வீரராகக் களமிறங்கப்பட்டார் தோனி. அதாவது பாண்டியா, கேதர் ஜாதவுக்கு முன்பாக. ஆனால் இதுவே காரணம் இல்லாமல் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரானப் போட்டியில் மாறியது. கேதர் ஜாதவ் ஐந்தாவது வீரராக இறங்க, தோனி ஆறாவது இடத்துக்குதள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியிலும் இதுவே தொடர்ந்து பாண்டியாவுக்கு அடுத்து ஆறாவது வீரராகக் களமிறங்கினார். அடுத்தப்போட்டியிலும் இது தொடர்ந்து.

லீக் போட்டிகள் வரை ஐந்தாவது, ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய தோனியை அரையிறுதிப்போட்டியில் இன்னும் பின்னுக்குத்தள்ளி 7-வது வீரராகக் களமிறக்கியது கோலி- சாஸ்திரி காம்போ. இந்தியாவின் வெற்றிபறிபோக இது மிக முக்கியமானக் காரணம். அதாவது 4-வது ஓவரிலேயே 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ராகுல், ரோஹித், கோலி என முதல் மூன்று பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டது இந்தியா. இந்த இடத்தில் இன்னிங்ஸை பில்ட் செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர் களமிறக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பன்ட், கார்த்திக், பாண்டியா என அதிக அனுபவம் இல்லாத வீரர்கள் அடுத்தடுத்து இறக்கப்பட்டனர். தோனி பின்னுக்குதள்ளப்பட்டார். தோனி தன் சீனியாரிட்டியைப் பயன்படுத்தி சரியாக ஆடியிருக்கக்கூடிய ஆட்டம் இது. ஆனால் அணியின் நிர்வாக முடிவுகள் தவறாக இந்தியாவின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.

உலகின் நம்பர் -1 என பெருமைப்பட்டுக்கொண்டாலும் பிரச்னைக்குரிய எந்த ஏரியாவுக்கும் சரியான முடிவுகளை எடுக்காமல் உலகக்கோப்பைக்கு போனதிலேயே இந்தியாவின் சிக்கல் ஆரம்பமாகிவிட்டது. லீக் ஆட்டங்கள் ஒவ்வொன்றாக முடிய முடிய அணிக்குள் இருக்கும் காயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது. அப்போதும் காயங்களுக்கு மருந்துபோடமால் தொடர்ந்து வெற்றிகள் கிடைத்ததால் அசால்ட்டாக விட்டது இந்தியாவின் கேப்டன் - கோச் கூட்டணி. அவர்கள் இழைத்தத்தவறு மீண்டும் ஒருமுறை இந்தியாவை அவமானகரமான தோல்வியுடன் உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றியிருக்கிறது!