Published:Updated:

மூன்று ஃபார்மேட் கிரிக்கெட்டிலும் இந்தியாதான் டாப்... ஆனால், 8 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லையே ஏன்?

கேன் வில்லியம்சன் - கோலி அண்ட் கோ

ஒரு ஐசிசி கோப்பைக்காக, நாள்கள் அல்ல, வாரங்கள் அல்ல, வருடக்கணக்காகக் காத்திருக்கின்றனர் இந்தியர்கள்.

Published:Updated:

மூன்று ஃபார்மேட் கிரிக்கெட்டிலும் இந்தியாதான் டாப்... ஆனால், 8 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லையே ஏன்?

ஒரு ஐசிசி கோப்பைக்காக, நாள்கள் அல்ல, வாரங்கள் அல்ல, வருடக்கணக்காகக் காத்திருக்கின்றனர் இந்தியர்கள்.

கேன் வில்லியம்சன் - கோலி அண்ட் கோ
2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, கனவுக்கோப்பை இந்தியாவுக்கு வெறும் கனவாக மட்டுமே உள்ளது. எங்கே சறுகினோம், தவற விடப்பட்ட எக்ஸ் ஃபேக்டர்கள் என்னென்ன?

2013-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா தவறவிட்டுள்ள, ஆறாவது ஐசிசி கோப்பை இது. இதில் மூன்றை தோனி தவறவிட, மூன்றில் கோலி கோட்டை விட்டுள்ளார். அதிலும், 2017-ல் சாம்பியன்ஸ் டிராபியிலும், தற்போதும், இறுதிப்போட்டி வரை முன்னேறி, தோல்வியைத் தொட்டுள்ளது இந்தியா. டெஸ்ட் கிரிக்கெட்தான், கிரிக்கெட்டின் மிக உயர்ந்த உன்னத ஃபார்மேட் என்பதும், அதை முதன்முறையாக வெல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டதும்தான், ரசிகர்களுக்கிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நியூசிலாந்து, இந்தியா இரண்டுமே, 2013 - 2014 ஆண்டு காலகட்டங்களில், எட்டாவது, ஏழாவது இடத்தில் இருந்த அணிகள்தான். அந்த அதள பாதாளத்திலிருந்துதான், அணியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து, முதலிடத்திற்கு முன்னேறி, நியூசிலாந்தை வீழ்த்தி, 2016-ல் டெஸ்ட் மேட்சை வெல்ல வைத்தார் கோலி. அதையே மறுபடியும் திரும்ப இப்போது இந்தியாவுச் செய்துள்ளார் வில்லியம்சன்.

WTC Final
WTC Final
Ian Walton

அதற்காக அவர்கள் எந்த அளவு தயாரிப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதை போட்டியின் ஒவ்வொரு அங்குலத்திலும் காண முடிந்தது‌. எழவே முடியாதவாறு நியூசிலாந்து அடிக்க, இந்திய அணிக்குள் இத்தனை ஓட்டைகளா என்பதே, அப்போதுதான் கண்கூடாய்த் தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் வேகத்தையும், பவுன்சையும் அழகாகச் சமாளித்த இந்திய அணி, ட்யூக்ஸ் பாலின் சீம் மூவ்மென்ட்டுக்கும், ஸ்விங்கிற்கும் 'நோ ஐடியா' என்பது போல்தான் ஆடியது. இன்ஸ்விங்கர்கள், அவுட் ஸ்விங்கர்கள், அவர்களை பதற்றப்படவே வைத்தன. குறிப்பாக, ஜேமிசனின் பந்துகளை எதிர்கொள்ளவே துணிவில்லாதது போல்தான் கோலி முதல் புஜாரா வரை அனைவருமே ஆடினர்.

குறிப்பாக, புஜாரா மிகவும் திணறினார். ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் ஆடும் அதே அணுகுமுறையுடன் அவர் ஆட்டத்தை அணுக, சில ஓவர்களில் ஸ்விங் ஆவதை நிறுத்த, அது ஒன்றும் கூக்கபுராவோ, எஸ்ஜியோ இல்லையே... டியூக்ஸ் ஆயிற்றே?! கூக்கபுராவிலேயே புகுந்து விளையாடும் நியூசிலாந்து, எண்பது ஓவருக்கும் ஸ்விங் ஆகும் டியூக்ஸ் பந்துகளை சும்மா விடுமா?! காப்பாற்றுகிறார், தடுத்தாடிக் கரை சேர்க்கிறார் என்று சொல்லப்பட்டாலும், கடந்த 18 இன்னிங்ஸ்களில், 28 என்னும் பேட்டிங் சராசரியோடு, தொடர்ந்து புஜாரா திணறத்தான் செய்கிறார். வேறு எந்த வீரருக்கும், இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே!

இவர்தான் இப்படியெனில் ரஹானே ஆட்டமிழந்த இரு முறைகளிலும், ஷாட் செலக்ஷன் அவ்வளவு மோசம். டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஓட்டத்தில், இந்தியா சார்பாக அதிக ரன்களை எடுத்தவராக இருந்தாலும், கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடித்த சதத்தை தவிர, கடந்த சில போட்டிகளாகவே அவரும் சறுகலைத்தான் சந்தித்து வருகிறார். கன்சிஸ்டன்ஸி என்னும் வார்த்தைக்கெல்லாம் அர்த்தமே தெரியாதது போல் இருக்கிறது ரஹானேவின் ஆட்டம்.

கோலியோ, முதல் இன்னிங்ஸின் தொடக்கத்தில் மிக அழகாகச் சமாளித்தாலும், நேரம் போகப்போக தனக்காக எதிரணி விரிக்கும் வலையில் தானாகவே போய் மாட்டிக்கொள்கிறார். மிடில் ஆர்டர் பேட்டிங்கை தூணாகத் தாங்காமல், மிக முக்கிய போட்டியில்கூட, தூள்தூளாகச் சிதறியது இவர்களது பொறுப்பற்றதன்மையையே காட்டுகிறது.

புஜாரா, கோலி
புஜாரா, கோலி

ஓப்பனர்கள் கில்லுக்கும் ரோஹித்துக்கும் இன்ஸ்விங்கர்களில் கண்டம் என்பதைப் போல் பலவீனத்தை சரி செய்யாமலேதான் ஆட்டமிழந்து சென்றனர். பன்ட், இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு பொறுப்போடு ஆடியிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மிகவும் முக்கியமான, பொறுமையை இன்னும் கொஞ்சம் கடைபிடித்திருந்து, லீடிங்கை 180ஐ தாண்ட வைத்திருந்தால், நிலைமை வேறு மாதிரி மாறியிருக்கும். ஆனால், அவரை மட்டுமே குறை சொல்ல முடியாது. சீனியர் வீரரும், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜடேஜாவிடமும் கூட அப்பொறுமை காணப்படவில்லை‌. ஏதோ மலைக்க வைக்கும் டார்கெட் செட் செய்யப்பட்டதையும், அதை துரத்தி ஓடுவதைப் போலவும், ரன் அவுட்டாகியே தீர வேண்டும் என்பதைப் போல ஓடிக் கொண்டிருந்தார். டெய்ல் எண்டர்கள் கதை சொல்லவே வேண்டாம்.

நியூசிலாந்து பௌலர்கள் மிரட்டியது உண்மையெனினும், இதையெல்லாம் யோசித்து, முன்னேற்பாட்டோடுதானே இந்திய வீரர்கள் வந்திருக்க வேண்டும். கடந்தாண்டு நியூசிலாந்தில் சந்தித்த மோசமான தோல்விகூட அதற்குரிய பாடத்தைக் கற்பிக்கவில்லை என்பதுதான் வேதனை.

ஒட்டுமொத்தத்தில், இந்திய பேட்ஸ்மேன்களிடம், பொறுப்புணர்வோ, பக்குவமோ, கட்டுப்பாடோ என எதுவுமில்லாமலே இருந்தனர். தங்களது விக்கெட்டை, தூக்கிக் கொடுத்து வெளியேறியது போலத்தான் இருந்தது, ஆட்டம் முழுவதிலும். போட்டியின் மொமன்ட்டத்தை அவ்வப்போது குறுக்கிட்ட மழை கொஞ்சம் குலைத்துப் போட்டதென்றாலும், அ(எ)தற்கும் தயாராக இருந்திருக்க வேண்டியது, அவர்களின் கடமைதானே?!

பேட்டிங்தான் இப்படியென்றால், பௌலிங் குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. எது இலக்கு, நோக்கம் என எதுவுமே இல்லாமல்தான் ஒட்டுமொத்த பௌலிங்கும் இருந்தது. பும்ரா ஒட்டுமொத்தமாக ஏமாற்றி விட்டார், ஒரு பௌலர் ஸ்லாட்டையே வீணடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஷமிக்கு மட்டுமே பந்துகள் ஸ்விங்கானது.

சரி, நியூசிலாந்து பௌலர்கள் அளவுக்கு பந்தினை ஸ்விங் செய்ய முடியவில்லை என்றாலும், சீம் மூவ்மென்ட்டைக் கொண்டேனும் நெருக்கடி தந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை இந்தியா. நெருக்கடிகள் நிறைந்த நான்காவது இன்னிங்ஸில்கூட, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

கோலி - இந்திய அணி
கோலி - இந்திய அணி

20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய வலிமை படைத்ததாக இந்திய பௌலிங் படையும் இல்லை, அவர்களை தகுந்தவாறு கோலி வழிநடத்தவும் இல்லை. அட்டாக்கிங் ஃபீல்டிங் செட் அப், மிரட்டும் பௌலிங் என்பதற்கெல்லாம் எங்களுடைய அகராதியிலேயே இடமில்லை என்பதைப் போலத்தான் ஆடினர். திட்டம் வகுக்கவில்லையா அல்லது வகுத்த திட்டங்கள் வேலைக்காகவில்லையா, அப்படியெனில் மாற்றுத் திட்டங்கள் இந்தியாவின் வசமில்லையா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது‌. விளைவு, எந்தவிதப் பிரஷரும் இன்றிதான் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடினர்‌.

முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்தின் டெய்ல் எண்டர்களை, ரன் குவிப்பில் ஈடுபட அனுமதித்து, அங்கேயும் கோட்டை விட்டது இந்தியா. முன்னிலையில் முடித்திருக்க வேண்டிய முதல்பாதி ஆட்டம், பின்னிலையென முடிய அதுதான் காரணம். குறைந்தபட்சம், பும்ராவை, டி20 மோடுக்கு மாற்றிவிட்டு, விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜாமிசனின் கேமியோ ட்விஸ்ட்டையாவது தவிர்த்திருக்கலாம். அந்தத் தவறுதான், இரண்டாவது இன்னிங்ஸிலும், இந்தியாவைத் துரத்தியது‌.

ஃபீல்டிங்கில் கூட சில இடங்களில் தவற விட்டது இந்தியா. நியூசிலாந்தின் ஃபீல்டிங்கில், வீரர்களிடமிருந்த துடிதுடிப்பு, இந்திய வீரர்களடம் காணப்படவே இல்லை. டி20 போட்டி போல, ஒரு பந்தை இருவர் துரத்தி, கைமாற்றி எல்லாம் நியூசிலாந்து ஆட, கைக்கு வந்த சில கேட்ச்களைக் கூட இந்தியா கைவிட்டது.

ஒரு ஐந்து விக்கெட் ஹால், இரண்டு அரைசதங்களை நியூசிலாந்து தரப்பு சேர்த்திருக்க, இந்தியாவின் பக்கம், அதுகூட இல்லை என்பதே சொல்கிறது, எங்கே தவறியது இந்தியா என்பதனை.

கோலி
கோலி
Ian Walton

"டிராவுக்காக ஆடுவது என்னுடைய கடைசி ஆப்ஷனாகத்தான் இருக்கும்" என்பார் கோலி. ஆனால், இப்போட்டியில், இந்தியா டிராவுக்காகக்கூட ஆடவில்லை என்பதுதான் நிதர்சனம். இறுதி இன்னிங்ஸில், 139 ரன்கள்தான் டார்கெட் என்றபோதும், அதை மிகச் சுலபமாக எட்டி விடவில்லை நியூசிலாந்து. கொஞ்சம் திணறத்தான் செய்தது. ஓரளவு இந்தியா நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், அது முழுவீச்சில், தோற்றுவிடவே கூடாதென்னும் வெறியோடு இல்லாமல், ஃப்ரெண்ட்லி மேட்ச் ஆடும் மனநிலையில்தான் இருந்தது. அந்த நோக்கமின்மைதான் வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணம்.

தோல்விகள் தவிர்க்கப்பட முடியாதவைதான். வளர்ச்சிப் பாதையில் குறுக்கிடக் கூடியவைதான். எனினும், மூன்று ஃபார்மேட்களிலும் டாப் கிளாஸ் அணியாக இருந்தும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாய், கோப்பையைத் தவற விடுவது, அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயமில்லை.

இன்னொரு கோப்பையும், இந்தாண்டு இறுதியில், இந்தியாவின் வாசலில் நிற்கிறது. அதற்குள் எல்லாத் தவறுகளையும் சரிசெய்து, வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விஸ்வரூபம் எடுத்தால் மட்டுமே, இழந்த பெருமையை மீட்க முடியும்?!