Published:Updated:

புஜாராவின் கேம்பிளான் அணிக்கு உதவாத அணுகுமுறையா? துணிச்சல் வேண்டும் என யாரைக் குறிப்பிடுகிறார் கோலி?

இயல்பிலேயே அக்ரஸிவ் மனநிலை கொண்ட கோலிக்கு புஜாராவின் அணுகுமுறை கடுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 2014-15 பார்டர் கவாஸ்கர் தொடரில் தோனி கேப்டன் பதவியை விட்டு விலக கோலி கேப்டனான முதல் போட்டியிலேயே புஜாராவை பென்ச்சில் உட்கார வைத்திருப்பார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியால் ரசிகர்கள் எவ்வளவு ஏமாற்றத்துடன் இருக்கிறார்களோ அதே அளவு ஏமாற்றத்துடனே இந்திய கேப்டன் கோலியும் இருக்கிறார். கோலி கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என எதிர்பார்க்கையில், சமீபத்தில் ப்ரஸ் மீட் வைத்து இந்திய அணியின் அடுத்தக்கட்டம் எப்படியிருக்கும் என்பது பற்றி பேசியிருக்கிறார். இதன்மூலம், கோலிக்கு கேப்டன் பதவியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகியிருந்தது.

ஆனால், இந்திய அணியை மீண்டும் வெற்றி பாதைக்குத் திருப்ப சில கடுமையான முடிவுகளை கோலி எடுக்கப்போகிறார் என்பதற்கான சமிக்ஞைகளும் இந்த ப்ரஸ்மீட்டில் வெளிப்பட்டிருந்தன. "இந்தத் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து உடனே அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க போகிறோம். லிமிடெட் ஓவர் அணியை போன்று ஒரு நிலையான அணியாக டெஸ்ட் அணியையும் உருவாக்க வேண்டும். அதற்கு துணிச்சலாக ஆடக்கூடிய வீரர்களே தேவை. அணிக்கு தன்னுடைய பெர்ஃபார்மென்ஸ் மூலம் எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்கிற உந்துதல் உடைய வீரர்களே தேவை" என ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார் கோலி.

கோலி, புஜாரா
கோலி, புஜாரா
AP

புஜாராவை மனதில் வைத்துதான் கோலி இப்படி பேசியிருக்கிறார் என சமூகவலைதளங்களில் இந்த ஸ்டேட்மெண்ட் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது உறுதியாக புஜாராவை பற்றிய கருத்து இல்லை என யாராலும் மறுத்துவிட முடியாது. ஏனெனில், இதற்கு முன்பே பெயரைக் குறிப்பிடாமல் புஜாராவை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் கோலி. நியூசிலாந்துடனான டெஸ்ட் சீரிஸின் போது, "பேட்டிங் ஆடும்போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பது எப்போதும் கைகொடுக்காது. ஒரு கட்டத்தில் நீங்கள் ஷாட்டுக்கு முயல்வதையே நிறுத்தியிருப்பீர்கள். சிங்கிள்கள் கூட வரவில்லையெனில், நம்மால் இந்த பிட்ச்சில் என்ன செய்ய முடியும் என உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும்" என ஒரு ப்ரஸ்மீட்டில் பேசியிருந்தார் கோலி. புஜாராவின் அணுகுமுறையைத்தான் கோலி இப்படி விமர்சிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. கோலியின் ப்ரஸ்மீட்டுக்கு முன்பான இன்னிங்ஸில் 81 பந்துகளில் வெறும் 11 ரன்னை மட்டுமே அடித்து அவுட் ஆகியிருந்தார் புஜாரா. இதை மனதில் வைத்துதான் கோலி விமர்சித்திருந்தார்.

இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகும் புஜாராவின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில் கோலி கருத்து தெரிவித்துள்ளார். புஜாராவின் அணுகுமுறை உண்மையிலேயே இந்திய அணியின் வெற்றியை பாதிக்கிறதா?? இதை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாராவின் பெர்ஃபார்மென்ஸ்களை வைத்து அலசி பார்ப்போம்.

இந்தியா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 தொடர்களில் ஆடியுள்ளது. அதில் மூன்று உள்நாட்டு தொடர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு தொடர்கள் அடக்கம். இது அனைத்திலுமே புஜாரா ஆடியிருந்தார்.

புஜாராவின் ஒட்டுமொத்த கரியரோடு ஒப்பிடும்போது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் சுமாராகவே ஆடியிருக்கிறார். 18 போட்டிகளில் 30 இன்னிங்ஸில் பேட்டிங் ஆடியிருக்கும் புஜாரா 841 ரன்களை எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 28.03 மட்டுமே. ஒரு சதத்தை கூட இந்தத் தொடரில் புஜாரா அடித்திருக்கவில்லை. 9 அரைசதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். கோலி குறிப்பிடும் மந்தமான ஆட்டம் குறித்து புரிந்து கொள்ள இது மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று புஜாராவின் பெர்ஃபார்மென்ஸ்களை அலச வேண்டியிருக்கிறது.

#AUSvIND | Cheteshwar Pujara
#AUSvIND | Cheteshwar Pujara

வெஸ்ட் இண்டீஸ்க்கு தொடரில் 4 இன்னிங்ஸ்களிலும் புஜாரா பேட்டிங் ஆடியிருந்தார். ஒரு அரைசதம் கூட அடித்திருக்கவில்லை. இந்தத் தொடரில் அவர் பாணியில் பெரிதாக உருட்டவும் இல்லை. அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 66 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். இது ஒரு சராசரியான ஆட்டமே என்பதால் பெரிய பிரச்னையில்லை.

தென்னாப்பிரிக்க தொடரிலும் நான்கு இன்னிங்ஸில் பேட்டிங் ஆடியிருந்தார் புஜாரா. இதில் இரண்டு இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தார். 148 பந்துகளுக்கு 81 ரன்னும், 112 பந்துகளுக்கு 58 ரன்னும் என அடித்திருந்தார். இரண்டுமே 50 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் அடிக்கப்பட்டிருப்பதால் மந்தமான பெர்ஃபார்மென்ஸ் என சொல்லுமளவுக்கு இந்தத் தொடரிலும் ஒன்றுமில்லை. அடுத்த பங்களாதேஷ்க்கு எதிரான தொடரிலும் இப்படித்தான். இரண்டு இன்னிங்ஸில் ஆடி இரண்டிலும் 50+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்திருந்தார். ஆனால், பிரச்சனையே இனிதான் ஆரம்பமாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 4 இன்னிங்ஸ்களில் ஆடி ஒரே ஒரு அரைசதம் அடித்திருந்தார் புஜாரா. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 42 பந்துகளுக்கு 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 81 பந்துகளுக்கு 11 ரன்களையுமே அடித்திருந்தார் புஜாரா. இதில்தான் கோலி கடுப்பாகியிருந்தார். நியூசிலாந்து பௌலர்கள் வாரி சுருட்டிக் கொண்டிருக்கும் போது கிடைக்கிற ரன்களை சேர்க்க பார்க்காமல் விக்கெட்டை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்? ரன்னே இல்லாமல் விக்கெட்டை மட்டும் வைத்து என்ன பிரயோஜனம்? இதுதான் கோலியின் கேள்வி. அடுத்து இரண்டாவது போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 140 பந்துகளை சந்தித்து 54 ரன்களும், இன்னொரு இன்னிங்ஸில் 88 பந்துகளில் 24 ரன்களும் அடித்திருந்தார். முதல் போட்டியின் முரட்டு உருட்டலுக்கு இது பரவாயில்லை என்றாலும் 50-க்கு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதால் கோலி இதிலும் அதிருப்தியே அடைந்திருந்தார்.

Pujara #INDvENG
Pujara #INDvENG

லாக்டௌனுக்குப் பிறகு நடந்த ஆஸ்திரேலியா சீரிஸில் இன்னும் உக்கிரமாக டிஃபன்ஸிவ்வாக ஆடினார் புஜாரா. 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 160 பந்துகளில் 43 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஒரு நாள் முழுக்க க்ரீஸில் இருந்ததை போல தோன்றினாலும் ரன்கள் மட்டும் உயர்ந்திருக்கவே இல்லை. இது கூட பரவாயில்லை, சிட்னியில்தான் அனைவரின் பொறுமையையும் சோதித்தார். முதல் இன்னிங்ஸில் 176 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்தவர், இரண்டாவது இன்னிங்ஸில் 205 பந்துகளுக்கு 77 ரன்களை அடித்திருந்தார். கடைசி போட்டி நடைபெற்ற காபாவில் 211 பந்துகளுக்கு 56 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

இங்கிலாந்து தொடரிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் உருட்டியே தள்ளியிருப்பார் புஜாரா.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலுமே முதல் இன்னிங்ஸில் 36 பந்துகளை சந்தித்த பிறகுதான் முதல் ரன்னையே எடுத்திருப்பார் புஜாரா. இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இயல்பிலேயே அக்ரஸிவ் மனநிலை கொண்ட கோலிக்கு புஜாராவின் அணுகுமுறை கடுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 2014-15 பார்டர் கவாஸ்கர் தொடரில் தோனி கேப்டன் பதவியை விட்டு விலக கோலி கேப்டனான முதல் போட்டியிலேயே புஜாராவை பென்ச்சில் உட்கார வைத்திருப்பார். 2016 வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் ஒரு போட்டியில் புஜாராவை பென்ச்சில் உட்கார வைத்திருப்பார். இப்படி அவ்வப்போது புஜாராவின் டிஃபன்ஸிவ் அணுகுமுறை மீது தன்னுடைய அதிருப்தியை கோலி வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா சீரிஸின் போது ரிக்கி பாண்டிங்குமே புஜாராவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்திருந்தார். "அவரின் அதீத பாதுகாப்பான ஆட்டத்தால் இன்னொரு எண்ட்டில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு அதிக அழுத்தம் உண்டாகிறது. இதனால் விக்கெட்களும் எளிதில் விழுகிறது" எனப் பேசியிருந்தார். இதில் உண்மையில்லாமல் இல்லை. பேட்டிங்குக்கு சாதகமான சிட்னி பிட்ச்சில் புஜாரா அதீத டிஃபன்ஸிவ்வாக ஆட இன்னொரு எண்ட்டில் தேவையில்லாத ஷாட்களை ஆடியும் ரன் அவுட் ஆகியும் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருந்தன. அதை ஒரு எண்ட்டில் நின்று புஜாராவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

புஜாரா
புஜாரா
Tertius Pickard
புஜாராவின் டிஃபன்ஸிவ் அணுகுமுறையை ஒட்டுமொத்தமாக குறையும் சொல்லிவிட முடியாது. காபா டெஸ்ட்டை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்ததற்கு புஜாராவின் டிஃபன்ஸிவ்வான இன்னிங்ஸும் ஒரு காரணமாகவே இருந்தது. ஆனால், எல்லா போட்டியிலும் ஒரே அணுகுமுறையை கடைப்பிடிப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது.

போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து அணுகுமுறையை தகவமைத்து கொள்வதில் தவறுகிறார் புஜாரா. சில நேரங்களில் அட்டாக்கிங் கிரிகெட் என்றால் என்னவென்றே புஜாராவுக்கு தெரியாதோ எனத் தோன்றுமளவுக்கு ஆடுகிறார். போட்டிக்கு ஏற்றவாறு தகவமைத்து அட்டாக்கிங் இன்னிங்ஸ்களையும் ஆடி பழக்கப்பட்டிருந்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிநாளில் நிச்சயம் அவ்வளவு மோசமாக புஜாரா அவுட் ஆகியிருக்கமாட்டார். மேலும், அரைசதங்களை சதங்களாக மாற்றுவதிலும் புஜாரா கடுமையாகத் தடுமாறுகிறார். க்ரீஸில் அவ்வளவு நேரம் நின்றுவிட்டு பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சென்றால் அது அணிக்கு பெரிய பின்னடைவையே கொடுக்கும்.

புஜாராவை வீழ்த்துவதற்கான யுக்தியை பௌலர்கள் கற்று கொண்டுவிட்டதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அவர் டிராவிட்டின் வழித்தோன்றல், அவருக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினால் வீசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அவர் ஒரு பந்தை கூட தொடமாட்டார். அதனால் இப்போது பௌலர்கள் எல்லாம் இன்கம்மிங் டெலிவரிக்களை புஜாராவுக்கு வீசி அவரின் விக்கெட்டை வீழ்த்தத் தொடங்கிவிட்டனர். ஆஸ்திரேலியா சீரிஸில் கம்மின்ஸிடம் மட்டும் 5 முறை அவுட் ஆகியிருந்தார் புஜாரா. இதில், நான்கு இன்கம்மிங் டெலிவரியில் விழுந்த விக்கெட்டுகளும் அடக்கம். கம்மின்ஸிடம் வீழ்ந்தது போல ஒரே தொடரில் ஒரே பௌலரிடம் அதிகம் முறை வீழும் பேட்டர்னும் புஜாராவுக்கு பிரச்னையாக இருக்கிறது.

புஜாரா
புஜாரா

ஆஸ்திரேலிய தொடரில் கம்மின்ஸிடமும் இங்கிலாந்து தொடரில் லீச்சிடமும் நியூசிலாந்து என்றால் ஜேமிசன் மற்றும் போல்ட் இருவரிடமும் எனத் தொடர்ந்து ஒரே பௌலரிடம் ஒரே மாதிரியாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்து செல்கிறார். இது எல்லாமே சேர்ந்துதான் ஒரு துணிச்சலான வீரர் தேவை என்கிற சொல்லை கோலியை பயன்படுத்த வைத்திருக்கிறது.

புஜாரா மாதிரியான ஒரு பேட்ஸ்மேன் ஒரு டெஸ்ட் அணிக்கு கிடைப்பது அபூர்வம். புஜாராவின் அணுகுமுறையில் மாற்றம் தேவைதான் என்றாலும், தோல்விக்கான பழியை அவர் மீது பிரதானமாகத் தூக்கிப் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை மையமாக வைத்து அவரை சுற்றி இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆட வேண்டும். அதை எத்தனை முறை அவர்கள் சரியாகச் செய்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே!

புஜாராவும் அணியின் தேவையையும் சூழலையும் புரிந்து கொண்டு தனது அணுகுமுறையை மாற்றுவதற்கும் தயாராக வேண்டும். இங்கிலாந்து தொடரில் கோலியின் எதிர்பார்ப்பை புஜாரா பூர்த்தி செய்வார் என நம்புவோமாக!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு