ஹோம் சீரிஸ்களில் இந்தியா தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்தது. 'அந்நிய மண்ணிலும் வெற்றி தொடருமா' என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில், நியூசிலாந்தை 5 –0 என தோற்கடித்திருக்கிறது மென் இன் புளூ. 3 போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்ற நியூசிலாந்தை நமது பௌலர்கள் இறுதிக்கட்டத்தில் தடுத்து நிறுத்தி வெற்றிவாகை சூடியுள்ளனர். ஒரு வீரரின் பங்களிப்பாக இல்லாமல் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு முக்கியமான தருணங்களில் கைகொடுக்க வெற்றி நம் கைவசம் தேடி ஓடிவந்தது.
உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு, இந்தியா எந்தத் தொடரிலும் தோற்கவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்துத் தொடர்களிலும் வெற்றி பெற்று அசத்தி வருகிறது கோலி அண்ட் கோ. இந்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்தியா பலவித பரிசோதனைகள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. வீரர்களுக்கு ரொட்டேஷன் அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு சிறந்த வீரர்களைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்குப் பலன்களும் கண்கூடாகத் தெரிகிறது. தாகூர், சைனி, ஷமி, மனிஷ் பாண்டே போன்ற வீரர்களின் ரூபத்தில்..! இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் ப்ளஸ் பாயின்டாக அமைந்த விஷயங்கள்
ஷ்ரேயாஸ் ஐயர்
4 வது இடத்துக்கான போட்டியில் தனது பெயரை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். முதல் 2 போட்டிகளில் சேசிங்கில் சினம்கொண்ட சிங்கமாக கர்ஜித்தார். இனி 4வது இடத்துக்கு அணி நிர்வாகம் வேறு யாரையும் யோசிக்கக் கூடாது என்கிற ரீதியில் இருந்தது அவரின் ஆக்ரோஷ ஆட்டம். 29 பந்தில் 58 ரன்கள், 33 பந்தில் 44 ரன்கள் என அடித்து இரண்டு போட்டிகளிலும் தூள் கிளப்பினார்.

இந்தியா போன்ற பெரிய பேட்டிங் படை கொண்ட அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. தற்போது உள்ள சூழ்நிலையில், கிடைத்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் திரும்ப வாய்ப்பு கிடைப்பது என்பது கானல் நீராகிவிடும். 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வாகியும் சில காலம் விளையாடும் அணியில் இடம் கிடைக்காமல் காத்திருந்த மனிஷ் பாண்டே இந்தத் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
மனிஷ் பாண்டே
6வது வீரராகக் களமிறங்குபவர்களுக்கு 20 ஓவர் போட்டிகளில் இறுதி ஒவர்கள்தான் ஆட கிடைக்கும். இறங்கிய உடன் அதிரடியாக ஆட ஆரம்பிக்க வேண்டும். மனிஷ் பாண்டேவுக்கும் இதே மாதிரி சூழ்நிலைதான் அமைந்தது. ஆனால், அவர் அசரவில்லை. களமிறங்கிய எல்லாப் போட்டிகளிலும் அவுட் ஆகாமல் இருந்து கிடைத்த 4, 6 பந்துகளில் 14, 11 ரன்கள் அடித்து எதிர்பார்த்ததைவிட அதிக ஸ்கோர் வரச் செய்தார்.

4வது போட்டியில் விக்கெட்டுகள் மடமடவென விழ, ஒரு எண்டில் இவர் நின்று சாதுரியமாக ரன் சேர்த்தார். 140 ரன்கள் கூடத் தாண்டாது என்று நினைத்தபோது 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 165 ரன்களுக்கு உயர்த்தி பௌலர்கள் போராடுவதற்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இந்தத் தொடரில் அணி நிர்வாகம் ஷிவம் துபேவை 5வது வீரராக இறக்கிவிட்டு வாய்ப்பளித்தது. ஆனால், ஒரு போட்டியில்கூட அவர் சரியாக ஆடவில்லை. அதே வாய்ப்பை மனிஷ் பாண்டேவுக்கு அளித்திருந்தால் அணியின் ஸ்கோர் இன்னும் சில ரன்கள் ஏறிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பும்ரா உலகின் தலைசிறந்த பௌலர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். 3வது போட்டியைத் தவிர, அனைத்துப் போட்டிகளிலும் தூள் கிளப்பிருப்பார். முதல் போட்டியில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகவும் சிக்கனமாக வீசினார். 2, 4, 5வது போட்டிகளில் 20 ரன்களைத் தாண்டவில்லை. 20 ஓவர் போட்டிகளில் கன்சிஸ்டென்டாக 20 ரன்கள் மட்டும் கொடுப்பது எல்லாம் பும்ராவால் மட்டுமே முடியும். 5வது போட்டியில் வீசிய முதல் ஓவர் மெய்டன் ஓவர் 4 ஒவர்கள் வீசி 3 விக்கெட்கள் எடுத்து 12 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். தொடர்ந்து டைட் லைனில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் செய்து பிரஷரை உருவாக்குவதில் பும்ரா டாக்டரரேட் முடித்திருக்கிறார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியின் பலம் நீண்ட பேட்டிங் வரிசை, ஸ்பின்னர்கள் மற்றும் பும்ரா என்றுதான் இருந்தது. அது இப்போது மாற ஆரம்பித்திருக்கிறது. காரணம், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் போன்ற பாஸ்ட் பௌலர்களின் எழுச்சி. மூவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக அளித்து நியூசிலாந்தை 5-0 என வெல்ல காரணமாக இருந்தனர். முகமது ஷமி 3வது போட்டியில் வீசிய கடைசி ஓவரில் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் விக்கெட்டை எடுத்து 4 பந்துகளில் 2 ரன்களை தடுத்து போட்டியை சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்றார்.

நவ்தீப் சைனி, தான் விளையாடிய 2 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினார். அவரது அதிவேகத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று திணறித்தான் போனார்கள். இறுதி ஓவர்களில் மிகவும் நேர்த்தியான லைனில் வீசி ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். 5வது போட்டியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த செய்ஃபர்ட் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஷர்துல் தாகூரிடமிருந்து இப்படி ஒரு பெர்ஃபாமன்ஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க, 8 விக்கெட்டுகள் எடுத்து லீடிங் விக்கெட் டேக்கரானார். 3வது போட்டியை முகமது ஷமி டை ஆக்கினார் என்றால் 4வது போட்டியில் ஷர்துல் தாகூர் அந்த மிஷனை முடித்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்றிருக்க அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்கள் (2 ரன் அவுட்களையும் சேர்த்து) விழும். மிகவும் அருமையாக வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களைத் தடுத்திருப்பார்.
சூப்பர்மேன் ராகுல்
கே.எல்.ராகுலை சூப்பர்மேன் என்றே அழைக்கலாம். ஆஸ்திரேலியா தொடரில் versatile batsman ஆக ஜொலித்தார் என்றால், இந்த தொடரில் கிளாஸ் பேட்ஸ்மேன் ஆக பிரம்மிப்பூட்டினார். ஆடிய எல்லா போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 224 ரன்கள் அடித்து மேன் ஆஃப் தி சீரிஸ் வாங்கினார். இவர் பேட்டிங்கில் செய்ததைவிட, கீப்பிங்கில் காட்டிய திறன் அட்டகாசம்! சாதுரியமான ரன் அவுட்கள், கேட்ச்கள், ஸ்டம்ப்பிங் என எல்லாவற்றிலும் டிக் அடித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை, இவர் DRS அப்பீல் செய்யும் முறையும் அருமையாக உள்ளது.

5வது போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு அடிபட, கேப்டன் பொறுப்பை ஏற்ற ராகுல் அதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிவாகை சூடினார். சோசியல் மீடியாக்களில் ராகுலை பாராட்டி அணிக்கு எல்லா இடத்திலும் இறங்கும் பேட்ஸ்மேனாகவும், கீப்பர் ஆகவும், ஸ்டாண்ட் இன் கேப்டன் ஆகவும் வைத்து பல கான்செஃப்ட்களில் மீம்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 2018-ல் வீழ்ச்சிக்கு அப்புறம் அணிக்கு மீண்டும் திரும்புவாரா என்ற கேள்வியாக இருந்தவர், 20 ஓவர் உலகக்கோப்பை அணி தேர்வில் முதல் பெயராகத் தன் பெயரை எழுதவைக்கப்போகிறார். அந்த அளவுக்கு ராகுலின் செயல்பாடுகள் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.
நியூசிலாந்தின் ஒரே ஆறுதல் - செய்ஃபர்ட்
இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பல விஷயங்கள் சாதகமாக அமைய, நியூசிலாந்து அணிக்கு ஒரே ஆறுதல் - விக்கெட் கீப்பர் செய்ஃபர்டின் ஆட்டம்தான். 3 போட்டிகளில் மிகவும் நன்றாக ஆடினார். அதுவும் 5வது போட்டியில் ஆடிய ஆட்டம் இந்திய அணியின் வெற்றியைப் பறிப்பதாக இருந்தது. தொடர்ந்து இதேபோல் ஆடுவாரேயானால் நியூஸிலாந்து அணி வைட் பால் கிரிக்கெட்டுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைத்து விடுவார்.

கேன் வில்லியம்சனுக்கு ஒவ்வொரு முறையும் ஆசைகாட்டி மோசம் செய்துவிடுகிறார்கள் சக நியூசிலாந்து வீரர்கள். அரும்பாடுபட்டு வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தாலும் மற்ற வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக, 3வது போட்டியில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. பும்ரா பந்தில் அனைவரும் திணறிக் கொண்டிருக்கும்போது கேன் வில்லியம்சன் மட்டும் பும்ரா பந்தை அடிக்கும் வித்தையை அழகாகக் காட்டினார். 48 பந்தில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடித்து 95 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்று, அணி தோல்வியைத் தழுவ தொடரும் கையைவிட்டு நழுவிப்போனது.