Published:Updated:

ஷகிப் ஹசனுக்கு ஏன் இந்தத் தண்டனை... வங்கதேச கிரிக்கெட்டும் கிரிக்கெட் அரசியலும்! #Shakib

ஷகிப்
ஷகிப்

ஒரு காலத்தில் கெத்தாக சுற்றிய அணிகள் எல்லாம் அடையாளம் இழந்து கத்துக்குட்டிகள்போல சுற்றிவரக் காரணம் அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள், அதன் நிர்வாகிகள், அதற்குள் சூழ்ந்திருக்கும் அரசியல்கள்தான்.

இப்போதைய கிரிக்கெட்டைவிட 90-களில், கிரிக்கெட் இன்னும் பரபரப்பாக இருந்தது. காரணம் அப்போதைய அணிகள். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலம்பொருந்தியவையாக இருந்தன. பிரையன் லாரா, கர்ட்லி ஆம்புரோஸ், வால்ஷ், சந்தர்பால் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் பல ஸ்டார்கள் இருந்தார்கள். அதேபோல் இலங்கை உச்சத்தில் இருந்தது. 96-ல் உலகக்கோப்பையை வென்றது. ஜெயசூர்யா மிரட்டிக்கொண்டிருந்தார்.

`தடையை எதிர்கொள்ளும் ஷகிப்..?’ - இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் சிக்கல்

ஃப்ளவர் பிரதர்ஸ், ஹீத் ஸ்ட்ரீக், அலிஸ்டர் கேம்ப்பெல், ஒலாங்கோ என ஜிம்பாப்வே மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தது. அதேபோல் தென்னாப்பிரிக்கா... இந்த அணியை மட்டும் எந்த கிரிக்கெட் ரசிகனும் வெறுக்க மாட்டான். அவ்வளவு ரசிப்பான். காரணம் அணி முழுக்கத் திறமையான வீரர்கள். கிரிஸ்டன், காலிஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், கல்லினன், க்ளூஸ்னர், ஸ்மித் என அணி முழுக்க ஸ்டார்களாக இருப்பார்கள். ஆனால், இப்போது இவையெல்லாமே வரலாறாகிவிட்டன.

ஜிம்பாப்வே கிட்டத்தட்ட ஆட்டத்திலேயே இல்லை. வெஸ்ட் இண்டீஸ் `இருக்கு ஆனால் இல்லை' என்கிற கதைதான். இலங்கையும் சுமார் மூஞ்சு குமார் அணிதான். தொடர் தோல்விகளால் அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இப்படி ஒருகாலத்தில் கெத்தாகச் சுற்றிய அணிகள் எல்லாம் அடையாளம் இழந்து கத்துக்குட்டிகள்போல சுற்றிவரக் காரணம் அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள், அதன் நிர்வாகிகள், அதற்குள் சூழ்ந்திருக்கும் அரசியல்கள்தான். அந்த வரிசையில் `நானும் வர்றேன்' என வேக வேகமாக இணைந்துகொண்டிருக்கிறது வங்கதேச கிரிக்கெட்.

shakib
shakib

வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கும் வீரர்களுக்கும் இடையே மறைமுகமாக நிலவிக்கொண்டிருந்த பிரச்னை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிப்படையாக வெடித்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம் என ஷகிப் அல் ஹசன் தலைமையில் சில வீரர்கள் மீடியாக்களைச் சந்திக்க, பிரச்னை வெடித்தது. அவசர அவசரமாக சமாதானம் சொல்லப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது என்று அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில்தான் ஐசிசி மூலம் இந்த அறிவிப்பும் வருகிறது. ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தன்னை புக்கிகள் தொடர்புகொண்டார்கள் என்கிற உண்மையைச் சொல்லாமல் மறைத்ததற்காக 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஷகிப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வங்கதேச கிரிக்கெட்டின் முகம், ஷகிப் அல் ஹசன். 2006 முதல் வங்கதேசத்துக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவருகிறார். கிரிக்கெட்டில் வங்கதேசம் முக்கியத்துவம் பெறவும், தொடர் வெற்றிகள் பெறவும் முக்கியக் காரணம் ஷகிப் அல் ஹசன். வங்கதேசத்தின் சிறந்த ஆல்ரவுண்டர், உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக மாறியதுதான் ஷகிப் அல் ஹசனின் 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையின் சுருக்கம். 2019 உலகக் கோப்பையின் நாயகன் அவர். ஆனால், சாதனைகள் பல இருந்தாலும் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே அவருடைய ஆட்டிட்யூட்தான் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வந்தது. `அணியின் முக்கிய ப்ளேயர் நான்... ஆனால், என்னை வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் மதிப்பதில்லை' என்கிற கோபம் ஷகிப்புக்கு உண்டு. அந்த உள்ளக் குமுறல் வெளியே வேறுமாதிரி வெளிப்படத் தொடங்கியதும் அவரின் நடத்தை சரியில்லை, ஆட்டிட்யூட் சரியில்லை என்கிற புகார்கள் வந்தன. `ஆமாம், நான் இப்படித்தான் நடப்பேன்' என்பதையே ஷகிப் பகிரங்கப்படுத்த, கிரிக்கெட் நிர்வாகம் அவரை ஹிட்லிஸ்ட்டிலேயே வைத்திருந்தது.

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019

வங்கதேச கிரிக்கெட் போர்டு நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத் தொடர்ந்து விமர்சித்துவந்தார் ஷகிப். அவரை அணியைவிட்டு ஓரங்கட்ட முடியாது. காரணம் அவர் டாப் பர்ஃபாமர். என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் வசமாக வந்து சிக்கியது இந்த மேட்ச் ஃபிக்ஸிங் புகார்.

என்ன நடந்தது?

சூதாட்டத்தில் ஈடுபடும் இந்தியர் தீபக் அகர்வாலுக்கு, 2017 நவம்பரில் ஷகிப்பின் செல்போன் எண் அவரின் நண்பர் மூலமாகக் கிடைக்கிறது. வங்கதேச பிரீமியர் லீக் நடக்கும்போது ஷகிப்பை வாட்ஸ்அப் மூலம் அகர்வால் தொடர்புகொள்கிறார். ஆனால், தகவல் எதுவும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.

2018 ஜனவரியில் வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போது ஒரு போட்டியில் `மேன் ஆஃப் தி மேட்ச் விருது' வாங்கிய ஷகிப் ஆல் ஹசனுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்புகிறார் அகர்வால். ``நாம் இப்போது நடக்கும் தொடரில் வேலை செய்யலாமா, ஐ.பி.எல் வரை நான் காத்திருக்கட்டுமா?'' என்கிறார் அகர்வால்.

 shakib
shakib

2018 ஜனவரி 23-ல் அகர்வால் மீண்டும் ஷகிப்க்கு மெசேஜ் அனுப்புகிறார் "Bro anything in this series?''. ஆனால், ஷகிப் தகவல் எதுவும் அனுப்பவில்லை. 2018 ஐ.பி.எல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது ஏப்ரல் 26-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் நடக்க இருந்த போட்டியின்போது அகர்வால் ஷகிப்பிடம் ஒரு வீரர் பெயர் சொல்லி இன்றைய ஆட்டத்தில் இவர் விளையாடுவாரா என்ற தகவலை அளிக்க முடியுமா என்று கேட்கிறார். கூடவே ஷகிப்பின் அமெரிக்க அக்கவுன்ட்டையும் கேட்கிறார். அதில் சில மெசேஜ்கள் டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஷகிப்பிடம் விசாரித்தபோது, அதில் வீரர்கள் பற்றிய தகவல் கேட்கப்பட்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.

ஐ.சி.சி விதிப்படி ஒரு வீரர் சூதாட்டத்தில் ஈடுபடும் யாராவது தன்னை தொடர்புகொண்டால் அதை உடனடியாக ஐ.சி.சி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் அது குற்றமாகக் கருதப்படும். ஷகிப் மூன்று முறை அகர்வால் தன்னைத் தொடர்புகொண்டதை ஐ.சி.சி ஊழல் தடுப்புப் பிரிவிடம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக ஐ.சி.சி, ஷகிப்பிடம் 2019 ஜனவரி 23-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27-ம் தேதிகளில் விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், தண்டனை விவரங்களை வெளியிடவில்லை.

ஏன் இப்போது தண்டனை?

ஷகிப்பின் மேல் தவறு இருப்பது முற்றிலும் உண்மை. ஆனால், தண்டனையை ஏன் இப்போது அறிவிக்கிறார்கள் என்பதில்தான் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அக்டோபர் 21 அன்று வங்கதேச வீரர்கள் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி ஷகிப் தலைமையில் திடீரென போராட்டத்தில் குதிக்கின்றனர். இந்திய பயணத்துக்கு 12 நாள்களே இருக்க, வீரர்களின் இந்தத் திடீர் போராட்டம் வங்கதேச கிரிக்கெட் போர்டை நிலைகுலையச் செய்கிறது. வீரர்களை அழைத்துப் பேசி சில சமரசங்களுக்குப் பின் 24 அக்டோபர் போராட்டத்தை திரும்பப்பெறச் செய்கிறது கிரிக்கெட் நிர்வாகம்.

அக்டோபர் 26-ல் ஷகிப் அல் ஹசன், கிரிக்கெட் போர்டு விதிமுறையை மீறி கிராமபோன் டெலிகாம் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்புகிறது நிர்வாகம். கிரிக்கெட் போர்டு தலைவர் நசமுல் ஹாசன் விதிமுறையை மீறியதற்காக ஷகிப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

shakib
shakib

இந்திய பயணத்துக்கான பயிற்சிமுகாம் 4 நாள்கள் வங்கதேசத்தில் நடக்கிறது. அதில் நெட் செஷன்களும் 2 பயிற்சி ஆட்டங்களும் அடங்கும். அதில் ஷகிப் ஒரே ஒருமுறை மட்டும் நெட் செஷனில் பங்கேற்கிறார். பயிற்சி ஆட்டங்கள் ஆட அனுமதிக்கப்படவில்லை.

வங்கதேச கிரிக்கெட் ஆபரேஷன் சேர்மன் அக்ரம் கான் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணி இல்லாமல் புது அணி அறிவிக்கப்படும் என்று அக்டோபர் 29-ம் தேதி காலை அறிவிக்கிறார். அணி தேர்வாளர்கள் கோச் ரஸ்ஸல் டோம்னிகோவிடம் நீண்ட ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கேப்டன் என்கிற முறையில் ஷகிப் அழைக்கப்படவில்லை. அப்போதே ஷகிப்பின் கிரிக்கெட் கரியரில் ஏதோ பிரச்னை வெடிக்கப்போகிறது என்று புரிய ஆரம்பித்தது. இறுதியாக, ஐ.சி.சி தண்டனையை அறிவித்தது.

வாட்ஸ்அப் பரிமாற்றம் எப்படி ஐ.சி.சிக்குக் கிடைத்தது என்பதும், ஜனவரியியே விசாரித்த ஐ.சி.சி அப்போது ஏன் எந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதும் பதில் கிடைக்காத கேள்விகள். 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாட ஷகிப் தேவை என்பதால் வங்கதேச கிரிக்கெட் போர்டு அவரைக் காப்பாற்றியதா? போர்டுடன் பிரச்னை செய்ததால் இப்போது தண்டனையை அறிவிக்கச்சொல்லி வலியுறுத்தினார்களா என்பதெல்லாம் கிரிக்கெட் போர்டுகளுக்குள் நடக்கும் அரசியலையே காட்டுகிறது.

shakib
shakib

எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் கிரிக்கெட் போர்டை பகைத்துக்கொண்டால் இதுதான் நடக்கும் என்பதை எல்லா வீரர்களுக்கும் சொல்லவே இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களோ என்கிற சந்தேகம் வலுவாக எழுகிறது. ஆனால், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஷகிப் ஈடுபட்டார் என்பது மன்னிக்கமுடியாத குற்றம்!

அடுத்த கட்டுரைக்கு