Published:Updated:

பும்ரா, ஏன் பும்ராவாக இல்லை..?! #NZvIND

Bumrah
Bumrah ( AP )

10-வது ஓவரில் கேட்ச் டிராப் ஆனபோது புன்னகைத்தவரால், 17-வது ஓவரில் நடந்த மிஸ்ஃபீல்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான்...

வழக்கத்துக்கு மாறாக அதிரடி காட்டிய வில்லியம்சன், கடைசி 4 பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய ஷமி, ரோஹித்தின் அடுத்தடுத்த மெகா சிக்ஸர்கள், ஜடேஜாவின் டிராப் என நேற்றைய போட்டியில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம்விட பேரதிர்ச்சியான ஒரு விஷயம் : 4-0-45-0 எனக் காட்டும் பும்ராவின் செயல்பாடு. `Everyone will have an off - day' என்று இந்த ஒரு நாளை எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால், இது பும்ராவின் செயல்பாட்டைப் பற்றியது இல்லை. ஹாமில்டனில் பேரதிர்ச்சியாக இருந்தது, உலகின் நம்பர் 1 பௌலர் இந்தப் போட்டியை அணுகிய விதம்தான்!

6 நாள்களுக்கு முன்... 18-வது ஓவர். தன் கடைசி ஸ்பெல்லை வீச வருகிறார் பும்ரா. முதல் பந்து - பும்ராவின் ஸ்பெஷல் ஸ்லோ பால், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லத் தடுமாறுகிறார், ராஸ் டெய்லர். அதுவரை மிகவும் எளிதாக ஆடிக்கொண்டிருந்தவருக்கு அந்தப் பந்து மிகவும் கடினமாக அமைந்தது. ஸ்டம்ப் லைனில் வீசுப்படும் பந்துகளை ஆன் சைடில் ஆடுவது டெய்லரின் ஃபேவரைட். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளையே பெரும்பாலும் ஆன் சைடில் ஆடத்தான் முற்படுவார். அப்படிப்பட்டவருக்கு அதுவரை ஸ்டம்ப் லைனில் அல்வாவாகப் பந்துவீசிக்கொண்டிருந்தார்கள், இந்திய பௌலர்கள். குறிப்பாக ஷமி.

Bumrah
Bumrah
AP

பும்ரா வந்ததும், டெய்லருக்கு அந்தச் சலுகைகள் கிடைக்கப் பெறவில்லை. ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் முதல் பந்தையும், அடுத்த பந்தை யார்க்கராகவும் சந்தித்த டெய்லருக்கு அடுத்த பந்து குட் லென்தில் பிட்சாகி, ஷார்ட்டாக வந்தது. அங்கும் அதிர்ச்சி. ஓவரின் கடைசிப் பந்து - ஸ்லோ பாலா... யார்க்கரா... ஷார்ட் பாலா? யோசிக்க டெய்லருக்கு நேரம் இல்லை. பும்ரா, யார்க்கருக்கு முயற்சிசெய்ய, அது லோ ஃபுல் டாஸாக அமைந்தது. ஆனாலும் தொடர்ந்து எதிர்பாராத பந்துகளைச் சந்தித்துவந்த டெய்லரால் எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. 10.47 என்ற ரன்ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, அந்த ஒவரில் எடுத்தது வெறும் 4 ரன்கள்!

2-வது போட்டி - அதே 18-வது ஓவர், அதே டெய்லர். தொடர்ந்து 5-வது மற்றும் 6-வது ஸ்டம்ப் லைனில் ஸ்லோ பால்களாகத் தொடர்ந்து வீசினார் பும்ரா. டெய்லரால் எதுவும் செய்யமுடியவில்லை. வெறும் மூன்றே ரன்கள்! இதுதான் பும்ரா. எதிர்த்து விளையாடும் பலம், பலவீனம் அனைத்தையும் சரியாகக் கையாள்பவர். ஆனால், வேரியேஷன்களும் பெர்ஃபெக்‌ஷனும் மட்டுமே பும்ரா இல்லை. களத்தில் இருக்கும் நிதானமும் தெளிவும்தான் அவரை 100 சதவிகிதத்தில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. நேற்று அவர் இழந்திருந்தது அவற்றைத்தான்.

Bumrah
Bumrah
AP

நேற்று, நியூசிலாந்து சேஸிங் என்பதால், 17-வது ஓவரிலேயே பும்ராவின் கையில் பந்தைக் கொடுத்தார் கோலி. முதல் பந்து, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் ஸ்லோ பாலாகச் செல்ல, வில்லியம்சனால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால் அடுத்த பந்தில், பும்ராவின் சர்ப்ரைஸ் ஏதும் இல்லை. அதே பந்து. இந்த முறை சுதாரித்துக்கொண்டு பௌண்டரி விளாசினார் கேன். அடுத்த பந்து, பெரிய மாற்றங்கள் இல்லை. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றுகொண்டிருந்த பந்துகள், இப்போது கொஞ்சம் உள்ளே வந்து, ஆஃப் ஸ்டம்ப்புக்கு நேரே சென்றன. மீண்டும் பௌண்டரி. அவுட் சைடு ஆஃப் ஸ்லோயர் பால்கள் வேலைக்கு ஆகவில்லை என்று உணர்ந்த பும்ரா, தன் மாபெரும் ஆயுதமான யார்க்கரைக் கையிலெடுத்தார். அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளும் யார்க்கர்.

19-வது ஓவர்... மீண்டும் ராஸ் டெய்லர். ஆனால், இந்த முறை ஆஃப் ஸ்டம்ப்புக்கு அப்பால் செல்லும் பந்துகள் இல்லை. ஸ்லோ பால்களும் இல்லை. வேகமாக ஸ்டம்ப்பை நோக்கிப் பாய்ந்துவந்தன. 4-வது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட முதல் பந்தைத் தவறவிட்ட டெய்லர், தனது பெர்ஃபெக்ட் ஸ்லாட்டில் விழுந்த அடுத்த பந்தை பௌண்டரியாக்கினார். மூன்றாவது பந்தை இன்னும் முன்னே பிட்ச் செய்து, யார்க்கராக்க நினைத்தார். ஆனால், லோ ஃபுல் டாஸாக அமைய, சிங்கிள் எடுக்கப்பட்டது. அந்த ஓவரில், தன் லைனை மாற்ற பும்ரா நினைக்கவேயில்லை போல. 4-வது பந்து, யார்க்கர் - பௌண்டரி. கடைசி இரண்டு பந்துகளும் அதே - இரண்டு சிங்கிள்கள். 45 ரன்கள் கொடுத்து தன் ஸ்பெல்லை முடித்தார் பும்ரா.

Bumrah
Bumrah

சூப்பர் ஓவரில் கம்பேக் கொடுப்பார், பிளாக் கேப்ஸை மிரட்டுவார் என்று எதிர்பார்த்தால், மீண்டும் ஏமாற்றம். முதல் பந்து, நல்ல லெங்த்தில் பிட்சாகி, ஸ்லாக் செய்ய வாட்டமாக ஸ்டம்ப் நோக்கி வந்தது. வில்லியம்சனின் மிஸ்ஹிட்டால் சிங்கிள். குப்திலுக்கு யார்க்கர் முயற்சிக்க, அது ஃபுல் டாஸாக அமைந்தது. மீண்டும் மிஸ்ஹிட்டால் சிங்கிள். மூன்றாவது பந்து, குட் லெங்த்தில் பிட்சானது. ஆனால், பும்ராவின் வழக்கமான பௌன்ஸ் இல்லை. லைனிலும் மாற்றம் இல்லை. ஃபைன் லெக்கில் சிக்ஸர் விளாசினார் நியூசிலாந்து கேப்டன். அடுத்த பந்து, இரண்டாவது டெலிவரியின் ரீப்ளே. இன்சைடு அவுட்டில் பௌண்டரி. கடைசிப் பந்தும் அப்படியே நடக்க, இம்முறை குப்தில் பௌண்டரி அடித்தார். குட் லெங்த்தில் பிட்சாகி நன்றாக பௌன்ஸான அந்த ஓவரின் ஐந்தாவது பந்து மட்டும்தான் பும்ரா வீசியதுபோல் இருந்தது. மற்ற பந்துகளில் மாற்றம் இல்லை. ஆச்சர்யமளிக்கும் விஷயங்கள் ஏதும் இல்லை.

கடைசி 3 மூன்று ஓவர்களில், இரண்டே இரண்டு டெலிவரிகளைத்தான் முயற்சி செய்தார் பும்ரா. வைடிஷ் ஸ்லோ பால்கள், யார்க்கர்கள். ஸ்லோ பால்கள் கைகொடுக்காததால், யார்க்கர்களை மட்டும்தான் கடைசியில் பயன்படுத்தினார். வழக்கத்துக்கு மாறாக துல்லியம் தவற, பௌண்டரிகள் பறந்தது. இப்படி துல்லியம் தவறுவதை வேண்டுமேயானால், 'One off - day' என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த இரண்டு டெலிவரைகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாத அவரது அணுகுமுறைதான் அதிர்ச்சியளித்தது. யார்க்கர், பௌன்ஸ், ஸ்லோ பால், இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என வேகப்பந்துவீச்சின் அத்தனை ஆயுதங்களையும் கொண்டிருக்கும் அவர், இரண்டை மட்டுமே ஆக்லாந்திலிருந்து ஹாமில்டனுக்கு எடுத்துவந்திருப்பது அதிர்ச்சியென்றால், அதைவிடப் பேரதிர்ச்சியும் இருக்கிறது.

Bumrah
Bumrah

வெறும் வேரியேஷன்களும் பெர்ஃபெக்‌ஷன்களும் மட்டுமே பும்ரா இல்லை. எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் அமைதிகாத்து, ஃபீல்டர்கள் பௌண்டரிகளையும், கேட்ச்களையும் தவறவிடும்போதும் சிரிக்கும் அந்த பும்ரா, கடைசி சில நிமிடங்களில் காணவில்லை. ஜடேஜா கேட்ச் விட்டபோது வழக்கம்போல் சிரித்துக்கொண்டே சென்றவர், 17-வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் ஓவர் த்ரோ வீசியபோது, வழக்கத்துக்கு மாறாகக் கத்தினார். 4-வது ஓவரை வீசி முடித்துவிட்டு நடுவரிடம் தன் தொப்பியை வாங்கிய விதம், அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய நிதானத்தை முற்றிலுமாக இழந்திருந்தார். சூப்பர் ஓவரின்போதும் அவரது உடல்மொழி அதைத்தான் சொல்லியது.

10-வது ஓவரில் கேட்ச் டிராப் ஆனபோது புன்னகைத்தவரால், 17-வது ஓவரில் நடந்த மிஸ்ஃபீல்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். பும்ரா, ஆட்டத்தைத்தான் இந்தியாவுக்கு முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். தன் துல்லியம் தவறிய அந்த 'one off day'-வை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு அடி சறுக்கியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னால், தன் அணியை வெற்றி பெறவைக்க முடியவில்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏமாற்றம், அவரது நிதானத்தையும், அவரது முடிவுகளில் தாக்கத்தையும் ஏற்படுத்துவிட்டது.

Bumrah
Bumrah
AP
Vikatan

பும்ரா, கோலி போன்ற வீரர்கள் நெருக்கடியைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு, அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்று நினைப்பது இயல்புதான். ஆனால், அது நடக்காதபட்சத்தில், அவர்கள் தங்கள் இயல்பு நிலையிலிருந்து மாறாமல், சமநிலையிலிருந்து வழுவாமல் இருப்பது அவசியம். ஒருசில வீரர்களால் மட்டும்தான் இயல்பு நிலையிலிருந்து அக்ரெஸிவாக மாறும்போது அப்படியே செயல்பட முடியும். ஒருசில வீரர்கள், தங்களின் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். கோலி, ரொனால்டோ போன்ற வீரர்கள் முதல் வகை. மெஸ்ஸி, பும்ரா போன்றவர்கள் இரண்டாவது வகை. இவர்கள் கோபப்படுவதோ, ஆதங்கம் கொள்வதோ, அவர்களின் நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் மாற்றிவிடும். நேற்றைப்போல். பும்ரா இதைச் சரிசெய்ய வேண்டும். நெருக்கடிகளைத் தன் தோளில் சுமந்தாலும், தன் புன்னகையைக் கழற்றாமல் அவர் அணிந்திருப்பது அவசியம். இல்லையேல், பும்ரா பும்ராவாக இருக்க மாட்டார்!

பின் செல்ல