Published:Updated:

புதிய பந்தில் பிரச்னையா... ஏன் இந்திய பெளலர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தமுடியவில்லை?!

பும்ரா - புதிய பந்து
பும்ரா - புதிய பந்து

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் SG வகை பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக பயன்படுத்தப்படும் SG பந்துகளில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திடீரென எதற்கு இந்த மாற்றங்கள், இந்த மாற்றங்கள்தான் பெளலர்களுக்குப் பிரச்னையா?!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரன் மழை பொழிந்துகொண்டிருக்கிறது இங்கிலாந்து. மூன்று ஸ்பின்னர்கள், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் எனத்திறமையான பெளலர்களைக் கொண்டும் இங்கிலாந்தின் விக்கெட்களை அவ்வளவு எளிதாக வீழ்த்தமுடியாமல் திணறிவருகிறது இந்தியா. விக்கெட் விழாமல் இருக்க இந்தியா இந்தப்போட்டியில் புதிதாகப் பயன்படுத்தும் பந்தும் காரணமாக இருக்குமே என்கிற சந்தேகங்களை சிலர் கிளப்பிவருகிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் SG வகை பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக பயன்படுத்தப்படும் SG பந்துகளில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திடீரென எதற்கு இந்த மாற்றங்கள், இந்த மாற்றங்கள்தான் பெளலர்களுக்குப் பிரச்னையா?!

ரஞ்சி போட்டிகள் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரை இந்தியாவில் SG பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பந்தின் தன்மை குறித்தும் தரம் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளது. வீரர்களும் பயிற்சியாளர்களுமே இந்த பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2018-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஹோம் சீரிஸின்போது அஷ்வினும் இந்த SG பந்தைக்கொண்டு வீசுவதில் உள்ள சிரமங்கள் குறித்து பேசியிருந்தார். ``கொக்கபோரா, டியுக் வகை பந்துகளை வைத்து வீசுவதுதான் வசதியாக இருக்கிறது. SG வகை பந்துகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே கடினத்தன்மையை இழந்துவிடுகிறது. அதன்பிறகு மென்மையான அந்த பந்தை வைத்து வீசுவது சிரமமாக இருக்கிறது. முன்பெல்லாம் SGயின் பந்துகள் மிகத்தரமாக இருக்கும். இப்போது அப்படியில்லை'' என சொல்லியிருந்தார் அஷ்வின். குல்தீப் யாதவும் அஷ்வினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். கேப்டன் கோலியும் சீக்கிரமே கடினத்தன்மையை இழந்துவிடும் SG பந்துகள் மீது அதிருப்தியே தெரிவித்திருந்தார். SG க்கு பதிலாக டியுக் வகை பந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார் கோலி.

புதிய பந்தில் பிரச்னையா... ஏன் இந்திய பெளலர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தமுடியவில்லை?!

ரஞ்சி வீரர்களும் அணியின் பயிற்சியாளர்களுமே கூட இதே கருத்தை சொன்னதால் பிசிசிஐ இது குறித்து ஆலோசித்தது. கோலி சொல்வதைப்போல டியுக் வகை பந்துகளுக்கு மாறிவிடலாம் என்றாலும் அதிலும் பல சிக்கல்கள் இருந்தது. இந்திய பௌலர்கள், உள்ளூர் வீரர்கள் என எல்லாருமே சிறு வயதிலிருந்தே SG பந்துகளை வைத்தே பந்து வீசி பழகியிருக்கின்றனர். திடீரென வேறு பந்தை கொண்டு வந்தால் இவர்களுக்கு தடுமாற்றமாகிவிடும். மேலும், SG பந்துகளை விட டியுக், கொக்கபரா பந்துகளின் விலையும் அதிகம். இதனால் செலவும் அதிகரிக்கும். எனவே, புதிய வகைப் பந்துகளை வாங்குவது என்கிற ஆலோசனை கைவிடப்பட்டது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அதற்கேற்ப SG பந்திலேயே மாற்றம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படியே வீரர்களின் கருத்தைக் கேட்டு இப்போது சில மாற்றங்களோடு புதிய SG வகை பந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பந்துதான் இப்போது இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?

புதிய பந்தில் பிரச்னையா... ஏன் இந்திய பெளலர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தமுடியவில்லை?!

சீக்கிரமே கடினத்தன்மையை இழக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பந்துக்குள் பயன்படுத்தப்படும் கார்க் முன்பை விட கடினமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், பந்தின் தையல் பகுதி இன்னும் கொஞ்சம் அகலமாக முன்பை விட மேலெழும்பி இருக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. பந்தின் நிறமும் முன்பை விட அதிகமான அடர் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றங்கள் எந்த வகையில் பந்து வீச்சாளர்களுக்கு உதவும்?

பந்து சீக்கிரமே மென்மையானதாக மாறிவிடுகிறது என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால், இப்போது பந்துக்குள் வைக்கப்படும் கார்க் மேலும் வலுவானதாக மாறியிருப்பதால் பந்து 60 ஓவர்கள் வரை அதன் கடினத்தன்மையை இழக்காமல் இருக்கும். பந்தின் சீம் பகுதியான தையல் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் ஸ்பின்னர்கள் பந்தை முன்பை விட இன்னும் வசதியாகப் பிடித்து வீச முடியும்.

மேலும், இந்த மாற்றங்கள் அதிக பவுன்சுக்கும் பந்தை மூவ் செய்ய வைப்பதற்கும் பயன்படும் என கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங்கும் இதே காரணங்களை குறிப்பிட்டு பந்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பௌலர்களுக்கு உதவும் என்று கூறியிருக்கிறார்.

புதிய பந்தில் பிரச்னையா... ஏன் இந்திய பெளலர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தமுடியவில்லை?!

பந்தின் நிறத்தை பொருத்தவரையில் பந்து இன்னும் அடர் நிறத்தில் மாறியிருப்பது பௌலர்களுக்கு உதவும் என்பதற்கு எந்தவித அறிவியல்பூர்வ காரணங்களும் இல்லை. ஆனால், பௌலர்கள் எப்போதுமே பந்து வெளிர் நிறத்தில் இருப்பதை விரும்புவதில்லை. அடர் நிறம் அவர்களுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தவதாக நம்புகிறார்கள். அதனால், இந்த அடர் நிற மாற்றமும் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங்.

SG பந்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து இவர்கள் விவரிப்பதை பார்த்தால் சேப்பாக்கத்தில் இங்கிலாந்து இதற்குள் ஆல் அவுட் ஆகியிருக்க வேண்டுமே? மாறாக ரூட்டும் ஸ்டோக்ஸும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்களே.

சேப்பாக்கத்தை பொருத்தவரை பிட்ச்சில் பௌலர்களுக்கு உதவும் வகையில் எதுவே இல்லை. முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விஷயங்கள் இருப்பதால் பந்தை குறை சொல்லி எந்த ஒரு ப்ரயோஜனமுமில்லை. அஹமதாபாத்தில்தான் இந்த புது பந்து ஏற்படுத்தப்போகும் தாக்கம் முழுமையாக தெரியும்.

கடினத்தன்மை, க்ரிப் முதலானவை குறித்து இந்த போட்டி முடிந்த பிறகு அஷ்வினும் மற்ற பௌலர்களும் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு