Published:Updated:

HBD சுனில் நரைன் - தீரவே தீராத அச்சத்தைக் கொடுக்கும் Ghost!

சுனில் நரைன் | IPL 2021

சுனில் நரைனை எதிர்கொள்ள அத்தனை வீரர்களுக்கும் சொல்லப்படும் ஒரே அறிவுரை 'அவரின் நான்கு ஓவர்களை விக்கெட் விடாமல் எப்படியாவது சமாளித்து ஆடிவிடுங்கள். அதன்பிறகு, மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம்' என்பதே.

HBD சுனில் நரைன் - தீரவே தீராத அச்சத்தைக் கொடுக்கும் Ghost!

சுனில் நரைனை எதிர்கொள்ள அத்தனை வீரர்களுக்கும் சொல்லப்படும் ஒரே அறிவுரை 'அவரின் நான்கு ஓவர்களை விக்கெட் விடாமல் எப்படியாவது சமாளித்து ஆடிவிடுங்கள். அதன்பிறகு, மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம்' என்பதே.

Published:Updated:
சுனில் நரைன் | IPL 2021

மர்மம், சிக்கனம், துல்லியம், தன்முனைப்பு இவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு பெயர்ச்சொல்லுக்குள் அடக்க வேண்டுமெனில் சுனில் நரைன் எனக் குறிப்பிடலாம். மர்மத்தின் அச்சத்தை சிக்கனத்தின் பலனை துல்லியத்தின் நேர்த்தியை தன்முனைப்பின் ஏற்றத்தை தனது கரியரின் ஒவ்வொரு கட்டத்திலுமே வெளிக்காட்டி கொண்டிருப்பவர் சுனில் நரைன் மட்டுமே.

எண்களின் அடிப்படையில் பார்த்திருந்தால் நான் சுனில் நரைனைத் தேர்ந்தெடுத்திருக்கவே முடியாது. கொல்கத்தாவிற்காக அவரை தேர்வு செய்த போது அவர் ஒரு சில போட்டிகளில்தான் ஆடியிருந்தார். முழுக்க முழுக்க உள்ளுணர்வின் அடிப்படையில்தான் நரைனை எடுத்தோம்.
கவுதம் கம்பீர்

என கம்பீர் பேசியிருப்பார். நரைன் எண்களை ஒதுக்கிவிட்டு உள்ளுணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவர்தான். ஆனால், அவரின் முழுமையான வீரியத்தை எண்களை ஒதுக்கிவிட்டு புரிந்துக் கொள்ள முடியாது. ஐ.பி.எல் இல் சீசனுக்கு சீசன் அடிக்கப்படும் சிக்ஸர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விதிமுறைகள் தொடங்கி பிட்ச் வரை எல்லாமே பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருப்பதால் பேட்ஸ்மேன்கள் சகட்டுமேனிக்கு சிக்ஸர்களாக பறக்கவிடுகின்றனர். ஒவ்வொரு பந்தையும் நேராக ஸ்டாண்ட்ஸில் விழ செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் எதிர்கொள்ளவே செய்கின்றனர். இப்படியாக பேட்ஸ்மேன்களிடம் சிக்கி பௌலர்கள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒருவர் சீசன் முழுவதும் அத்தனை போட்டிகளிலும் ஆடி அத்தனை போட்டிகளிலும் தனக்கான 4 ஓவர்களையும் முழுமையாக வீசி ஓவருக்கு 6 ரன்களை கூட கொடுக்காமல் கடும் சிக்கனமாக வீசி முடித்திருக்கிறார். வேறு யார்? அது சுனில் நரைன்தான்.

RR vs KKR | நரைன், ஷெல்டன்
RR vs KKR | நரைன், ஷெல்டன்
இந்த சீசனில் சுனில் நரைனின் எக்கனாமி 5.57 மட்டும்தான்.

2012தான் ஐ.பி.எல் இல் சுனில் நரைனுக்கு முதல் சீசன். அந்த சீசனில் சுனில் நரைனின் எக்கானமி 5.47 மட்டுமே. சுனில் நரைன் 6 பந்துகளை வீசினால் அதில் பவுண்டரி சிக்ஸர் அல்ல; மொத்தமாக 6 ரன்களை எடுப்பது கூட பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருந்தது. பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. முழுமையாக ஒரு தசாப்தமே முடிந்திருக்கிறது. ஆனால், இன்னமும் நிலைமை மாறவில்லை. இப்போதும் இந்த சீசனிலும் சுனில் நரைனின் 6 பந்துகளில் 6 ரன்னை கூட பேட்ஸ்மேன்களால் எடுக்க முடியவில்லை.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே மூன்று சீசன்களில் 6க்கு கீழ் எக்கானமி வைத்திருக்கும் ஒரே பௌலர் நரைன் மட்டும்தான்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த பத்து ஆண்டுகளாக அதே வீரியத்தை தக்கவைத்திருப்பதுதான் சுனில் நரைன் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.

நரைன் ஒரு மிஸ்டரி ஸ்பின்னர். மிஸ்டரி ஸ்பின்னர்களுக்கென்று கிரிக்கெட் உலகில் ஒரு தனி மதிப்பு உண்டு. ஆனால், அதற்கான காலாவதி தேதி ரொம்பவே குறுகலானது. கணித சமன்பாடுகளை உடைப்பதை போல மிஸ்டரியெல்லாம் சீக்கிரமே உடைத்துவிடுவார்கள். அதுவும் தொழில்நுட்பங்கள் பெரிதும் வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் எதிரணிகள் சுனில் நரைனுக்கென்றே தனி ஆளை அமர்த்தியே அவரின் சூட்சமங்களை முறியடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், யாராலுமே சுனில் நரைனை இப்படி எதிர்கொண்டால் அவரின் பலவீனம் மொத்தத்தையும் அம்பலப்படுத்திவிடலாம், அவரின் ஓவர்களை சிதறடித்துவிடலாம் என எந்த பார்முலாவையும் கொண்டு வர முடியவில்லை.

சுனில் நரைன்
சுனில் நரைன்
சுனில் நரைனை எதிர்கொள்ள அத்தனை வீரர்களுக்கும் சொல்லப்படும் ஒரே அறிவுரை `அவரின் நான்கு ஓவர்களை விக்கெட் விடாமல் எப்படியாவது பார்த்து ஆடிவிடுங்கள். அதன்பிறகு, மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம்' என்பதே.

தனக்கென தனி சகாப்தமே அமைத்து வைத்திருக்கும் பேட்ஸ்மேன்களே கூட நரைனுக்கு எதிராக இந்த அறிவுரையைத்தான் பின்பற்றுவார்கள். நரைனின் ஓவரில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காத பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இங்கே இருக்கின்றனர். நரைனை எதிர்கொள்ளும்போது மட்டும் ஹெல்மட்டோடு சேர்த்து தங்களின் சூப்பர் ஸ்டார் கிரீடத்தையும் கழட்டி வைத்துவிட்டே எதிர்கொள்வார்கள்.

2012 மற்றும் 2014 சீசன்களில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நரைனே. இந்த இரண்டு சீசன்களிலும் சேர்த்து 45 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். எக்கனாமியும் 6 க்கு நெருக்கமாக மட்டுமே இருக்கும். கொல்கத்தாவின் மிக முக்கிய துருப்புச்சீட்டு சுனில் நரைன். பௌலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலுமே. கங்குலி ஓப்பனராக இறங்கிய அந்த அணியில் இரண்டு மூன்று சீசன்களாக ஓப்பனிங்க் இறங்கி அதிலும் எதிரணிகளை உதற செய்யும் வகையில் அதிரடி சூறாவளியாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

சுனில் நரைன்
சுனில் நரைன்

2012 இல் வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற போது அந்த அணியிலும் மறக்கவே முடியாத பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்திருந்தார். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் 138 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழலில் 3.3 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏந்தியபோது அதில் நரைனின் கை தடங்கள் கொஞ்சம் அதிகமாகவே பதிவாகியிருந்தன. வெஸ்ட் இண்டீஸிற்காக இன்னும் அதிகமாக நரைன் ஆடியிருக்க வேண்டும். அதன் விளைவாக இன்னும் அதிக கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் வென்றிருக்க வேண்டும். காயங்கள், பௌலிங் சர்ச்சைகள், கிரிக்கெட் போர்டுடனான மோதல் என தடங்கல்களாக வந்து நரைனை முடக்கிவிட்டன. நரைனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் வெஸ்ட் இண்டீஸ் இழைத்த தவறு அவர்களின் வரலாற்றில் துடைக்க முடியாத கறையாக என்றைக்கும் நிலைத்திருக்கும்.

சுனில் நரைன்
சுனில் நரைன்
`Once upon a time there lived a ghost' என்பது தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்படும் வாக்கியமாக இருக்கிறது. நரைனின் கரியரில் இந்த `Once upon a time...' என்கிற கதைக்கெல்லாம் வேலையே இல்லை. ஏனென்றால், கிரிக்கெட் களத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு தருணத்திலுமே அவர் Ghostதான்! பேட்ஸ்மேன்களால் புரிந்துக்கொள்ளவே முடியாத தீரவே தீராத அச்சத்தைக் கொடுக்கும் Ghost!