Published:Updated:

அலெக்ஸ் ஹேல்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குள் நிலவும் அரசியல்... விடாமல் போராடும் அதிரடி வீரன்!

Alex Hales

இங்கிலாந்து அணியின் கேப்டனாக போவது இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு உயரத்துக்குப் போனார் ஹேல்ஸ்.

அலெக்ஸ் ஹேல்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குள் நிலவும் அரசியல்... விடாமல் போராடும் அதிரடி வீரன்!

இங்கிலாந்து அணியின் கேப்டனாக போவது இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு உயரத்துக்குப் போனார் ஹேல்ஸ்.

Published:Updated:
Alex Hales
பங்கேற்கும் ஒவ்வொரு தொடரிலும் தொடர்ந்து நான் சிறப்பாகவே ஆடி வருகிறேன். இன்னும் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடும் தகுதியுடன் இருக்கிறேன் என்று மக்கள் முன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். அடுத்து ஆடப்போகும் தொடர்களிலும் இதேப்போல் ஆடுவேன்.
அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

ஒரு காலத்தில் இங்கிலாந்து அணி பவர்ப்ளே ஓவர்களில் பேட்டிங் ஆடப்போகிறது என்றாலே அத்தனை பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு கலக்கம் இருக்கும். காரணம், தொடக்க வீரராக களம் இறங்கும் அலெக்ஸ் ஹேல்ஸ். அழகும் அதிரடியும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஹேல்ஸ். இங்கிலாந்து வீரர்களுக்கே உரித்தான கண் கவர் கிரிக்கெட் ஷாட்டுகளாய் இருந்தாலும் சரி.. அல்லது இந்தக் காலத்து மசாலா கிரிக்கெட்டுக்கு ஏற்ற டி20 ஷாட்டுகள் என்றாலும் சரி... எதுவாயிருந்தாலும் எனக்கு அல்வா சாப்பிடுவது போன்றது என பிரித்து மேய்ந்து விடுவார். நேர்தியாக ஆட்டத்தின் வேகத்தை நகர்த்தும் குணமும் ஹேல்ஸிடம் உண்டு. ஒரு காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் டி20 முகமாக பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் இப்போது, மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஆடப் போராடிக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கான கதவைத் தவிர்க்கமுடியாத தன்னுடைய பர்ஃபாமென்ஸால் தட்டிக்கொண்டேயிருக்கிறார். ஆனால், கதவுகள் இன்னும் திறக்கப்படுவற்கான சமிஞ்சைகளே தெரியவில்லை!

அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமான ஐந்தாவது ஆட்டத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அத்தனை பகுதிகளுக்கு பறக்க விட்டு 99 ரன்கள் எடுத்தார். ‘’இது வெறும் தொடக்கம் தான். இன்று ஹேல்ஸ் தவறவிட்ட சதத்தை விரைவில் அடிப்பார்’’ என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். அது போலவே 2014-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக சதம் கடந்து அசத்தினார். அதன் பின்பு இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்டிங் வீரராக வலம் வரத் தொடங்கினார் ஹேல்ஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அழகாக பயன்படுத்த, ஒரு கட்டத்தில் ‘ஹேல்ஸ் இல்லையென்றால் இங்கிலாந்து அணி இல்லை’ என்று பேசப்படும் அளவுக்கு பிரபலமானார். டி20 என்று மட்டும் இல்லாது ஒரு நாள் அணியிலும் தனது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் கதவைத் தட்டி அங்கும் வந்து அமர்ந்தார். ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கூட கால் பதித்தார் ஹேல்ஸ்.

Alex Hales
Alex Hales

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 50 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2017-ம் ஆண்டு 444 ரன்கள் எடுத்தது. அப்போது அது தான் உலக சாதனை. அந்த உலக சாதனைக்கு அடிப்படையே ஹேல்ஸின் பேட்டில் இருந்து வந்த 171 ரன்கள். 22 பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் என பட்டையை கிளப்பினார். பின்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அசத்த அடுத்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக போவது இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு உயரத்துக்குப் போனார் ஹேல்ஸ்.

நன்றாகப் போய்க்கொண்டு இருந்த ஹேல்ஸின் வாழ்வில் முதல் புயல் பிரிஸ்டலில் வீசியது. ஒரு நைட் கிளப்பில் ஹேல்ஸும், ஸ்டோக்ஸும் இணைந்து ஒருவரை அடித்ததாக செய்தி வெளியானது. ஹேல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெரிதாக ஸ்டோக்ஸ் பெயர்தான் பேசப்பட்டதே தவிர ஹேல்ஸ் மீது மீடியாக்கள் மொய்க்கவில்லை. இந்த பிரிஸ்டல் சம்பவத்துக்கு பிறகு சில ஆட்டங்களில் அவர் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ என்ற இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி அசத்த தொடங்கியது. ஹேல்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ஆட வேண்டும் என்றால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதே சூழலில் தான் இங்கிலாந்து அணி புத்துயிர் பெறத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான உலக கோப்பை அனுபவத்தை தடம் தெரியாத அளவு துடைத்தார் கேப்டன் இயான் மார்கன். 2016-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி, 2017 சேம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி என்று நல்ல முன்னேற்றம் கண்டு கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. 300-க்கு அதிகமாக ஒரு நாள் போட்டிகளில் இலக்கு அமைந்தாலும் அதை எளிதாக விரட்டி சென்று அடித்து மிரட்டியது. மார்கன் தனது கேப்டன்சி மற்றும் பேட்டிங் மூலம் தொடர்ந்து அசத்த அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நிச்சயம் ஹேல்ஸ்தான் தொடக்க வீரர் என்று பலரும் நினைத்தபோது இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ஒரு நாள் தொடரான ராயல் லண்டன் தொடரில் இருந்து திடீரென ஹேல்ஸ் விலகினார். சில நாட்களில் ஹேல்ஸ் முறையற்ற மருந்துகளை எடுத்துக் கொண்டார் என சோதனையில் தெரிய வந்தது. 21 நாட்கள் இங்கிலாந்து கிரிக்கெட் ஹேல்சுக்கு தடை விதித்தது. இந்த நிலையில் அணியில் நீடித்தல் நல்லதல்ல என்று இங்கிலாந்து அணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் ஹேல்ஸ். அதுதான் அவர் இங்கிலாந்து அணியினருடன் இருந்த கடைசி நாள்.

அலெக்ஸ் ஹேல்ஸ்
அலெக்ஸ் ஹேல்ஸ்

21 நாட்கள் தடை முடிந்த பிறகும், இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், இதற்கு பிறகு பல்வேறு முறை தன்னை நிரூபித்த பிறகும் அலெக்ஸ் ஹேல்ஸை இங்கிலாந்து நிர்வாகம் ஒரு முறை கூட முகம் திருப்பிப் பார்க்கவில்லை. 2019 பிக் பேஷ் தொடரில் 576 ரன்கள் குவித்தார் ஹேல்ஸ்ட். 2020-ம் ஆண்டு 543 ரன்கள் எடுத்தார். தற்போது நடந்து வரும் டி20 பிளாஸ்ட் தொடரிலும் 463 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அதுவும் போக, பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற தொடர்களிலும் ஆடி எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தன்னை நிரூபித்து விட்டார் ஹேல்ஸ். ஆனாலும் இங்கிலாந்து நிர்வாகம் ஹேல்ஸை சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. கடந்த ஆண்டு நியூசிலாந்து வீரரான ஷேன் பாண்ட் கூட அலெக்ஸ் ஹேல்ஸ் மிகவும் அதிகமாக தண்டிக்கப்படுகிறார் என்று சொல்லியிருந்தார்.

இத்தனை முறை தன்னை நிரூபித்தும் இங்கிலாந்து நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் வேறு ஏதோ சிக்கல் இருக்கலாம் என்று பிரபலமாக பேசப்பட்டது. காரணம் ஹேல்ஸுக்கும் மற்ற சீனியர் வீரர்களுக்கும் சில முட்டல் மோதல்கள் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருந்தது. 2017-ம் ஆண்டு ஹேல்ஸ் உள்ளூர் கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஆடிக் கொண்டு இருந்தார். ஹேல்ஸ் இருப்பதால் தான் அந்த அணியில் தனது சகோதரரான பில்லி ரூட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனான ஜோ ரூட்.

2018-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர் ஆடச் சென்றது. டி20 அணியில் ஜோ ரூட் இடம்பெறவில்லை. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வென்ற ஒரே ஆட்டம் ஹேல்ஸ் புண்ணியத்தில்தான் நிகழ்ந்தது. அடுத்ததாக ஒரு நாள் தொடர் நடக்க இருந்த போது, ரூட் அணியில் சேர்க்கப்பட்டார். தான் ஆடிய கடைசி மூன்று ஆட்டங்களில் இரண்டு சதங்கள் அடித்திருந்தாலும் ஜோ ரூட் வந்தவுடன் உடனடியாக ஹேல்ஸை வெளியே உட்கார வைத்தனர். மார்கனுக்கு அடுத்த இடத்தில் ஹேல்ஸ் இருந்ததால் அதை நீக்க வேண்டும் என்ற முயற்சியில் ரூட் ஈடுபடுவது போல் தெரிந்தது. மார்கனுக்கு பிறகு தானே கேப்டன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ரூட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஹேல்ஸ் உலகக்கோப்பை அணிக்கு டேவிட் வில்லியை கொண்டு வருவதில் கவனமாக இருந்தார். ஆனால் ஜோ ரூட்டோ பேர்ஸ்ட்டோவை ஆட வைக்க விரும்பினார். இதுவும் ஒரு பிரச்னையாக எழும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஹேல்ஸ் வாழ்க்கையை திருப்பிப் போட்ட அந்த 'டிரக் டெஸ்ட்' சம்பவம் வெளிவந்தது. இதைக் காரணமாக வைத்து தான் தங்களுக்கு இடையூறாக இருந்த ஹேல்ஸை மார்கன் மற்றும் ரூட் இணைந்து புறம் தள்ளினர் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பரபரப்பான கதை இருக்கிறது.

Alex Hales
Alex Hales
Amal.Amarasinha | Wikimedia Commons

ஹேல்ஸ் மட்டும் இல்லாது ஹேல்ஸுக்கு நெருக்கமாக இருக்கும் வில்லி, ஸ்டூவர்ட் பிராட் போன்ற வீரர்களையும் அவ்வப்போது புறக்கணித்து வருகிறது இங்கிலாந்து நிர்வாகமும் ரூட் - மார்கன் இணையும் என்கிறார்கள்.

ஹேல்ஸை அணியை விட்டு நீக்கிய பிறகுதான் அணியில் ஒற்றுமை வந்திருப்பதாகக் கூறினார் ஜோ ரூட். ஒரு தவறான பொருளை அணியில் இருந்து கொண்டே பயன்படுத்திய நபரை எப்படி மீண்டும் நம்புவது என்று கேட்டார் மார்கன். ஆனால், அந்த அணியின் மேனேஜிங் டைரக்டர் ஆக இருக்கும் ஆஷ்லே கைல்ஸ் கூறும் போதோ, "இன்னமும் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு அணியின் கதவு திறந்து தான் இருக்கிறது" என்று கூறுகிறார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு உள்ளே நடக்கும் அரசியலை எல்லாம் பார்த்தால் மார்கன் - ரூட் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலான பெரிய அதிர்ச்சியாக இந்த டிரக் டெஸ்ட் பிரச்னையே ஹேல்ஸை நீக்க வேண்டும் என்று கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஒன்று என்ற கிசுகிசுவும் உண்டு. எது எப்படியோ... எப்போது நாம் சிறிதாக சறுக்குவோம் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறார் அலெக்ஸ் ஹேல்ஸ்.