வினோத் காம்ப்ளி: கிரிக்கெட் வெறியன், சச்சின் நண்பன், ரசிகர்களின் காதலன்... ஆனால்? அண்டர் ஆர்ம்ஸ்-3

வெற்றியாளனின் வாழ்க்கையைவிடவும், வெற்றிகளை கையாளத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தவனிடம் இருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அந்தவகையில் வினோத் காம்ப்ளியின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளவும் விட்டுவிலகவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
''அஜித், என் அண்ணன். இது எங்கள் இருவரின் கனவு. எனக்காக என் அண்ணன் செய்த தியாகங்கள் அதிகம். 11 வயதில் என்னை ஆச்சரேக்கர் சாரிடம் கொண்டுபோய் சேர்த்தார். அன்று முதல் இன்றுவரை நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசாத, டெக்னிக்ஸ் பற்றி அலசாத நாள்களே கிடையாது. பிறக்கும்போதே தொடங்கிய இந்த நல்லுறவு வாழ்வின் இறுதிவரைத் தொடரும்!''சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் நிறைவு உரையில் இருந்து

காம்ப்ளி பற்றிய கட்டுரையில் சச்சினின் உரை எதற்கு என்கிற கேள்விக்கான பதில் இறுதியில் இருக்கிறது.
வெற்றியாளனின் வாழ்க்கையைவிடவும், வெற்றிகளை கையாளத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தவனிடம் இருந்துதான் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்க்கையில் பல கதைகள் இருக்கும். சிலவற்றை நாம் பின்பற்ற வேண்டும். சிலவற்றை அப்படியே புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில் வினோத் காம்ப்ளியின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளவும் விட்டுவிலகவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
''குடிகாரர்... இரவெல்லாம் குடித்துவிட்டு ஒவ்வொரு வீரரின் அறைக்கதவுகளையும் தட்ட ஆரம்பிப்பார். ஒழுங்கின்மை. நெட்பிராக்டீஸூக்கு எல்லாம் நேரத்துக்கு வந்ததேயில்லை.''
வினோத் காம்ப்ளியைப் பற்றி 90-களில் இப்படித்தான் விமர்சிப்பார்கள். அவரின் ஆட்டத்தைவிடவும், அவரின் பர்சனல் விஷயங்கள்தான் செய்திகளாகும்.
வினோத் காம்ப்ளி... இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான பெயர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டநாள் விளையாடியவரோ, அதிக சாதனைகள் செய்தவரோ அல்லர். ஆனால், வினோத் காம்ப்ளியின் பெயர் இன்றைக்கும் நினைவுகூரப்படுகிறது. 1988-ம் ஆண்டு மும்பையின் ஸ்கூல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரோடு இணைந்து 664 ரன்கள் அடித்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் மூலம் உலகுக்கு அறிமுகமானப் பெயர்தான் வினோத் காம்ப்ளி.

ஒரு இந்திய வீரருக்கான சாயலைவிட கரிபீய வீரருக்கான பொலிவோடு இருப்பார் வினோத் காம்ப்ளி. ஸ்டைல், ஆட்டிட்யூட் என எல்லாவற்றிலும் கரீபிய வீரர்களின் காப்பிதான்.
வினோத் காம்ப்ளி என்றதும் 1996 உலகக்கோப்பைப் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்து அழுதுகொண்டே அவர் பெவிலியன் நோக்கி நடந்துபோனதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அழுகை நடையோடு அவரின் கிரிக்கெட் கரியர் கிட்டத்தட்ட முடிந்தது. அதன்பிறகு சச்சினால் மீண்டும் அவர் சிலமுறை அணிக்குள் அழைத்துவரப்பட்டிருந்தாலும் அவரால் அணிக்குள் நிலைக்க முடியவில்லை... ஏன்?
இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே சில வினோதங்கள் நடக்கும். சில வீரர்கள் கன்சிஸ்டென்ட்டாகவே இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுவார்கள். சிலர் நன்றாக விளையாடினாலும் திடீரென டிராப் செய்யப்படுவார்கள். மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்படுவார்கள். மீண்டும் டிராப் செய்யப்படுவார்கள். இப்படி கம்பேக் கொடுப்பவர்களின் கிரிக்கெட் காலம் சீக்கிரமே முடிந்துபோகும். காரணம் ஒவ்வொரு முறையும் நீங்கள் கம்பேக் கொடுக்கும்போதெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா பிரஷர் உள்ளுக்குள் விழும். அடித்தே ஆக வேண்டும். ஒரு மேட்சில் சொதப்பினால்கூட மீண்டும் அணிக்குள் இடம்கிடைக்காது என்கிற எண்ணமே அவர்களின் இயல்பான ஆட்டத்தை ஆடவிடாது. இப்படி கம்பேக் பிரஷரால் காலியானவர்கள் லிஸ்ட்டில் வினோத் காம்ப்ளியின் பெயர் மிஸ் ஆகாது.
ஆக்ரோஷமான ஆட்டம் ஆடக்கூடியவர் அல்ல காம்ப்ளி. ஸ்டைலிஷ் ஷாட்களை ஆடக்கூடியவர். ஸ்ட்ரெய்ட் டிரைவ் அற்புதமாக ஆடுவார். இவரின் லேட் கட் சிறப்பாக இருக்கும். அதே போல் கவர்ஸில் ஆடுவதும் காம்ப்ளிக்குப் பிடிக்கும். ஆனால், ஷார்ட் பால் மட்டும் ஆகாது.

சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் அணிக்குள் வந்தார். காம்ப்ளி மூன்று ஆண்டுகள் கழித்து 19 வயதில் இந்திய அணிக்குள் அறிமுகமானார். 1 டவுன் அல்லது 2 டவுன் பேட்ஸ்மேனான காம்ப்ளிக்கு இந்திய அணிக்குள் நுழையும்போது அந்த பேட்டிங் பொசிஷன் கிடைக்கவில்லை. கபில்தேவ், ஶ்ரீகாந்த், அசாருதின், சாஸ்திரி, சித்து என சீனியர்கள் பலரும் இருந்ததால் நான்காவது டவுன் அல்லது ஐந்தாவது டவுன் வீரராகத்தான் களமிறங்குவார். இவருக்கு முன்னால் சச்சின் இறங்குவார். ஒரு கட்டத்தில் ஆர்டர் மாறியது. சச்சினுக்கு முன்னால் இறங்க ஆரம்பித்து 1 டவுன் பேட்ஸ்மேனாகவும் மாறினார்.
1991 அக்டோபரில் அணிக்குள் வந்தவருக்கு ஷார்ஜா தொடர்தான் முதல் தொடர். இதில் மூன்று போட்டிகளில்தான் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரிதாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காதபோதும் அறிமுகம் ஆன அடுத்த தொடரிலேயே டிராப் செய்யப்படுகிறார் காம்பளி.
அந்தத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்த வேர்ல்டு சீரிஸ். இந்தத் தொடர் 1992 உலகக்கோப்பைக்கு முன்பாக நடக்கிறது. இந்தப் போட்டித்தொடரில் விளையாடுவது 1992 உலகக்கோப்பைக்குப் பயிற்சியாக இருக்கும் எனும்போது வினோத் காம்ப்ளிக்கு இந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தத்தொடரில் விளையாட செளரவ் கங்குலி அழைத்து வரப்படுகிறார். இந்தத்தொடர் முடிந்ததும் அப்படியே உலகக்கோப்பைத் தொடங்குகிறது.
ஆனால், உலகக்கோப்பைக்கான அணியில் காம்ப்ளி சேர்க்கப்படுகிறார். அதாவது, இந்திய அணிக்குள் வந்து ஒரே ஒரு தொடரில் மூன்றே போட்டிகளில் விளையாடியவருக்கு, ஆஸ்திரேலியாவில் விளையாடி பயிற்சிபெறும் வாய்ப்பிருந்தும் அதை வழங்காமல் நேரடியாக உலகக்கோப்பை அணியில் சேர்க்கிறது இந்திய நிர்வாகம். இந்த உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த இந்திய அணியும் இம்ப்ரஸிவ் ஆட்டம் ஆடவில்லை. காம்ப்ளியும் ஆடவில்லை.
இதற்கு அடுத்த ஆண்டு அதாவது, 1993தான் காம்ப்ளி கரியரின் உச்சம். அந்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சென்சுரியுடன் தொடங்குகிறார். அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அடுத்தடுத்து 4 சதங்கள் அடிக்கிறார். இதில் இரண்டு டபுள் சென்சுரிகள். மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவரின் ஆவரேஜ் 54.20. இன்றுவரை டெஸ்ட்டில் அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் இந்திய பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளிதான். அதேபோல் 14 இன்னிங்ஸ்களில் முதல் 1,000 ரன்களைக் கடந்தவர் என்கிற சாதனையும் அவரிடம்தான் இருக்கிறது. முதலில் இங்கிலாந்து, அடுத்து ஜிம்பாப்வே, அடுத்து இலங்கை எனத் தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று வெவ்வேறு நாடுகளுடன் சதம் அடித்தவர் என்கிற சாதனையும் இவரிடம்தான் இருக்கிறது. 1995 அக்டோபர் - நவம்பரில் நியூசிலாந்து இந்தியாவுக்கு டூர் வந்திருந்தது. மூன்று டெஸ்ட்களில் வினோத் காம்ப்ளி மோசமான ஆட்டமும் ஆடவில்லை. ஆனால், இந்தத் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார் காம்ப்ளி. அதன்பிறகு அவருக்கு டெஸ்ட்டில் விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது காம்ப்ளிக்கு வயது 23. ஆவரேஜ் 50-க்கு மேல் வைத்திருந்தும் ஓரங்கட்டப்பட்டார் காம்ப்ளி.
இந்த ஓரங்கட்டலுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள். அதில் முக்கியமானது காம்ப்ளியின் ஆட்டிட்யூட். தொடர் வெற்றிகளையும் மிகப்பெரிய ஸ்டார் என்கிற அந்தஸ்த்தையும் சரியாக கையாளத்தெரியாமல் தடுமாறினார் காம்ப்ளி. அந்த நேரத்தில் செளரவ் கங்குலியும், ராகுல் டிராவிட்டும் தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடிவந்தனர். காம்ப்ளியால் கிடைக்கும் நல்லதைவிட அவரால் வரும் பிரச்னைகள் அதிகம் என முடிவெடுத்து காம்ப்ளியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றி கங்குலி, டிராவிட்டுக்கு வாய்ப்பளிக்கிறது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.
1992 உலகக்கோப்பைக்கு அடுத்து 1996 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்தார் காம்ப்ளி. எந்தப்போட்டியிலும் பெரிதாக ஆடாத காம்ப்ளி கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே-வுக்கு எதிராக முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடன் தோல்வியடைந்திருந்ததால் ஜிம்பாப்வேவுடன் இந்தியா வெற்றிபெற வேண்டியது முக்கியமாக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டெண்டுல்கர் அவுட் ஆனார். அப்போது சித்துவுடன் பார்ட்னர்ஷிப்போட்டு இந்திய அணியை மீட்டெடுத்தார் காம்ப்ளி. ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் அடித்திருக்கிறார் காம்ப்ளி. அதில் ஒரு சதம் இந்தப்போட்டியில் அடித்ததுதான். இதுதான் அவரது கடைசி சதமும் கூட.

1996 உலகக்கோப்பைக்குப் பிறகு தனது ஃபோகஸை இழந்தார் காம்ப்ளி. இதன்பிறகு அணிக்குள் வருவதும்போவதுமாக இருந்த காம்ப்ளி 1997-ல் சென்னையில் மிக முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானப்போட்டி இது. சச்சின்தான் அப்போது இந்தியாவின் கேப்டன். சென்னையில் நடந்த இந்தப்போட்டியில்தான் சயீத் அன்வர் 194 ரன்கள் அடித்து அப்போதைய காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தார். இந்தியாவுக்கு 328 ரன்களை டார்கெட்டாக வைத்தது பாகிஸ்தான். 4 ரன்களில் சச்சின் அவுட். அடுத்து கங்குலி அவுட் என 61 ரன்களில் 2 விக்கெட்டை இழந்துவிட்டது இந்தியா. டிராவிட் அதிரடியாக ஆரம்பித்து இந்திய அணிக்கு நம்பிக்கைத் தர, டிராவிட்டோடு பார்ட்னர்ஷிப்போட்டார் காம்ப்ளி. இவர்களின் பார்ட்னர்ஷிப் 134 ரன்கள். 80 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்தார் காம்ப்ளி. ஆனாலும், அடுத்தத்தொடரில் காம்ப்ளிக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. அவரின் இடத்துக்கு அசாருதின் வந்துவிட்டார்.
1991-ல் சர்வதேச கிரிக்கெட்டைத் தொடங்கியவரின் கரியர் 9 ஆண்டுகள் இந்திய அணியில் நீடித்தது. ஆனால், இந்த 9 ஆண்டுகளில் 9 முறை இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார் வினோத் காம்ப்ளி.
வினோத் காம்ப்ளியை ரிக்கி பான்ட்டிங்குடன் ஒப்பிடலாம். ஆரம்ப காலங்களில் காம்ப்ளியைப் போன்றே ஆட்டியூட் கொண்டவர்தான் பான்ட்டிங். பார்களில் சண்டைபோடுவது, பயிற்சிகளுக்கு சரியாக போகாமல் விடுவது, சக அணி வீரர்களுடன் சண்டைபோடுவது என இருந்தவர் பான்ட்டிங். ஆனால், பான்ட்டிங்கை அந்த அணி நிர்வாகம் கைவிட்டுவிடவில்லை. அவரிடம் இருந்தத் திறமையை அங்கீகரித்து, மற்ற விஷயங்களில் அவரை சரிசெய்யும் முயற்சிகளை எடுத்தது. தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. மீண்டும் அவரை கிரிக்கெட்டில் ஃபோகஸ் செய்யவைத்தது. ஆனால், காம்ப்ளி கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். இவனை சரிபண்ணி என்ன ஆகப்போகிறது என நினைத்து இந்திய நிர்வாகம். 23 வயதில் டெஸ்ட்டிலும், 28 வயதில் ஒருநாள் போட்டிகளிலும் காம்ப்ளியின் கரியர் முடிவுக்கு வந்தது.

இங்கேதான் சச்சின் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. சச்சினுக்கு அவரது அண்ணன் மிகப்பெரிய பலம். சச்சின் ஃபோகஸ் இழந்துவிடாமல் கரியர் முழுவதும் அவரைத்தாங்கிப்பிடித்துக்கொண்டே வந்தார். அருகிலேயே இருந்தார், வழிகாட்டினார், வழி விலகாமல் பார்த்துகொண்டார். காம்ப்ளிக்கு அப்படியாரும் இல்லை. உச்சத்துக்கு உயர்பவர்களிடம் ஒரு தனிமை சூழும் என்பார்கள். அப்படித்தான் சச்சினுக்கு முன்பாகவே ரன்மெஷினாக மாறியவர் காம்ப்ளி. ஆனால் உச்சத்துக்குப்போனதும் அந்தத் தனிமையையும், வெறுமையையும் எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் பாதை மாறினார் காம்ப்ளி. தவறும்போது தாங்கிப்பிடிக்க உறவோ, நட்போ, காதலோ இல்லையென்றால் மீண்டெழுவது கடினம். காம்ப்ளி அதற்கு ஓர் உதாரணம்!