Published:Updated:

ஹேன்ஸி க்ரோனியே... தொடர் வெற்றிகளால் திணறடித்தவன் வீழ்ந்தது எப்படி? அண்டர் ஆர்ம்ஸ் - 20

ஹேன்ஸி க்ரோனியே
ஹேன்ஸி க்ரோனியே ( ஹாசிப்கான் )

1996 உலகக்கோப்பை தோல்விக்குப்பிறகு பயிற்சியாளர் பாப் உல்மரோடு இணைந்து இன்னும் கடுமையாக உழைத்தார் க்ரோனியே. 1999 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா வெல்லவேண்டும், உலகின் நம்பர் 1 அணியாகக் கொண்டாடப்படவேண்டும் என்பதுதான் அவரின் இலக்கு.

``எப்படி அய்யா மறக்கமுடியும் இதயம் குமுறுதே... எங்கள் அருமை அண்ணன் ஹேன்ஸி க்ரோனி மானம் போனதே! இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சிருந்தாக்கா... நாங்க ராப்பகலா கண் முழுச்சி பார்த்திருப்போமா... நாங்க ராப்பகலா கண் முழிச்சி பார்த்திருப்போமா!''
கானா பாடகர் - சிந்தை புண்ணியநாதன்

2000-களில் விஜய் டிவியில் ஒளிபரப்பான யூகி சேதுவின் நையாண்டி தர்பார் மிகவும் பிரபலம். ஹேன்சி குரோனியே மேட்ச் ஃபிக்ஸிங் புகார்களில் சிக்கி, தவறை ஒப்புக்கொண்டு அழுத அந்த பிரஸ் மீட் வீடியோ ரிலீஸ் ஆன சிலநாள்களில் நடந்த நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் ஹேன்சி க்ரோனியே பற்றி கானா பாடகர் சிந்தை புண்ணியநாதன் பாடிய பாடல் இது.

டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா என சில பெயர்கள் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கும். அப்படி கிரிக்கெட் வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத ஒரு பெயர் ஹேன்ஸி க்ரோனியே. ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் எப்படியிருக்கவேண்டும் என உலகம் முழுக்க உதாரணம் காட்டப்பட்டவர் க்ரோனியே. தன்னிகரில்லாத தலைவனாக உயர்ந்து, பின்னர் வஞ்சகர் வலையில் விழுந்து, இறுதியாக விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்து என ஹேன்ஸி க்ரோனியேவின் வாழ்க்கை தொடங்கிய வேகத்தில் 32 வயதிலேயே முடிந்துவிட்டது. இப்போதும் பல முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் க்ரோனியே விபத்தில் மரணம் அடையவில்லை கொலை செய்யப்பட்டார் என்றும், அவரோடு தொடர்புடைய பாப் உல்மரும் 2007-ல் கொலை செய்யப்பட்டார் என்றும் சொல்வதுண்டு.

தென்னாப்பிரிக்கவின் ஹீரோ ஹேன்ஸி க்ரோனியேவின் வீழ்ச்சியைப் பார்க்கும் முன் அவர் எழுந்த கதையை அறிந்துகொள்வது அவசியம்.
டெல்லி கேப்பிடல்ஸ்: சாம்பியனாகும் அத்தனை அம்சமும் உண்டு... ஆனாலும் தோல்விகள் ஏன்? LEAGUE லீக்ஸ் - 6

90-களில் கிரிக்கெட் உலகமே வியந்து பார்த்த கேப்டன் ஹேன்ஸி க்ரோனியே. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பைகளை வெல்லவில்லையென்றாலும் அதை வீழ்த்தவேமுடியாத அணியாக, உலகின் நம்பர் 1 அணியாகக் கட்டமைத்தவர் ஹேன்ஸி க்ரோனியே. 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் க்ரோனியே கேப்டனாக மட்டுமே 53 டெஸ்ட் போட்டிகளை எதிர்கொண்டிருக்கிறார். இதில் 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி. 11 போட்டிகளில் மட்டுமே தோல்வி. இவர் தலைமையிலான அணி 18 தொடர்களில் விளையாடி 13 தொடர்களைக் கைப்பற்றியிருக்கிறது. அதேப்போல 138 ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு தலைமையேற்று வழிநடத்தியிருக்கிறார் க்ரோனியே. இதில் 99 போட்டிகளில் வெற்றி. வெறும் 35 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.

Hansie Cronje
Hansie Cronje

தலைமைப்பண்புகளோடே பிறந்தவன் என சிலரை சொல்வார்கள். அப்படிப்பட்ட தலைவன் ஹேன்ஸி க்ரோனியே. இனப்பாகுபாடின் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட தென்னாப்பிரிக்கா, 1991-ல் தடை நீங்கி மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தது. முதன்முதலாக இந்தியாவுடன்தான் ஆடியது தென்னாப்பிரிக்கா. 42 வயதான கிளைவ் ரைஸ்தான் அப்போது தென்னாப்பிரிக்காவின் கேப்டன். தொடர்ந்து பல காலமாக உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த கிளைவ் ரைஸுக்கு, 42 வயதானாலும் சர்வதேசப்போட்டிக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கூடவே அணிக்குள் விளையாடுவதற்காக அல்லாமல், இந்தத் தொடரைப் பார்த்து சர்வதேச கிரிக்கெட்டைப் புரிந்துகொள்வதற்காகவே மூன்று இளம் கிரிக்கெட் வீரர்களை அனுப்பிவைத்தது தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம். அந்த மூன்று இளைஞர்களில் ஒருவராக தென்னாப்பிரிக்க அணியோடு இந்தியா வந்தவர்தான் 22 வயதான ஹேன்ஸி க்ரோனியே.

முதல் இந்திய டூரை தென்னாப்பிரிக்கா தோல்வியில் முடிக்கிறது. ஆனால், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் செல்வாக்கு, புகழ், கிரிக்கெட் வீரர்களை மக்கள் கொண்டாடும் விதம் என எல்லாவற்றையும் பார்த்து பிரமிக்கிறார் க்ரோனியே. முழுமையான கிரிக்கெட் வீரராக மாறவேண்டும் என முடிவெடுக்கிறார். முழுமையான என்பதற்கான காரணம் தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு கலாசாரம்தான். தென்னாப்பிரிக்க இளைஞர்கள் பள்ளிகளில் குறைந்தது மூன்று விளையாட்டுகளிலாவது பங்கேற்கவேண்டும். மூன்றில் எந்த விளையாட்டு என்பதை 20-களுக்கு மேல்தான் முடிவெடுப்பார்கள். அப்படி ரக்பியா, கிரிக்கெட்டா என குழப்பத்தில் இருந்தவர் இந்திய டூரால் இனி கிரிக்கெட்தான் என முடிவெடுக்கிறார்.

Hansie Cronje
Hansie Cronje

1991-ல் தென்னாப்பிரிக்கா இந்தியா வந்ததற்குப் பதில் பயணமாக 1992-ல் முகமது அசாருதின் தலைமையில் தென்னாப்பிரிக்கா செல்கிறது இந்தியா. அப்போது இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார் க்ரோனியே. இதற்கு முன்பாக மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட்டிலும், 1992 உலகக்கோப்பையில் ஒருநாள் போட்டிகளிலும் க்ரோனியே தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகிவிட்டார். ஆனால், தவிர்க்கமுடியாத வீரராக மாறவில்லை.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் க்ரோனியே சேர்க்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது டெஸ்ட்டில் க்ரோனியேவுக்கு வாய்ப்பு வழங்குகிறார் கேப்டன் கெப்லர் வெசல்ஸ். சிறப்பாக விளையாடி சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துகிறார் க்ரோனியே.

2 டெஸ்ட்டுகள் முடிந்ததும் 7 ஒருநாள் போட்டிகள் மீண்டும் 2 டெஸ்ட் என்பதுதான் டூர் ஷெட்யூல். இரண்டு டெஸ்ட் முடிந்ததும் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா கஷ்டப்பட்டு 184 ரன்கள் அடித்தது. இந்தியாவை கஷ்டப்படுத்தியவர் க்ரோனியே. ஜடேஜா, டபிள்யு.வி ராமன், மஞ்ரேக்கர், பிரவீன் ஆம்ரே, மனோஜ் பிரபாகர் என இந்தியாவின் 5 விக்கெட்டுகளை எடுத்தார் க்ரோனியே. க்ரோனியே இந்தியாவை 184 ரன்களுக்குள் சுருட்டியும், இந்த டார்கெட்டை சேஸ் செய்ய தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் திணறியது. கடைசியில் 4 பந்துகளில் 6 ரன் அடிக்கவேண்டும் என்கிற நிலையில் சிக்ஸர் அடித்து மேட்சை முடித்துவைத்தார் க்ரோனியே. பெளலிங்கில் அந்த ஃபைஃபரும், பேட்டிங்கில் அந்த சிக்ஸரும்தான் க்ரோனியேவை அணிக்குள் நிரந்தரமாக்கியது.

சனத் ஜெயசூர்யா... இந்தியர்களுக்கு மன அழுத்தம் தந்த இலங்கையின் மாவீரன்! - அண்டர் ஆர்ம்ஸ் - 19

இந்த ஒருநாள் தொடருக்கு அடுத்து நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் சதம் அடித்தார் ஹேன்ஸி. அடுத்த சில ஆண்டுகளிலேயே கெப்ளர் வெசல்ஸ் அணியில் இல்லாதபோது க்ரோனியே கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 1994-ல் இருந்து முழுமையான கேப்டன்ஸி க்ரோனியேவிடம் வந்தது. அதுமட்டுமல்ல அப்போதுதான் தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளராக பாப் உல்மரும் அணிக்குள் வந்தார். இந்த இருவர் கூட்டணிதான் தென்னாப்பிரிக்காவை கட்டி எழுப்பியது. அப்போதே வீடியோக்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்கள் எங்கே தவறிழைக்கிறார்கள், எப்படிப்பட்ட பந்துகளை அடிக்கமுடியாமல் திணறுகிறார்கள், எந்த லென்த்தில் அவர்களுக்குப் பந்துவீசவேண்டும் என வியூகங்கள் வகுத்தார் பாப் உல்மர்.

1996 உலகக்கோப்பையில் பலமான அணியாக இருந்தது தென்னாப்பிரிக்காதான். பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து என லீகில் எல்லா அணிகளையுமே தோற்கடித்தார்கள். ஆனால், காலிறுதிப்போட்டியில் திடீரென லாரா விஸ்வரூபம் எடுத்து சதம் அடிக்க, 264 ரன்களை சேஸ் செய்யமுடியாமல் 19 ரன்களில் தோல்வியடைந்து உலகக்கோப்பையைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

1996 உலகக்கோப்பை தோல்விக்குப்பிறகு பயிற்சியாளர் பாப் உல்மரோடு இணைந்து இன்னும் கடுமையாக உழைத்தார் க்ரோனியே. 1999 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா வெல்லவேண்டும், உலகின் நம்பர் 1 அணியாகக் கொண்டாடப்படவேண்டும் என்பதுதான் கேப்டன் க்ரோனியேவின் இலக்கு. அதற்கு உண்மையிலேயே தகுதியான அணியாக தென்னாப்பிரிக்காவை மாற்றிக்காட்டினார். எல்லா வீரர்களுமே ஃபிட்டாக இருக்கவேண்டும், மிகச்சிறந்த ஃபீல்டர்களாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

Bob Woolmer, Hansie Cronje
Bob Woolmer, Hansie Cronje

90'களில் ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடக்கூடிய அணியாக இருந்தது தென்னாப்பிரிக்கா மட்டும்தான். அதற்குக் காரணம் க்ரோனியேவின் லீடர்ஷிப். ஒரே அணிக்குள் மூன்று கேப்டன்கள் என்கிற ஃபார்முலாவைக் கொண்டுவந்தவர் க்ரோனியே. பேட்டிங் கேப்டன் கேரி கிரிஸ்டன், பெளலிங் கேப்டன் ஆலன் டொனால்ட், ஃபீல்டிங் கேப்டன் ஜான்ட்டி ரோட்ஸ்... இவர்கள் மூவரையும் அணிக்குள் சிறு தலைவர்களாக உருவாக்கி திறமையான இளம் அணியை உருவாக்கினார் க்ரோனியே. அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லரின் கேப்டன்ஷிப்பில் ஆக்ரோஷம் இருக்காது. அமைதியாக வெற்றிதோல்விகளைக் கடந்துபோவார். ஆனால், க்ரோனியேவிடம் ஆழ்ந்த அமைதியும் இருக்கும், அதிரடி ஆக்ரோஷமும் இருக்கும். ஒவ்வொரு வீரரின் பங்குமே வெற்றிக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பையும் அங்கீகரித்து, அவர்கள் தவறு செய்யும்போது தனியாக அழைத்து அவர்களைத் திருத்தி என தனித்தலைவனாக உருவெடுத்தவர் ஹேன்ஸி க்ரோனியே.

எவ்வளவு ரன்கள் அடித்தார், எவ்வளவு சதங்கள், எவ்வளவு விக்கெட்டுகள் என்பதைக்கொண்டு க்ரோனியேவின் கரியரைக் கணக்கிடமுடியாது. அணி எப்போதெல்லாம் சிக்கலை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அணியை சரிவில் இருந்து மீட்கும் மீட்பராக இருந்திருக்கிறார். 5 அல்லது 7வது இடத்தில்தான் பொதுவாக பேட்டிங் ஆடுவார். சில போட்டிகளில் திடீரென 1 டவுன் பேட்ஸ்மேனாகவும் வருவார். பெளலிங்கைப் பொருத்தவரை விக்கெட் டு விக்கெட் போட்டு பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்கமுடியாத நிலையை உருவாக்குவார். இவரது ஓவரில் எகிறும் பிரஷரை சமாளிக்க அடுத்த ஓவரில் ரன் அடிக்க ஆசைப்பட்டு பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவார்கள். இவரது பந்தில் சிக்ஸர்கள் அடிப்பதெல்லாம் மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கிறது.

இங்கிலாந்தில் நடந்த அந்த 1999 உலகக்கோப்பையில் ஒரே ஒரு ரன்னில் ரன் அவுட்டால் மிஸ்ஸானது தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு. அந்த 1 ரன்னை அன்று அடித்திருந்தால் ஆஸ்திரேலியா அந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியோடு வெளியேறியிருக்கும். க்ரோனியேவின் உலகக்கோப்பை கனவு நிறைவேறியிருக்கும்.

2000-த்தின் தொடக்கத்தில்தான் சிக்கலில் சிக்குகிறார் ஹேன்ஸி க்ரோனியே. அவருக்கும் புக்கிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளியேவருகிறது. ஆட்டத்தின் முடிவுகளை மாற்ற பணம் பெற்றுக்கொள்கிறார். 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிதான் கிரிக்கெட் வரலாற்றில் அழிக்கமுடியாத கறையாகப் படிந்தது. இந்த டெஸ்ட்டில் ஆட்டம் தொடங்கிய முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 156 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தபோது மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று நாள்களும் போட்டிகள் நடைபெறவில்லை. ஐந்தாவது நாள் மழையில்லாமல் விடிய, இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைனை சந்தித்துப்பேசுகிறார் க்ரோனியே. ''ஒரே இன்னிங்ஸ் போதும். நாங்கள் அடிக்கும் 250 ரன்களை நீங்கள் சேஸ் செய்யவேண்டும்'' என்று சொல்கிறார்.

Hansie Cronje
Hansie Cronje

ரசிகர்களைத் திருப்திப்படுத்தவேண்டும், ரிசல்ட் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே க்ரோனியே இப்படி ஒரு யோசனையோடு வந்திருக்கிறார் என எல்லோரும் புகழ, இந்தப் போட்டியில் நிச்சயம் ரிசல்ட் கிடைக்கும் என புக்கிகளுக்கு அவர் கொடுத்திருந்த வாக்குறுதி அதன்பிறகுதான் வெளியே தெரியவந்தது. இந்தத் தொடருக்கு அடுத்து இந்தியாவில் டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் விளையாட வந்தது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் போட்டிகளுக்கு சச்சின் கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கங்குலி கேப்டனாகவும் இருந்தார்கள். இந்தத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்பதற்காக பணம் பெற்றுக்கொள்கிறார் க்ரோனியே. குறிப்பிட்ட அந்தப் போட்டியில் தோற்பதற்காக பேட்ஸ்மேன் ஹெர்ஷெல் கிப்ஸிடமும், பெளலர் வில்லியம்ஸிடமும் டீல் பேசுகிறார். கிப்ஸ் 20 ரன்களுக்குள் அவுட் ஆகவேண்டும். ஹென்ரி வில்லியம்ஸ் தனது 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் கொடுக்கவேண்டும் என்பதுதான் டீல்.

கடைசிப்போட்டியில்தான் வில்லியம்ஸ் அணியில் சேர்க்கப்படுகிறார். ஆனால், க்ரோனியே சொன்னபடி கிப்ஸ் விளையாடவில்லை. 53 பந்துகளில் 74 ரன்கள் அடிக்கிறார் கிப்ஸ். வில்லியம்ஸ் கங்குலியின் விக்கெட்டை எடுத்துவிட்டு 1.5 ஓவர்கள் மட்டுமே வீசி காயம் காரணமாக வெளியேறிவிடுகிறார். அன்று க்ரோனியே தொடர்ந்து 10 ஓவர்கள் போட்டார். விக்கெட் இல்லாமல் 62 ரன்கள் கொடுத்தார். ஆனாலும், அன்று இந்தியா 310 ரன்களில் ஆல் அவுட் ஆக தென்னாப்பிரிக்கா வென்றது. புக்கிகளுக்கு பல கோடிகள் நஷ்டம். டீல் பேசியபடி க்ரோனியே நடக்கவில்லை என புக்கிகள் கடும் கோபமாகி, டெல்லி போலீஸிடம் மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான டெலிபோன் உரையாடல்களை லீக் செய்ய அங்கிருந்துதான் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது.

வி.வி.எஸ்.லட்சுமண்... சிங்கத்தின் பிடறியைப் பிடித்தே உலுக்கியவன்! - அண்டர் ஆர்ம்ஸ் 18

ஏப்ரல் 7-ம் தேதி புக்கிகளுடன் ஹேன்ஸி க்ரோனியே பேசிய ஆடியோ ஆதாரம் எங்களிடம் இருக்கிறது அறிவிக்கிறது டெல்லி போலீஸ். இதனை உடனடியாக ஹேன்ஸி க்ரோனியேவும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் மறுக்கிறது. ஆனால், அடுத்த நான்காவது நாள் அதாவது ஏப்ரல் 11-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தான் தோற்பதற்காக பணம் பெற்றுக்கொண்டேன் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அதிகாரி அலி பேக்கருக்கு போனில் அழுதபடியே சொல்கிறார் க்ரோனியே. அங்கிருந்து அடுத்தடுத்து விசாரணைகள் நடக்க இந்திய வீரர்கள் முகமது அசாருதின், அஜய் ஜடேஜா எனப் பலரின் பெயர்களும் வெளிவருகின்றன. ஆனால், இந்திய வீரர்கள் இதை முழுமையாக மறுக்க, க்ரோனியே உண்மையை ஒப்புக்கொண்டார். மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக கிங் கமிஷன் விசாரித்துக்கொண்டிருந்தபோது தான் எந்தெந்த புக்கிகளிடம் பணம் பெற்றுக்கெண்டேன் என அறிக்கையாகவே வெளியிட்டார் க்ரோனியே. அதில் 1996-ல் கான்பூரில் நடந்த டெஸ்ட் மேட்ச்சின்போது இந்திய கேப்டன் அசாருதின் மூலமாகத்தான் முகேஷ் குப்தா எனும் புக்கி தனக்கு அறிமுகமானார் எனச் சொல்லியிருந்தார். கிங் கமிஷன் விசாரணையில் க்ரோனியேவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடைக்குப்பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு க்ரோனியே வீட்டை விட்டே வெளியே வரவில்லை. 2002-ம் ஆண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர் ஜூன் 1-ம் தேதி ஜோஹானஸ்பர்கில் இருந்து தனது சொந்த ஊரான ஜார்ஜுக்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அங்கு விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கிருந்த சிறு விமானத்தில் இரண்டு பளைட்டுகளோடு மட்டும் சேர்ந்து பறந்திருக்கிறார். காற்று மற்றும் மழை காரணமாக விமானம் விபத்தில் சிக்க, மூன்று பேருமே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், குரோனியேவை அணிக்குள் வளர்த்தெடுத்த கேப்டன் கிளைவ் ரைஸ் க்ரோனியே திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக பின்னர் பேட்டியளித்தார். க்ரோனியே மட்டுமல்ல அவருடன் தொடர்புடைய பயிற்சியாளர் பாப் உல்மரையும் 2007 உலகக்கோப்பையின்போது புக்கிகள் திட்டமிட்டு கொன்றுவிட்டதாகச் சொன்னார்.

Hansie Cronje
Hansie Cronje

க்ரோனியே விமானத்தில் பறந்தபோது ஆட்டோமேட்டிக் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் சிக்னல்கள் நிறுத்தப்பட்டிருந்தாகச் சொன்னார். அதேபோல் 2007 உலகக்கோப்பையின்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பாப் உல்மர் இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளுமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகும். உல்மர் மரணமடைவதற்கு முதல் நாள் அயர்லாந்துடன் விளையாடியது பாகிஸ்தான். இந்தப் போட்டியிலும் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளும் கேட்ச் மூலமாகவே விழுந்தது. அயர்லாந்திடம் தோற்றது பாகிஸ்தான். ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸுடமும் தோற்றிருந்ததால் இந்த உலகக்கோப்பையில் இருந்தே வெளியேறியது பாகிஸ்தான். இதற்கு அடுத்தநாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் ஹோட்டல் அறையில் இறந்திருந்ததாக அறிவித்தது கரீபியன் போலீஸ். ''முதலில் மூச்சுக்குழாய் நெறிக்கப்பட்டிருந்ததாக டாக்டர்கள் அறிவித்தார்கள். ஆனால், கொஞ்ச நேரம் கழித்து மாரடைப்பால் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். மேட்ச் ஃபிக்ஸிங் வெளியே தெரியவந்துவிடக்கூடாது என புக்கிகள் நடத்திய திட்டமிட்ட கொலை'' என்று சொன்னார் கிளைவ் ரைஸ். க்ரோனியே, உல்மர் இரண்டு மரணங்களுமே சந்தேகத்துக்குரிய மரணங்களாகவே இன்றுவரை இருக்கின்றன.

கிரிக்கெட்டால் புகழின் உச்சிக்குப்போன ஹேன்ஸி க்ரோனியே அதன்பிறகு தடம் மாறியது அவரது கரியரை மட்டுமல்ல, வாழ்க்கையையே அழித்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டும் மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்தது. இந்த அவமானத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவை மீட்க இன்னொரு மீட்பர் வந்தார். அவர் இன்னும் சில வாரங்களில் `அண்டர் ஆர்ம்ஸ்' தொடரில் விளையாட வருவார்! அவர் யாரென யூகித்து கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு