Published:Updated:

அண்டர் ஆர்ம்ஸ் - 23: க்ரீஸ் அருகே ஒரு துள்ளல், அந்தத் துல்லியம்... ஷான் பொல்லாக்கை மறக்கமுடியுமா?!

1995 நவம்பர் முதல் 2008 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார் ஷான் பொல்லாக். இந்த 12 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் ஷான் பொல்லாக்தான் உலகின் நம்பர் 1 பெளலர். 11 ஆண்டுகள் தொடர்ந்து 1 முதல் 3 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே பெளலர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எதிர் முகாமில் இருந்தாலும் சிலரை நாம் ரசிப்போம். அவர்களின் வெற்றிகளுக்கு மனதார மகிழ்வோம். தோல்விகளுக்கு கலங்குவோம். அவர்கள் எப்போதும் தோற்றுவிடக்கூடாது என பிரார்திப்போம். அப்படி எல்லோரும் ரசிக்கக்கூடிய, எல்லோரும் கொண்டாடக்கூடிய தகுதி சிலருக்கு மட்டுமே இருக்கும். கிரிக்கெட்டில் அப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகையாக இருந்தாலும் மக்கள் மனங்களில் மணம் வீசியவர் ஷான் பொல்லாக்.

எதிர் அணியில் இருந்தாலும், தொடர்ந்து நமக்குத் தோல்விகளைப் பரிசளித்தாலும், நமக்கு பிடித்த பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கினாலும் ஷான் பொல்லாக்கின் வெற்றியை நம் மனது உள்ளூர ரசித்தே இருக்கும்.

90-களில் பெளலர்கள் சூப்பர் ஹீரோக்களாக இருந்தார்கள். அப்போது ஒவ்வொரு டீமிலும் இரண்டு லீட் பெளலர்கள் ஒவ்வொரு முனையில் இருந்தும் தாக்குதலை தொடுப்பார்கள். பாகிஸ்தானில் வாசிம் அக்ரம் - வக்கார் யூனுஸ், மேற்கு இந்தியத் தீவுகளில் கர்ட்லி ஆம்புரோஸ் - கார்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவில் மெக்ராத் - கில்லெஸ்பிபோல தென்னாப்பிரிக்காவில் ஆலன் டொனால்ட் - ஷான் பொல்லாக்.

தென்னாப்பிரிக்காவின் மெக்ராத் என ஷான் பொல்லாக்கை சொல்வார்கள். ஆனால், உண்மையில் இவர் மெக்ராத்தையும் தாண்டியவர். துல்லியமான லைன் அண்ட் லென்த்தில், விக்கெட் டு விக்கெட் பெளலிங் வீசக்கூடியவர் மட்டுமல்ல, திடீரென அதிரடி ஆட்டம் ஆடி தென்னாப்பிரிக்காவை மீட்டெடுக்கும் மீட்பரும் கூட.

மிகத்துல்லியமான இவரது பந்துவீச்சை எதிர்த்து பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதாக ரன்கள் எடுத்துவிடமுடியாது. லூஸ் பால்கள் என்பது இவரது அகராதியிலேயே கிடையாது. டெஸ்ட், ஒருநாள், இறுதியாக டி20 போட்டிகள் வரை விளையாடிவிட்டுத்தான் போனார் பொல்லாக்.
ஷான் பொல்லாக் - ஆலன் டொனால்ட்
ஷான் பொல்லாக் - ஆலன் டொனால்ட்

1995 நவம்பர் முதல் 2008 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார் ஷான் பொல்லாக். இந்த 12 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் ஷான் பொல்லாக்தான் உலகின் நம்பர் 1 பெளலர். 11 ஆண்டுகள் தொடர்ந்து 1 முதல் 3 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே பெளலர். 2008 பிப்ரவரியில் ஒய்வுபெறுகிறார். ஆனால், 2007-லும் இவர்தான் உலகின் நம்பர் 1 பெளலர். 303 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 393 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். விக்கெட்டுகள் இங்கே முக்கியம் அல்ல. முக்கியமான விஷயம் இதில் 313 மெய்டன் ஓவர்கள் போட்டிருக்கிறார் பொல்லாக். அதாவது ஒரு மேட்சுக்கு ஒன்று என்ற அளவில் மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார். இந்தச் சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்கமுடியவில்லை.

ஒருமுனையில் ஷான் பொல்லாக் ரன்கள் போகாதபடி டைட்டாகப் பந்துவீச மறுமுனையில் டொனால்ட் விக்கெட்களை அள்ளுவார். அதேபோல் டொனால்ட் ரன் கொடுக்காமல் பந்துவீசும்போது ஷான் பொல்லாக்கிற்கு விக்கெட் கிடைக்கும் என கிரிக்கெட்டில் இது ஓர் அற்புதமான பௌலிங் கூட்டணியாக இருந்தது. இருவரும் தென்னாப்பிரிக்காவுக்காக 147 போட்டிகளில் இணைந்து பந்துவீசி 714 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்கள் என்பதே இவர்களின் கூட்டணி எந்த அளவுக்கு டெரராக இருந்தது என்பதை உணர்த்தும்.

96 உலகக் கோப்பைக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில்தான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார் ஷான் பொல்லாக். இவரின் முதல் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக நடந்தது. இந்தப் போட்டியில் ஷான் பொல்லாக் மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் மற்றும் மிகவும் வித்தியாசமாக தலையைக் கவிழ்த்தபடி ஸ்பின்போடும் பால் ஆடம்ஸ் ஆகியோரும் தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமானார்கள்.

ஷான் பொல்லாக், ஜாக் காலிஸ்
ஷான் பொல்லாக், ஜாக் காலிஸ்

முதல் போட்டியிலேயே மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார் பொல்லாக். எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி 66 பந்துகளில் 66 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை 200 ரன்கள் தாண்ட வைத்தார். அதன்பிறகு 4 விக்கெட்கள் எடுத்து இங்கிலாந்தை 205 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து அணியையை வெற்றிபெறவும் வைத்து முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்தார் பொல்லாக்.

தொடர்ந்து விக்கெட் வேட்டைகள் நிகழ்த்தும் பெளலர் இல்லையென்றாலும் இவரது பெளலிங் ஆக்‌ஷன் எல்லோரையும் கவனிக்கவைத்தது. நீண்ட லைன் அப் இல்லாமல் கொஞ்ச தூரத்தில் இருந்து ஓடிவந்து, கிரீஸுக்கு அருகில் வந்ததும் ஒரு துள்ளலோடு பந்து வீசும் இவரது பெளலிங் ஸ்டைல் எல்லோரையும் கவர்ந்தது. 1996 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மைக்கேல் ஆதர்டனை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்து, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலையவைத்தார் பொல்லாக். அன்று இங்கிலாந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொல்லாக் 8 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

1998-ல் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இவரால் சரிய ஆரம்பித்தது. மார்க் டெய்லர் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினாலும் பொல்லாக்கின் பெளலிங்கால் விக்கெட்கள் விழுந்து கொண்டிருந்தன. 41 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார் பொல்லாக். இதில் 11 ஓவர்கள் மெய்டன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1999 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா வென்றிருக்கவேண்டிய உலகக்கோப்பை. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது தென்னாப்பிரிக்கா. இதற்கு முன்பு சூப்பர் சிக்ஸ் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றிருந்தது ஆஸ்திரேலியா. இந்தக் கடைசி ஓவரை வீசியவர் ஷான் பொல்லாக். 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஷான் பொல்லாக்கை எதிர்கொண்ட டாம் மூடி கண்மூடித்தனமாக அடிக்க, அது பவுண்டரியாகி அந்தப் போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.

ஷான் பொல்லாக்
ஷான் பொல்லாக்

இதனால் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க வேண்டும் என்கிற வெறியோடு பந்துவீசினார் ஷான் பொல்லாக். முதல் ஓவரிலேயே மார்க் வாக்கை டக் அவுட் ஆக்கினார் ஷான் பொல்லாக். அடுத்து ஸ்டீவ் வாக், மைக்கேல் பெவன், டாம் மூடி, ஷேன் வார்னே என ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். 36 ரன்கள் மட்டுமே கொடுத்து ஃபைஃபர். 213 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. மிகவும் எளிதாக வெல்ல வேண்டிய இப்போட்டியை சொதப்பினார்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். பேட்டிங்கிலும் 7-வது டவுன் வீரராக களமிறங்கி 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என 14 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்காக போராடினார் ஷான் பொல்லாக். ஆனால், அன்று ஆலன் டொனால்டின் தவறால் நிகழ்ந்த ரன் அவுட்டில் மேட்ச் டை-ஆக ஏற்கெனவே நடந்தபோட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குள் நுழையும் தகுதியை இழந்தது.

1999 உலகக்கோப்பையில் சிறு தவறால் நிகழ்ந்த பேரிழப்பை தொடர்ந்து, இந்திய தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் கேப்டன் ஹேன்ஸி க்ரோனியே கிரிக்கெட்டில் இருந்தே விலக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியான இக்கட்டான சூழலில் கேப்டன் ஆனார் ஷான் பொல்லாக்.

கேப்டனாக பொறுப்பேற்று முதல் டெஸ்ட் சீரிஸில் இலங்கை போய் இறங்கினார் பொல்லாக். கால் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இலங்கை மிக எளிதாக வென்றது. ஷான் பொல்லாக்கால் கேப்டன்ஸியைத்தாங்க முடியாது என்கிற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இரண்டாவது டெஸ்ட்டிலேயே மீண்டெழுந்தது தென்னாப்பிரிக்கா. இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதோடு, மூன்றாவது டெஸ்ட்டை டிரா செய்து வெற்றி தோல்வியின்றி முதல் சீரிஸை முடித்தார் பொல்லாக்.

ஹேன்ஸி க்ரோனியே - பாப் உல்மர் இயர்பீஸ் சர்ச்சை: விவாதங்களைக் கிளப்பிய சம்பவத்தின் நினைவுகள்!

இதற்கு அடுத்து பொல்லாக் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது தென்னாப்பிரிக்கா. கிரிக்கெட்டின் பரிட்சார்த்த முயற்சிகளில் ஒன்றாக இண்டோர் ஸ்டேடியங்களில் நடைபெற்ற தொடர் இது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுவிட, இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடந்தது. செம த்ரில்லாரான இந்தப் போட்டியின் இறுதி ஓவரை கேப்டன் பொல்லாக்தான் வீசினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா 13 ரன்கள் அடிக்கவேண்டும். ஷேன் வார்னேவும், ஜேசன் கில்லெஸ்பியும் களத்தில் இருக்கிறார்கள்.

முதல் மூன்று பந்துகளில் 9 ரன்கள் கொடுத்துவிட்டார் பொல்லாக். அடுத்த மூன்று பந்துகளில் நான்கு ரன்களே தேவையென்ற ஈஸி டார்கெட்டில் போட்டி வந்து நிற்க அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து கில்லெஸ்பியை ரன் அவுட்டும் செய்தார் பொல்லாக். கடைசிப்பந்தில் ஷேன் வார்னே ஸ்ட்ரைக்குக்கு வந்தார். இரண்டு ரன்கள் தேவை. யார்க்கராக வீசிய பொல்லாக்கின் பந்தில் 1 ரன் மட்டுமே வார்னேவால் அடிக்கமுடிய போட்டி டை ஆனது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசிகட்டத்தில் இறங்கி 34 ரன்கள் அடிதததோடு, பெளலிங்கில் மார்க் வாகையும், ரிக்கி பான்ட்டிங்கையும் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆக்கி இப்போட்டியில் தன் அணியை வெற்றிபெறவைத்தார் பொல்லாக். இதனால் இந்த சீரிஸும் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

பொல்லாக்
பொல்லாக்

அடுத்து சீரிஸ்தான் கேப்டனாக பொல்லாக்கிற்கு பெருவெற்றியைத்தந்த சீஸன். நியூஸிலாந்து 6 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்கா வந்தது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட, அடுத்த 5 ஒருநாள் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வென்றது. டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

நல்ல மனிதர், நல்ல பெளலர், பின்ச் ஹிட்டிங் பேட்ஸ்மேன் எனப் பல தகுதிகள் இருந்தாலும் தென்னாப்பிரிக்க அணியை அவரால் ஹேன்ஸி க்ரோனியே போல கட்டமைக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவால் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.

2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்கு பொல்லாக்தான் கேப்டன். 1992, 1996, 1999 உலகக்கோப்பைகளை துரதிஷ்டவசத்தால் இழந்த தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நிச்சயம் கோப்பை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலககோப்பையின் முதல் நாள் நடந்த முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோற்றது பொல்லாக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி. இதன்பிறகு துரதிஷ்டம் தென்னாப்பிரிக்காவை துரத்த ஆரம்பித்தது. நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் அடித்தும், மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதி கடைபிடிக்கப்பட தென்னாப்பிரிக்கா தோற்றதாக அறிவிக்கப்பட்டது. லீக் சுற்றில் இருந்து சூப்பர் சிக்ஸுக்குப் போக வென்றே ஆகவேண்டும் என்கிற கட்டத்தில் மீண்டும் இலங்கையிடம் அதே டக்வொர்த் லூயிஸ்.

முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 268 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்கா நிதானமாக டார்கெட்டை சேஸ் செய்து வந்தது. 43 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களுடன் இருந்தது. களத்தில் லான்ஸ் க்ளூஸ்னரும், மார்க் பவுச்சரும் இருந்தனர். 42 பந்துகளில் 54 ரன்களே அடிக்கவேண்டும். க்ளூஸ்னரும், பவுச்சரும் இருப்பதால் தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதி என்கிற நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த சில ஓவர்கள் மழையின் குறுக்கீடுக்கு இடையே போட்டி தொடர்ந்தாலும் கனத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 30 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தாலும் டக்வொர்த் லூயிஸ் விதி கடைபிடிக்கப்பட ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்கா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறாமல் துரதிஷ்டவசமாக வெளியேறியது. பொல்லாக்கின் கேப்டன்ஷிப்பும் துயரத்தோடு முடிவுக்கு வந்தது. கேப்டன்ஸியில் இருந்து விலகி கிராம் ஸ்மித்திடம் பொறுப்பை ஒப்படைத்தார் பொல்லாக்.

Shaun Pollock
Shaun Pollock

கேப்டன்ஸி போனாலும், ஸ்மித்துக்குப் பக்கபலமாக இருந்து 2007 உலகக்கோப்பை வரை தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடினார் பொல்லாக். தொடர்ந்து காயங்கள் அவரைத்துரத்த பொல்லாக்கின் வேகம் குறைந்தது. இதனால் அதிக ரன் கொடுக்கும் பெளலராக மாறினார் பொல்லாக். 2006-ல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சனத் ஜெயசூர்யா ஈவு இரக்கமின்றி பொல்லாக்கின் பெளலிங்கை நொறுக்க, நொந்துபோன பொல்லாக் ஸ்பின்போடும் அளவுக்கு இறங்கிப்போனார். முதல் ஐந்து ஓவர்கள் வேகப்பந்து வீசிய பொல்லாக், அதன்பிறகு ஆஃப் ஸ்பின் பெளலராக மாறிய விநோதம் நடந்தது.

ஆனாலும், அதன்பிறகும் தாக்குப்பிடித்து விளையாடிய பொல்லாக்கை 2007 உலகக்கோப்பையில் மேத்யூ ஹேடன் சம்பவம் செய்தார். பொல்லாக்கின் பெளலிங்கில் சிக்ஸர்கள் அநாயசமாய் பறந்தன. 10 ஓவர்களில் 80 ரன்களுக்கு மேல் கொடுத்த பெளலர் ஆனார் பொல்லாக். இந்த உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற தொடருடன் ஓய்வு பெற்றார் பொல்லாக்.

400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் தென்னாப்பிரிக்க பெளலர் ஷான் பொல்லாக்தான். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 393 விக்கெட்டுகள் என 400-ஐ நெருங்கினார். பேட்ஸ்மேனாகவும் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலுமே 3000 ரன்களுக்கு மேல் அடித்த ஷான் பொல்லாக் கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ரியல் ஜென்டில்மேன்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு