Published:Updated:

பெண்கள் கிரிக்கெட்டில் அதிகரிக்கும் தன்பாலின திருமணங்கள்… காரணம் என்ன?

Katherine Brunt, Nat Sciver
Katherine Brunt, Nat Sciver ( Katherine Brunt/Instagram )

காதலுக்கு வயது, சாதி, இனம் என எதுவும் தடையில்லை. ஏன் பாலினம் கூட தடையாக இருக்க முடியாது என்பதற்கான அடையாளமாக பெண்கள் கிரிக்கெட் மாறியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இங்கிலாந்தின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர் (Sciver), நியூசிலாந்தின் Amy Satterthwaite மற்றும் Lea Tahuhu, ஆஸ்திரேலியாவின் மீகன் ஷட் மற்றும் ஹோலியாக், தென் ஆப்ரிக்காவின் நைகர்க் மற்றும் மரிசான் காப் என் தன்பாலின ஜோடிகள் பெண்கள் கிரிக்கெட்டில் நாடுகள் கடந்து காணப்படுகிறார்கள். தங்கள் உறவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கும் இவர்கள் திருமணமும் செய்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் கிரிக்கெட்டில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் பொதுவெளியில் உரையாடப்படுகின்றன, மனம்திறந்து அலசப்படுகின்றன, நேர்மையாக விவாதிக்கப்படுகின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்கள் எந்த இழிவுக்கும் உள்ளாகாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என முற்போக்காக இருக்கிறது பெண்கள் கிரிக்கெட். இது எப்படி சாத்தியமானது?!

கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர்
கேதரின் பிரன்ட் மற்றும் நட்டாலி ஸ்கீவர்
“தம்பதிகளாக ஒரே அணியில் விளையாடுவதில் நிறைய நன்மைகள் உண்டு. எப்போதும், எந்த நேரமும் ஒன்றாக இருக்கலாம். வேறு நாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது மற்றவர்கள் எல்லாரும் தங்கள் பார்ட்னர்களை ஆறு முதல் எட்டு வாரம் பிரிந்திருப்பார்கள். எங்களுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை” என்கிறார் இங்கிலாந்தின் முன்னணி ஆல்ரவுண்டர் கேதரின் பிரன்ட். இவரது பார்ட்னர் (கணவர்) தான் இங்கிலாந்தின் இன்னொரு ஆல்ரவுண்டரான Nat Sciver.

இவர்களின் திருமணத்தை முதலில் பெற்றோர்கள் எதிர்த்தாலும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இவர்களை அரவணத்துக் கொண்டன. இவர்களின் சுதந்திரத்தையும், விருப்பத்தையும் அவை மதித்தன. இதனால் இருவரும் விரைவில் திருமணத்துக்கு தேதி குறித்திருக்கிறார்கள்.

உலகம் முழுக்கவே விளையாட்டு வீரர்கள் தங்கள் பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசும்போது அது அதிக கவனத்துக்கு உள்ளாகிறது. தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என நூற்றாண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்த முதல் விளையாட்டு வீரர் அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீரர் பில் டில்டென். ஒரே பாலினத்தவர்களுக்கு இடையேயான உடலுறவு குற்றமாக கருதப்பட்ட காலத்தில் கூட, தன்னுடைய பாலியல் விருப்பத்தை மறைக்காதாவர். ஆனால் இளைஞர்களிடம் தவறாக நடந்து கொண்டார் எனச் சொல்லி இவர் இருமுறை கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, கையில் காசில்லாமல் ஒரு பிச்சைக்காரனைப் போல் வாழ்ந்து மடிந்தார் பில் டில்டென்.

சமூகம் எப்படியும் மாற்றத்துக்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். அரை நூற்றாண்டுக்குப் பிறகு, தன்னை தன்பால் ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்த டெக்கத்லான் வீரர் டாம் வாடெல் அதே அமெரிக்கா சார்பாக 1968 மற்றும் 1972 ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.
டாம் வாடெல் | Tom Waddell
டாம் வாடெல் | Tom Waddell
Courtesy of Springfield College, Archives and Special Collections

2000-க்குப் பிறகு, பல வீரர்கள் தாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காலத்திலேயே வெளிப்படையாகத் தங்களை தன்பாலின ஈர்ப்பாளர்களாக அறிவித்தனர். உலகிலுள்ள ஆண்களில் 10% பேர் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பார்கள் எனதான் எழுதிய Sexual Behaviour in the Human Male என்ற புத்தகத்தில் ஆல்ஃப்ரெட் கின்ஸே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எந்தவொரு ஆண் வீரரும் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்ததில்லை.

தன் பாலின ஈர்ப்பு குற்றமல்ல என இந்தியாவில் சட்டம் சொன்னாலும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான திருமணத்தை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலான மேலை நாடுகளில் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள சமூகத்தில் தன்பால் ஈர்ப்பை ஏற்றுக்கொள்ளும் போக்கு நிலவினாலும், தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவிப்பதற்கு பலரும் தயங்கவே செய்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Modern Love 2: கிட்டார் கம்பி மேலெல்லாம் நிற்கவில்லை... ஆனாலும் வசீகரிக்கின்றன இந்தக் காதல் கதைகள்!

“ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு சேர்ந்து வாழ்வதை பெற்றோர்கள் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதையே தங்கள் மகன் செய்தால் ஒருநாளும் ஒப்புக்கொள்ள மட்டார்கள்” என்கிறார் கேதரின் பிரன்ட்.

வெளியில் கிடைக்காத ஆதரவும் நெருக்கமும் அணியில் உள்ள சக வீரர்களிடம் கிடைப்பதால் தான் தங்கள் வாழ்க்கை துணைகளை இங்கேயே தேடிக் கொள்கிறார்கள் என்கிற கருத்து பெண்கள் கிரிக்கெட்டில் நிலவும் தன்பாலின திருமணங்கள் குறித்து வைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் மேகன் ஷூட்டுக்கும் அவருடைய பாட்னர் ஜெஸ் ஹோலியோக்குக்கும் விரைவில் பெண் குழந்தை பிறக்க உள்ளது. இருவரில் ஜெஸ் கர்ப்பமாக இருக்கிறார். போட்டோஷூட் நடத்தி இதை அவர்களே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான சேட்டர்வெயிட்டும் தஹூகுவும் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போதே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். தற்போது இருவரும் தம்பதிகளாக நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் மகள் பிறந்தாள். நியூசிலாந்து கிரிக்கெட்டின் பேறுகால விடுமுறையை பெற்ற முதல் பெண் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் சேட்டர்வெயிட். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் சென்ற போது தங்கள் குழந்தையையும் கையோடு இவர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய அலெக்ஸ் பிளாக்வெல் முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான லின்சே அஸ்கீவை திருமணம் செய்துள்ளார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் டேவிஸுக்கு அடுத்து வெளிப்படையாக கூறியது பிளாக்வெல் மட்டுமே. ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான திருமணத்துக்கு ஆஸ்திரேலியாவில் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் இவர் பிரசாரம் மேற்கொண்டார்.

மேடம் ஷகிலா - 29: பெண்ணியம் பேசினால் ஏன் ஆண்கள் பதற்றமாகிறார்கள்… யார் பேசலாம், யார் பேசக்கூடாது?

இப்படி ஒரே அணிக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பிரிந்தும் போகிறார்கள். 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் எலிஸ் விலானியும், நிக்கோல் போல்டனும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தார்கள். உடனடியாக வெஸ்டன் ஆஸ்திரேலியாவில் தனது ஒப்பந்தத்தை நீக்கிய விலானி, விக்டோரியன் ஸ்பிரிட் அணியில் சேர்ந்து கொண்டார். “இது ஒன்றும் அருவருப்பான விஷயம் இல்லை. பெண்கள் விளையாட்டில் இதுபோன்ற சம்பவங்களை நிறைய சந்தித்துள்ளோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அணிகளில் காதலர்கள் இல்லாவிட்டால் தான் ஆச்சர்யம்” என்கிறார் பயிற்சியாளர் லிஸா கெயிட்லீ.

‘’தன்பாலினத்தவராக இருக்கும் பிரபல வீரர் யாராவது ஒருவர் வெளிப்படையாக கூறினால் மட்டுமே ஆண்கள் விளையாட்டில் கொஞ்சம் நிலைமை மாறும். அப்படி நடக்க வேண்டுமென்றால், அதற்குரிய கட்டமைப்பு இங்கு இருக்க வேண்டும். சில இடங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக மிடில்செஸ்ஸில் உலகிலேயே LGBT-க்கான முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டுள்ளது.

2018 ஆண்களுக்கான கால்பந்து உலககோப்பையில் ஒரு வீரர் கூட தான் ஒரு தன்பாலினத்தவர் என வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், 2019 பெண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையில், மொத்தம் கலந்துகொண்ட 552 வீரர்களில் 38 பேர் தாங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என வெளிப்படையாக கூறினார்கள். இதை வைத்து பார்க்கும்போது ஒன்றுமட்டும் தெளிவாகிறது: தன்பாலின பெண்களுக்கு தொழில்முறை விளையாட்டுகள் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது அல்லது தொழில்முறை வீரர்களாக இருக்கும் பெண்கள் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக கூறுகிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார் கேதரின் பிரன்ட்.

கடந்த வருடம் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது ஜோ ரூட்டை அவமதிக்கும் நோக்கில் அவரைப் பார்த்து தன்பால் ஈர்ப்பைக் குறிக்கும் வசவுச் சொற்களை பேசினார் கேப்ரியல். ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத ரூட், “தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பதில் தவறொன்றும் இல்லையே” எனச் சொன்னது மிகுந்த கவனத்தைப் பெற்றது.

பெண்கள் கிரிக்கெட்டைப் போலவே ஆண்கள் கிரிக்கெட்டிலும் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு குறித்த உரையாடல்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு