Published:Updated:

Cricket: இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தானா?

Cricket

இலங்கை ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த போது அந்த மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தேசம் தன் துன்பத்தை மறந்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வாய்ப்பளித்தது. அத்தகைய உணர்வைக் கொடுக்க விளையாட்டால் முடியும்.

Cricket: இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தானா?

இலங்கை ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த போது அந்த மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தேசம் தன் துன்பத்தை மறந்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வாய்ப்பளித்தது. அத்தகைய உணர்வைக் கொடுக்க விளையாட்டால் முடியும்.

Published:Updated:
Cricket
இந்தியாவில் கிரிக்கெட்டை வெறும் விளையாட்டு என்று கூறுவதைவிட மதம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி இவ்விளையாட்டை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. டி20 உலகக் கோப்பை வெற்றி, அதைத்தொடர்ந்து 2008-ல் ஐ.பி.எல் தொடரின் வருகை, சிறப்பாகச் செயல்பட்டால் தேசிய அணியில் நிச்சயம் இடம்பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை வீரர்களிடத்தில் பன்மடங்கு அதிகரித்தது. மக்களும் வீரர்களின் பங்களிப்பை நேரடியாகக் காண்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படும்போது அவர்களுக்காகக் கேள்வி எழுப்பவும் தவறுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விளையாட்டு குறித்தான நம் நாட்டு மக்களின் சகிப்புத்தன்மை குறித்து மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதை மெய்யாக்கும் வண்ணம் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்கள்
DAVID GRAY

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 8 விக்கெட்டுகளை இழந்தபோது வன்முறையால் ஆட்டம் தடைப்பட்டதை மறந்திருக்க வாய்ப்பில்லை. 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா முதல் சுற்றோடு வெளியேறிய போது நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே. வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. தோனி புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த வீடு தாக்கப்பட்டது. அதேபோல 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குப் பின்னர் யுவராஜ் சிங்கை விமர்சித்துத் தள்ளினர் ரசிகர்கள்.

கடைசி இரண்டு நிகழ்வுகள்:

1. 2021 டி20ஐ உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி முதல் முறையாகத் தோற்ற போது, அதற்கு ஷமிதான் காரணம் என்றும், "அவர் ஒரு பாகிஸ்தானி மற்றும் தேசத் துரோகி" எனவும் குற்றஞ்சாட்டப்பட்டார். உண்மையில் அந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. 150 ரன்கள் என்பது துபாய் போன்ற ஆடுகளத்தில் மிகவும் குறைந்த ஸ்கோர் என்பதை மறந்து பலர் ஷமியைக் குறைகூறினர். இதற்கு அப்போதைய கேப்டன் கோலி எதிர்வினை ஆற்றியவுடன் அவரின் பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

கோலி - ஷமி
கோலி - ஷமி

2. தற்போதைய ஆசியக் கோப்பையில் அர்ஷ்தீப் சிங் ஒரு கேட்சை விட்டதற்கு 'காலிஸ்தானி' என்று கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் பிஷ்னோய் மட்டுமே சிறப்பாகப் பந்து வீசினர். இவர்களைத் தவிர்த்து மற்ற மூவரும் 10 ரன்களுக்கு மேல் ஒரு ஓவருக்கு விட்டுக்கொடுத்தனர். அதே பாகிஸ்தான் உடனான முதல் போட்டியில் ஹீரோவான பாண்டியா இரண்டாம் போட்டியில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதைப் பற்றி யாரும் அதிகம் பேசவில்லை. புவனேஷ்வர் குமார் இறுதி ஓவர்களில் தவறான இடங்களில் பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு ஒரு காலத்தில் நெஹ்ரா, ஆர்.பி.சிங், இர்பான் பதான், ஜாகிர் கான் எனப் பல இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பிறகு அர்ஷ்தீப் சிங் தற்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக நின்று அவரின் திறமையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டியது அணி மற்றும் அதன் நிர்வாகத்தின் கடமை மட்டுமல்ல, ரசிகர்களின் கடமையும்கூட!

ஷமி, அர்ஷ்தீப் - இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர்கள் சிறுபான்மை மக்களில் ஒருவராக உள்ளனர் என்பதுதான் ஒற்றுமையாக உள்ளது. இதனால் இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டும் நடத்தப்படும் விஷம பிரசாரமா என்ற கேள்வியும் எழுகிறது.
ரோஹித், அர்ஷ்தீப் சிங்
ரோஹித், அர்ஷ்தீப் சிங்

இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமல்ல ஹாக்கியிலும் இத்தகைய சாதி, மதம் சார்ந்த சர்ச்சைகள் நடந்தேறின. 2020 ஒலிம்பிக் அரையிறுதியில் மகளிர் அணி தோற்ற போது வந்தனா கட்டாரியாவின் சாதி அடையாளத்தைக் காரணம் காட்டி உத்தரப் பிரதேசத்தில் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள அவரின் வீட்டின் முன் வெடி வெடித்துக் கொண்டாடினர். இது மட்டுமல்லாமல் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவின் சாதியைப்பற்றிய தேடல்கள் கூகுளில் அதிக எண்ணிக்கையில் இருந்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

அர்ஷ்தீப் சிங் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் தொழில்நுட்ப அமைச்சர் விக்கிப்பீடியாவில் வெளியான தகவல் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தாலும், போட்டி நடந்த இரவில் ட்விட்டரில் வெளிப்பட்ட கருத்துகள் யாவும் ஹேக் செய்யப்பட்ட கருத்துகள் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் மதம், சாதி போன்ற விஷயங்கள் மனிதக் குலத்திற்கு அவசியமற்ற ஒன்று. அவற்றின் பேரில் நடக்கும் சமூக அவலங்கள் ஒருபுறமிருக்க, விளையாட்டுகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு அவற்றால் எளிதாக மக்களை ஒன்றிணைக்கும் முடியும்.

இலங்கை ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த போது அந்த மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தேசம் தன் துன்பத்தை மறந்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த வாய்ப்பளித்தது. அத்தகைய உணர்வைக் கொடுக்க விளையாட்டால் முடியும். ஆனால், விளையாட்டின் இந்த மேஜிக்கை எளிதாகப் புறந்தள்ளக்கூடியவைதான் நிற, மத, சாதிய பாகுபாடுகள். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு வாழத்தான் விளையாட்டு என்ற ஒன்றை ஆரம்பித்தனர். ஆனால், இப்போது அவற்றை வைத்தே வீரர்களை எடை போட்டுப் பிரிப்பது பெரும் அவலம்.

IND v SL
IND v SL

அர்ஷ்தீப் சிங் என்ற அந்த ஒரு பெயர் இரண்டு நாளாக இந்திய விளையாட்டுத் துறையில் அதிகம் ஒலிக்கப்பட்ட பெயராகிவிட்டது. அந்தப் பெயர் பல பழைய நினைவுகளையும் கிளறி, இந்தியாவின் தற்போதைய அரசியல் பற்றியும் விவாதிக்கிறது.

அர்ஷ்தீப் சிங்கின் தாய், "இன்னும் 3 - 5 ரன்கள் அதிகமாக இருந்திருந்தால் என் மகன் இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பான். ஆனால், அது நடக்கவில்லை. அவன் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தர ஆர்வமாக உள்ளான். அதைச் செய்வான் என நம்புகிறேன்!" - இந்தப் பிரச்னைக்கு பிறகு அவர் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு நம்பிக்கை வாய்ந்தவை! அதற்கான வாய்ப்பு தற்போது இல்லையென்றாலும் வரும் தொடர்களில் அது நிச்சயம் அரங்கேறலாம்.

வீரர்களுக்கு சில நாள்கள் மோசமாக அமையலாம், அதற்காக அவர்களின் மதம், சாதியை வைத்து விமர்சிப்பதைவிட ஆரோக்கியமற்ற செயல் எதுவுமில்லை. இப்படி நடக்கும் போது நாம் அவ்வாறு செய்யாமல் அமைதியாக இருப்பது மட்டும் போதாது, அதனைக் கேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே அவை மீண்டும் நடக்காமல் இருக்கும்.