Published:Updated:

`இருக்கு ஆனா இல்லை!' பார்ட் டைம் பௌலர்களின்றி தடுமாறுகிறதா இந்திய அணி? அவர்கள் ஏன் அவசியம்?

Indian cricket team

பார்ட் டைம் பௌலர்களை குறைத்து மதிப்பிடவே முடியாது. பிரதான பௌலர்களுக்காக ஆயத்தப்பட்டிருக்கும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு, 'சர்ப்ரைஸ்!' என ஷாக் கொடுக்கும் தந்திரமாக இந்த வியூகம் பயன்படுத்தப்பட்டது.

Published:Updated:

`இருக்கு ஆனா இல்லை!' பார்ட் டைம் பௌலர்களின்றி தடுமாறுகிறதா இந்திய அணி? அவர்கள் ஏன் அவசியம்?

பார்ட் டைம் பௌலர்களை குறைத்து மதிப்பிடவே முடியாது. பிரதான பௌலர்களுக்காக ஆயத்தப்பட்டிருக்கும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு, 'சர்ப்ரைஸ்!' என ஷாக் கொடுக்கும் தந்திரமாக இந்த வியூகம் பயன்படுத்தப்பட்டது.

Indian cricket team
டிரெண்டிங் ஆகும் பார்ட் டைம் கேப்டன் பிரச்னையை மறந்து, பார்ட் டைம் பௌலர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய வேளை இந்தியாவுக்கு வந்து விட்டது.

ஆல்ரவுண்டர்கள் கணக்கில் வராமல், டாப் 6-ல் இறங்கும், பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேன்களை, 'பார்ட் டைம் பௌலர்கள்' என்போம். முன்னதாக கபில்தேவ், கங்குலி, தோனி போன்ற தலைசிறந்த கேப்டன்கள் நான்கு பிரதான பௌலர்களோடு இரண்டு முதல் நான்கு பார்ட் டைம் பௌலர்கள் வரை வைத்துத்தான் தங்களது கனவு அணியைக் கட்டமைத்தனர். ஆனால் இன்றோ டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராவது பார்ட் டைம் பௌலராக இருந்துவிட மாட்டாரா என ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

யுவராஜ், கங்குலி முகமது கைஃப்
யுவராஜ், கங்குலி முகமது கைஃப்

பகுதி நேர பௌலர்கள், முழுநேர பௌலர்களையே மிஞ்சிய கதையெல்லாம் உண்டு. 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் மொஹிந்தர் அமர்நாத். 2003 உலகக் கோப்பையில் 7 பேட்ஸ்மேன்கள் வேண்டும் என நினைத்த கங்குலி, டிராவிட்டைக் கீப்பர் ஆக்கிவிட்டு, 4 மெயின் பௌலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற 10 ஓவர்களை தினேஷ் மோங்கியா, சேவாக், சச்சின், யுவராஜ் என அனைவரையும் மாற்றி மாற்றி பௌலிங் போடச் செய்து, தானும் பௌலிங் போட்டு அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.

2011 உலகக் கோப்பையிலும் இதுதான் தோனியின் வெற்றி மந்திரமே. நான்கு பிரதான பௌலர்களோடு யுவராஜ், ரெய்னா உள்ளடங்கிய நான்கு பார்ட் டைம் பௌலர்களும் இணைந்து, ஏகப்பட்ட பௌலிங் ஆப்சன்களை தோனிக்குக் கொடுத்தனர். அவர்களை சரியாகப் பயன்படுத்தியே வெற்றியை வசமாக்கினார். 2012-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றியிருந்தது. அதில் ஐந்தாவது போட்டியில் மொத்தம் 8 பௌலர்களை தோனி பந்துவீச வைத்திருந்தார். இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றியும் பெற்றது.

தோனி "ஆல்ரவுண்டர்கள் இல்லையே என நான் கவலைப்பட்டதில்லை, எனது பார்ட் டைம் பௌலர்களே, பௌலிங் துறையை முழுமைப்படுத்துகிறார்கள்" என்று கூறியிருந்தார். அத்தொடரில் மனோஜ் திவாரியை சில ஓவர்கள் வீசவைத்தே ரன்களை தோனி கட்டுப்படுத்தி இருந்தார். கேதர் ஜாதவைக் கூட ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தி இருக்கிறார்.
Sachin Tendulkar
Sachin Tendulkar

இந்திய அணி மட்டுமல்ல, மற்ற அணிகளும் இப்படிப்பட்ட பார்ட் டைம் பௌலர்களை உருவாக்கித்தான் பல கோப்பைகளை வென்றுள்ளன. அதில் முக்கியமானது 1996 உலகக் கோப்பையில் இலங்கை ஜெயசூர்யா, அரவிந்த டீ சில்வாவை என பார்ட் டைம் பௌலர்களாகப் பயன்படுத்தி கோப்பையைக் கைப்பற்றியது, 1999 உலகக்கோப்பையில் ஆஸ்திரலியா அணி மைக்கேல் பெவன், ஸ்டீவ் வாக், மார்க் வாக் போன்றோரை தங்களது பார்ட் டைம் பௌலர்களாகப் பயன்படுத்தி மகுடம் சூடியது, மறுபடியும் ஆஸ்திரேலியா 2003 உலகக் கோப்பையில் சைமண்ட்ஸ், ஹார்வி, லீமேன் போன்றோரை பயன்படுத்தியே சாம்பியன் ஆனது.

உலகளவில், சச்சின், கங்குலி, விவியன் ரிச்சர்ட்ஸ், ஹன்சி க்ரான்ஜே, கிராண்ட் ஃபிளவர், கார்ல் ஹூப்பர், அரவிந்த டீ சில்வா, மைக்கேல் பெவன் என ஆல்ரவுண்டர்களாக இல்லாவிட்டாலும், முழுபேக்கேஜாக அவர்கள் அணிக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஒவ்வொரு கேப்டனும் இவர்களைப் பயன்படுத்திய விதமும் வித்தியாசமானதுதான். பார்ட்னர்சிப்களை உடைக்க கங்குலி, சச்சினை நம்பினார் என்றால், பாண்டிங் ஓவர்ரேட்டைக் கூட்ட, சமயங்களில் மைக்கேல் பெவன், லிமேன், ஆண்ட்ரு சைமன்ஸ் ஆகியோரைப் பயன்படுத்தினார். இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிரான துருப்புச் சீட்டாக பாகிஸ்தான் ஹஃபீஸைப் பார்த்தது. க்ரீன் டாப் பிட்சில் நீண்ட ஸ்பெல்களை வீசி ஓய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கைகொடுக்க, கங்குலி தானே பந்து வீசினார்.

Michael Bevan
Michael Bevan

பிரதான பௌலர்களுக்காக ஆயத்தப்பட்டிருக்கும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு, 'சர்ப்ரைஸ்!' என ஷாக் கொடுக்கும் தந்திரமாகவும் இந்த வியூகம் பயன்படுத்தப்பட்டது. 1996 சிங்கர் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கில்லிஸ்பி, மெக்ராத் உள்ளிட்டோரின் வேகத்தோடு ஆஸ்திரேலியா போர் தொடுக்கும் என எதிர்பார்த்தால் அதிசயிக்கும் விதத்தில் ஸ்டீவ் வாக் மற்றும் ஸ்டூவர்ட் லாவினைக் கொண்டு பௌலிங் அட்டாக்கை ஆஸ்திரேலியா தொடங்கியது.

இத்தகைய பார்ட் டைம் பௌலர்களை குறைத்து மதிப்பிடவே முடியாது. ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், ஆபத்தான கூக்ளி, சமயத்தில் மீடியம் பேஸ் எனப் பல ஆயுதங்களை கொண்டு சச்சின் மிரட்டி, களத்திற்கேற்ற பௌலராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். கச்சிதமான லைன் அண்ட் லெந்த்தில் விக்கெட் டு விக்கெட் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளராக கங்குலி கிடைத்ததும் இந்தியாவுக்கு இரட்டிப்பு வலுவூட்ட, அவரோடு ஒரே ஒரு ஃபாஸ்ட் பௌலரை மட்டுமே எடுத்து இந்தியா துணிந்து களமிறங்கியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பார்ட் டைம் பௌலர்களுக்குமான தனித்தன்மை, அணிக்கான பாசிட்டிவான‌ அம்சமானது.

இதில் எந்தப் பாதிப்பும் இல்லையா எனக் கேட்டால், சில சமயங்களில் அப்படியும் நடப்பதுண்டு. பேட்ஸ்மேன்கள் சிக்கும் பார்ட் டைம் பௌலர்களை பவுண்டரிகளோடும், சிக்ஸர்களோடும் சிறப்பாகக் கவனிப்பதுமுண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஐசிசி பார்ட் டைம் பௌலர்களைப் பற்றி வெளியிட்டிருந்த Expectation vs Reality மீம் ஒன்றில், அவர்கள் மீதான எதிர்பார்ப்பை ஈஃபிள் கோபுரத்தோடும், உண்மை நிலையை மின்சாரம் விநியோகிக்கும் கோபுரத்தோடும் ஒப்பிட்டிருந்தது. இது நகைச்சுவை உணர்வோடு வெளியிடப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்தது என்றாலும், உண்மையில் ஆல் ரவுண்டர்களுக்கு இணையாக பார்ட் டைம் பௌலர்களும் ஒரு வெற்றிகரமான அணிக்கு முக்கியமானவர்கள்தான்.
Yuvraj Singh
Yuvraj Singh

நான்கு பிரதான பௌலர்கள், ஒரு ஆல்ரவுண்டரோடு பந்துவீசும் இரண்டு அல்லது மூன்று பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியை வலிமையானதாக்கும். ஏழு பேட்ஸ்மென்களோடு பேட்டிங் லைன்அப் பலம் பொருந்தியதாகவும், ஏகப்பட்ட பௌலிங் ஆப்சன்களை கேப்டனுக்குக் கொடுப்பதாகவும் அணி மாறும். இது ஒரு சமநிலையை அணிக்குள் புகுத்தும். பேலன்ஸ் எனப்படும் அந்தச் சமநிலையும், Flexibility எனப்படும் நெகிழ்வுத்தன்மையும் இல்லாததுதான் இந்தியாவுக்கு தற்போது பாதகமான அம்சமாகியுள்ளது. இது மாற, பார்ட் டைம் பௌலர்கள் சேர்க்கப்படுவது மட்டுமே ஒரே தீர்வு.

சரி, அப்படிப்பட்டவர்கள் தற்போதைய அணியில் யாருமே இல்லையா என்று கேட்டால், "இருக்கிறார்கள், ஆனால் இல்லை" என்றுதான் சொல்ல வேண்டும். டெக்கான் சார்ஜர்ஸுக்காக ஆடியபோது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்த ரோஹித் சர்மா இருக்கிறார். தனது சர்வதேச டி20 போட்டியில் வீசிய முதல் பந்திலேயே கெவின் பீட்டர்சனின் விக்கெட்டை எடுத்த கோலியும் இருக்கிறார்தான். ஆனால், அவர்கள் கடந்த நான்கு - ஐந்து ஆண்டுகளாக பெரிதாக பந்துவீசுவதில்லை. தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் என யாரும் பார்ட் டைம் பௌலிங் செய்யாமல் அந்த டிபார்ட்மெண்டுக்கே இந்தியா மூடுவிழா நடத்திவிட்டது. 1983, 2003, 2011-ல் செய்த பார்ட் டைம் பௌலர்கள் வேலை, 2019 உலகக் கோப்பையில் காணாமல் போனது. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்குப் பின்பான பேட்டியில், இது அணியை பலவீனமாக்குகிறது என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

2003 world cup
2003 world cup
இதற்கான பின்னணியில் பல விஷயங்கள் ஒளிந்துள்ளன. டெஸ்ட் ஃபார்மட்டுக்கு பந்துவீச்சில் அதிகத் திறனும், நேர்த்தியும் தேவைப்படுவதால் பார்ட் டைம் பௌலர்கள் என்பது அணிகள் பெரும்பாலும் பின்பற்றாத ஒன்றுதான். ஆனால், லிமிடெட் ஃபார்மட்டிலும் அந்நிலை தொடர்வதுதான் தவறாகிறது.
2011-ல் ஒருநாள் போட்டிகளில் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் முறை அமலாகி, ரிவர்ஸ் ஸ்விங் என்பதையெல்லாம் வழக்கற்றுப் போனதாக்கியது. போதாக்குறைக்கு பவர்பிளே கட்டுப்பாடுகளும் பிரதான பௌலர்களின் குரல்வளையையே நெறிப்பதாக மாறி, Batsman Friendly சூழலை உருவாக்கி விட்டது. இந்நிலையில், பார்ட் டைம் பௌலர்களை இறக்குவது ரிஸ்க் என்பது இந்தியாவின் பார்வையாக இருக்கலாம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் எழுச்சியும், ஒரு காரணம்தான்.

டி20ஐ கவனித்தால் அங்கே ஒவ்வொரு பந்தும், போட்டியையே புரட்டிப் போடும். பெரும்பாலும், ஆறு பௌலர்கள் ஆப்சன் ஒவ்வொரு அணிக்கும் இருக்கும். அது மட்டுமின்றி, பேட்ஸ்மேன்களின் பங்கு, பேட்டிங்கிலேயே அதிகபட்சமாக இருப்பதால் அவர்கள் வலைப்பயிற்சியின் போது மட்டும் பந்தைத் தொடுபவர்களாக மாற்றியிருக்கின்றனர்.

உண்மையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்கள் இருந்தவரை, அது ஒரு பெரிய குறையாகப்படவில்லை. ஆனால் அறுவை சிகிச்சைக்குப்பின், பாண்டியா பௌலிங் செய்ய முடியாமல் போனதும், காயத்தினால் ஜடேஜா ஆட முடியாமல் போவதும்தான் அந்த இடத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. தாக்கூர், தீபக் சஹார் போன்றோர் பெரிய ஆல்ரவுண்டர்களாகத் தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இச்சமயத்தில்தான், பார்ட் டைம் பௌலர்களை மிஸ் செய்கிறது இந்தியா.

உதாரணமாக நான்கு பிரதான பௌலர்களோடும், ஒரு ஆல்ரவுண்டரோடும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கும் போது, தலா பத்து ஓவர்களை ஒவ்வொருவரும் வீசுவர். அச்சமயம், ஏதோ இரண்டு பௌலர்களுக்கு அந்நாள் சிறப்பாக அமையவில்லை என்றாலோ, இடையில் யாருக்கேனும் காயமேற்பட்டாலோ, கேப்டனின் பாடு திண்டாட்டம்தான். கையில் வேறு பௌலரும் இல்லாதபட்சத்தில், ரன்ரேட் எகிறுவதைப் பற்றிக்கூட யோசிக்காமல் அவர்களையேதான் வீச வைக்க வேண்டியிருக்கும்.

Jadeja and Pandya
Jadeja and Pandya

இத்தகைய இக்கட்டான சூழலில்தான் பார்ட் டைம் பௌலர்களை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அடிவாங்கும் பௌலர்களது 10 ஓவர்கள் கோட்டாவில் மூன்று அல்லது நான்கு ஓவர்களை இவர்கள் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில், அது பௌலிங் வேரியேஷனைக் கொடுக்கும். அதேபோல், ஸ்பின்னர்களைப் போல் மத்திய வரிசையில் இவர்கள் பயன்படுத்தப்படுவது ரன்ரேட்டுக்கும் கடிவாளம் போடும். இந்தியா பின்தங்குவது இங்கேதான்.

ஃபாபுலஸ் 4-ல் மற்றவர்கள் எல்லாம் அணியின் தேவைக்கேற்ப பந்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்க துரதிர்ஷ்டவசமாக, 2017-க்குப் பின் பௌலிங் என்பதையே கோலி மறந்து விட்டார். முஷ்டியை மடக்கி, பந்தைவீச ரோஹித்தும் வெகுகாலமாகவே முன்வரவில்லை. தவான் போன்றோர் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசியதே இல்லை. அடுத்த தலைமுறை வீரர்களான கெய்க்வாட், படிக்கல், கில் உள்ளிட்டவர்கள் கூட, பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பந்துவீசும் ப்ரித்வி ஷா, ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள்கூட ஐபிஎல்லிலும் பந்து வீசுவதில்லை. ஆகமொத்தம், குதிரைக்கு யார் கடிவாளம் போடுவது என்ற நிலைதான்.

ஒருகாலத்தில் கிளெரிக்கல் வேலைகளுக்கு, தட்டச்சு கூடுதல் தகுதியாக இருந்தது போல், பிளேயிங் லெவனுக்கான பேட்ஸ்மேனைத் தேர்ந்தெடுக்கும் போது, பௌலிங் போடும் வீரர்களுக்கு சற்றே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டு, அத்தகைய வீரர்கள் அணிக்குக் கிடைக்க இன்னமும் சில காலம் பிடிக்கும். அதுவரை கோலி, ரோஹித், ஸ்ரேயாஸ் என இருக்கின்ற வீரர்களை சில ஓவர்களாவது வீசும் வகையில் பட்டைத் தீட்ட வேண்டும். அதுவும் அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் கால் பதிப்பதற்கு முன்னதாகவே இது நிகழ வேண்டும். மூன்றாவது போட்டியில் லெக் ஸ்பின்னரான ஸ்ரேயாஸை சில ஓவர்கள் வீச வைத்தனர். இது தொடர வேண்டும்.

கடந்தாண்டு இந்தியா வரலாற்று வெற்றி பெற்ற, ஆஸ்திரேலியத் தொடருக்கு முன், கணிசமான ரன்சேர்க்க டெயில் எண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலனை அங்கேயே பார்க்கவும் முடிந்தது. அத்தொடரில் டாப் 7-ன் சராசரி 31 ஆகவும், 8-11 வீரர்களின் சராசரி 19 ஆகவும் இருந்தது. இதே அணுகுமுறையைத்தான் இந்தியா டாப் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களை பௌலிங் செய்ய வைப்பதிலும் பின்பற்ற வேண்டும்.

இது அணிக்குள் ஒரு சமநிலையையும் கொண்டு வரும். எண்ணற்ற அளவிலான கேம் பிளான்களுக்கும் வழியேற்படும். நிகழ்தகவுகளையும், வரிசை மாற்றங்களையும் கூட்டும் வெற்றிக்கான குறியீடாகவும் அதுவே அமையும்.

Indian Cricket team
Indian Cricket team

பவர் பிளேயில் விக்கெட் எடுக்கத் திணறும் பௌலர்கள், அந்நிய மண்ணில் சோபிக்கத் தவறும் இந்திய ஸ்பின்னர்கள், வழக்கத்திற்கு மாறாக ஸ்பின் பந்துகளைச் சந்திக்கத் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள், 6-க்குக் குறைவான ரன்ரேட்டோடு பேட்டிங் பவர்பிளே ஓவர்களை வீணடிக்கும் மந்தமான தொடக்கம், மத்திய வரிசை பரிதாபங்கள், நீண்டநாள் தேவையான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என பற்பல இடங்களில் இந்திய கிரிக்கெட் சறுகுகிறது என்றாலும், இதுவும் இந்தியா அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.

கோப்பைகள் மீது கண்வைத்து நகரும் இந்தியாவுக்கு, பேட்டிங் மற்றும் பௌலிங் ஆல்ரவுண்டர்களோடுகூட, பந்துவீசத் தயங்காத டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், பேட்டிங்கிலும் கைகொடுக்கும் டெய்ல் எண்டர்களுமே இன்றைய தேவையாக இருக்கின்றனர்.

2023-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல அவசியத் தேவை, பார்ட் டைம் பௌலர்களே. அது நடக்காத பட்சத்தில், உலகக் கோப்பை என்பது வெறுங்கனவே!