Published:Updated:

`சமகால சாணக்கியர்' - கம்பீரின் ஆழமான `கிரிக்கெட்' விமர்சனங்களும் நம் கண்மூடித்தனமான புறக்கணிப்பும்!

கம்பீர்

தோனி என்னும் ஒற்றை ஆளுமையின் ஆதிக்கத்தால் கேப்டன்ஷிப் என்னும் சிம்மாசனம் கம்பீர் போன்ற சிலருக்குக் கிட்டவில்லை. இருப்பினும் மார்டின் க்ரோவ் போலவே வியூகங்களின் வித்தகர் கம்பீர்.

`சமகால சாணக்கியர்' - கம்பீரின் ஆழமான `கிரிக்கெட்' விமர்சனங்களும் நம் கண்மூடித்தனமான புறக்கணிப்பும்!

தோனி என்னும் ஒற்றை ஆளுமையின் ஆதிக்கத்தால் கேப்டன்ஷிப் என்னும் சிம்மாசனம் கம்பீர் போன்ற சிலருக்குக் கிட்டவில்லை. இருப்பினும் மார்டின் க்ரோவ் போலவே வியூகங்களின் வித்தகர் கம்பீர்.

Published:Updated:
கம்பீர்
கம்பீரின் விமர்சனங்கள் பல சமயங்களில் இணையதளங்களில் கிண்டலுக்கும் கேலிக்குமே உள்ளாகியிருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் இந்திய அணி பற்றிய அவரின் விமர்சனங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை, இல்லை புரிந்துகொண்டாலும் அதை ஆக்கப்பூர்வமானதாக யாருமே எண்ணவில்லை. பிசிசிஐ உட்பட!

`இந்தியக் கிரிக்கெட் உலகின் சமகால சாணக்கியர்' என்ற வரையறைக்குள் பொருந்திப் போகக்கூடியவர் கௌதம் கம்பீர்.

மூன்று ஃபார்மேட்களிலும் முத்திரை பதித்தவர், முத்தாய்ப்பாக 2007 மற்றும் 2011 ஆகிய இரு உலகக்கோப்பைகளை இந்தியா முத்தமிடுவதற்கு முக்கியப் பங்காற்றியவர், இரு ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தாவை ஏந்த வைத்த இணையற்ற கேப்டன் என அவர் எட்டிய சாதனைகள் எத்தனையோ!

Gambhir
Gambhir

இருப்பினும் இவை மட்டுமே அவரது சிறப்பம்சங்கள் அல்ல. இப்பதங்களையும் தாண்டி கம்பீரை முன்னாள் வீரர்களில் முன்னிலைப்படுத்துவது கிரிக்கெட் குறித்த அவரது ஆழமான கருத்துக்களும், விஷய ஞானமும், விசாலமான பார்வையும்தான். களம் சார்ந்த பல நுணுக்கமான விஷயங்களை யாருமே சிந்திக்காத கோணத்தில் இருந்து அணுகுவதுதான் அவரது தனித்தன்மை.

இது பல்லாண்டு கிரிக்கெட் அனுபவத்தால் வந்ததல்ல, அவரோடே எப்போதுமே இயல்பாகவே பயணித்த ஒன்று. கொல்கத்தாவின் கேப்டனாக வலம் வந்த காலத்திலேயே அவரது தந்திரோபாயங்கள்தான் அந்த அணியை பட்டைத் தீட்டியது. 2012-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மெக்கல்லமுக்குப் பதிலாக பிஸ்லாவை ஆட வைத்ததில் தொடங்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைனை ஓப்பனராகக் களமிறக்கி அவரை மேட்ச் வின்னராக மாற்றியது வரை என அவரது நகர்வுகள் கே.கே.ஆரை வலுப்படுத்தி வெற்றிக்கு வழிகோலியது. மற்றவர்கள் கண்களில் கல்லாகக் காணப்படுவது சிற்பியின் கண்களில் சிற்பமாகத் தெரிவது போல ஒரு கேப்டன், பயிற்சியாளரின் இன்ஃப்ரா ரெட் கண்களில் எந்த வீரரின் திறனும் தப்பாது. அவ்வகையில் ஒரு வீரரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எப்படி அவரை அணியின் ஊர்தியாக்கி வெற்றிவலம் செல்ல வேண்டுமென்பதறிந்த சைலண்ட் கில்லர் கம்பீர்.

தோனி என்னும் ஒற்றை ஆளுமையின் ஆதிக்கத்தால் கேப்டன்ஷிப் என்னும் சிம்மாசனம் கம்பீர் போன்ற சிலருக்குக் கிட்டவில்லை. இருப்பினும் மார்டின் க்ரோவ் போலவே வியூகங்களின் வித்தகர் கம்பீர். அதனால்தான் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வறித்த பின்னும் விமர்சகராக/பயிற்சியாளராக அவரது பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது. அதையும் தாண்டி இந்தியக் கிரிக்கெட்டை ஒட்டிய தனது கருத்துகளை அவ்வப்போது பகிர்ந்து எப்போதுமே செய்தியாகிறார் கம்பீர். அவற்றில் பல தொலைநோக்குப் பார்வை கொண்டதாக, நேர்மையானதாக, ஆழமானதாக, தெளிவானதாக இருந்து வருகிறது.

அதிலும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறியபின் அவரிடமிருந்து வெளிப்படும் அவ்வகையிலான கருத்துகளின் அதிர்வெண் சற்றே அதிகரித்துள்ளது. அதுவும் பாரபட்சமின்றி புறந்தள்ள முடியாதவைகளாகவும் அமைகின்றன. கடந்த டி20 உலகக்கோப்பை கைநழுவியதில் இந்திய ஓப்பனர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆமைவேக ஆட்டம்தான் எதிரணியிடம் அடிபணிய வைத்தது. அந்த முடிவுகளையும் வரவிருக்கும் 50 ஓவர்கள் உலகக்கோப்பையையும் மனதில் நிறுத்தி கம்பீர் கூறியுள்ள கருத்துகள் பெரிய விவாதங்களுக்கான ஆரம்ப ஆதாரப் புள்ளியாகி உள்ளது.

Gambhir
Gambhir

50 ஓவர் பார்மெட்டில் ஓப்பனராக இஷான் கிஷனை ஆடவைக்க வேண்டும், தன்னை நிரூபிக்கும் வரை கே.எல்.ராகுல் தனது வாய்ப்புக்காக பேக்கப் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாகக் காத்திருக்கலாம் என்று தன் கருத்துகளை முன்வைத்திருந்தார். ராகுல் கேப்டனாக உள்ள ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருந்தும் பாரபட்சமின்றி இக்கருத்தை கம்பீர் வெளியிட்டிருப்பது எல்லாம் மற்ற யாரும் பேசத் தயங்குவது. அதேபோல் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக ஆடிவரும் ப்ரித்வி ஷாவின் ப்ரைம் டைம் எப்படித் தேசிய அணிக்குப் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார். ஓப்பனர்களாக சேவாக் - கம்பீர் சாதித்ததைப் போல, இஷான், ப்ரித்வி, கில் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவசியத்திற்கான அவசர சமிக்ஞை அது.

உலகக்கோப்பைகளில் இந்தியா சிறப்பாக ஆடாததற்கு இன்னுமொரு முக்கிய காரணம், ஒரே பிளேயிங் லெவனொடு தொடர்ந்து ஆடமுடியாத சூழல் நிலவுமாறு வீரர்கள் அடிக்கடி பிரேக் எடுப்பது. இதனை ஒட்டி கம்பீர் கூறியிருந்த கருத்தும் மறுக்க முடியாதது. டி20 அல்லது ஐபிஎல்லின் போதுகூட ஓய்வெடுக்கட்டும், வரவிருக்கும் எல்லா ஒருநாள் போட்டிகளிலும் முக்கிய வீரர்கள் ஆடவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார் ஐபிஎல் அணிகளில் ஒன்றின் மென்டராக இருந்துகொண்டு ஐபிஎல் அணிகள் ஒரு வருடம் பாதிப்பு அடைந்தால் பெரிய பிரச்னை இல்லை உலகக்கோப்பையே முக்கியம் என அவர் கூறி இருந்த இந்த கருத்து எல்லாம் மற்ற எந்த இந்திய முன்னாள் வீரரிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும்.

ஹர்திக் பாண்டியா பற்றிய கம்பீரின் கருத்தும் கவனத்தைக் கவர்ந்தது. காயம் காரணமாக பந்துவீச்சையே மறந்திருந்த பாண்டியா பல ஆண்டுகள் கழித்து ஒரு முழுமையான ஆல்ரவுண்டராகத் திரும்பி இருக்கிறார். அதுவும் ஐபிஎல் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் என்பதிலிருந்து மணிக்கு 140+ கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார் என்பது வரை அவரைப் பார்த்து வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் மற்ற கிரிக்கெட் விமர்சகர்களின் மூளைக்குள் அடிக்காத அபாய மணியையும் கம்பீர் ஒலிக்க வைத்திருந்தார்.

கௌதம் காம்பீர்
கௌதம் காம்பீர்
"பாண்டியாவுக்கான ஒரு பேக்கப் வீரரை உடனே ஆயத்தப்படுத்தப்படுத்துங்கள். அப்படி இல்லாவிட்டால் அவருக்குக் காயமேற்பட்டால், இந்தியா அதற்கான விளைவுகளை பலமடங்காக சந்திக்க வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

முதல் டி20-ல் தனது மூன்றாவது ஓவரை வீச பாண்டியா திணறிய போது, ஹர்சா போக்லே கமென்ட்ரியில் கூறியதுகூட இதை ஒட்டிய கருத்துதான். "அவர் அணிக்கான சொத்து, இன்னமும் ஒரு ஓவர் வீசவேண்டும் எனச் சிரமப்பட்டு அவர் தன்னைக் காயப்படுத்திக் கொண்டுவிடக் கூடாது" என்று கூறியிருந்தார். அதிலிருந்து ஒருபடி மேலே போய்தான் பேக்கப் வீரர் பற்றிய கம்பீரின் கருத்தும் எழுந்தது. ஜடேஜாவுக்கு காயமேற்பட்டதனால் கடந்த உலகக்கோப்பையில் அணியின் சமநிலையே குலைந்து போனதை நினைவுகூர்ந்தாலே ஹர்சா, கம்பீரின் கருத்துகள் ஒத்திசைவுடன் ஓங்கி ஒலிப்பதன் காரணம் புரியும்.

அதேபோல் அர்ஷ்தீப்பின் நோ பால்கள் விஷயத்தை ஒட்டி கம்பீர் பேசியிருந்ததும் உண்மையில் விவாதத்திற்கு உரியதுதான், பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டியதுதான். காயத்திலிருந்து திரும்பும் வீரர்கள் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் சில ஓவர்கள் வீசி இழந்த ரிதத்தை மீட்டெடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். சச்சின், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் கூட இழந்த ஃபார்மை மீட்டெடுக்க அரிச்சுவடியை கற்பிக்கும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வேலைப்பளு என்னும் பேரில் வழக்கொழிந்து போயிருந்த அப்பழக்கத்தையும் கம்பீர் நினைவுபடுத்தியிருந்தார்.

உம்ரானின் ஒவர்கள் முன்னதாக சில போட்டிகளில் அடிவாங்கியிருந்தது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான அவரது ஸ்பெல்களை பற்றிப் பேசிய போது எக்காரணத்திற்காகவும் வேகத்தை அவர் குறைக்கக் கூடாது, லைன் அண்ட் லென்த்தை சரியாக வீசினாலே போதும் ஆஃப் கட்டர்கள், ஸ்லோ பால்கள் போன்ற வேரியேஷன்களின் வசம் சிக்கக்கூடாது என தெளிவாகக் கூறியிருந்தார். உண்மையில் லெக் ஸ்பின்னர்களுக்குக்கூட சில நாள்கள் இது நேரும், பந்துகள் சேதாரத்தைச் சந்திக்கும். ஆனாலும் பல போட்டிகளில் மேட்ச் வின்னர்களாக அவர்கள்தான் உருவெடுப்பார்கள். உம்ரானின் வேகமும் அத்தகையதுதான், அரிய வகையிலானதுதான். இந்தியா அதனை இழந்து விடக் கூடாது என்பது அசைக்க முடியாத உண்மை.

Gautam Gambhir
Gautam Gambhir
சூர்யகுமார் யாதவினை உலகிற்கு அடையாளம் காட்டியது மும்பை இந்தியன்ஸ் என்றாலும் அவருக்கான அடித்தளம் கம்பீரால் கே.கே.ஆரில்-தான் அமைக்கப்பட்டது. குல்தீப், சைனி என இன்னமும் பல வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்ததில் கம்பீரின் முக்கியப் பங்குமுண்டு.

கம்பீரின் இந்த ஆணித்தரமான கருத்துகள் உண்மையில் ஆழமான புரிதலோடு அணியின் நலன் கருதி வெளிப்படுபவைதான். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அது ஹர்சாவினைப் போலவே நடுநிலையானதாகவே இருந்து வந்திருக்கிறது. கூர்ந்து கவனிக்கும் கிரிக்கெட் அறிவு நிறைந்த யார் ஒருவராலும் அவை சரியானவை எனப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் அவரது கருத்துகள் மீது கல்லெறியப்படுவதும் அது கேலிக்குரியதாக பார்க்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள Hero Worship கலாசாரம் பற்றிச் சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் கம்பீர். முன்னதாக தோனி தற்போது கோலி என ஒரு சிலரை மையப்படுத்தியே இந்தியக் கிரிக்கெட் இயங்குவதால் மற்ற திறன்படைத்த வீரர்கள் மீது பார்வை படியாது போவதை ஆதங்கத்தோடு சற்றே ஆத்திரத்தோடு குறிப்பிட்டிருந்தார். 2011-ல் உலகக்கோப்பையை இந்தியா வாங்கிய போதும் ஜாகீர் போன்ற மற்ற வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. காரணம் தோனியின் கேப்டன்ஷிப் மட்டுமே அங்கு பேசுபொருளானது. இதனைப் பலமுறை கடுமையாகச் சுட்டிக் காட்டியதும் கோலி பற்றியும் இதுபோன்று பேசுவதும்தான் அவர் மீதான வெறுப்புக்கான காரணம். உண்மையில் ஆழ்ந்து யோசித்தால்தான் அதன் அடியில் தேங்கியுள்ள ஆதங்கமும் உண்மையும் புரிய வரும்.

Gautam Gambhir
Gautam Gambhir

ஆக அரசியல், மற்ற வீரர்களின் ரசிகர்களுடைய வெறுப்பு என ஒருசில தருணங்களில் அவர்மீது படியும் நிழலால் அவர் எழுப்பும் நியாயமான கேள்விகள், முன்வைக்கும் மறுக்க முடியாத கருத்துகள், தீர்க்கமான கண்ணோட்டங்கள் மற்றும் கணிப்புகள் கூட இருள் அடிக்கப்படுகின்றன, கேலிக்கு உள்ளாகின்றன. அந்தச் சமயத்தில் எல்லாம் அவரது திறமை குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பதே உண்மை. அவற்றை எல்லாம் புறந்தள்ளி கிரிக்கெட் என்னும் கண்ணாடியை மட்டும் அணிந்து பார்த்தால் அவருக்குள் உள்ள ஒரு ஜீனியஸ், மாஸ்டர் மைண்ட், கிராக்கர்ஜேக் தென்படுவார்.

குறைத்து மதிப்பீடு செய்யப்படும் கம்பீர் போன்றோர்களை வைத்துக் கொண்டுதான் தேர்வுக்குழுவிற்கு ஆள் கிடைக்கவில்லை என அல்லாடுகிறது பிசிசிஐ. சரியான வகையில் பயன்படுத்தினால் கம்பீரின் முழுமையான கிரிக்கெட் அறிவு இந்தியக் கிரிக்கெட்டிற்கு நிறைந்த பலனளிக்கும்.