Published:Updated:

ஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை!

ஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை!

கோடிகள் புழங்கும் ஐபிஎல்லை மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்!

ழையால் ஒரு போட்டி தடைப்பட்டாலே நமக்குள் இருக்கும் கிரிக்கெட் ரசிகன் சோக மியூசிக் போட்டு ‘அப்பு’ கமல் போல நடக்க ஆரம்பித்துவிடுவான். ஆனால் கொரோனாவோ கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நடக்கவிருந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தையுமே மொத்தமாக முடக்கியிருக்கிறது. பல மாதங்களாக கிரிக்கெட் இல்லாமல் சோர்ந்துபோயிருந்த ரசிகர்களுக்கு குளுக்கோஸாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கின. அந்தப் போட்டியிலும் மைதானத்தில் யாரும் இல்லை. விக்கெட்டோ, பவுண்டரியோ, யாரிடத்திலும் எந்தவிதமான அதீத துள்ளலும் இல்லை. கைகளால் சம்பிரதாயத்துக்கு ஒருமுறை குட்டியாக ஒரு பஞ்ச். அவ்வளவுதான், அடுத்த பந்துக்கு ரெடியாகிவிடுகின்றனர். போட்டி முடிந்த பின்கூட கேப்டன்கள் ஒரு மெஷினுடன் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படியான பல கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்திருக்கும் இங்கிலாந்து-மேற்கத்தியத் தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இருப்பினும் பல மாதங்கள் தங்களின் அபிமான இந்திய வீரர்களைக் களத்தில் பார்க்காத ஏக்கம் இந்திய ரசிகர்களுக்கு இருக்கவே செய்கிறது.

ஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை!

இந்நிலையில்தான் செப்டம்பர் மாதம் தொடங்கவிருந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையைத் தள்ளிப்போடுவதாக ஐசிசி அறிவித்திருக்கிறது. அந்த நேரத்தில் ஐபிஎல்லை நடத்திவிடலாம் என்ற திட்டத்துடன் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. தற்போதைய சூழலில் இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதால் ஐக்கிய அரபு நாடுகளை டிக் அடித்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் போர்டுகள் தங்கள் வீரர்களை ஐபிஎல்லுக்கு அனுப்புவது குறித்து இன்னும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், வெளிநாட்டு வீரர்கள் எப்படியும் தனியார் விமானத்திலாவது வந்து இறங்கிவிடுவார்கள் என நம்பலாம். கோடிகள் புழங்கும் ஐபிஎல்லை மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்!

ஆனால், இந்த வருட ஐபிஎல் முந்தைய ஐபிஎல்கள் போன்று கொண்டாட்டமாக இருக்குமா எனத் தெரியவில்லை. மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எந்தத் தகவலையும் ஐபிஎல் நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை. அப்படி அனுமதிக்கப்படுவதாக இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை ஒலிபெருக்கிகள் மூலம் ஒளிபரப்புவதன் மூலம் இதைச் சரிக்கட்டலாம்.

சில ஐரோப்பிய கால்பந்து கிளப்கள் காலி இருக்கைகளுடன் வீரர்கள் ஆடினால் நன்றாக இருக்காது என ரசிகர்களின் கட்டவுட்களால் மைதானங்களை நிரப்புகின்றன. ரசிகர்கள் தங்களுடைய புகைப்படங்களை அனுப்பினால் போதும், அதைக் கட்டவுட்டாக ப்ரின்ட் எடுத்து ஒரு இருக்கையில் வைத்துவிடுகின்றனர். இதில் சிலர், கொரோனாவால் மறைந்த ரசிகர்களின் படங்களை அனுப்பி நினைவஞ்சலி செலுத்துவதையும் பார்க்கமுடிகிறது. இப்படி ஒரு போட்டியில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் அனுப்பப்பட்டு அது கவனிக்கப்படாமல் கட்டவுட்டாக வைக்கப்பட, அது சர்ச்சையானது. இதனால் தற்போது புகைப்படங்களைப் பார்த்து உறுதிசெய்ய வேண்டிய கட்டாயமும் கால்பந்து கிளப்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் இப்படியென்றால் இன்னொருபுறம் தீர்வு தேடி மொத்தமாகத் தொழில்நுட்பத்திடம் சரணடைந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மிக முக்கிய பேஸ்பால் லீக் ‘MLB.’ ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல், விர்ச்சுவலாக வீடியோ கேம்களில் இருப்பதுபோன்ற போலி அனிமேட்டட் ரசிகர்களை இந்தப் போட்டிகளின் ஒளிபரப்பின்போது மைதானத்தில் சேர்க்கிறது. இதில் பெரிய சிக்கல், லைவாகப் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே பின்புறத்தில் கிராபிக்ஸை ரெண்டர் செய்யவேண்டும். ஒரு வீடியோ எடுத்து அதன்பின் கிராபிக்ஸ் சேர்த்து ஒளிபரப்புவதைவிடப் பல மடங்கு கடினமான காரியம் இது. இதைச் சாத்தியப்படுத்த ‘Pixotope’ என்ற மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இது ‘Unreal Engine’ என்ற பிரபல கேமிங் என்ஜின் மீது கட்டமைக்கப்பட்ட மென்பொருள். இதன்மூலம் ரசிகர்கள் நிறைந்த மைதானங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்கிறது அந்த சேனல்.

ஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை!

“ரசிகர்களைக் காட்டுவது ஒரு ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பின் மிக முக்கிய அம்சமாக நாங்கள் பார்க்கிறோம்” எனக் கூறுகிறது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ். இந்த விர்ச்சுவல் ரசிகர்கள்மீதான முழுக்கட்டுப்பாடும் அந்தச் சேனலிடம் இருக்கும். ஒரு போட்டிக்கு எத்தனை ரசிகர்கள் வருவார்கள், எந்த அணியின் ரசிகர்கள் அதிகம் வருவார்கள், அவர்கள் என்ன உடைகள் அணிவார்கள் என எல்லா முடிவுகளுமே ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் கையில்தான். இதை எப்படிச் சரியாக முடிவுசெய்வது என்ற குழப்பத்தில் தற்போது இருக்கிறது அந்த நிறுவனம்.

இப்படிச் செய்யப்பட்ட முதல் ஒளிபரப்பைப் பார்த்த ரசிகர்கள் பெரிதாகத் திருப்தியடையவில்லை. ‘இது மிகவும் விநோதமான உணர்வைத் தருவதாகவும், கைதட்டுவதுகூட மிகவும் தாமதமாகத்தான் நடக்கிறது என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இது ஆரம்பக்கட்டம்தான், நாள்கள் செல்லச் செல்லத்தான் இந்தத் தொழில்நுட்பம் மேம்படும் எனத் தெரிவிக்கிறது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தரப்பு. ‘சரியாகச் செயல்படுத்த முடிந்தால் விரைவில் மற்ற விளையாட்டுகளுக்கும் இதை எடுத்துவருவோம்’ என்றும் நம்பிக்கையளிக்கிறது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.

மைதானத்தில் மக்கள் இல்லாத குறையைத் தீர்க்க இன்னும் வேறு என்ன பண்ணலாம்?

முன்பு சொன்னதுபோல ஐபிஎல்லில் என்ன செய்யப்போகிறார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால், பல கோடி மக்கள் பார்க்கும் உலகின் மிக முக்கிய விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக இருப்பதால், இப்போதே என்ன செய்யலாம் எனப் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும். விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

மைதானத்திற்குச் செல்லாதவர்களுக்கும்கூட ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானம் ஒரு திருவிழாக் களம் என்பது தெரியும். எப்படியான தொழில்நுட்பம் வந்தாலும் அந்தக் கொண்டாட்டத்தை ஈடுசெய்யமுடியுமா?